செவ்வாய், 20 டிசம்பர், 2016

பச்சை மற்றும் பழுத்த மட்டைகள்....!?!!


   முதியோர் இல்லங்களே தவறா...??

       ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் இருந்து வந்த,சுமார் 75 வயது மதிக்கக் தக்க பெரியவர் அலுவலக வாசலில் காத்திருந்தார்... எங்களின் சகோதர நிறுவனம் நடத்தும் முதியோர் இல்லத்தை பற்றிக் கேள்விப் பட்டு, அதில் சேர தேவையான விபரங்களைப் பெற ஆர்வமாக இருந்தார்.!

       பிராமண சமூகத்தை சார்ந்தவருக்கு, பணம் கொடுத்து, தங்கி இறுதிக் காலத்தை கழிக்க தகுந்த இடம் தேவையாக இருப்பதாக கூறினார்.. நானும் கனிவுடன் தேவையை கேட்டறிந்து, எங்களுடைய இல்லம், அரசு சார்ந்ததாக அதில் பலவித சமூகத்தினரும், பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதால்,அவரின் தேவை இங்கு பூர்த்தியாகாது எனத் தெரிவித்து.. தனியார் நடத்தும் சில முதியோர் இல்லங்களை விசாரித்து அவர்களின் தொடர்பு எண், முகவரி போன்றவற்றை கொடுத்து உதவினேன்..!

       அவரும்.. நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிப் புறப்படும் போதுதான் தெரிந்தது.. முதியோர் இல்லம் அவருக்கு தேவைப் படவில்லை...! அவரின் உறவினர்.. இவரை விட வயது மூத்த, சகோதர உறவு முறையில்..இருப்பவருக்கு.. அவரின்..பிள்ளைகள் பணம் மட்டும்  தரத் தயாராக இருந்து, தங்களுடன் வைத்துக் கொள்ளமுடியாதவர்களாக இருக்கிறார்கள்..! என்னை சந்திக்க வந்தவர் இது நாள் வரை..அவரை வைத்து பராமரித்து வருகிறார்..! தன்னால் இனி முடியாது என்ற நிலையில் பொருத்தமான முதியோர் இல்லத்தை.. அவருக்காக தேடிக்கொண்டிருக்கிறார்..!

     குடும்பம் இன்றி.. தனியே வாழும்..சந்திக்க வந்தவருக்கே.. முதியோர் இல்லம் தேவைப் படும் நிலையில் அவர் வேறு ஒருவருக்காக.. சென்னையில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர்கள் பயணித்து , வயதான காலத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்.!

      மனித வாழ்வு முரண்பட்ட..விருப்பு வெறுப்புகளில் சுவாரசியம் நிறைந்தது..! குழந்தையாக  பிறந்ததிலிருந்து..வளர்ச்சியை நோக்கிய பயணம்..குப்புறபடுத்தல், மண்டியிடுதல், நடத்தல் எனவும், பின் தன் முனைப்பாக வயதை கூட்டி காட்டவும் முயலுகிறோம்.. ஆண்கள் எனில் மீசை முளைப்பதையும்..வேட்டி அணியவும்..இளைஞர்களாக விரைவில் மாறவிரும்புவது..!

      அதே பெண்கள் எனில் சிறு குழந்தையாக இருக்கும் போதே தாவணி புடவை அணிய ஆசைப் படுவதில் தொடங்கி.. நீண்ட சடை வேண்டுமான விருப்பத்தில்..பொய் முடியை கொண்டு சிகையலங்கராம் செய்து கொள்வது..சமையல் கற்பது என பெரிய மனுஷியாக மாறவும்.. முதிர்ந்த பெண்களைப் போல பாவனை செய்யவும் முயலுகிறோம்..!

      ஆனால் எல்லாம் 30 வயதுக்கு மேல் தலைகீழாக மாறுகிறது.. !!வயதாகும் கவலை.. முதுமை ஆவது தெரிய தொடங்க தெரியும் போது..வயதை குறைத்து காட்டவும்.. மறைக்கவும்..தள்ளிப்போடவும்..தலை நரையை மறைத்து.. டை அடித்து... எனக்கு என்ன வயது இருக்கும்..?!?.. சொல் பார்க்கலாம்..எனக் கேட்டு.. வயதை,குறைத்து எதிராளி, ஒரு வேளை,சொல்லி விட்டால்...பெருமையுடன் கெக்கெ பிக்கே என சிரித்து மகிழ்கிறோம்..??!!

     எதை பற்றியும் கவலை படாமல்..தனது குழந்தைகள் படித்து ஆளாகி முன்னேற வேண்டும் சகல சவுரியங்களுடன் வாழவேண்டும் என ஆசைப் பட்டு கடுமையாக உழைக்கும் பெற்றோர் தங்களது முதுமை காலத்தில் என்ன ஆவோம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை..!

      மிகவும் கஷ்டப் பட்டு உழைத்து பிள்ளைகளை பெரிய ஆளாக்குவதையே குறிக்கோளாக கொண்ட,பெற்றோர்,.. சமூக கடப்பாடு, தியாக உணர்வு, சகிப்புதன்மை எதையும் பிள்ளைகளுக்கு  கற்றுக் கொடுக்காமல், காலம் விரைந்து, தங்கள் முதுமை காலத்தில் நிற்கும் போது..ஏணியின் முதல் படியில்  தங்களின் பிள்ளைகளும்..கடைசிப் படியில் தாங்களும் நிற்பதை உணர்கிறார்கள்..!!

      தங்களின் படிப்புக்கு ஏற்றவாறு, கிடைத்த  வேலை, பெற்றோரிடமிருந்து விலகி..வசிக்கும்  நெடுந்தொலைவு தூரம், திருமணம்,தனக்கான  குடும்பம், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, வாடகை  வீடுகளின் சிக்கல்கள், குழந்தைகளின் படிப்பு,வேலைப் பளு, மாத இ எம் ஐ., கைச்சங்கிலிகள், வேலைக்கு செல்லும் மனைவி, பெற்றோர் உடன் இருக்க நேரிட்டால் கொடுக்க வேண்டிய பாதுகாப்பு, தினசரி  கடமைகள்..உதவி..மருத்துவம், பேச்சு துணை, இவற்றால் ஏற்படும் சிக்கல்களில் , வேறு வழியின்றி..பெற்றோரை தவிர்ப்பதை ஒரு குற்ற உணர்வாக கூட.. கருதாத யதார்த்த நிலைக்கு..பிள்ளைகள்.. தள்ளப் படுகிறார்கள்..!!

      கிராமங்களில் முதியோர் நிலைமை இன்னும் கெட்டு விடவில்லை..! பிறர் ஏதாவது சொல்லி விடுவார்களோ..என்ற கெட்ட பெயருக்கும் அவதூறுக்கும் ஆளாக விரும்பாமல்.. கடைசிக் காலம் வரை பெற்றோரை காப்பாற்றும் எளிய மனிதர்கள், அவர்களின் மனைவிமார்கள்..இப்போதும்.. இருந்து கொண்டிருக்கிறார்கள்..!

     பென்சன் வாங்கும்..தங்களது, முதிய பெற்றோர்களை..மாதத்தின் முதல் தேதியில்...கரிசனமாக வங்கிக்கு அழைத்து சென்று, பணத்தை பெற்று,தான் எடுத்துக் கொண்டு... அவர்களை வெறுங்கையுடன் வீட்டுக்கு அழைத்து வருபவர்களும் உண்டு..!..சாப்பாடு.. இருக்க இடம் நான் தருகிறேன்.. இதைவிட இவர்களுக்கு என்ன தேவை இருந்து விடப் போகிறது..?? என்ற அலட்சியமும் இதற்கு காரணம்..!?!

      வயது முதிர்ந்த நிலையில்..மூத்த குடிமக்கள், தாங்கள் கவனிக்கப் படவேண்டும் என உளவியாலான தாக்கத்தால்.. மன நோய்மையில்..பாதுகாப்பு..இறப்பு குறித்தான அச்சம்..என  பல் வேறு குறைபாடு உடையவர்களாக மாறுகிறார்கள்..! பொய் சொல்லுவது..அதீத அக்கறை அல்லது விட்டேத்தியான மன நிலை..ஒரு பக்க அன்பு..தனக்கு பிடிக்காதவர்கள்..துன்புற ஆசைப் படுவது..வெறுப்பு... பாரபட்சமான அன்பு..என இத்தியாதி..இத்யாதிகள்..!!

      வெளியார் வரும் போது அவர்களின் கவனத்தை ஈர்க்க..புறணி பேசுதல், தன்னை கவனித்துக் கொள்வபர்களையே குறை சொல்லுதல்.. சாப்பாடு...இன்றி இருப்பதாக தவறான பார்வையை கொடுக்க முனைதல் இன்ன பிற..அதீதமான வாழ்த்து..அதைப்போலவே அதீதமாக சபித்தல்..போன்றவையும் அடங்கும்..!

     முதியோர் இல்லங்களும் இதற்கு விதி விலக்கல்ல..!! இவ்வாறான இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களிடம் சண்டையை மூட்டுவது.. உளவு, ஒற்றர் பணி,.அணி சேர்ப்பதில் தொடங்கி இன்ன பிற அட்டகாசங்களும், சாதி பார்ப்பது, சண்டை மூட்டுவது, வெறுப்பை உமிழ்வது போன்ற விரும்பத்தகாத அம்சங்களும் உண்டு..!

     நான் கேள்விப் பட்ட, பென்சன் தாரரான ஒரு முதியவர் தனது மனைவியை பழி வாங்க, தினசரி வீட்டின் உள்ளேயே, சிறு நீர் கழிப்பது, சளியை துப்புவது போன்ற காரியங்களை..தொடர்ந்து செய்து திருப்தி அடைந்திருக்கிறார்..!

       தனது, தாய்.. தந்தை, பல்லாண்டுகளாக.. பிரிந்து வாழ்வதிலான பிரச்சினையில்.. நன்கு படித்து..ஒரு என்ஜினியராக.. நல்ல சம்பளத்தில்..கிடைத்த வெளி நாட்டு வேளையை தள்ளி வைத்து.. தந்தையின் அப்பாவை, அதாவது தனது தாத்தாவை இறக்கும் வரையில்..பராமரித்து..அதுவும் ஒரு குக்கிராமத்தில்.!.அவர் இறந்த பின்னரே..வெளி நாடு சென்ற..உன்னத பேரன்களும்.. இளைய தலைமுறையில் உண்டு..!!

      முதியோர்களானால், தங்களை கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே..? என்று ஆசிரியராக வேலை பார்த்த,குழந்தை பேறின்மை இல்லாத ஒரு கிருஸ்தவ தம்பதியினர்.. தாங்கள் பணிபுரிந்த கிராமத்தில், தங்கள் பள்ளியிலேயே.. ஆசிரியராக பணிபுரிந்த, தாழ்த்தப் பட்ட வகுப்பை சார்ந்த ஒரு பெண்ணை.. தத்தெடுத்து, இரு குடும்பத்தினரும்..தங்களுக்குள்..டாகுமெண்ட் எல்லாம் செய்து, பின்..

      வளர்ப்பு மகளுக்கு...திருமணம் என்று வந்த போது, ஒரிஜினல் தாய் தந்தை அதிக உரிமை எடுத்து கொண்டார்கள்..!!, சேர்த்த பணத்தை சீர் செனத்தி என்று வளர்த்தவர்களால்  பெற்று..பின்னர்,இன்று பிறந்தக...புகுந்தக... உ|றவின் அடர்த்தியில்..தத்தெடுத்தவர்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக..கரைந்து..ஓரம் கட்டப் பட்டு.. தத்தெடுப்பின் தாத்பரியமும்,அதற்கான எந்த ஒரு  அர்த்தமும் இல்லாமல் போய்..இன்று ரிடையர் ஆன நிலையில்...முடங்கி.. தொடங்கிய இடத்திலேயே.. இருக்கும்.. அந்த முதியோர்களை.. யார்..?  எப்படி..? எது..?.. ஆற்றுப் படுத்தமுடியும்..??

       அத்தகையவர்களின்..இறுதி காலத்தை....ஒரு  முதியோர் இல்லத்தை தவிர  வேறு எது இட்டு நிரப்ப முடியும்..??

      வயதானவர்களின் சுதந்திரம் மிகவும் முக்கியம்..எதை செய்ய விரும்பினாலும் அதனை அவர்கள் செய்ய தடை..குறுக்கீடு.. இருக்க கூடாது..முக்கிய ஆலோசனை கருத்து அறிதலில் அவர்களை பெயருக்கேனும் கேட்டு செய்தல்..தினசரி குறைந்த பட்சம் சிறிய நேரத்திற்கேனும் உரையாடல்...! அவசியம்..!சும்மா தானே இருக்கே..இதை செய்தால் என்ன என்று ஏதாவது வேலை ஏவுதல்..குறிப்பாக பேரக்குழந்தைகளை தலையில் கட்டுதல்..கூடவே கூடாது.!! கருத்துகளை திணிக்காமல் இருத்தல்..குறிப்பாக..ஆன்மீக விவகாரங்கள். தனிப்பட்ட நட்புகள்..பயணங்கள்...உள்ளிட்டவை..!!

       முதியோர்களும், தங்களின் வாழ்க்கையை பிறர் வாழவேண்டும் என எதிர்பார்க்க கூடாது..! வயதும்..முதுமையுமே.. அனைத்துக்கும் சலுகையாக இருக்கும் என்று நினைப்பது தவறு..உடல், உணர்வு, உணவு அனைத்திலும் கூடுதல் கவனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்..! தத்துவ விசாரங்கள்..உலகத்தின் இயல்பு.. இயற்கை இவற்றை உணர்ந்தவர்கள் இறுதிகாலத்திலும்..பதட்ட மில்லாமல் இருப்பர்..! வீடானாலும்..முதியோர் இல்லமானாலும்..மனதளவில் அவர்களுக்கு ஒன்றே...!!

        சிறு பிராயத்தில், பள்ளி, கல்லூரி பணியிடத்தில்.. என,எவருக்கும் அதிக நண்பர்கள் இருப்பது இயல்பு..!  ஆனால்..முதுமை காலத்தில் அதிக நண்பர்களுடன் இருப்பவர்கள், தான்.. உலகில் அதிகம் கொடுத்து வைத்தவர்கள்..! அவ்வாறான வாய்ப்பை முதியோர் இல்லங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதே உண்மை..! பரஸ்பரம் மனம் விட்டு பேச.. முதியோருக்கு..எத்தனை  குடும்பங்களில் வாய்ப்புள்ளது என்பதே  கேள்வி..??

       சுமார் 72 வயதானவர்,  தனது பென்சன் பணம் எவ்வளவு..?அதனை என்ன செய்கிறார்..? என ஒரு நாளும்..யாருக்கும்.. சொல்ல தேவையில்லாதவராக, யாரும் கேள்வி கேட்காத சுதந்திரத்துடன்..தனது மகனால்..இரு கால்களிலும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டு.. அவனால் வாங்கி கொடுக்கப் பட்ட..புத்தம் புதிய சிகப்பு நிற...ஹோண்டா ஆக்டிவாவில்..தனது மனைவியுடன்..இரு குச்சி பைகளை மாட்டிக் கொண்டு.. எங்கோ...வேகமாக..விரைந்து கொண்டிருக்கிறார்..!!

      அவர்களை பார்த்து.. சிறிய தலையசைப்போடு...சரி...!! அன்பு.. அக்கறை என்ற பெயரில்..எங்கு..?  ஏன்..?  எதற்கு.?..செல்கிறார்கள்.. என்ற கேள்விகள் எதுவுமில்லை..!! கம்பியூட்டர், முக நூல், பிளாக் என எவ்வித பரிச்சயமும் இல்லாத அவருக்கும், அவரின் மனைவிக்கும்.. தங்களை பற்றியும்..அவர்களது மகன், இந்த கட்டுரையில் எழுதிக் கொண்டிருப்பான்.. என தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை...!!?!

       நாக.பன்னீர் செல்வம் naga.panneer selvam
     
   
     













புதன், 30 நவம்பர், 2016

வெத்தலை பாக்கு நெல்லும்..வெறும் தரை முளைப்பும்...!!

 

   

      சமீபத்திய,  நெல் விவசாயம், விவசாயிகள் தொடர்பான சந்திப்புகளில், அறுவடை இயந்திரத்தின் மூலம், கண்ணுக்கு தெரியாமல்,  நேரடியாகவும்..வைக்கோலுடன் ஒட்டிக் கொண்டும் மறைமுகமாகவும்..வயலில், வீணாக விழும்,

      நெல்,சற்றேறக் குறைய, ஏக்கருக்கு 2 அல்லது 3 மூட்டை அளவுக்கு சமமானதாக,  மழையினாலோ அல்லது தண்ணீர் விட்ட பின்....முளைத்து.. வெளி வரும் போது மட்டுமே..தெரியவருகிறது எனவும்.....மேலும் அந்த  நெல் யாருக்கும் பயன்படாமல்  விரயமாகவே  வெறும் தரை முளைப்பாக..போவது பற்றியும் பேச்சு வந்தது..!

