புதன், 16 நவம்பர், 2016

புள்ளைக்கு..புள்ள பொறந்திருக்கு..!?!...


   ஒரு சமயம் நான் சிறுவனாக இருந்த போது..லோக்கல் மெண்ட் என்று கிராமத்து ஆத்தா, தாத்தாக்களால்..அழைக்கப் பட்ட..அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.. அப்போது அங்கிருந்த பிரசவ வார்டிலிருந்து.. வெளியே வந்த..ஒரு  நடுத்தர வயதுடைய இஸ்லாமிய..பெண்மணி..எதிரில் வந்த.. மற்றொரு இஸ்லாமிய பெண்ணிடம்..மலர்ந்த முகம்.. வழியும் சிரிப்புடன்... இவ்வாறு கூறினார்..!
      ”புள்ளைக்கு புள்ள பொறந்திருக்கு”...!! என்று..!!

      அதனை கேட்ட, எதிரே வந்த..பெண்மணி,திருப்பி கேட்டார்..                                 ”என்னா புள்ள”..??.. அதற்கு முதல் பெண்மணி திரும்ப சொன்னார்..”புள்ள..!!” என்று..!!..இந்த சாதாரண சிறிய சொற்றொடரின்,..அர்த்தம்.. பின்னர் தான் என் வயதொத்த  நெருக்க மான நண்பர்களிட்ம் இதனை பற்றி பேசிக் கொண்டிருந்த போது.. புரிந்தது..! அதாவது.. முதலாவது பெண்ணின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது...அது ஆண் குழந்தை..!!

     முதலில் குறிப்பிட்ட.. புள்ளை என்பது, முதலாவது பெண்மணியின் மகள்.. அதாவது இன்றும்..பிரசவித்த நிலையிலும்..  அந்த தாய்க்கு,அவர்..குழந்தையே.!. குழந்தைக்கு...குழந்தையே  பிறந்தாலும்..!...அந்த குழந்தைக்கு பிறந்த குழந்தையும்..”புள்ள”.. தான்..! அதன் அர்த்தம்... குழந்தை என்பது மட்டுமே..! ஆணா.. பெண்ணா என்ற விபரம் கிடையாது..?!?..மூன்றாவது வார்த்தையான என்னா ”புள்ள”..? என்பது ஆணா..?? பெண்ணா..? என்பதானது..அதாவது கேள்வி?! கடைசியாக பதிலாக குறிப்பிடப்பட்ட..”புள்ள”..அது ஆண் பிள்ளை என்பதாகும்..!!
”ப்புள்ள”.. என்று சற்று அழுத்திக் கூறினால் அது ஆண் பிள்ளை..!!

     இப்போது இதனை ஒரே வாக்கியமாக சேர்த்து பார்த்தால்...இதன் கவித்துவம் புரியும்..” புள்ளைக்கு..புள்ள பொறந்திருக்கு...என்னா புள்ள..??...புள்ள..!?!” எந்த மொழியிலும்.. எந்த ஒரு நாட்டின் தலைசிறந்த இலக்கியத்திற்கும் ... உலகின் ஆகப் பெரிய உவமை கவிஞனின் படைப்புக்கும்..சற்றும் குறைவில்லாத.... சுவை..! ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத..அரசு மருத்துவமனையை  பயன் படுத்தும் ஏழை குடும்பத்து பெண்களின் சாதாரண வார்த்தை..வெளிப்பாடு.. நுணுக்கமான..அறியாமையை, மட்டுமே மூலதனமாக கொண்ட..இலக்கிய சுவை...!!

     மேல் நிலை மற்றும் கல்லூரி தமிழ் பாட புத்தகங்களின்... ஒரு சில பாடத்தின் இறுதியில் முடிந்திருக்கும் வாக்கியம் போல..”இது..எண்ணி எண்ணி இன்புறத்தக்கதே”என்றால்  அது மிகையில்லை..?!!?..

      நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்த நிலையில்..கம்பியூட்டர் ஆப்செட், அச்சு தொழில் நடத்தும், எனது,நண்பர்..ரெகுலராக செக்கப் செய்து வரும் தனியார் மருத்துவமனையின், வழிகாட்டலின் படி, பிரசவிக்க..இன்னும் 10 நாள் இருக்கிறது என்ற நம்பிக்கையில்..

     தனது தாயாரை ஊருக்கு அனுப்பி விட்டு.. கர்ப்பிணி மனைவியுடன் தனியே இருந்த..மழை நாள் இரவில்..திடிரென மனைவிக்கு..ஏற்பட்ட.தொடர்ந்த .வயிற்றுப் போக்குடன், கையில் பணமில்லாத நிலையில்.. வேறு வழியில்லாமல் அரசு மருத்துவமனையை.. நள்ளிரவில் அணுகி உள்ளார்..!

      தனக்கு தெரிந்த நண்பர் உதவியுடன்.. அரசு மருத்துவமனை.. தலைமை நர்சுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார்..! அவரும்.. நண்பரின் மனைவியை பரிசோதித்து.. வயிற்று போக்கு பெரிய பிரச்சினை இல்லை..சுகப் பிரசவத்திற்கு  ரொம்ப நல்லது..!! இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிரசவம் நடக்கும் எனக் கூறி.. அது போலவே.. சுகப் பிரசவமும் ஆகி.. அழகிய ஆண்குழந்தையை ஈன்றெடுத்தும் இருக்கிறார்..!

      எந்த வித அனாவசிய கூடுதல் தனியார் மருத்துவமனையின்.. செலவும் இல்லாமல்..சிசேரியன் இன்றி.. அரசு மருத்துவமனையில் சுகப் பிரசவம்..!அதுவும் ஆண் குழந்தை..!! தனியார் மருத்துவமனையினர் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே..!!

     ஆனாலும் நண்பருக்கு பிரச்சினை வேறு வடிவத்தில் வந்துள்ளது..!! தனது மகளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த வகையில் அவரின் மாமியாருக்கு வருத்தம்..! மனைவி வழி  உறவினர்களும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல்.. ஐயோ பாவம்..அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து  அங்கு குழந்தை பிறந்துள்ளது என்பது போல.. பாவப் பட்டிருக்கிறார்கள்!!

      குழந்தையை பார்க்க..தூரத்தில் இருந்து வந்த, மனைவி வழி, பணக்கார வயதான தம்பதியினர்..மருத்துவமனையில் நுழைந்ததில் இருந்து.. கையினால் மூக்கை பொத்திக் கொண்டே, குழந்தையை பார்த்து விட்டு, “தம்பி காசு கையில் இருக்கிறதா..? என்று கேட்டு விட்டு.. கடையில் வாங்கி கொடுத்த டீயை குடித்துவிட்டு ஊருக்கு சென்றிருக்கிறார்கள்..?!?

     ஆனாலும் நிலைமை ஒன்றும்.அவ்வளவு மோசமில்லை..! தமிழ் நாட்டு அரசு மருத்துவமனைகளை அப்படி எல்லாம் ஒட்டு மொத்தமாக கேவலப் படுத்த..முடியாது..!குறிப்பாக மகளிருக்கான பேறு கால பிரிவுகளி்ன் சேவை மிகவும் உன்னதமானது.. !மருத்துவர்கள், செவிலியர்கள் உண்மையான ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் படுகிறார்கள்..!

     கர்ப்பிணி பெண்களுக்கு..பேற்றிற்கு முன் மற்றும் பின் செயல் படுத்தப் படும் நலத்திட்டங்கள்.. நல உதவிகள்.. உதவி தொகைகள், கண்காணிப்புகள் என எவ்விதத்திலும் குறை சொல்ல முடியாது..! வேறு எந்த மாநிலத்தை ஒப்பிட்டாலும்.. அவை. இந்த சேவைகளின் அருகில் கூட நிற்க முடியாது.!!

      மற்றப் படி அரசு மருத்துவமனைகளை வீணாக்குவது நாம் தான்.. !அதாவது விசிட்டர்கள்..! குறிப்பாக கிராமத்தினர்..மருத்துவமனையில்.. ஏதாவது காரணத்தால் சேர்ந்திருக்கும் நோயாளியை பார்க்க வரும் அவர்கள் செய்யும் அட்டூழிய்ங்களே மருத்துமனையை மோசமாக்குகின்றன,,!