     80 சதவீதம் மட்டுமே.. வெற்றிகரமான உபயோகமும்,சாத்தியமும்,  வாய்ப்பும் உள்ள, மெஷின்களின் இயக்க பயன்பாடுகளில் இந்த விதமான இழப்பு  தவிர்க்க முடியாததே..!

     ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட, 70களின் அறுவடைக் காலங்களில் கொடுக்கும் கூலி நெல்லை மரக்கால் கொண்டு அளந்து போடுவதாக இருக்கும்..!! எனக்கு நினைவு தெரிந்து 4 மரக்காலில் இருந்து ஆரம்பித்து பின்னர் கொஞ்ச கொஞ்சமாக கூடிக் கொண்டே போனது..!

     மேல் தஞ்சாவூர் மாவட்டங்களான தற்போதைய திருவாரூர், நாகை பகுதிகளில் விழுந்த கூலி எனப்படும் முறை.. அதாவது கிடைக்கும் மொத்த விளைவில் இத்தனை மூட்டைக்கு கூலியாக இத்தனை மூட்டை என தொழிலாளர்களே நிர்ணயத்து , எடுத்துக் கொண்டது போக.. மீதத்தை..முதலாளிகளுக்கு கொடுப்பது..!

      கீழ் தஞ்சை பகுதிகளில்..இந்த அறுவடை கூலிக்கு.. நெல் அளக்கும் போது ஒரு சில சச்சரவுகள், களத்தில் தோன்றும்.. !களம் கண்ட தமிழ்ர்கள் ஆயிற்றே.. அது நெல் அறுவடை களமாக இருந்தாலும் போர்க் களமாக இருந்தாலும்..!! கூலி நெல்லை தங்களுக்கு அதிகமாக அளந்து கொள்வதில், தொழிலாளர்கள்.. ஒரு சிலர் கைதேர்ந்த வராக...சாரி..! விரல் தேர்ந்தவராக இருப்பர்..!!

      ஒரு விரல் மற்றும் இரு விரல்களை.. தாங்கி,தொழிலாளர்கள் தங்களுக்குண்டான  கூலியை அளந்து கொள்வதால்...நெல் கூடுதலாக, தொழிலாளர்களுக்கு  போய் விடும் என்ற பதட்டம்..நிலவுடமையாளருக்கு எப்போதும் உண்டு..! இத்தனைக்கும் விரல் விட்டு எண்ணக் கூடியவராக குறைந்த எண்ணிக்கையில் இந்த முதலாளிகள் இருப்பர்..!

     மற்றவர்கள்.. சிறிய அளவிலான நிலத்தை கொண்டு, அறுவடை சமயத்தில்...முதலாளியாகவும் பின்னர்..தானே..கூலி அறுவடைக்கு வெளியில் செல்லும்.. தொழிலாளர்களாகவும்..இருந்து கொண்டிருப்பர்..?!?
இது..வேறு எந்த தொழிலிலும், முதலாளிகளுக்கு இல்லாத சிறப்பு .!

     இதைத் தவிர வெற்றிலை பாக்கு நெல், என தொழிலாளர்களுக்கு, தனியே கூலி தவிர்த்து, கூடுதலாக வழங்கப் படும்..! இது,அறுவடை நாளின்,  கூலி ஆட்களின் எண்ணிக்கை.. மழைக்கால அறுவடையில் ஏற்படும் சிரமங்கள்..வைக்கோல் கூடுதல்  தேவைக்கு, விளைந்த பயிரை   ஒட்ட அறுத்தல் அல்லது மேலாக..கொசுவி அறுத்தல்..களத்திற்கு, வயலில் இருந்து நெல் கட்டுகளை தூக்கும் தூரம், அதிக விளைச்சல்,..கூட குறைச்சாலாக செய்த வேலை..  நெல்லை தூற்றுவதற்க்காக.. காற்றிற்கு காத்திருந்த கால விரயம்...என அந்தந்த சமயத்திற்கு ஏற்ப மாறுபடும்..!

     அதாவது இந்த நெல்..ஓவர் டைம் அல்லது போனசுக்கானது...!! இது மொத்தமாக கூலியை தவிர்த்த நெல்லாக, இரண்டு மரக்காலிருந்து ஆரம்பித்து... வாங்கப் பட்டு. கடையில் விற்று அதன் பணத்தை தொழிலாளர்கள் பிரித்துக் கொள்வார்கள்..!! பெரும்பாலும் இது கள், சாராய குடிக்கும்.. குறிப்பாக வெற்றிலை பாக்கு செலவு தேவைகளுக்கு என பயன் படுத்திக் கொள்ளப்படும்..!

     அப்போதைய தொழிலாளர்களுக்கு வெற்றிலை பாக்கு போடுவது என்பது அத்தியாவசிய பழக்கமாக இருந்தது.. ஒருவருக்கு ஒருவர் வேலைக்கு இடையில் ஆற்றுப் படுத்திக் கொள்ள, உரையாட, சிறு ஓய்வுக்காக என்பதற்கான காரணங்களில் வெற்றிலை பாக்கு போட்டு கொள்ளும் பழக்கம்..தவிர்க்க முடியாததாக..இருந்தது.. இது பெண்களுக்கும் பொருந்தும்..!

      அதற்கு தகுந்தாற்போல். வெற்றிலை பயிரிடும் கொடிக்கால்கள், லெட்சுமி சீவல், மைதீன் புகையிலை, ஏ ஆர் ஆர் பாக்கு எனப் பிரபலமான உள்ளூர் கம்பெனிகள் இருந்தன..! ஒரு தரத்திக்கு வெற்றிலை கொடு.. என்பதும்..புகையிலை கொஞ்சம் கொடு.. சுண்ணாம்பு இருக்கா, என்கிற வார்த்தைகள்...அடிக்கடி கேட்க கூடியதாகவும், வேற்று ஆட்களிடம் கூட பேச்சினை தொடங்க ஏதுவானதாகவும் இருந்தன..!

      வெற்றிலையை கவுளி கணக்கில், குஞ்சி வெத்தலை. அதாவது சிறிய வெத்திலையாக..நாட்டு வெத்திலை என தரம் பார்த்து வாங்குவதும் நடைமுறையில் இருந்தது..! கடைத்தெருவுக்கு செல்வது வெற்றிலை பாக்கு வாங்க சென்றதாகவே அடையாளம் காணப்படும்...!ஓவ்வொரு வீட்டிலும் சுண்ணாம்பு கலயம் ஒன்று நிச்சயமாக இருக்கும்..!

      சுண்ணாம்பு இரவல் வாங்க சிறுவர் சிறுமியர் ஈடுபடுத்த படுவார்கள்..!!?! அவர்களிடம்.. அப்படியே.. இரவல் வாங்க சென்ற வீட்டின் நிகழ்வுகளை கேட்டு துப்பறிந்து  ஊர் வம்பு..ஊர் கதை.. என,வயதான தாத்தா, ஆத்தா மார்களுக்கு..அளவில்லாத ஆனந்தத்தை தந்தது..! சமயத்தில் சுண்ணாம்பு வெற்றிலையில் வாங்கி வரும் போது கூடுதலாக ஒரு வெற்றிலையும் ஒசியில் கிடைத்தமாதிரியும் இருக்கும்..!!

       வெற்றிலை பாக்கு போட்டு கொண்டால், சிறுவர்களை மாடு முட்டும் என்பதும்.. படிக்கிற புள்ளை வெற்றிலை பாக்கு போடக்கூடாது என்பதும்  கிராமத்தின் எழுதாத  சட்டமாகவே இருந்தது..!! வயதான நிலையில்..பல்லை இழந்தவர்கள்..வெற்றிலை பாக்கை உரலில் இட்டு இடித்து போட்டுக்கொண்ட்தும்..தாத்தாக்கள்.. உள்ளங்கையில்..விரலால் கசக்கி..பின்னர் அதனை வாயில் போட்டுமெல்லுவதும் நடைமுறையாக இருந்தது..! அவ்வாறான பழக்கம் உடையவர்களின் உள்ளங்கை சிவந்து மருதாணி வைத்தது போல் எப்போதும் இருக்கும்..!!

     வட மாநிலங்களில், மிகவும் வயதான நிலையில், சாகும் தருவாயில், தன்னால், சுயமாக சாப்பிட முடியாத, படுக்கையில் உள்ள  பெரியவர்களுக்கு, சப்பாத்தியின் மென்மையான பகுதியை , உள்ளங்கையில் வைத்து கசக்கி, நம்ம ஊர் தாத்தாக்கள் வெற்றிலை பாக்கு போட, செய்தது போலவே.. அவர்களின் உறவினர்கள்.. கொடுப்பதையும் கண்டிருக்கிறேன்..!!

      வயலில் நாத்து பறி, நிரவுதல், கொத்துதல், உழுதல் போன்ற பணிகளை செய்து வரும் ஆண்களுக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு பெண்கள் வயலுக்கு செல்வது வழக்கமாக இருந்தது..! எங்கு வேலை செய்கிறார்கள் என்று தெரியாத நிலையில், தங்களின் கணவன் மார்களை, வழியில் வேலை செய்யும் இதர ஆண்களிடம் விசாரித்து,

      தனது கணவரை மற்றவர்கள் எப்படி செல்லமாக..அழைப்பார்களோ, அப்படியே, தேடும் மனைவிமார்களும், அடையாளம் சொல்லி, வேலை செய்யும் இடத்தை கண்டு பிடிப்பதும்.. .உதாரணமாக சின்னவரை, நடுப்புள்ளையை, உங்க அத்தானை, உன் மச்சானை.. பெரிய தம்பியை, சின்ன தம்பியை...பாத்தீங்களா.. எனக் கேட்டுச் செல்வதும், அதன் தொடர்பிலான, கேலியும்.. கிண்டலும் குறைவில்லாததாக இருக்கும்..! எடுத்து செல்லும் சாப்பாட்டுடன் நிச்சயம் வெற்றிலை, பாக்கு, புகையிலையும் இருக்கும்..!

       மைதீன் புகையிலை கம்பெனியார், தங்களின் புகையிலை பாக்கெட்டில் உள்ள சிறிய உள் தாளில்,உழவன் ஒருவன் உழுவதையும், அவனுக்காக,அவனின் மனைவி சாப்பாட்டு கூடையுடன் செல்வதும்,  மரம், புதர்கள்,பின்னனியில் தெரியும் மலை, இரு காளை மாடுகள், கலப்பை, வயல் என அனைத்தும் இடம் பெற்றிருக்கும் படத்தை சின்னதாக, சிக்கனமாக வைத்திருப்பார்கள்..!

      அந்த ஒரு சிறிய, தெளிவில்லாத, கலங்களான படம்..ஒட்டு மொத்த,உழவனின் வாழ்க்கை சித்திரம் போல்..காளைமாடுகள், கலப்பை அனைத்தும்,  இடம் பெற்ற..அடையாளமாகவும்.. ஒரு நினைவு சின்னம் போல்.. இழந்த விட்ட வாழ்க்கை முறையை நினைவு படுத்தி..இன்றும்.. காணும் போது இனம் தெரியாத சோகத்தை கொடுக்கும்..!?!

      ஒவ்வொரு முறை மைதீன் புகையிலை பாக்கெட்டை, பிரிக்கும் போது, வெற்றிலை பாக்கு போடுபவர்கள், அந்த காகிதத்தை உற்று நோக்கி, படத்தை பார்த்து  சிலாகிப்பதையும், வயதான பெண்கள், புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், அந்த தாளை தூக்கி எறிய மனமின்றி தங்களின் கூறை, குடிசை வீட்டு மூங்கில் தட்டி, சாக்கு படுதா கதவுகளில் வரிசையாக ஒட்டியும் வைத்திருப்பார்கள்..!!

      அந்த தாளை..ஒட்டுவதற்காகவே புகையிலை  வாங்கி போடும் பழக்கத்தை கொண்டிருப்பதை போல இருக்கும் அந்த உன்னத அறியாமை..! சிறுவர்களான எங்களுக்கு அந்த புகையிலை காகிதத்தை முகர்ந்து பார்த்தாலே.. அந்த நெடியில்.. மயக்கம் வருவது போல பிரமையாகஇருக்கும்..!?!

       அறுவடைக் காலத்தில் களத்து மேட்டில்,அறுவடைக்  கூலி, வெத்தலை பாக்கு நெல் வினியோகம்..இதை தவிர, முடி திருத்தும், துணி வெளுக்கும், வெட்டியான்கள் எனப்படும் தொழிலாளர்களும், கூடவே கோவில் பூசாரியும்.. நெல் வாங்க வருவார்கள்.. !.கோயில் நிலைத்தையும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கான,பஞ்சமி நிலமும் யாரிடம் இருக்கிறது.. என்பதும், ஏன் தங்களுக்கு அது தரப்படவில்லை.. என்ற கேள்விகள்..அதற்க்கான பதில்கள்.. என்ற எவ்வித தேவையும் இன்றி, இந்த களத்து நெல்லை வாங்க, அறுவடை சமயத்தில் ஓவ்வொரு முறையும் வருவார்கள்..! இதில் தலையாரி காவல் நெல் தனி..!

      அந்த தொழிலாளர்களுக்கு, படி, மரக்கால் அளவுகளின்றி, கையால் மூன்று முறை அள்ளிப் போட்டு கொடுக்கப் படும்..! இதனை அவர்கள் பெறுவதற்குள்..அனைத்துவிதமான.. குத்தல் பேச்சுகளுக்கும்  இழி நிலைக்கும்..ஆளாக வேண்டியிருக்கும்..!!அதில் கோயில் பூசாரியின் நிலை கொஞ்சம் மேம்பாடாக இருக்கும்..எனெனில் அவரின் கையில்.. ஒரு சிறிய பித்தளை செம்படத்தில் விபூதி இருக்கும்.. அதனை அவர், அனைவருக்கும் கொடுத்தும், பூசி விட்டும்..சாமியின் ஏஜெண்டாக கண்ணுக்கு தெரிவார்...!!

      மற்றவர்களுக்கோ.. ”வந்துட்டான்கள்...வரிசையாக கூடையை தூக்கிகிட்டு” என்பதாகவும், கொடுக்கும் மூன்று கை நெல் என்பது சுமார் ஒரு கிலோ கூட தேறாத நிலையில்..”போதும்..போதும் போ..” விரட்டுவதும்...”எவ்வளவு கொடுத்தாலும் இவனுங்களுக்கு பத்தவே பத்தாது” என்ற வசவுகள்...!!என..அவர்கள் படும் அவமானம் சொல்லி மாளாது..!

     ஒரு சில பண்ணையார்கள், களத்தில் இருக்கும் தங்களின் சிறிய மகன் அல்லது மகளை விட்டு, தொழிலாளர்களுக்கு நெல்லை மூன்று கை அளந்து  போடச் சொல்லுவதும் உண்டு..! அவர்களின் கையின் அளவு சிறியதாக இருக்குமே.. அந்த  ஈகை..நல்லெண்ணம் தான்..!!

       எவ்வளவு நெல் களத்தில் இருந்த போதும்.. இந்த சிறிய அளவு நெல்லை,கூடையிலும், துணியிலும் பெற்று கொண்டு..முணுமுணுப்புடன்.. அந்த தொழிலாளர்கள்.. களத்தை விட்டு..வாட்டமுடன்.. செல்வது.. சிறிய வயதில் எனக்கெல்லாம் பாவமாக இருக்கும்..! இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..!! ஏன் இன்னும் கொஞ்சம் கொடுத்தால் குறைந்தா போய் விடும் என பெரியவர்களின் மீது..கோபமாக வரும்..!தன்னிச்சையாக கொடுக்கும் அளவுக்கு..அந்த சூழல்..சரியா தவறா என்ற குழப்பம்.. தைரியம் வராது..?!?

       இப்போதெல்லாம், அந்த தொழிலாளர்களை அறுவடை சமயத்தில் காணமுடிவதில்லை...! அவர்களின் வாரிசுகள் என சொல்லிக் கொண்டும்..எவரும் வருவதில்லை..! அறுவடை என்ற மக்கள் திருவிழாவும்,  நெல் களத்து மேடுகளும், முறம், மரக்கால், படி, கூடை, விளக்குமாரு, சாக்கு, அன்னக்கூடை , கோணி ஊசி, சணல் என தேவைப் பட்ட பொருட்களும்..

      அறுவடைக்கே உரித்தான எந்த வித முந்தைய நிகழ்வுகளும் இல்லாது, மறைந்து போனதில்..முழுக்க அறுவடை இயந்திரமும், அதன் ஓட்டுனருடன் அனைத்து வேலைகளும் முடியும் நிலையில்.. அந்த தொழிலாளர்களை எதிர்பார்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை..!! அவர்களுக்கும் இந்த நெல் தேவையுமில்லை...!
   
       ஆனாலும், அன்று ஏகடியம் பேசிக் கொடுத்த..அந்த மூன்று கை நெல்லுக்கும்,இப்போது அறுவடை இயந்திரத்தினால்.. விரும்பியோ விரும்பாமலோ...தவிர்க்க இயலாமல் வீணாகும் மூன்று மூட்டை நெல்லுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே எனக்கு,தோன்றுகிறது..!

     ”இப்ப என்னா செய்வீங்க”..?? என்று.. சிறுவயது..நினைவின் மூலையில் மங்கலாக தெரியும்  அந்த தொழிலாளர்கள்.. வாயில் வெற்றிலை பாக்கு..மைதீன் புகையிலை வாசத்துடன்.. காறைப் பல் தெரிய.. இயந்திரத்தால் வீணாக வீசப் பட்ட..வெற்றுத் தரை, நெல் முளைப்பில் நின்று,  நம்மை பார்த்து, ஏளனமாக.. சிரிப்பதாகவே, எனக்கு, தோன்றுகிறது..!?!!

நாக.பன்னீர் செல்வம் Naga.panneer selvam

   

   

புதன், 16 நவம்பர், 2016

புள்ளைக்கு..புள்ள பொறந்திருக்கு..!?!...


   ஒரு சமயம் நான் சிறுவனாக இருந்த போது..லோக்கல் மெண்ட் என்று கிராமத்து ஆத்தா, தாத்தாக்களால்..அழைக்கப் பட்ட..அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.. அப்போது அங்கிருந்த பிரசவ வார்டிலிருந்து.. வெளியே வந்த..ஒரு  நடுத்தர வயதுடைய இஸ்லாமிய..பெண்மணி..எதிரில் வந்த.. மற்றொரு இஸ்லாமிய பெண்ணிடம்..மலர்ந்த முகம்.. வழியும் சிரிப்புடன்... இவ்வாறு கூறினார்..!
      ”புள்ளைக்கு புள்ள பொறந்திருக்கு”...!! என்று..!!

      அதனை கேட்ட, எதிரே வந்த..பெண்மணி,திருப்பி கேட்டார்..                                 ”என்னா புள்ள”..??.. அதற்கு முதல் பெண்மணி திரும்ப சொன்னார்..”புள்ள..!!” என்று..!!..இந்த சாதாரண சிறிய சொற்றொடரின்,..அர்த்தம்.. பின்னர் தான் என் வயதொத்த  நெருக்க மான நண்பர்களிட்ம் இதனை பற்றி பேசிக் கொண்டிருந்த போது.. புரிந்தது..! அதாவது.. முதலாவது பெண்ணின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது...அது ஆண் குழந்தை..!!

     முதலில் குறிப்பிட்ட.. புள்ளை என்பது, முதலாவது பெண்மணியின் மகள்.. அதாவது இன்றும்..பிரசவித்த நிலையிலும்..  அந்த தாய்க்கு,அவர்..குழந்தையே.!. குழந்தைக்கு...குழந்தையே  பிறந்தாலும்..!...அந்த குழந்தைக்கு பிறந்த குழந்தையும்..”புள்ள”.. தான்..! அதன் அர்த்தம்... குழந்தை என்பது மட்டுமே..! ஆணா.. பெண்ணா என்ற விபரம் கிடையாது..?!?..மூன்றாவது வார்த்தையான என்னா ”புள்ள”..? என்பது ஆணா..?? பெண்ணா..? என்பதானது..அதாவது கேள்வி?! கடைசியாக பதிலாக குறிப்பிடப்பட்ட..”புள்ள”..அது ஆண் பிள்ளை என்பதாகும்..!!
”ப்புள்ள”.. என்று சற்று அழுத்திக் கூறினால் அது ஆண் பிள்ளை..!!

     இப்போது இதனை ஒரே வாக்கியமாக சேர்த்து பார்த்தால்...இதன் கவித்துவம் புரியும்..” புள்ளைக்கு..புள்ள பொறந்திருக்கு...என்னா புள்ள..??...புள்ள..!?!” எந்த மொழியிலும்.. எந்த ஒரு நாட்டின் தலைசிறந்த இலக்கியத்திற்கும் ... உலகின் ஆகப் பெரிய உவமை கவிஞனின் படைப்புக்கும்..சற்றும் குறைவில்லாத.... சுவை..! ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத..அரசு மருத்துவமனையை  பயன் படுத்தும் ஏழை குடும்பத்து பெண்களின் சாதாரண வார்த்தை..வெளிப்பாடு.. நுணுக்கமான..அறியாமையை, மட்டுமே மூலதனமாக கொண்ட..இலக்கிய சுவை...!!

     மேல் நிலை மற்றும் கல்லூரி தமிழ் பாட புத்தகங்களின்... ஒரு சில பாடத்தின் இறுதியில் முடிந்திருக்கும் வாக்கியம் போல..”இது..எண்ணி எண்ணி இன்புறத்தக்கதே”என்றால்  அது மிகையில்லை..?!!?..

      நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்த நிலையில்..கம்பியூட்டர் ஆப்செட், அச்சு தொழில் நடத்தும், எனது,நண்பர்..ரெகுலராக செக்கப் செய்து வரும் தனியார் மருத்துவமனையின், வழிகாட்டலின் படி, பிரசவிக்க..இன்னும் 10 நாள் இருக்கிறது என்ற நம்பிக்கையில்..

     தனது தாயாரை ஊருக்கு அனுப்பி விட்டு.. கர்ப்பிணி மனைவியுடன் தனியே இருந்த..மழை நாள் இரவில்..திடிரென மனைவிக்கு..ஏற்பட்ட.தொடர்ந்த .வயிற்றுப் போக்குடன், கையில் பணமில்லாத நிலையில்.. வேறு வழியில்லாமல் அரசு மருத்துவமனையை.. நள்ளிரவில் அணுகி உள்ளார்..!

      தனக்கு தெரிந்த நண்பர் உதவியுடன்.. அரசு மருத்துவமனை.. தலைமை நர்சுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார்..! அவரும்.. நண்பரின் மனைவியை பரிசோதித்து.. வயிற்று போக்கு பெரிய பிரச்சினை இல்லை..சுகப் பிரசவத்திற்கு  ரொம்ப நல்லது..!! இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிரசவம் நடக்கும் எனக் கூறி.. அது போலவே.. சுகப் பிரசவமும் ஆகி.. அழகிய ஆண்குழந்தையை ஈன்றெடுத்தும் இருக்கிறார்..!

      எந்த வித அனாவசிய கூடுதல் தனியார் மருத்துவமனையின்.. செலவும் இல்லாமல்..சிசேரியன் இன்றி.. அரசு மருத்துவமனையில் சுகப் பிரசவம்..!அதுவும் ஆண் குழந்தை..!! தனியார் மருத்துவமனையினர் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே..!!

     ஆனாலும் நண்பருக்கு பிரச்சினை வேறு வடிவத்தில் வந்துள்ளது..!! தனது மகளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த வகையில் அவரின் மாமியாருக்கு வருத்தம்..! மனைவி வழி  உறவினர்களும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல்.. ஐயோ பாவம்..அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து  அங்கு குழந்தை பிறந்துள்ளது என்பது போல.. பாவப் பட்டிருக்கிறார்கள்!!

      குழந்தையை பார்க்க..தூரத்தில் இருந்து வந்த, மனைவி வழி, பணக்கார வயதான தம்பதியினர்..மருத்துவமனையில் நுழைந்ததில் இருந்து.. கையினால் மூக்கை பொத்திக் கொண்டே, குழந்தையை பார்த்து விட்டு, “தம்பி காசு கையில் இருக்கிறதா..? என்று கேட்டு விட்டு.. கடையில் வாங்கி கொடுத்த டீயை குடித்துவிட்டு ஊருக்கு சென்றிருக்கிறார்கள்..?!?

     ஆனாலும் நிலைமை ஒன்றும்.அவ்வளவு மோசமில்லை..! தமிழ் நாட்டு அரசு மருத்துவமனைகளை அப்படி எல்லாம் ஒட்டு மொத்தமாக கேவலப் படுத்த..முடியாது..!குறிப்பாக மகளிருக்கான பேறு கால பிரிவுகளி்ன் சேவை மிகவும் உன்னதமானது.. !மருத்துவர்கள், செவிலியர்கள் உண்மையான ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் படுகிறார்கள்..!

     கர்ப்பிணி பெண்களுக்கு..பேற்றிற்கு முன் மற்றும் பின் செயல் படுத்தப் படும் நலத்திட்டங்கள்.. நல உதவிகள்.. உதவி தொகைகள், கண்காணிப்புகள் என எவ்விதத்திலும் குறை சொல்ல முடியாது..! வேறு எந்த மாநிலத்தை ஒப்பிட்டாலும்.. அவை. இந்த சேவைகளின் அருகில் கூட நிற்க முடியாது.!!

      மற்றப் படி அரசு மருத்துவமனைகளை வீணாக்குவது நாம் தான்.. !அதாவது விசிட்டர்கள்..! குறிப்பாக கிராமத்தினர்..மருத்துவமனையில்.. ஏதாவது காரணத்தால் சேர்ந்திருக்கும் நோயாளியை பார்க்க வரும் அவர்கள் செய்யும் அட்டூழிய்ங்களே மருத்துமனையை மோசமாக்குகின்றன,,!

     வெற்றிலை பாக்கு போட்டு கொண்டு  கூட்டமாக வந்து ஊர் கதை பேசுவதும்.. சாப்பாடு, டீ, காப்பி என்று அமர்ந்து.. இடத்தை நாறடிப்பதும்... ஒவ்வொருவராக..நோயாளியை  திரும்ப திரும்ப..அவருக்கு  நடந்ததை..எப்படி நடந்தது..?!?..எனக் கதை கேட்டு அலுப்படிக்க செய்வதும்.. பிற நோயாளிகளுக்கும் இடைஞ்சலாகவும்.. கழிப்பறைகளை நாறடிப்பதும் என.. மருத்துவரையும்.. தாதிகளையும் வெறி கொள்ள செய்பவர்கள்..!!

     மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட, பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகளையே நாடுகிறார்கள்..!! ஆனால் நடுத்தர வர்க்கதிற்கு மட்டும் அரசு, ஆரம்ப சுகாதார நிலையங்களில்..குழந்தை பிறப்பது கேவலமாக உள்ளது..!! இல்லாதவர்கள் கூட கடனை உடனை வாங்கி தனியார் மருத்துவ மனையில் பிரசவம் பார்ப்பதும்..உடனுக்குடன் ஸ்கேன் பார்த்தும்..கடைசியில் சிசேரியன் ஆவதும், ரொம்ப சிக்கல் எனில்.. அரசு மருத்துவமனைக்கே அனுப்பி வைப்பதும் வாடிக்கை..!!

     எக்காரணம் கொண்டும்.. 99 சதவீதம் சுகப் பிரசவம் ஆகும் அளவிற்கு, அரசு மருத்துவமனைகள் தங்களின் அனுபவத்தை பயன் படுத்துகின்றன..! தனியாருக்கோ.. கர்ப்பிணி என்பவர்கள் நோயாளிகள்..! எனவே பிரசவ காலத்தில்.. அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம் குடும்பத்தினரையும்  ஆட சொல்லி..வேடிக்கை பார்த்து, கறந்தும்  விடுகிறார்கள்..?!?

     இத்தனைக்கும் மருத்துவ படிப்பு தகுதிகள் இன்றி, வெறும் 10வது 12வது படித்த, குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு இருக்கும் செமி தாதிகளிடம், கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர், கை கட்டி, வாய் பொத்தி.. சொல்வதை கேட்டுக்கொண்டிருப்பார்கள்.!!

     ஒரு மழைக்கால நள்ளிரவில்.. வேறு வழியின்றி.. உடல் நிலை மோசமானவரை, அருகாமை அரசாங்க மருத்துவமனைக்கு, ஆட்டோவில் கூட்டிச் சென்றேன்.. அங்கிருந்த தாதி, தனி ஒருவராக இருந்தார்.. அவரின் மடியில் தூங்கிய,தனது.. பெண் குழந்தையை, கீழே தரையில் கிடத்தி வைத்து விட்டு.. எங்களுக்கு..மருத்துவம் பார்த்து.. ஊசி.. போட்டு, நிவாரணமும் ஆனது..! ஆனாலும்..ஆங்காங்கே அந்த குழந்தை வீட்டு பாடம் செய்த புத்தகங்கள்.. மூடியும் மூடாமலும் கிடந்தது..சூழ் நிலை..மனதை என்னவோ செய்தது..!!

     ஆனாலும் நம் மக்கள்.. அரசு மருத்துமனை தாதிகளிடம்.. எப்போதும் மாறாத புன்னகையையும்,சேவையையும், கருணையையும்.. சுவிட்ச் போட்டால் எரிய தயாராக இருக்கும் பல்பு போல..எந்த நேரமும்.. எதிர்பார்ப்பார்கள்..!! மனித நோய்களில், தங்களின்  வாழ் நாள் பணியை கொண்டிருக்கும் அவர்களிடம்.. ஒரு வித சலிப்பும், எரிந்து விழும் தன்மையும் இருப்பதில் நியாயம் இருப்பதை  நம்மால் புரிந்து கொள்ளமுடியாது..!!

     வாரம் பூரவும்.. வசூலை  அறித்து கொட்டும் தனியார் மருத்துவர்கள்.. வாரக்கடைசியில் ஞாயிற்று கிழமைகளில் இல்லாமல்.. லீவு என்று.. வெளியூர் சென்று விடுவார்கள்..!! அதுவும்.. நடுத்தர டவுன்களில். சுற்று வட்டாரம் கிராமங்களாகவே.. இருக்கும் போது.. பாம்புக்கடி, தேள் கடி, அரளி விதை, பாலிடாயில் என ஆத்திரம் அவசரத்திற்கு கிடைக்க மாட்டார்கள்.. !! பெரிய டவுனுக்கு.. காலம் தாழ்த்தி இவர்கள் போவதற்குள் எல்லாம் முடிந்து விடும்..!!?!..இந்த மாதிரி துர்மரணங்கள்..எல்லாம் ஞாயிற்று கிழமைகளில் அதிகம் நடந்திருக்கும்..! கவனித்து பார்த்தீர்கள் என்றால் புரியும்..!?!

இவ்வாறான மருத்துவர்கள் தங்களுக்குள், தங்களின் மருத்துவமனைக்குள் எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி, அதாவது, பொது மக்களின் அவசர தேவைக்காக.. எல்லா ஞாயிற்று கிழமைகளிலும்.. ஏதாவது ஒரு மருத்துவமனையேனும், மாறி மாறியாவது..  திறந்திருக்க செய்யும் ஏற்பாட்டினை செய்யவே.. மாட்டார்கள்..!

     சாதாரண் நோய்களுக்கு, தனியார் மருத்துவமனையில் மணிக் கணக்கில் உரிய மருத்துவர்களுக்காக நாம்..காத்திருக்கிறோம்..! அதுவும் பத்து அல்லது பதினைந்து பேர் சேர்ந்தால் தான்..வைத்தியம் பார்க்க இறங்கி வரும்.. மருத்துவர்களும் உள்ளனர்..!!

     அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தாதிகளோ...கடுமையான விபத்து உள்ளிட்ட அவசர கேஸ்களுக்கு,  பாதிக்கப் பட்டவர்களுக்காக, நள்ளிரவிலும் எதிர் நோக்கி..அவர்களாகவே,  காத்திருக்கிறார்கள்..!!

      வாழ்வில் சலிப்பும், இயலாமையும் கொண்டவர்கள், ஏன் வாழ்கிறோம்..?? என்று தோல்வி மனப்பான்மையில் இருக்கும் எவரும்..ஒரு முறையேனும் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்க்கலாம்..! வயது முதிர்ந்த முதியோர்கள் வரிசையில் நின்று.. மூட்டு வலி, இடுப்பு வலி, பசியில்லை...! என்று சொல்லிக் கொண்டு, டாக்டர்களிடம் கெஞ்சாத குறையாக.. மருத்துவம் பார்த்துக் கொண்டு.. தெம்புக்கு மாத்திரை.. ஊசி போடச் சொல்ல வரிசையில் நின்றுக் கொண்டிருப்பார்கள்..!! வாழ்வின் முக்கியத்துவம் அப்படி..?!!?..

      ”இருந்து தொலைப்பதை விட.. செத்துத் தொலைக்கலாம்....!!...என்போருக்கு மத்தியில்... ”செத்து தொலைப்பதை விட இருந்து தொலைக்கலாம்”..!! என்பதை.. உணர்த்தும் வாழ்வியலின் ஜீவ மரண போராட்டத்தை உணர்த்தும்...பாடம் போலவே.. இருக்கும்..அந்த முதியோர்களின்...அரசு மருத்துவமனை... சிகிச்சை, தேடல்கள்..!!

     முடிந்தால்.. உங்கள் குழந்தைகளுடன்..ஒரு முறை ஞாயிற்று கிழமைகளில்.. அரசு மருத்துவமனைக்கு சென்று வாருங்கள்.. நோய் சிகிச்சைக்காக இல்லாவிடினும்.....குறைந்த பட்சம்.... அனுபவ சிகிச்சைக்காகவாவது........!!

நாக.பன்னீர் செல்வம்

   

     

ஞாயிறு, 13 நவம்பர், 2016

விவசாயிகள்... மறக்க வொன்னா..ஜீவன்..!!

      சமீபத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்.. ஒரு சிறிய விளம்பரத்தை நாளிதழில் வெளியிட்டிருந்தது.. அதனை  நம்மில் எத்தனை பேர் கண்டிருப்போம் எனத்தெரியாது..!

     ”பாபு ஜெகஜீவன் ராம்  அகில இந்திய கட்டுரை போட்டி”..என்ற தகவலை கொண்டிருந்த அந்த விளம்பரம்..பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கட்டுரையை எதிர் நோக்கி அதற்கு பரிசுகளையும் அறிவிக்கிறது...! 

      இந்தியாவின் யாரோ ஒரு தலைவரை பற்றிய நினைவு படுத்தலை.. வழக்கமான..மரபு சம்பிரதாயம் சார்ந்ததாக இதனை எடுத்துக் கொள்ளமுடியாது..! எனெனில் விவசாயிகளின் இன்றைய வாழ்க்கைக்கு.. ஓரளவிலான மேம்பாட்டிற்கு பாபுஜி எனப்படும் பாபு ஜெகஜீவன் ராமின் பங்களிப்பு...பயிரின் பச்சையம் போன்று இன்றியமையாதது...!

     பீகாரில், சந்த்வா எனும் இடத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்த ஜெக ஜீவன், கடுமையான வறுமை காரணமாக..தனது தாயாருடன் கல்விக்காக  ஆரா எனும் அருகாமை டவுனுக்கு இடம் பெயர்ந்தார்..1922 ஆம் வருடம் ஆரா டவுன் ஸ்கூல் அவருக்கு தீண்டாமை,சாதி, மத பாகுபாட்டை அதன் கசப்பை...பட்டுக் கம்பளம் போட்டு  அவரை வரவேற்று..உணர்த்தியது..!

     ஜெகஜீவன் படித்த அந்த பள்ளியில் இரண்டு குடி நீர் மண்பாண்டங்கள் இருந்தது..! ஒன்று இந்துவகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு..மற்றொன்று முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்களுக்கு..!! தலித் சமுதாயத்தை சார்ந்த ஜெக ஜீவன் தன்னையும் ஒரு இந்து என  நினைத்துக் கொண்டு.. இந்துக்களுக்கான பானையில் நீர் அருந்தினார்..!! வந்தது விபரீதம்.. !!அவர் அந்த பானையில் நீர் அருந்தியது குறித்து புகார் பத்திரம் வாசிக்கப் பட்டு அது தடுக்கவும் பட்டது..!!

     மிகுந்த நீதிமானானாகவும்.. அந்த கால கட்டத்தின் நடைமுறைக்கு சாட்சியாகவும் இருந்த தலைமையாசிரியர்.. ஜெக ஜீவனின் குடி நீர் பிரச்சினைக்கு  முடிவு கட்ட விரும்பி.. துணிந்து ஒரு முடிவு எடுத்தார்..! அது வேறு ஒன்றுமில்லை... புதிதாக ஒரு பாணயை வைத்து அது தலித்துகளுக்கானது... என அறிவித்தார்..!?!..  என்ன ஒரு நீதி பாருங்கள்..!!
இதில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய அம்சம்..அதுவரை தலித் மாணவர்களுக்கு குடி நீர் வசதி செய்து கொடுக்கப் படுவதை..யாரும் கவனத்தில் கொள்ளவே இல்லை..என்பதே..!?!

     பிற்காலத்தில்..இந்தியாவின் துணை பிரதமாராகவும்.. இளம் மந்திரியாகவும் அரசியலில் பெரும் சக்தியாக விளங்கிய ஜெக ஜீவன் தனது வாழ் நாளில் பலமுறை வேதனையுடன் குறிப்பிட்ட சம்பவமாகவும், இந்த ”மூன்றாவது பாணை” .. இருந்தது..!! தலைமை ஆசிரியர் வைத்த அந்த பாணை பலமுறை..அவரால்  உடைபட்டதும்.. ஆனாலும் உள்ளத்தின் அந்த பாகுபாட்டு வடு உடைபடாமல் முழுதாகவே.. இருந்ததும் தான் உண்மை..!! அதே பள்ளிக்கு பின்னர் மதன் மோகன் மாள்வியா உரையாற்ற வந்ததும்.. ஜெக ஜீவனை.. நன்கு படித்து.. பனாரஸ் யுனிவர்சிட்டிக்கு  வர அழைப்பு விடுத்ததும்.. நம்பிக்கையை விதைத்ததும் பெரிய தாக்கமாக அவருக்கு இருந்தது..!

     இவ்வளவு நடைமுறை சிக்கலிலும் தனது கல்விக்கு எந்த ஒரு பாதிப்பு வராமல், மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து, பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் அறிவியல் பாடத்தில் இணைந்தார்..!
அங்கும் சாதி பாகுபாடு அவரை விடவில்லை..!! ஹாஸ்டலில் உணவு பரிமாறுவதில் இருந்து தங்குவதில்...அவ்வளவு ஏன் முடி வெட்டிக் கொள்வதில் கூட அவரை ஒதுக்கிய நிலை இருந்தது..! தனது முடியை வெட்டிக் கொள்ள..பனாரசில் இருந்து காசிப்பூர் வரை பயணப் பட வேண்டியதாக இருந்தது..!!

      மேற்கண்ட நிகழ்வுகள்.. அவரை தீண்டாமை, ஒடுக்குமுறை,சமூக பொருளாதர பிரிவினை குறித்து  சிந்திக்கவும்.. செயல் படவும்.. வைத்தன..விளைவு..ஜெக ஜீவன் ராம் நாத்திகர் ஆனார்..!! இத்தகைய மனித நேயமற்ற பாகுபாடுகள் அதனை  வைத்திருக்கும் மதம் அதன் தொடர்பிலான கடவுளர்கள்  இருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த கடவுள் மறுப்பாளர்.. ஆனார்..! பின்னாளில் காந்தியுடன் சேர்ந்து பணியாற்றிய நிலையிலும் அவர்தம் கடவுள் மறுப்பை கைவிடவே இல்லை...!! ;பின்னே....!கடும் பசியை தாளாமல்.. வயிற்றை தடவி கொள்பவனும்.. விருந்தருந்தி.. வயிற்றை வருடிக் கொள்பவனும் ஒன்றாகி விடுவார்களா...என்ன..?

     அனைத்து அவமானப் படுத்தலுக்கும் ஈடாக ஹிந்து பனாரஸ் யுனிவர்சிட்டி 2007ம் ஆண்டு முதல்..ஜெக ஜீவன் ராம் பெயரில் சமூக அறிவியல், சாதி பாகுபாடு, சாதியின் பெயரிலான பொருளாதார பின் தங்குதல் இவற்றை குறித்து ஆராய ஒரு இருக்கையை நிறுவி அதன் வழி இன்றளவும்...அது குறித்தான ஆராய்ச்சியை நிதி அளித்து ஊக்குவித்து வருகிறது..!!

     இந்தியாவில்.. சனாதான சாதி அமைப்புகளை மீறி..ஒரு மதிப்பு மிக்க..மனிதாபிமான  சட்டம் 1935 ல் அமுலுக்கு வந்தது... !அதாவது தாழ்த்தப்பட்ட மக்களும் சட்ட சபையில் இடம் பெறலாம் என்பதான அந்த சட்டத்தின் வழி.. ஜெக ஜீவன் ராம் பீகாரின் சட்ட சபையில் இடம் பெற்றார்..சாதரணமாக அந்த இடத்தை ஜெக ஜீவன் அடைந்து விடவில்லை.. தேசீய வாதிகளும், ஆங்கிலேயர்களும்.. அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு அவர் பொது வாழ்வில் பங்கு கொண்டிருந்தார்.. !

     நேபாள பீகார் பூகம்பத்தில் பணியாற்றியது..பீகாரின்  சாதி..ஒடுக்குமுறைகள்..சமூக.. பொருளாதார நிலை, தாழ்த்த பட்டோருக்கான அமைப்புகளை நிறுவதல்..என குரலற்றவர்களின் குரலாக இருந்த அவர்.. அம்பேத்காருக்கு அடுத்த படியாக பெரிதும் மதிக்கப் படும் நபராக இருந்த ஒரே ஒப்பற்ற தலைவராக பீகாரில் அடையாளம் காணப்பட்டார்..!! பின்னாளில்.. ஆங்கிலேயரின்  பீகாரின்..தண்ணீருக்கான வரி விதிப்பை.. கண்டித்து வகித்து வந்த சட்ட சபை உறுப்பினர் பதவியை தூக்கியும் எறிந்தார்..!!

       நாடு சுதந்திரம் அடைந்த நிலையில்..இந்திரா காந்தி அமைச்சரவையில் 1974 முதல் 1977 வரை இந்தியாவின் விவசாய மற்றும் பாசன அமைச்சராக. சவால் மிகுந்த பணியில்...விவசாயிகளின் தன்னம்பிக்கைக்கும்..உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையையும், தேடித்தந்தவராக இருந்தார்,,!

     பசுமை புரட்சி எனும் பசி தீர்க்க உதவிய வார்த்தை.. அமெரிக்காவில் 1968 டாக்டர் வில்லியம் காட் என்பவரால் உருவாக்கப் பட்டது..! 1974 ஆம் ஆண்டு இந்தியா கடும் பஞ்சத்தை எதிர் கொண்டது..!! பட்டினி சாவுகள் பெருகின..! எங்கும் பசித்த வயிறுகள்.. காலி தட்டோடு அலைந்தது..!! அப்போது தான் பசியையையும், வறுமையையும், சாதி, பொருளாதார பின்னடைவு  அனைத்திலும் சொந்தமாக பரிட்சித்து பார்த்திருந்த ஜெக ஜீவனின் மந்திரிப் பதவி இந்தியாவிற்கு.. குறிப்பாக விவசாயிகளுக்கு உதவி.. மக்களுக்கும் வயிற்றில் பால் வார்த்தது...!

      பாரம்பரிய  நெல் கோதுமை இரகங்களை விட, அதிக விளைச்சல் தரும் குட்டையான, வீரிய ஒட்டு, குறைவான நாட்களில் பலன் தரும் இரகங்களை உருவாக்கி,  தேர்வு செய்வதிலும்.. இந்தியா முழுவதும் அது  விவசாயிகளால்..கையாளப் படவும்.. அது குறித்தான விரைவான நடவடிக்கைகளிலும் ஜெக ஜீவன் அர்ப்பணிப்பு உணர்வுடன்..முழு மூச்சுடன் செயல் பட்டார்..!

     பாரம்பரிய..இரகங்களை விட...200 முதல் 300 சதவீதம் வரை அதிக மகசூலை கண்ட அனைத்து ஆரம்ப கால கோதுமை, நெல் இரகங்களும் ஜெக ஜீவன் ராமின் ஆர்வம், ஊக்குவிப்பு, விஞ்ஞானிகளை தொடர்ந்து மாதா மாதம்  கட்டாய கூட்டம்  நடத்தி..  சந்தித்து அவ்வப்போது கண்காணித்ததின் தொடர்பால் வந்த வெற்றியே..!!

     1968 ஆம் ஆண்டு இந்தியாவின் பட்டினியை காணாமல் போக செய்த..17 மில்லியன் டன்...உணவு தானிய உற்பத்தி..பழைய முறையில் வழக்கமாக செய்யப் பட்ட12 மில்லியன் டன்னை  பின்னுக்கு தள்ளி பசியற்ற இந்தியாவை உலக அரங்கில் நிறுத்தியது..!

      இந்த பெருமிதம் குறித்து, ஜெக ஜீவன் ராம் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரதமர் இந்திரா காந்தியும், கோதுமை புரட்சிக்கு அடையாளமாக ஒரு தபால் தலையை, இந்திய  விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலக கட்டிடத்தை தாங்கி ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டார்..!!

      எந்த ஒரு தொழில் நுட்பமும், ஆராய்சியும், உரங்களும் புதிய இரகங்களும் அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருந்தார்.. ஜெக ஜீவன் ராம்.. !!அதன் விளைவாக உருவானதே.. விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் எனும் மாபெரும் திட்டம்..! கடனை பெற்று.. அதன் மூலம் அனைத்து புதிய உருவாக்கங்களும், விவசாயம் சார்ந்த அனைத்தையும்.. அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி.. சேர்த்த வகையில்..அது பெரும் விவசாயிகள் இயக்க செயல் பாடாக இன்றளவும் தொடரும் நிலையில்..ஜெக ஜீவன் ராமின் திட்டம் மிகவும் பாராட்டப் படவேண்டிய.. விவசாயிகள் நன்றியறிதலுடன் நினைத்து பார்க்க வேண்டியதாகும்..!

      பாரம்பரிய விவசாய அறிவு மற்றும் தொழி நுட்பம்  இவற்றை ஒரு சேர பயன் படுத்துதல்..சூழலியல்,ஆர்கானிக் விவசாய முறை,செயற்கை மழை தருவிப்பு போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டு விஞ்ஞானிகளை ஊக்குவித்தார்..!! ஜெக ஜீவனின் ஈடுபாட்டுடன்.. நமதுஅண்ணாமலை பல்கலை கழகத்தின் சார்பாக மேற்கொள்ளப் பட்ட இசையின் மூலம் பயிர் வளரும் என்ற தலைப்புகளில், நிதி உதவி அளித்து.. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப் பட்டது..!!
எம் எஸ் சுவாமி நாதன் உள்ளிட்ட பல வேளாண் விஞ்ஞானிகளின் அவரின் கீழ் செயல் பட்டவர்களே..!!

      விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதற்கு நல்ல விலை கிடைக்கவில்லை எனில்.. தொடர்ந்து அறிவியல் பூர்வமான முயற்சிகளையும்...புதிய இரகங்களை பயன் படுத்த மாட்டார்கள் என்பதை ஒரு விவசாயியாக அறிந்திருந்த, ஜெக ஜீவன் அவர்கள், இந்திய உணவு கழகம் அப்போது அறிவித்திருந்த கோதுமை விலைக்கு அதாவது பாரம்பரிய இரகமான ஆம்பர் மற்றும் குட்டை ஒட்டு இரக கோதுமைக்கும் இடையில் இருந்த விலை வித்தியாசத்தை,..

       புதிய இரகத்திற்க்கான குறைந்த விலையை.. அரசே ஏற்றுக் கொண்டு,அதனை ஈடாக அளித்து... விலை வித்தியாசத்தால் விவசாயிகள் பாதிக்கப் படாமல் தொடர்ந்து.. தொழில் நுட்பத்தை  பயன் படுத்திட முன்னோடியாகவும்.. ஆக்கப்பூர்வமாகவும் செயல் பட்டு அது இன்றளவும் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது..!

     இந்தியாவின் 60 சதவீத நிலங்கள் வானம் பார்த்தவை என்பதையும் உணர்ந்து, ஜெக ஜீவன், நிலமற்ற விவசாய ஏழை கூலித் தொழிலாளர்களையும், வருடா வருடம் பருவகால மாறுதல்களால் ஏற்படும் வறுமை, பணப் பற்றாக்குறை, கூலி பிரச்சினைகள், வேலையின்மை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், கலப்பு பண்ணை போன்றவை வளர்ச்சி பெற திட்டங்களை தீட்டி அது நடைமுறை படுத்த படவும் உதவி, விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் அரசை அனைத்திற்கு சார்ந்திராமல், நிதி தன்னிறைவும், சுயமாக செயல் படவும் வழி வகுத்தார்..! கே வி சி எனப்படும் கிருஷி விக்யான் செண்டர்கள் அமைக்கப் படவும் காரணாமாக இருந்தார்..!

       உணவை பலருடன் சேர்ந்து, குறிப்பாக வேளாண் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து
அமைச்சராக இருந்த போது, விவாத்திக் கொண்டே உண்ணும் பழக்கமுடைய ஜெக ஜீவன் ராம்..அடிக்கடி கூறும் வார்த்தை..”உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள்..அது மனிதனின் நாக்கு வழியாக வயிற்றுக்கு செல்கிறது” இதன் அர்த்தம், மரபு கலப்பு,தொழில் நுட்பம்,ஆராய்ச்சிகள் அனைத்தும் கவனமுடன் செயல் படுத்தப் பட்டு இயற்கை...அதன் பிரமீடு விகிதம் மாறாமல்.. பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே...!!

      இன்றும் பொருந்தக் கூடியதாகவே அந்த வார்த்தைகள் இருக்கின்றன..! ஒடுக்கப் பட்ட மனிதனாக..பீகாரில்  பிறந்து.. இன்றளவும் இந்தியா முழுவதும் செயல் படுத்தப் படும் விவசாயம் எனும் ஜீவ செயல் பாட்டிற்கு வித்திட்ட அந்த மாமனிதரை...மறப்பது அவ்வளவு சுலபமல்ல..!!
     

   

   

   

     
     


      

திங்கள், 7 நவம்பர், 2016

ஆட்டிறைச்சி..எனும் ஞானத் தேடல்..!

     ஞாயிற்று கிழமை அல்லது ஏதேனும் ஓய்வு நாளில், விசேஷ தினங்களில்  நல்ல, கிடா ஆட்டுக் கறியை குழம்பு வைத்து, அதிகம் மசாலா சேர்க்காமல் அதாவது மருந்து நாத்தம் அடிக்காமல்..! நீர்க்க வெடு வெடு வென்று வைத்து..வடித்த சோற்றுடன்..அள்ளி கறியும்..சோறும் தண்ணியுமாக..அதில் உள்ள  வெள்ளைக் கத்திரிக்காய் அல்லது சுரைக்காயுடன் சேர்த்து...வாய் நிறைய,..சாப்பிடும் சுகம்..சற்றேறக்குறைய  சொர்க்கத்திற்கு அருகாமையில் சென்று திரும்புவதற்கு சமம்..!!

      இதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது என்கிறீர்களா..? உங்களுக்கு எப்படியோ தெரியாது...எனக்கு இது பெரிய விசயம் தான்..!எனென்றால் மேற்படி சொர்க்கப்பூர்வ அனுபவத்திற்கு.... முக்கியமாக ஒன்று வேண்டும்...அது நல்ல, கிடா ஆட்டு இறைச்சி..!! இதனை பெறுவதற்கான அலைச்சல், முயற்சி, முடிவெடுக்கும் திறமை,நுண்ணறிவு, மொத்தத்தில் அந்த...சூதானம் தான்.. நான் சொல்ல வந்தது..!!

     சிறு வயது முதலே, வீட்டு ஆண்களை, ஆட்டுக் கறி எடுத்து வந்த நாட்களில், ஒரு சில சமயங்களில் மட்டும் ..பெண்கள், கறித்துக் கொட்டி, பொறுமி, கறியை கழுவுவதில் தொடங்கி, குழம்பு வைத்து, மேலும் அது, தீரும் வரை, திட்டித்தீர்ப்பதை.. ஆத்தா, அம்மா, அத்தை வாயிலாக கண்டிருக்கிறேன்..!

       நல்ல கிடா ஆட்டு இறைச்சிக்கு பதிலாக பொட்டை ஆட்டு கறி, அதுவும் கிழமாக இருந்து, முதல் நாளில் வெட்டு பட்டு.. ஐஸ்ஸில் வைத்தது, அல்லது..கறியில் முழுக்க தண்ணீர் ஏற்றி.. அதனால் எடை குறைந்து, குழம்பு மோசமாக....வாசனை  இல்லாமல், இருந்து, அதாவது.. சவுக் சவுக் என்று கடிக்க முடியாமல்.. இவற்றில் ஏதேனும் ஒரு காரணம்....குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இல்லை என்றால்...அவ்வளவுதான்..போச்சு..!!

     வைத்த குழம்பு தீரும் வரை...ஒரே வைப்பாட்டு தான்...!! குத்திக் காட்டல்...!அதுவும் மறைமுக ஆண்களின் கையாலாகத் தனம்.. நல்ல கறி எடுக்க துப்பில்லாத்தனம்.. என தொடரும் வீட்டுப் பெண்களின் தீவீரவாதம்..!!

     அப்போது தான் சிறு வயதில்அந்த முடிவை எடுத்தேன்..!ஆட்டுக் கறி என்பது சாதாரண விஷமல்ல... நல்ல கறியை கண்டு வாங்குவதற்கு..கூடுதல் கெட்டிக்காரத்தனம் தேவை என்று..! இது குறித்து அனுபவ சாலியான,தாத்தாக்கள், உறவுக்கார பெரியவர்களிடம் பேச்சுக் கொடுத்து.. அந்த கலையை கற்றேன்..!!ஆனாலும் இன்றும் சில சம்யங்களில்..கோட்டை விட்டு விடுவதும் உண்டு..!

     தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் பாய் மார்களே... ஆட்டுக் கறி கடை போடுபவர்களாக இருப்பார்கள்..! இதை தவிர,    ””நம்மாளு கடை” என்று சொல்லப் படும் இந்துக்களும் கடை போடுவதும் உண்டு..! ஆனால் அது சில சமயங்களில் மட்டும் இருக்க கூடியதாகவும் , சொந்த ஆட்டு  வளர்ப்பு கிடாய் கிடைக்கும் சமயத்தில் திறக்க கூடியதாகவும் இருக்கும்..!! விதி விலக்காக நிரந்தர கடைகளும்.. நீண்ட நாட்களாய் இருந்து வருவதும் உண்டு..!

     கூறு கறி என்று சொல்லப் படும், ஆட்டை அறுத்து , வெட்டி சிறு சிறு துண்டுகளாக்கி, ஏகத்துக்கும், அதனை, தென்னை கீற்றுகளில், சிறு சிறு கூறுகளாக நிரந்து, அனைத்து கூறுகளிலும் ஈரல்,கல்லீரல்  நுரையீரல், மாங்காய் எனப்படும் கிட்னி, கொழுப்பு என அனைத்து பாகங்களும் சமமாக, கொஞ்சம் கொஞ்சமாகவேனும் வைக்கப்பட்டு, பாகுபாடு எதுவுமில்லாமல்,  எடை எதுவும் வைக்கப் படாமல், ஒரு கூறு இவ்வளவு தொகை என்று, ஆட்டின் உத்தேச விலை, ஆள் ,...அரிவாள், வெட்டுக் கத்தி இவை கிடைக்க மெனக்கெட்டது போன்ற காரணங்களை காட்டி...பெரிய அளவு இலாபம் பார்க்காமல்,விற்பது..!

     பெரும்பாலும் கூறு போட்டு கறி கொடுப்பது, உறவினர்கள், நெருங்கிய  சொந்த முடைய குடும்பங்களுக்கு உள்ளாகவே... நடைபெறும்..! பொங்கல் தீபாவளி நாட்களில் வியாபார ரீதியாகவும், ஒரு சிலர், சேர்ந்து இதனை செய்வதும் உண்டு.. எப்படி இருந்தாலும் தாராசு, எடை கற்கள் சமாச்சாரங்கள் கிடையாது...! இதனை முன்னின்று நடத்துபவருக்கு, வெட்டி சுத்தம் செய்து  தருபவர்களுக்கு ஆட்டின் இரத்தம், தலை, குடல், என்று தனியாக ஸ்பெசல் கவனிப்பு கிடைக்கும்... இதற்கு விலை கிடையாது...! ஒடி ஆடி இதனை நல்ல முறையாக செய்து முடித்தால்..தோல் மூலம் கிடைக்கும் வருமானம் தனி..!

     ஆனாலும்,கூறு போடுதல் நிகழ்வு...பெரும்பாலும் சண்டை சச்சரவு, வராக்கடன் என அதிருப்தியிலேயே...முடிந்து,இனி இந்த வேலயே உதவாது..!! சீச்சீ..!! கடையில் வாங்கி தின்னுக்கலாம்..போ..!..என்று சலித்துக் கொள்ளும் படியாகவே, இதனை ஏற்பாடு செய்தவர்களால் முடியும்..!

     போகட்டும்.. இனி நமது கறிக்கடைக்கு வருவோம்..கிடா ஆட்டு கறி இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்..விதை இரண்டு அடையாளம்..! ஆனால் பெரும் பாலோர் ஏமாறுவது...இரண்டு சிறு நீரகத்தை பார்த்து..! கிடா ஆடு..தலை வெட்டப் பட்டு தனியாக இருக்கும் போது.. நல்ல முக்கோண வடிவத்திலும், கொம்புகளின் கீழ் புடைப்பாக  நல்ல வாளிப்பாக.. இருக்கும்..!

     மாறாக, பெட்டை ஆட்டு கறி, நல்ல சிவப்பு வண்ணத்தில் கூடுதலாக கலருடன் இருக்கும்..தலை தனியாக இருந்தால் முக்கோணமாக இல்லாமல்..சற்று நீள வாக்கில் இருக்கும்..!இதை விட ஒற்றை  நல்ல கிடா ஆட்டை, போட்டு கறி விற்கும் பாய்மார்கள்.. அன்று கூடுதலாக மிதப்புடன், கால் மேல கால் போட்டுக் கொண்டு..வாயில் பீடியுடன்.. வாங்க.. அப்புறம் என்ன வேணும்..?? என்று ஒரு பக்கமாக பார்த்துக் கொண்டு..தெனாவெட்டாக, அலட்சியமாக...வாடா.. நான் தான் இன்னிக்கு ராஜா என்பது போல் இருப்பார்கள்..!?!

     அதுவே பெட்டை ஆடாக இருந்தால்... சற்றே.. பம்முவார்கள்..! வாங்க எவ்வளவு வேண்டும்..!?! எனக் கேட்டுக் கொண்டே, ஆட்டின் கறியை வெட்டி தராசில் போடுவதிலேயே, அவசரம் காட்டி,   நம்மை சிந்திக்க விடாமல்.. நமது தலையில் கட்டி விட குறியாக இருப்பார்கள்..!!

       வழக்கத்துக்கு.. மாறாக அதிகம் பேசி.. என்ன..?அப்படி பாக்குறீங்க...சந்தேகம் வேண்டாம்...ஒண்ணும் பிரச்சினையில்லை..ஏதாவது சரியில்லை அப்படியே திரும்ப எடுத்து வாங்க..என்றும், தம் கட்டுவார்கள்..!! ஒருவேளை யாரும், திரும்ப வைத்த குழம்பை, புகார் சொல்லி, எடுத்து வர போவதில்லை என்ற தைரியமும்.. அல்லது.. குக்கரில் வேகவைத்து தின்றால் யாருக்கு என்ன தெரிய போகிறது..!! என்ற எண்ணமுமாக இருக்கலாம்..!

      ஒரு சில கடையில், வேறு கடையில் வாங்கிய கிடா ஆட்டின் விதையில் ஒன்றை வாங்கி, பெட்டை ஆட்டின் வயிற்று பகுதியில் மாட்டி, கிடா ஆட்டு கறியை போன்று மாயத்தை உண்டு பண்ணி, ஏமாற்றுவார்கள்..! அவர்களும் என்ன செய்வார்கள்..? பாவம்..!யாரும் பெட்டை ஆடு இறந்தபின், அதற்கு சமாதி எதுவும் கட்டுவதில்லையே..! அதுவும் இறைச்சிக் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும்..!?!

      இதைத் தவிர ஆட்டு கறியில், தண்ணீர் ஏற்றும் வைபவம் என்று, டெல்டா மாவட்டங்களில் உண்டு..! ஆட்டை அறுத்து, பின்னர் கட்டி தொங்கவிட்டு.. குரல் வளை அருகில் இருக்கும் நரம்பு வழியாக தண்ணீரை ஊற்றி, அழுத்தி அழுத்தி.. இறக்கப் பட்டு,  அது உடல் முழுவதும் பரவி..ஜவ்வுகளில் இறங்கி, இறைச்சியின் எடை கூடுதலாக இருக்கும்..! தண்ணீர் ஏற்றும் கலையை காண அனுமதி கிடையாது...!! எட்டி பார்த்தால்.. போங்க..போங்க போய் உட்காருங்க என கடுப்படிப்பார்கள்..!!??.. இதற்கு காவலாக சோனியாக ஒரு ஆள், எல்லா இறைச்சி கடைகளிலும் வேலைக்கும் இருப்பார்கள்..!!

     பாவம்.. இதற்கு கிடா, பெட்டை ஆட்டு வித்தியாசம் எதுவும் கிடையாது..! இறைச்சி, வரும் வழியிலேயே பாதி தண்ணீர் சொட்டி..சொட்டி. இரு சக்கர வாகனத்தின் சைலன்சரில் கறையாக இருக்கும்.! வீட்டிற்கு வந்து இறைச்சி வைத்த பாத்திரத்தில் தண்ணீரும் கறியும்  தனியாக பிரிந்து இருக்கும்..!!

     எப்போதும் வழக்கமாக செல்லும் கறிக்கடையில், ஒரு நாள் பெட்டை ஆட்டுக் கறி இது எனத் தெரிந்தாலும், கூட்டமாக மற்றவர்கள் இருக்கும் போது.....வியாபாரத்தை கெடுக்கும் விதமாக..தவறாக எண்ணிக் கொள்ளும் மனப்பான்மையை தவிர்க்க, வாங்காமல் செல்ல முடியாது..!இது தான் பிரச்சினை..! மேலும் எந்த இறைச்சி கடைக் காரரும், ஒரு நாளும்,.. இன்று பெட்டை ஆட்டுக் கறி.. வாங்க வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்..?!? அப்படி சொன்னால், அன்று அந்த உண்மையை கேட்டு உலகம் அழிந்து விடும்..! நாம் தான் நைசாக எஸ்.. ஆக வேண்டும்.. !!

     எனது உறவினர் ஒருவர் சொல்லிக் கொடுத்தது போல.. கூட இருப்பவரிடம் அக்காவுக்கு பெண்பிள்ளை பிறந்துள்ளது..! என, பெட்டை ஆட்டு கறி என்பதை சூசமாக உணர்த்தி நகர்ந்து விடவேண்டும்..! நான்.. கைப்பேசியுள்ள இந்த நாட்களில், புதிய டெக்னிக்கை வைத்துள்ளேன்...அதாவது..வீட்டிற்கு போன் செய்வது போல நடித்து...என்னது.? மீன் தான் வேணுமா,,?!? என்று கேட்டு பாய்.. அப்புறமா வாரேன்..என்று..இடத்தை காலி செய்து விடுவது..!

      ஒரு சில இடங்களில்.. பள்ளிவாசல் அருகில் உள்ள கடைகளில், ஊர் கட்டுபாடு வைத்திருப்பாகள்..அதாவது.. பெட்டை ஆட்டுக் கறி அந்த கடைகளில் வெட்டக் கூடாது..!! ஆனால் அது பெரும் பாலும் வெள்ளிக்கிழமைக்கு தான்..! நாம் போவது ஞாயிற்று கிழமை ஆயிற்றே.. ! கட்டுபாடுகள் கொஞ்சம் தளர்ந்திருக்கும்...!! கிடா ஆட்டை அறுத்து பெயருக்கு வெளியே தொங்கவிட்டு.. உள்ளே வாளியில் பெட்டை ஆட்டுக் கறி இருக்கும்..!!

      பெட்டை ஆட்டுக் கறியுடன் கிடா ஆட்டுக் கறி கலந்து சாப்பிடும் போது.. ஒன்று  நன்றாக வெந்தும் .. ஒன்று வேகாமலும் இருக்கும்..!ஒரே குடும்பத்தில் ஒரு சிலர் அதிர்ஷ்டசாலியாகவும் மற்றொருவர் துரதிருஷ்ட சாலியாகவும்.. பாய்மார்கள் புண்ணியத்தில் மாறி விடுவார்கள்...!!

     என்னுடைய நண்பர் ஒருவர் விபரம் நன்கு அறிந்தவராக..அது வரை நான் எண்ணிக் கொண்டிருந்தவர்..எனது ஆட்டு இறைச்சி பயணத்தை பார்த்து..பாவப் பட்டு.. நீங்க என்னங்க...வாங்க என்னுடன்.. நல்ல ஆட்டுக்கறி கிடைக்கும் இடத்தை காண்பிக்கிறேன்..! இனி.. நிரந்தரமாக அங்கேயே  வாங்கி கொள்ளுங்கள்...என்று சொல்லி தூரமாக உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்..!

      பார்த்தவுடன் தெரிந்தது அது நம்மாளு கடைதான் என்று..! ஆனால்.. அன்று...தொங்கியது என்னவோ.. பெட்டை ஆட்டு கறி..!அதுவும் கலர் மங்கி ஐசில் வைத்து... வாடா.. வந்து ஏமாறு. என்று என்னை அழைத்தது...!?!.. நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே..யாருக்கும் தெரியாமல்..கறியின் மீது சாய்ந்து.. தொட்டுப் பார்த்தேன்..!  ஜில்லென்று.....ஆகா..கன்பார்ம்...தான்..!!..சந்தேகமேயில்லை...ஐஸ்...மற்றும் பெட்டை ஆடு..!! அழைத்து சென்ற நண்பர் வேறு என் முகத்தை பார்த்து.. விஷயம் புரியாமல்.. என்ன நல்லாருக்கா..? வாங்கலாமா..? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்..??

      அப்போது தான்.. நான், கடைக் காரரை பார்த்து.. அந்த கேள்வியை கேட்டேன்...!முதல் நாளே வெட்டி..ஐசில் வைத்த. பெட்டை ஆட்டு கறி கிடைக்குமா..? என்று...அவரும் என்னை முறைத்து  பார்த்து விட்டு.. இல்லையே..? ஏன் இப்படி கேட்கறீங்க...? என்றார்..!! இல்லை.. டாக்டர், என்னை அந்தமாறி தான் சாப்பிட சொல்லியிருக்கிறார்..!, இருந்தால் கொடுங்கள்..! என்றேன்..?!?..

     அவர் பதில் சொல்லாமல்..போய்யா லூசு...என்பது போல்..வேறு பக்கம் திரும்பி...கொண்டார்..! பின்னே உள்ளதை அவரால் சொல்லவா முடியும்..! ?!நானும் நண்பருடன்..போய்யா நீயும் உன் கடை ரெக்கமெண்டேசனும்..என்று திரும்பி விட்டேன்..!(வழியிலேயே நல்ல கறி கிடைத்தது..வேறு விசயம்..)

     நல்ல கறியை தேடி...கடந்த பதினைந்து வருடங்களாக.. சுமார் இருபது கிலோ மீட்டர் வரை.. ஞாயிற்று கிழமை  காலைகளில்.. நெடு நாள் நண்பருடன்.. சுற்றுவதை..வழக்கமாக கொண்டிருந்தேன்..!! கறிக்கடையை பார்த்து.. தூரத்தில் நின்று.. ஒளிந்து...உளவு பார்த்து.. யோசித்து.. ஏமாறலாமா....? வேண்டாமா..??.. என முடிவு செய்து.. நல்ல ஆட்டிறைச்சி என்றால் மட்டும் வாங்கி.. மதியம் சாப்பிட்டு விட்டு.. கூட வாங்கிய நண்பருக்கு போன் செய்து...விசாரித்து.. விமர்சனம் கேட்டு...ஆகா மறக்க முடியா நாட்கள்..!!

     இப்போது.. கிடா ஆட்டிறைச்சியை தேடி.. வாங்கி சாப்பிடுவதில்லையா..??  நிறுத்தி விட்டானா..?? டாக்டர்கள் எதுவும் சொல்லி விட்டார்களா..??என்று தானே கேட்க நினைத்தீர்கள்..!.. சேச்சே...அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..!!
 நல்ல கறியை, ஞாயிற்று கிழமைகளில்  தேடி அலைவதில்லை.....!!

     பதிலாக.. எந்த நாளாக இருந்தாலும்..நல்ல கிடா ஆட்டுக் கறி.. வழியில்  நூறு சதவீதம் கன்பார்மாக கிடைக்கிறது என்றால்...கண்கள் பிரகாசமாகி, ஞானம், அருமருந்து கிடைத்த  நிலையில்.. உடனே வாங்கி..திரும்ப வீட்டிற்கு சென்று... கொடுத்து விட்டு.. அப்புறமாக...ஆபிசுக்கு போவது...!!  அவ்வளவுதான்.......!!
   
   










புதன், 2 நவம்பர், 2016

ஆவாட்டு..பதம்..!!

   
      சமீபத்தில்..வேறு வழியில்லாமல்..மற்ற எவரையும் போல.. அரிசி வாங்க கடைக்கு சென்று, 43 இருக்கிறதா..? என்றேன்..அவரோ இல்லை...37 தான் இருக்கிறது..! என்றார். எனக்கோ..கொஞ்சம் ஜர்க்காகி விட்டது..!!
     ஆடுதுறை 43 எனும் அரிசி இரகம் சாப்பாட்டிற்கு நன்றாக இருக்கும்.. குறிப்பாக அசைவ உணவிற்கு... மீன் குழம்பு..கறி குழம்பு, கோழி குழம்பு.. இவற்றிற்கு ஏதுவாக..!ரொம்ப சன்னமாக இல்லாமல்..ரொம்ப மோட்டாவாக இல்லாமல்..! சுவை.குழம்புடன்.. பொருந்த கூடியதாக...மறு நாள், பழைய சாதத்திற்கும் ஏற்றதாக..நன்றாக இருக்கும்...!!
      சுருக்கமாக சொன்னால்..வடித்து்..அவ்வப்போதும்..மற்றும் வைத்திருந்து.. மறு நாளும்,.. சாப்பிடும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு...43 இரகம்..!அந்த, அந்த..வேளைக்கு மட்டும்..சூடாக..சமைத்து சாப்பிடும் மேட்டுக் குடிக்கு.. பிபிடி, பொன்னி, வெள்ளை பொன்னி..மற்றும் தற்கால கிச்சன் பிரான்ட் வகைகள்..!!
      ஆடுதுறை 31  நெல் இரக வரிசையில், வந்த 43 க்கு, அடுத்தபடியாக வந்த இரகம் ஆடுதுறை 46. இது கொஞ்சம் தடிமன் அதாவது மோட்டா..!!    
     சாப்பாட்டிற்கு அவ்வளவாக நன்றாக இருக்காது..!  இட்லிக்கு உதவும்..!இது வ்ரை.. வராத ரகமாக 37 என்கிறாரே..?என்று குழம்பிய எனக்கு பின்னர் தான் தெரிந்தது...கடைக்காரர் என்னிடம், கூறியது..அல்லது வழக்கமாக, அனைத்து அரிசி வாங்க வருபவர்களுக்கும்..கூறிக் கொண்டிருப்பது..விலையை... !!..நான் வாங்க நினைத்தது இரகத்தை.....!! நான், சற்று இந்த விஷயத்தில், பின் தங்கி இருப்பது அப்போது தான் தெரிந்தது..!
      அதாவது அரிசியின் இரகம் என்ன என்பது தெரியாமலேயே.. அரிசி விற்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.. வெறும் விலையை மட்டுமே அடையாளமாக கொண்ட அரிசி வணிகம்....இதர  நுகர்வு பொருட்களை போலவே.. அனைத்து இடத்திலும்...!சோறுடைத்த சோழ நாட்டிலும் கூட..!
     சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சற்றும் நினைத்துக் கூட பார்க்க முடியாத.. நிலைமை இது..ஐஆர் 8, ஐஆர் 20, ஆடுதுரை 31, டிகேம் 9, சிஆர் 1009 என வகை வகையான நெல் இரகத்தினையும் அதன் தனித் தனி பண்புகளையும் மக்கள் அறிந்திருந்தினர்.. !
     அதிலும் டிகேஎம் 9 என்னும் சிவப்பு அரிசி அவ்வளவு சுவையாக இருக்கும்...! முதல் நாள் வடித்த சோறு...மறு நாள் காலையில் பழையதாக சாப்பிடும் போது...ஒரு கை சோற்றை எடுத்து...அதில் உள்ள தண்ணீர் போக..பிழிந்து.. உருட்டி பிடித்தால்..திரும்ப அதே வேகத்தில்..தானும் விரிந்து..முண்டும்..! அவ்வளவு மேட்டா..! வயிறு  நிறைந்த திருப்தியும்...உழைக்கும் விவசாய பெருமக்களுக்கு, பின் மதியம் வரை.. இது பசியை தாங்க கூடிய வகையில் ஏற்ற இரகமாக இருந்தது..!
      ரேஷனில் அரிசி வழங்க ஆரம்பித்த  நிலையிலும், மற்றும்  கடைகளில் சிப்பமாக..அரிசி இரகம் பிராண்டுகளாக..செம்பருத்தி, நந்தி, கிச்சன் பிராண்ட் என மாறிய பிறகு.. இந்த இரகம் குறித்தான பார்வை மக்கள் மத்தியில் அழிந்து..விலை குறித்தான அடையாளம்  மட்டும் வந்து விட்டது..!!
     அதிக பட்சமாக சன்ன அரிசி அதன் விலை...அல்லது குண்டு அரிசி அதன் விலை..!! அவ்வளவே..!
     விவசாய பின்புலத்திலும், நெல் ஆராய்ச்சி நிலையத்தின் அருகாமை வாழ்வும் கொண்ட எனக்கு, தெரிந்த அரிசி இரக விபரங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டும் என, நான் கூற வரவில்லை...!..
       மாறாக கடைக்கு சென்று அரிசி வாங்குவதை கவுரவ குறைச்சலாகவும், தரித்திரம் மிக்க செயலாகவும் கண்டு, ஓடி...ஒளிந்து.. மறைந்து...மக்கள், அரிசி வாங்கியதையும், கடையில் வாங்காமல்.. இரவலாக, மரக்கால், படி கணக்கில் அண்டை அயலாரிடம் வாங்கியதையும், அதனை திரும்ப கொடுத்ததை...வீட்டு மனப்பான்மையை.. கண்டு வளர்ந்ததால் வந்த நினைப்பு இது..!!
       நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, நெல்லை முதல் நாளே, ஊறவைத்து, நெல் அளவுக்கு ஏற்ப, குடும்ப உறுப்பினர்களின் எண்னிக்கையை பொறுத்து அண்டா,குண்டாக்கள் வேறு படும்..!! சிறிய குடும்பம் என்றால் இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் நெல் ஊறும்...! இல்லை யென்றால்..இரவல் வாங்கிய பெரிய பாத்திரங்களில்..!!
      நெல்லை ஊறவைக்க தண்ணீர் ஊற்ற உதவும்,   நாங்கள்,  இரவில் தூங்கி எழுந்தவுடன், காலையில் பார்த்தால், வீட்டு ஆத்தாக்கள், கொல்லையில், செங்கற்களை கொண்ட, தற்காலிக அடுப்பில், ஊறிய நெல்லை அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே எழுந்து, வேகவைத்து..எடுத்து கொட்டி..அதன் அருகில் கால்களை நீட்டிக்கொண்டு, நெல் வேகவைத்த  அடுப்பிலேயே, கறந்த பாலை கொண்டு காபி தண்ணீர் வைத்து, குடித்து கொண்டு..கதை பேசி கொண்டிருப்பார்கள்...!
     அதிகாலையிலேயே... நாங்கள் எழும் முன்.இரகசியமாக... இரண்டாம் பேருக்கு தெரியாமல்...நெல்லை,அவித்ததை,..ஏதோ சாதனையை நிகழ்த்தியது போன்று அலட்சியமாக..தெனாவெட்டாக, பெருமை பொங்க, எங்களை பார்ப்பார்கள்..!?!
     பள்ளி செல்லும் முன், வெந்த நெல்லை, அள்ளி, கோயிலின் உட்புறம், அறைவை மில்லின் பெரிய களம், ஈச்சம்பாய் அல்லது வெள்ளை யூரியா சாக்கு பையினால் தைத்த படுதாக்கள் இவற்றில் காயவைக்க வேண்டும்..!!
ஒரு சில சமயங்களில் இந்த நெல் அவிப்பு மற்றும் அறைப்பு படலம்.. பள்ளிக்கு செல்ல கால தாமதம் ஆகி..அதற்கு, மட்டம்  போடவும் வழி செய்யும்..!
      பின்னர் தான், அந்த பிராசஸ்.. மதியம் 12 மணியளவில் தொடங்கும், அதாவது, இந்த கட்டுரையின் தலைப்பான...ஆவாட்டு பதம்..!! வேகவைத்த நெல்லை அரை பதத்தில் காயவைத்து, அள்ளி, கட்டி வைத்திருந்து, பின்னர் 2 அல்லது.. ஒரு சில நாட்கள் கழித்து, வேறு ஒரு நாள், (வீட்டின் அரிசி இருப்பை பொறுத்து..!) அதனை திரும்ப, காய வைத்து, மில்லில் அறைக்க வேண்டும்..!
      இவ்வாறு அறைக்கும் அரிசி இடிந்து விடாமல், அதாவது நொறுங்கி, நொய்யாகிவிடாமல் தடுக்க, அவித்த அன்று, காயவைத்து, அள்ளும் நெல்லை மிகுந்த கவனமுடன்..பதம் பார்த்து அள்ள வேண்டும்..! அதுதான்...அதாவது ஆவாட்டு பதம்..!! அது பெண்களின் உலகில்.. பெரிய இரசவாதத்திற்கு ஈடானது..!!
     கையால் கிண்டுதல், காலினால் கிண்டுதல் போன்ற நெல்லை காயவைக்கும்,கவனமான பணிகள்,ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக முடிந்தவுடன், ஆவாட்டு பதம் கைதேர்ந்தவர்களால், (வேறு யார்  ஆத்தாக்கள் தான்..!) பார்க்கப் படும்.! அவர்களும், வாயில் போட்டு மென்று, கண்ணை மூடி, கடித்து பார்த்து,  திடிரென...அலறுவார்கள்..! “ஓடு..உடனே அள்ளு”..!! அல்லது கொஞ்சம் நேரம் இருக்கட்டும் என அசரீரி அருள்வாக்கு சொல்லி..கட்டளை இடுவார்கள்..!
       இந்த ஆவாட்டு பதத்தின்.. ரிசல்ட்..பின்னர் நெல்லை அறைக்கும் போது,தெரிய வரும்...அதாவது அரிசி உடைந்து  நொய்யாகி விடாமல்..முழு அரிசியாக மொழுப்பாக வரும் போது...இந்த ஆவாட்டு பதம் அதனை பார்த்தவர், இவற்றைக்  கொண்டு, சமயங்களில்  சிலாகிக்கவும்  படும்...!
நெல் அறைத்து, சமயத்தில்..அது நொய்யாகி.. இடிந்து போனால், துக்க நிகழ்வு போல, பெண்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கடு கடுவென இருந்த காலமும் உண்டு..!
     அறைக்கும் பதம் என்றும் ஒன்று உண்டு..அதனை பெரும்பாலும் அறைவை மில்லின், டிரைவரிடம் காட்டப் பட்டு.. நெல் அள்ளப் படும்..!!
சமீபத்தில் அனைத்து கிராம, நகரங்களிலும் இயங்கி வந்த, பத்து நெல் அறவை இயந்திரங்களில் ஒன்று தான் இயங்குகிறது..! அதிகம் மக்கள் வராததும்..கரண்ட் செலவு கட்டுபடி ஆகாததும் இந்த இடத்தை வேறு பணிகளுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதுமான காரணங்கள் தான் அவை..!
      தன் வயலில், தான் தேர்ந்தெடுத்த இரக நெல்லினை பயிரிட்டு, விளைவித்து, அறுவடை செய்து, பின் பத்தாயம், குதிர் போன்றவற்றில் சேமித்து, வேகவைத்து, காயவைத்து ஆவாட்டு அறைவை பதத்துடன், நெல்லை  புழுங்கல் அரிசியாக்கி..வாசனை மற்றும் ஆரோக்கியத்துடன், வாழ்வியலுக்கான உன்னத ஜீவனுடன் சாப்பிட்டு வந்த...அந்த ஆத்மார்த்தமான புனித உணவின் காலம் மலையேறி விட்டது..!!
      கடையில் சிப்பமாக, பிராண்ட் ஆக வாங்கிய அரிசி மனிதனின் உன்னத உணவு என்பதற்கு பதிலாக...அவனின்..தீவனமாக மாறிவிட்டது..!
      கிராமத்து ரைஸ் மில்கள், ஒவ்வொரு கிராமத்தின் தொழில், மின்சாரம், இயந்திரம் சார்ந்த தொழிலுக்கான..விவசாயம் தவிர்த்த, முதல்அறிமுகமாக, பிள்ளையார் சுழியாக ,மக்களுக்கு இருந்தது..!
      அறவை மில்களின் களத்தில் மர நிழலில் நெல்லை காயவைத்து, உரையாடிய பெண்கள், கரண்ட் இல்லாத நிலையில் பல மணி நேரம் காத்திருந்து , கதை பேசி,இந்த காத்திருப்பில் நெல் இடிந்து விடக்கூடாதே, என கவலை பட்ட பெண்களும்,
     நெல் அளவை குறைத்து சொல்லி, அதாவது அறவை, கட்டணத்தை  மிச்ச படுத்த, பொய் சொல்லி, எப்போதும் சண்டையிடும்..வாயாடி பெண்கள், காதலர்கள் மறைமுகமாக சந்திக்க, பேசிக் கொள்ள, அதாவது நெல் அறைக்கும் சாக்கில்..!! தெரு பிரச்சினைகள், கிராம பிரச்சினைகள்...எங்க ஊருக்கு,  நீ மில்லுக்கு நெல் அறைக்க வருவயில்ல..?? அப்ப பாத்துகிறேன்.. !?!...என்ற மிரட்டல்களும், அறைவை மில்லின் இயந்திர அந்த சத்தமும், தவிட்டு வாசனைகளும்...இனி ஒருபோதும் காணக் கிடைக்காதவையே..!!
       காணாமல் போன சினிமா தியேட்டர்களை போன்றே,  எவ்விதத்திலும் குறைவில்லாத, நினைவுகளையும் சோகத்தையும், அதனை காணும் போது..ஓயாமல்,தரவல்லது...இன்று..ஓய்ந்த போன அந்த அறவை மில்கள்....!அத்துடன் மறைந்து போன அந்த நெல் அவிக்கும் வாசனையும்,  ஆவாட்டு பதமும்..அதனை செய்து வந்த ஆத்தாமார்களின்  நினைவும்..!!?!!

நாக.பன்னீர் செல்வம்
   

                                                                                                                                                                       







சனி, 29 அக்டோபர், 2016

நெருப்புச் சட்டியில் வளரும்...ரோஜா செடிகள்..?!?...

தமிழ் சினிமாக்களிலும், தொலைக் காட்சி தொடர்களிலும், பெண் குழந்தைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று வரும் வரை..தான்...வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பதாக தாயார்கள் புலம்பும் காட்சியை.. சாதாரணமாக கண்டிருப்போம்... !

ஆனால் கடுமையான குளிரை போக்க.. வயிற்றில் எப்போதும் “காங்கர்” எனும் நெருப்பு சட்டியை கட்டிக் கொண்டு, நடமாடி..பழக்கப் பட்ட,...காஷ்மீரின் தாய் மார்கள், இராணுவம், போலிஸ், குண்டு வெடிப்பு,கடையடைப்பு, ஊரடங்கு, தற்கொலை தாக்குதல், கண்மூடித்தனமான, தீவீரவாதம், மதவாதம் இவற்றிற்கு இடையில் தங்கள் குழந்தைகள் பள்ளி சென்று திரும்பும் வரை, அனுபவிக்கும் வேதனையை எந்த வார்த்தைகளால்..எடுத்துரைக்க முடியும்..??

     ஜம்மு&காஷ்மீரின், போர்ட் ஆப் ஸ்கூல் எஜிக்கேசன், சுமார் 500 க்கும் மேற்பட்ட, அதன் பள்ளிகளில், இந்த நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தனது வழக்கமான வருடாந்திர தேர்வுகளை  10ம் வகுப்பிற்கும், மற்றும் நவம்பர் 15 முதல் டிசம்பர் 3 வரை, பனிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தியாக வேண்டும்..!!

     ஆனால் நிலைமையோ வேறு விதமாக இருக்கிறது..!! ஹிஸ்புல் முஜாகிதீன் பிரிவை சார்ந்த..பிரிவினைவாதி புர்கான்வாணி கொல்லப் பட்ட பிறகு, கடந்த ஜூலை மாதம் 9 தேதிக்கு பிறகு... அனைத்து பள்ளிகளும், இந்த அழகிய பள்ளத்தாக்கில் மூடப் பட்டிருக்கின்றன..!!


     வேறு கவலைக்குரிய விஷயமும் இருக்கிறது...!! சுமார் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள்,பல் வேறு பகுதிகளில்  தீ வைத்து கொளுத்த பட்டிருக்கிறது..!! பிரிவினை மற்றும் மதவாதிகள்.. கிராமத்து குழந்தைகள், பள்ளிக்கு சென்று படிப்பதை விரும்பாமல், அவர்களை தடுத்து.. மதக்கல்வியை புகட்டவும் ஜமாத் பள்ளி மற்றும் மதரசாக்களில் மட்டுமே.. அவர்களை படிக்க வைக்கப் படுவதில்....ஈடுபடுத்துவதில் குறியாக இருக்கிறார்கள்..!!?!

     மத்திய அரசின், உள்துறை அமைச்சகம் , இவ்வாறு மூடப்பட்ட அனைத்துக் கல்வி நிலையங்களையும் மீண்டும் திறக்க வைக்க ஜம்மு & காஷ்மீரின் காவல் துறையிடம் செயல் திட்டம் ஒன்றை கேட்டிருக்கிறது.. இவ்வளவு நாட்கள் கழித்து திறக்கப் பட்டாலும், விடுபட்ட கல்வி நிலையில் அதனை பெறுவதிலும்.. நார்மலான நிலைக்கு வரவும்...மாணவர்கள்...பாவம்.. மிகவும் சிரமப் படுவர் என்பதே உண்மை...!

       காவல் துறையோ, சட்ட ஒழுங்கை பராமரிப்பதிலும், தீவீரவாதம் சம்பந்தப் பட்ட நிகழ்வுகளை கண்காணிப்பதிலும் பெரும்பான்மையான காவல் துறை சக்தி பயன்படுத்த படுவதால்...ஓவ்வொரு பள்ளியிலும்..காவல் துறை அலுவலர்கள்.. நின்று கண்காணித்து ...பள்ளிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று கைகளை விரிக்கிறது...!!

      வேண்டுமானால் கல்வித் துறை, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கடை நிலை ஊழியரை எந்த நேரமும் பணியில்  இருக்க செய்து...விரும்பதாக சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்துக் கொள்ளட்டும்....என யோசனை தெரிவிக்கிறது...??!!!

       மேற்கண்ட அனைத்து அவலத்திற்கும் இடையில் ஒரு வெளிச்ச கீற்று காஷ்மீர் பள்ளத்தாக்கில்.. கல்வி சம்பந்தபட்ட, இந்த  அவலத்தை போக்கும் வகையில் வந்து...உன்னத நிலையில் பரவியும் கொண்டிருக்கிறது...!! அது தான்...இந்த கட்டுரையில் நோக்கமே..!

     ஆமாம்...! ஹர்த்தால் ஸ்கூல் (ஊரடங்கு பள்ளிகள்) எனும் பொருள் பட, படித்த கல்லூரி மாணவியர், இதர படித்த ஆசிரியர்கள் உதவியுடன், தங்களது வீடுகளில், கட்டணதொகை எதுவுமின்றி, தங்களுக்கு தெரிந்த பாடங்களை அண்டை அயலாரின் குழந்தைகளுக்கு சொல்லி தருகின்றனர்..!!

      பள்ளிக்கூடங்களை போலவே...தனியார் டியூசன் செண்டர்களும் மூடப்பட்ட நிலையில்... இந்த ஹர்த்தால் பள்ளிகள்.. மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது..!!

     நைரா நூர், வயது 24, கணக்கை முதன்மைபாடமாக, ஹஸ்ரத்பாலில் உள்ள செண்டர் யுனிவர்சிட்டியில் படித்தவர், அருகாமையில் வசிக்கும் ஒரு சில பெண் குழந்தைகளுக்கு கணக்கு பாடம் மற்றும் சொல்லி கொடுக்க ஆரம்பித்து..சமூக சேவை உணர்வில்...பின்னர் அனைத்து பாடங்களயும் எடுப்பவராக, பல்வேறு அக்கம் பக்க பகுதிகளில் இருந்து வந்து , பெற்றோர்கள்..தங்கள் குழந்தைகளுக்கும் பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க.. இந்த பள்ளியை...தன் வீட்டிலேயே நடத்தி வருகிறார்..!!

      நெடு நாட்களாய் மூடப் பட்ட பள்ளிகள், அடிப்படை வசதிகள் இல்லாத, மூடப் பட்ட, செல்ல  அனுமதி இல்லாத சாலைகள், தகவல் தொடர்புகள் இல்லாத, தடுப்புகள் வைக்கப் பட்டுள்ள தெருக்கள், ஊரடங்கு உத்தரவு என...ஏறத்தாழ சிறைச் சாலையில் இருப்பது போன்ற உணர்வில் உள்ள, குறிப்பாக பள்ளி செல்லாத குழந்தைகளின், சோர்வுற்ற.. பின் தங்கிய மன நிலையில்,

     இவற்றை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்காமல், என்னால் இயன்ற வகையில், ஆசிரியராக உள்ள தனது தந்தையின் உதவியுடன், தனது படிப்பையும் தொடர்ந்து கொண்டு... இந்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வரும் உன்னத பணியை செய்கிறார்.. நைரா நூர்...! இதற்கென தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கியும் இருக்கிறார்...!!

      இவறை போலவே, மஸ்ரத் கான், வயது 27, தன்னுடன் படித்த பல்வேறு இளம் பெண்களின் உதவியுடன், அருகில் உள்ள பகுதிளில் இருந்து வரும் சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, சமூக கூடத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார்...!! நாங்கள் முறையாக ஆசிரிய பணிக்கு ஏற்புடையவர்களா..? என்பது தெரியாது.. ஆனாலும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதிலும்....பள்ளிக்கு வருவது போலவே அவர்களும்..புத்தகப் பைகளை சுமந்து வருவதிலும்....ஆர்வமுடன் கற்பதும்....கோரசாக பாடல்கள் பாடுவதை கேட்ட மிகவும் ஆனந்தமாகவும் ஆத்ம திருப்தியாகவும் இருக்கிறது..!! என்று சொல்லும் இவர்களும் எவ்வித கட்டணமும் வாங்குவதில்லை....!! கட்டணம் கொடுக்கும் அளவிற்கு சூ்ழ் நிலையும் இல்லை....!!

     ஸ்ரீ நகரில் மட்டுமல்லாது, இது காஷ்மீர் & ஜம்முவின் பல பகுதிகளிலும், பல்வேறு ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் இவர்களை கொண்ட ஹர்த்தால் ஸ்கூல் எனும் தன்னார்வ.. இயக்கமாக பரவி வருகிறது...!!

      வெறும் பெண் குழந்தைகள் மட்டுமே பங்கு கொள்ளும் ஹர்த்தால் பள்ளிகளும் உண்டு..!! இதனால் பொது தேர்வுக்கு தயார் ஆகும் நிலையில், ஓரளவிற்கு அனைத்து பள்ளி பாடங்களை இந்த ஹர்த்தால் ஸ்கூலின் வழியாகவே முடித்து, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், எண்ணற்ற மாணவ மாணவியர் உள்ளனர்..!

     வன்முறையும், தீவீரவாதமும் தலைவிரித்தாடும் இந்த காஷ்மீர பூமியில், புதிய வகையில்.. மாற்றுச் சிந்தனையுடன், துணிச்சலாவும்,பிரகாசமாகவும், இந்த மண்ணின் மாணவ மாணவியர்,  புதிய உத்வேகத்துடன்...கல்வியை பெற்று வருவது..புதிய யுகத்தின் புதிய விடியலாகவே பார்க்கப் படுவதாக, சமூக அறிஞர்களும்,கல்வியாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்..!!

     காஷ்மீர் யூனிவர்சிட்டியின், முன்னாள் பேராசிரியர், அப்துல் அஜீஸ், கூறுகையில், “ கற்றல் எந்த சூழ் நிலையிலும் தடைபடக்கூடாது...பாலஸ்த்தீனத்தில் பல ஆண்டுகளாக போர்களும் கலவரங்களும் இருந்து வந்த போதிலும்..அவர்கள் கற்பதை கைவிடாத சமூகமாக தொடர்ந்து, கற்று... முன்னேறியும் வருகிறார்கள்..!! எவ்வித அக்னி பரிட்சைகள் என்றாலும்.. துயரங்கள் என்றாலும் .அதிலிருந்து சமூகம், கற்று முன்னேறி வரவேண்டும்..” என்கிறார்...!!

       இனி தமிழ் நாட்டின் ஒரு செய்தியை பார்க்கலாம்...! திண்டுக்கல் மாவட்டத்தில், 60 நாட்களில், 20 மாணவியர் மாயமாகி விட்டனர் என்ற இன்றைய செய்தி, வேதனையை தருகிறது..!! காஷ்மீர் நிலையை ஒப்பிடும் போது நம் தமிழ் நாட்டின் கல்வி பெறும் வாய்ப்பு... நிலை..குறிப்பாக பெண்களுக்கு..?? என்ன குறை கண்டோம்..!

       ஆண்களுக்கு கல்வி கொடுத்தால்...குடும்பம் முன்னேறும்...!!பெண்கள் கல்வி பெற்றால் சமூகமே முன்னேறும்....!! கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல..  இதை தவிரவும், சுகாதாரம், சுற்று சூழல், உரிமைக் கல்வி,   நுகர்வோர் உரிமைக் கல்வி, தகுதியான பெற்றோராக இருப்பது, குழந்தை வளர்ப்பு,  இதற்கெல்லாம் மேலாக..சமூகத்திற்கும். உதவுவது...!!

      காஷ்மீரிலிருந்து நாம் தொலைவில் வேண்டுமானால், தூரமாக இருக்கலாம்...ஆனால் அதன் தற்போதைய மோசமான கடுமையான நிலையிலும்....கல்வி தாகத்தில்...குறிப்பாக பெண் கல்வி... துப்பாக்கிகளுக்கும், வன்முறைக்கும், மதவாததிற்கும், குண்டு வெடிப்புகளுக்கும் இடையில் அவர்கள் கற்பதை... கற்கவேண்டும்...!

நாக.பன்னீர் செல்வம்

     

 

     


   

   











வியாழன், 27 அக்டோபர், 2016

மானுடத்தை வெறிக்கும்...பச்சை கண்கள்...?!???


 ஏவிசி மயிலாடுதுறை கல்லூரி காலத்தில்..ரீடர் டைஜெஸ்ட் மற்றும் நேஷனல் ஜியாகிரபி புத்தகங்களை லைப்பரரியில் சென்று புகைப்படங்களை பார்த்து....படிக்கவும் முயற்சி செய்வதுண்டு...!! ஆங்கிலம் அவ்வளவாக புரியாத நிலையில் படங்களை பார்ப்பது அவ்வளவு தத்ரூபமாக....பிரமிக்கும் படியாக இருக்கும்..!!இத்தகைய புத்தகங்களை விலைக்கே, வாங்குவர்கள் கூட, என்ன காரணத்தாலோ, அதனை ஒரு போதும் தூக்கி போடவோ..எடைக்கு விற்கவோ  மாட்டார்கள்..! சேர்த்த வண்ணம் இருப்பர்...!அவற்றின் இனம்புரியாத வசீகரம் அப்படி.!!

அப்படித்தான் இந்த படத்தை நேஷனல் ஜியாகரபியின் புத்தக அட்டை படத்தில் கண்டதாக நினைவு...இதைத் தவிர இது குறித்து.வேறு ஏதும்..என்னால்  அறியப் படாத நிலையில்...பின்னர் இந்த புகைப் படத்தை எடுத்த.. ஸ்டீவ் மெக்ரே..என்பவர்..திரும்பவும் அதே பெண்ணை, 2002ம், ஆண்டு, மீண்டும் படமெடுத்தார் என்ற செய்தி.. மட்டும் காதில் விழுந்தது.

      சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பில், ஆப்கான்  இருந்து வந்த போது, 12 வயது பெண்ணாக, பாகிஸ்த்தான் அகதி முகாமில், ஸ்டீவ் மெக்ரே இந்த பெண்ணைக் கண்டு, இந்த புகழ்மிக்க போட்டோவை எடுத்து, அதுவும் நேஷனல் ஜியாகரபி புத்தகத்தில் அட்டைபடமாக வந்தது..மெக்ரே பலவித போட்டோக்களை ஆப்கான் மண்ணில் இருந்து எடுத்து வெளியிட்ட போதும் இந்த ஒரு புகைப்படம் 80களில் உலகில் புகழ் பெற்ற படமாக இருந்தது..!!

     ஒட்டு மொத்த ஆப்கானின் பெண்களின்,குழந்தைகளின் நிலைமையை, பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்த  அகதிகளை  எடுத்து காட்டும்...வெறித்த இந்த ஒரு ஜோடி கண்கள் உணர்த்திய உணர்ச்சிகள் ஏராளம்...!

      பல வித ஆர்ட் கேலரி, கண்காட்சிகளில் ,மக்களால் காணப் பட்டு,  மீண்டும் மீண்டும் தூரிகைகளால் வரையப் பட்டும் கொண்டிருந்தது..!! ஷர்பத் குலா என்ற பெண்ணை  மீண்டும் கண்டு, அவரை, இப்போதைய நிலையில் போட்டோ எடுக்க, அமெரிக்க புகைப் படக்காரரான, ஸ்டீவ் மெக்ரே, மீண்டும் ஆப்கான் பயணித்தார்..!! 2002 ஆம் ஆண்டு அவரை தேடியலைந்து, ஆப்கானின், தோரா போரா மலைப் பகுதியில் பஷ்தூன் மொழி பேசும் ஒரு பாரம்பரிய கூட்டத்தினர் மத்தியில் கண்டார்..!!

     அவரின் மொழியிலேயே... சொல்வதாக இருந்தால்..”காலமும் வாழ்வின் கடுமையும் அவரை வாட்டியிருந்தது,.. இளமை பொலிவு இழந்து, அவரின் தேகம், காய்ந்த தோலை போலிருந்தது..முகவடிவம் தனது கச்சிதமான அளவுகளை இழந்து.. தளர்ந்திருந்தன..! ஆனாலும்...அந்த பச்சை நிற வெறித்து நோக்கும் கண்கள் மட்டும் ஓளி இழக்காமல், தளராமல் இருந்தது...!!”

       மெக்ரே, இரண்டாம் முறை ஷர்பத் குலாவை சந்தித்தபோது...அவருக்கு திருமணம் ஆகி, மூன்று குழந்தைகளும் இருந்தனர்...அவரின் கணவரின் அனுமதியோடு அவரை வித விதமாக தனியாகவும் குழந்தைகளோடும் ஆசை தீர புகைப்படம் எடுத்தார் ஸ்டீவ் மெக்ரே..!!

      1984, 2002 ஆண்டுகளின் தொடர்ச்சியில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே உலக புகழ் பெற்ற  ஷர்பத் குலா எனும்  பச்சை கண் பெண்....பெசாவ்ர் எனும் பாகிஸ்த்தான் நகரில்,  போலி அடையாள அட்டை, ஆவணங்களுடன், பாகிஸ்தானில் தங்கி இருந்ததற்காக, பெடரல் இன்வெஸ்டிகேஷன் அத்தாரிட்டியினரால் கைது செய்யப் பட்டுள்ளார்..!! இதனை, இவர் போன்ற இதரர்களுக்கு வழங்கிய வகையில் இதற்கு உடந்தையாக இருந்த பாகிஸ்தானின் 18  அதிகாரிகளும் தண்டனையை எதிர் நோக்குகின்றனர்..!

      போலி தேசிய அட்டைகளை கண்டறியும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு மும்முரமாக உள்ளது.. இது வரை 9 கோடிக்கும் அதிக மான அட்டைகளின் விபரங்கள் மறுமுறை சரிபார்க்கப் படுகின்றன...!..60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அட்டைகள்..போலிகள் எனவும் கண்டறியப் பட்டுள்ளன..!

       வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், ஆப்கானின் 14 லட்சம் அகதிகளையும் அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறது..உலகிலேயே அதிக அகதிகளை உடைய 3வது நாடான பாகிஸ்தான்...!!

        ஒரு உலக அளவில் புகழ் பெற்ற பெண்ணாக இருந்தும், ஷர்பத் குலா, இருக்க இடமின்றி, தாயகத்தை துறந்து, தனது குழந்தைகளுடன் கைது செய்ய்பட்டுள்ளது....மனதை பிழிகிறது..!! இவர் செய்த குற்றம் உண்மை என நீருபிக்கப் பட்டால் கடுமையான அபராத தொகையுடன்.. சுமார் 14 வருட சிறைத்தண்டனையும் உண்டு...!!

      சுமார் 42 வயதை தாண்டிய, காலத்தின் கடுமையில், வாட்டி வதையுண்ட, தனது குழந்தை பருவத்தை அகதி முகாம்களில் கழித்த  ஒரு பெண், இப்போது.. தன் குழந்தைகளுடன்  இன்னமும் அதே மண்ணில்.. அமைதியை இழந்து..தனது கூரிய பச்சை கண்களால்.. இந்த மானுடத்தின் மார்பை வாளால் துளைப்பது போன்ற பார்வையில்...தனக்கு மறுக்கப் பட்ட மனித உரிமையை மீட்கமுடியா கையறு நிலையில்....வழக்கம் போலவே வெறித்து நோக்குகிறார்.......தான் கைது செய்யப் பட்ட போது எடுக்கப் பட்ட புகைபடத்திலும்....!!?!!

     அனைத்தயும் படைத்தவனை...பெருமையுடன்... ஐந்து முறை தொழும் மனித கூட்டமும், அவர்களின் சட்டமும் இந்த பச்சை கண்..வெறித்த பார்வைப் பெண்ணை நிம்மதியாக வாழவிடுமா..?? என்று தெரியவில்லை....!!

      கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லாவிட்டாலும்...இந்த பெண்ணுக்கு வாழ்வையும், நிம்மதியையும் அளிக்க.......வேண்டுகிறேன்....!!! எனக்காக இல்லாவிட்டாலும்....!!
      அல்லாவே....உனக்காக...தனது பாகிஸ்தான அடையாள ஆவணங்களுடன் 2014 ம் ஆண்டு மெக்கா சென்று....ஒரு முஸ்லீமாக.. வாழ் நாள் கடமையை நிறைவேற்றிய.......பச்சைகண்ணை மூடி உன்னை வணங்கிய...!

கேமரா மூலம் உலகையும்,....
உலகமும்,..தான், ..முதல் முதலாக.. கேமரா மூலம்...கண்ட....
அந்த 12 வயது.... பச்சைக் கண் சிறுமிக்காக..!!!
இதயத்தை வாள் கொண்டு,..அறுக்கும்..!!...அந்த.. பார்வைக்காக..!!

நாக.பன்னீர் செல்வம்














புதன், 26 அக்டோபர், 2016

நானும்....டெல்லியும்...இண்டர்வியூக்களும்........!! (2)

தென்னிந்தியர்களாகிய நாம், டெல்லியில் இண்டர்வியுக்களில் கலந்து கொள்வதற்கும்..வடஇந்தியர்கள் கலந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு...கால் மேல் கால் போட்டுக் கொண்டு.. சோபாவில் கைகளை நன்கு பரப்பி வைத்து.. மாப்பிள்ளை போல உட்கார்ந்து கொண்டு போனால் போகிறது என்று உன் வேலைக்கு வந்திருக்கிறேன்.. !!

மற்றபடி அது ஒன்றும் எனக்கு தேவையில்லை..!!?!! என் கிற மனப்பானமையில் திமிராக இருப்பார்கள்... நாமோ பதை பதைப்புடன்.. மே ஐ கமின் ....!! என்று சொல்ல வேண்டும்,..?!!! சிட் டவுன் என்று சொன்னால் மட்டுமே... உட்காரவேண்டும்... என டென்சனுடன்...பல் வேறு மனதயாரிப்புகளுடன் இருப்போம்...!! ஆனால் வந்திருக்கும், வட இந்திய இளைஞர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும்..!! ஆனால்.பொறுப்பின்றி இருக்கும் அவர்களுக்கு பெரும்பாலும் வேலை கிடைக்காது..!! தென்னிந்தியர்களை போல அடிமைகள் கிடைக்கும் போது அவர்களுக்கு எப்படி அது கிடைக்கும்...!!?!!

மேலும் ஃபைலில், அனைத்து சர்டிபிகேட்டுகளையும் வைத்து, வகைப் படுத்தி,திருப்பதி பிரசாதம் போல..  நாம்...கேள்வி கேட்பவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் கொடுப்போம்...என்னுடன் இண்டர்வியூக்களுக்கு வந்த பல பேர்...பேண்ட் பின் பாக்கெட்டில்....4 அல்லது 8 ஆக மடித்து வைத்திருந்து, அதனை, அப்படியே எடுத்து கொடுப்பர்...அது வேறு ஒன்றும் இல்லை...படித்த சர்டிபிகேட்டுகள் தான்...!!?!!

அப்புறம் நிருலாஸ் எனும் புகழ் மிக்க ரெஸ்ட் ராண்டில் கேஷியர் வேலைக்கு சேரந்தவுடன்...கன்னோட் பிளேஸ் சென்று, பழையவிலையில் கறுப்பு பேண்ட் வெள்ளை சர்ட் வாங்கி... யூனிபார்ம் தான் வேறென்ன...?? அதற்கு ஏற்றார் போல ஷூவும் வாங்கியாயிற்று...பணி  நேரம்...இரவு 7-00 மணி முதல் நள்ளிரவு 12-00 மணிவரை...அருகாமை , சாந்தி பாத்தின் தூதரகத்திலிருந்து பல வெளி நாட்டவர்கள் வாடிக்கையாக வருவதுண்டு....மேலும் நிருலாஸ் இருந்த பிரான்ச் வசந்த் விகார் எனும் மேல தட்டு மக்கள் வசிக்கும் பகுதி..கூட்டம் சும்மா...அள்ளிக்கொண்டு வரும்...வார இறுதி நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம்....!!!

எழுதிய டிகிரி..என்னவாயிற்று..? பாசா.. பெயிலா..!!? எத்தனை பேப்பர் அரியர் என்று தெரியாத நிலையில், ஆங்கிலம்...மை நேம் ஈஸ்.....என்று மட்டுமே , சொற்ப அளவில் அறிந்த, ஹிந்தி சுத்தமாக தெரியாத..21 வயது கிராமத்து இளைஞனாக அந்த வேலை...குருவி தலையில் பனங்காயை அல்ல..பனை மரத்தையே வைத்தது போல இருந்தது...!!

கூட்டத்தை கண்டால் கைகால் உதறும்...என்ன கேட்கிறார்கள் என்றே தெரியாது....பில்லுக்கு ஒரு மெசின்....அதில் உணவுக்கான கோடுகளை நினைவில் வைத்திருக்க வேண்டும்...அடிக்கடி சிக்கல் செய்யும் மெசினால், கார்பன் மாட்டிக் கொண்டு.. அந்த சமயத்தில் கைகளால் பில் போட வேண்டும்..!! எதிரே பணக்கார திமிருடன் கோட் சூட் அணிந்து...லேட்டானால் உச்சு கொட்டியே.. ஆளை மிரட்டும் கூட்டம்...என தாறு மாறாக...பிரேக் இல்லாத லாரி போல ஒவ்வொரு நாளும் நரகமாக போய்க் கொண்டிருந்தது..!!ஒவ்வொரு நாளும் சுமார் பத்தாயிரம் போல கல்லா கட்டும்..1988களில் அது பெரிய தொகையாக தெரியும்..பணத்தை பார்த்தாலே கடுப்பாக வரும்..!!??

இவ்வளவு பிரச்சினையில் வேலை பார்த்தாலும்...பிரச்சினை வேறு வடிவத்தில் இருந்தது...!!தினசரி கலெக்சன் தொகையை அப்படியே எண்ணி, அதனுடன் பில்லிங் மெசினில் பதிவான பேப்பர் ரோலையும், மேனேஜரிடம் கொடுத்து விட வேண்டும்...!! பின்பு ஒரு வாரம் கழித்து...தலைமையிடத்து கணக்கரிடம் இருந்து தகவல் வரும்.....இந்த நாளில் இந்த கிழமையில் 1000 ரூபாய் குறைந்தது என்று...??!!?? அது எந்த நாள் ஏன் குறைந்தது என்று நமது சிற்றரறிவுக்கு எட்டாது...!!  நினைவிலும் இருக்காது...!!
சிம்பிளாக சொன்னால்......மாதம் ரூ 3000 சம்பளம், ஆனால் தினசரி ரூ 100 பிடித்து கொள்வார்கள் என்பது போன்ற கதைதான்....!!!

ஆகா.....அடுத்த இண்டர்வியூக்கு தயாராகி விட வேண்டியது தான் என முடிவு செய்தாயிற்று...!! இதற்கு இடையில்... நிருலாஸ் என்பது ஐஸ் கீரிம்களுக்கு புகழ் பெற்ற சொந்த தயாரிப்பு பேக்டரியை கொண்ட, பன்னாட்டு தரத்திலான
 ரெஸ்ட்டாரண்ட்..டெல்லியின் புகழ் பெற்ற உணவு விடுதி..!!அப்போதே பல கிளைகளும் அதற்கு உண்டு...!! வகை வகையான குளிர் பானங்களுக்கும் புகழ் பெற்றது....ஆல் அமெரிக்கன் பனானா ஸ்பிலிட் என்பது இப்போதும் நினைவில் உள்ள ஒரு பெயர்..!!!

( பை த பை நான் இவற்றில் எதையும் சுவைத்தது இல்லை....!! ஊழியர்களுக்கு என காய்ந்த ரொட்டியும்.. தாலும் வாரத்தில் ஒரு நால் இறைச்சி குழம்பும்..வேனில் வரும்..அதை போய் சாப்பிட்டு வர வேண்டியதுதான்...) கேசியாரான நான் சாப்பிட போகும் போது... கல்லா பெட்டியில் இருந்து எவன் பணத்தை எடுப்பான் என்று தெரியாது...மேனேஜர் உப மேனேஜர் உட்பட....!!! மேலும் நான் சாப்பிட போகும் போது அனைத்து தீர்ந்திருக்கும்......அங்கிருக்கும் வாட்ச் மேன் மட்டும் எனக்கு ஆதரவாக ..ஆல் கன்னிங்க் பெல்லோஸ்..கேர் ஃபுல் என்று அடிக்கடி கூறுவார்.!!

ஒரு சமயம்..சின்ன ஐஸ் கீரிமுக்கு பதிலாக... கோடு எண்ணை.. மாற்றி போட்டு... என்னுடைய தவறினால்... ஒரு கிலோ ஐஸ் கீரிமாக,  ஜம்மென்று கொண்டு சென்ற  ஒரு பெண்..அதே நினைவுடன், நப்பாசையில்  ஆவலில்...அது போலவே மீண்டும்  ஏமாறுவேன்..!!  என...தினமும் வந்து... வாங்கி...காசுக்கேற்ற சிறிய ஐஸ் கீரிம்... என்றவுடன் என்னை பார்த்து முறைத்துக் கொண்டே சென்ற சம்பவங்களும் உண்டு..!!
மீண்டும் தொடர்வோம்..........பின்...!!
நாக.பன்னீர்செல்வம்





செவ்வாய், 25 அக்டோபர், 2016

நானும்....டெல்லியும்..இண்டர்வியூக்களும்..!?!....

சமீபத்தில், 2016 செப்டம்பர் மாதத்தில்..புது டெல்லிக்கு அலுவலக மீட்டிங்க் விசயமாக சென்றிருந்தேன்.. வேலை முடிந்து, கடைசி தினத்தில் இரவு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் பிடிக்க நேரம் இருந்ததால், எனது நண்பரை காண மால்வியா நகர் சென்றிருந்தேன்...

அவரது அலுவலகம், தரை தளத்துக்கு கீழே பேஸ்மெண்டில் இருந்தது..அது தெரியாமல், மேலே உள்ள முதல் மாடிக்கு சென்றுவிட்டேன்.. அங்கு ஏதோ ஆட்கள் தேர்வுக்கான இண்டர்வியூக்கான முஸ்தீபுகள் நடந்த வண்ணம் இருந்தது.... நான் சென்றவுடன், என்னை பார்த்து  அங்கிருந்த பணியாளர்..."வாருங்கள் உட்காருங்கள், இண்டர்வியூக்கு தானே".??!?? என்றார்..!!

நை.. நை..!!!.என்றபடி.. தலை தெறிக்க கீழே ஒடி வந்து விட்டேன்...!! அதற்கு காரணமும் இருந்தது...சுமார் 50 வயதாகும் எனக்கு..எனது 21 வயதுகளில்..வேலை தேடும் படலத்தில் முதல் வாழ்க்கைப்பட்ட பூமியாக டெல்லியே இருந்தது.....!!நேரு பிலேசின் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள், வாக்கின் இண்டர்வியூ எனப்படும் அவ்வப்போது.. நாளிதழை பார்த்து,,, செல்வது... உள் பட எனக்கு எல்லாம் அத்துபடி...!!

1988களில் டெல்லியின் வேலை வாய்ப்பு அபரிதமானதாக இருந்தது......குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு...அந்த காலக் கட்டத்தில் அரசு தேர்வு எழுதி பாஸ்..செய்து அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களை தவிர்த்து....இதர தனியார் பணிகளை நம்பியும்...என்னை போல..வெறும் டிகிரி டிப்ளோமாவை வைத்துக் கொண்டு வேலை தேடி, இந்தி தெரியாமல் வந்தவர்கள் அனேகம்..!!(அதிலும் நான் டிகிரி எழுதிவிட்டு..ரிசல்ட் வருவதற்குள் டெல்லி சென்றவன்...!!)

முனிர்க்கா, ஆர் கே புரம் பகுதிகளின் இவ்வாறனவர்கள் அதிகம் வாழ்ந்து வந்தோம்......அவ்வப்போது ஆரம்பிக்கும் மெஸ்ஸில் தான் இரவில் அனைவரும் கலந்து..புதிதாக வந்தவர்களுக்குரிய வேலை வாய்ப்புகள் பற்றி தெரிவிப்போம்..இதில் பாலு மெஸ், முத்து மெஸ் போன்றவை பிரபலமானவை..!!

அவ்வாறு  கிடைத்த தகவல்களில், நல்ல நல்ல வேலைகளில் செட்டிலாகியும், வியாபார வாய்ப்பினை பெற்று, பிசினஸ்மேன் களாக இன்றும் பலர் வாழ்ந்து வருகின்றனர்...!! ஒரு சிலர் தமிழ்னாட்டுக்கு டிரான்ஸ்பர் பெற்றும் கூட வந்து விட்டனர்..!!

இண்டர்வியூக்களுக்கு செல்லும் போது, இடத்தை கண்டுபிடித்து, மொழி தெரியாமல், பொது பஸ்களில் பயணித்து, அப்போது கைப்பேசியும் கிடையாது..!! மரண அவஸ்தையாக இருக்கும்..பனி...வெய்யில்.. காலங்களில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும்..!! வழி கேட்டால்.. ஒரு சிலர் அதி மேதாவித்தனத்துடன் எங்கோ இல்லாத இடத்தை..காட்டி அலைவது ஆத்திரமாக வரும்..!!

ஒரு நீண்ட சாலையில், கதவு எண்ணைக் கொண்டு, தேடும் முகவரியை கண்டு பிடிக்க....தலை கீழாக ஆரம்பித்து.... நீண்ட தூரம்  நடந்து... புறப்பட்ட இடத்தின் மறுபக்கத்தில் அருகாமையிலேயே  நாம் தேடிய முகவரி இருக்கும்...!! களைப்புடன் அசட்டு சிரிப்பும் ஆயாசமும் கலந்து வரும்...!! என்ன செய்வது வேலை வேண்டுமே....சம்பாதிக்க வேண்டும்... பணம் ஊருக்கு அனுப்ப வேண்டும்...பிள்ளையார் சுழி போட்டு இன்லான்ட் லெட்டரில் குடும்பத்திற்கு கடிதம் எழுத வேண்டுமே...!?!!

எந்த வேலை...எங்கே பணி என்று கூட தெரியாமல், ஒரு சில இண்டர்வியுக்கள் என்னால் கலந்து கொள்ளப்பட்டிருக்கின்றன..!! அதாவது அசாமில் பள்ளியில் வேலை.... காஷ்மீரில் இந்திய பாகிஸ்த்தான் பார்டர் வேலைகளுக்கும் நான் முயற்சி செய்து, நான் தமிழ் நாட்டிலிருந்து,. குடும்பத்தில் ஒரு பிள்ளையாக வந்தது...ஹிந்தி சுத்தமாக தெரியாதது.. இவற்றை வைத்து என்னை நாசுக்காக பாவப் பட்டு கழட்டி விட்டு விடுவார்கள்..!!

அப்படித்தான்... எனக்கு டெல்லியின் புகழ் மிக்க நிருலாஸ் ரெஸ்ட்ராண்டில் கேஷியாராக வேலை கிடைத்தது..!!ஏற்கெனவே அதில் வேலை பார்த்த ஒருவர், அதிலிருந்து 5  ஸ்டார் ஓட்டலுக்கு அதிக சம்பளத்தில் செல்ல, என்னை தான் பார்த்துவந்த வேலையில் பிடித்து கொடுத்துவிட்டு சென்று விட்டார்....!!

இதில் என்ன என்ன பிரச்சனைகள்...இதிலிருந்து எப்படி தப்பித்தேன்...பின்னர் எப்படி ஒரு நிரந்தர வேலையை...கரணகுட்டிகரணம் போட்டு பெற்றேன்..என்பதை பின்னர் எழுதுகிறேன்.......
நாக.பன்னீர் செல்வம்