     வெற்றிலை பாக்கு போட்டு கொண்டு  கூட்டமாக வந்து ஊர் கதை பேசுவதும்.. சாப்பாடு, டீ, காப்பி என்று அமர்ந்து.. இடத்தை நாறடிப்பதும்... ஒவ்வொருவராக..நோயாளியை  திரும்ப திரும்ப..அவருக்கு  நடந்ததை..எப்படி நடந்தது..?!?..எனக் கதை கேட்டு அலுப்படிக்க செய்வதும்.. பிற நோயாளிகளுக்கும் இடைஞ்சலாகவும்.. கழிப்பறைகளை நாறடிப்பதும் என.. மருத்துவரையும்.. தாதிகளையும் வெறி கொள்ள செய்பவர்கள்..!!

     மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட, பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகளையே நாடுகிறார்கள்..!! ஆனால் நடுத்தர வர்க்கதிற்கு மட்டும் அரசு, ஆரம்ப சுகாதார நிலையங்களில்..குழந்தை பிறப்பது கேவலமாக உள்ளது..!! இல்லாதவர்கள் கூட கடனை உடனை வாங்கி தனியார் மருத்துவ மனையில் பிரசவம் பார்ப்பதும்..உடனுக்குடன் ஸ்கேன் பார்த்தும்..கடைசியில் சிசேரியன் ஆவதும், ரொம்ப சிக்கல் எனில்.. அரசு மருத்துவமனைக்கே அனுப்பி வைப்பதும் வாடிக்கை..!!

     எக்காரணம் கொண்டும்.. 99 சதவீதம் சுகப் பிரசவம் ஆகும் அளவிற்கு, அரசு மருத்துவமனைகள் தங்களின் அனுபவத்தை பயன் படுத்துகின்றன..! தனியாருக்கோ.. கர்ப்பிணி என்பவர்கள் நோயாளிகள்..! எனவே பிரசவ காலத்தில்.. அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம் குடும்பத்தினரையும்  ஆட சொல்லி..வேடிக்கை பார்த்து, கறந்தும்  விடுகிறார்கள்..?!?

     இத்தனைக்கும் மருத்துவ படிப்பு தகுதிகள் இன்றி, வெறும் 10வது 12வது படித்த, குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு இருக்கும் செமி தாதிகளிடம், கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர், கை கட்டி, வாய் பொத்தி.. சொல்வதை கேட்டுக்கொண்டிருப்பார்கள்.!!

     ஒரு மழைக்கால நள்ளிரவில்.. வேறு வழியின்றி.. உடல் நிலை மோசமானவரை, அருகாமை அரசாங்க மருத்துவமனைக்கு, ஆட்டோவில் கூட்டிச் சென்றேன்.. அங்கிருந்த தாதி, தனி ஒருவராக இருந்தார்.. அவரின் மடியில் தூங்கிய,தனது.. பெண் குழந்தையை, கீழே தரையில் கிடத்தி வைத்து விட்டு.. எங்களுக்கு..மருத்துவம் பார்த்து.. ஊசி.. போட்டு, நிவாரணமும் ஆனது..! ஆனாலும்..ஆங்காங்கே அந்த குழந்தை வீட்டு பாடம் செய்த புத்தகங்கள்.. மூடியும் மூடாமலும் கிடந்தது..சூழ் நிலை..மனதை என்னவோ செய்தது..!!

     ஆனாலும் நம் மக்கள்.. அரசு மருத்துமனை தாதிகளிடம்.. எப்போதும் மாறாத புன்னகையையும்,சேவையையும், கருணையையும்.. சுவிட்ச் போட்டால் எரிய தயாராக இருக்கும் பல்பு போல..எந்த நேரமும்.. எதிர்பார்ப்பார்கள்..!! மனித நோய்களில், தங்களின்  வாழ் நாள் பணியை கொண்டிருக்கும் அவர்களிடம்.. ஒரு வித சலிப்பும், எரிந்து விழும் தன்மையும் இருப்பதில் நியாயம் இருப்பதை  நம்மால் புரிந்து கொள்ளமுடியாது..!!

     வாரம் பூரவும்.. வசூலை  அறித்து கொட்டும் தனியார் மருத்துவர்கள்.. வாரக்கடைசியில் ஞாயிற்று கிழமைகளில் இல்லாமல்.. லீவு என்று.. வெளியூர் சென்று விடுவார்கள்..!! அதுவும்.. நடுத்தர டவுன்களில். சுற்று வட்டாரம் கிராமங்களாகவே.. இருக்கும் போது.. பாம்புக்கடி, தேள் கடி, அரளி விதை, பாலிடாயில் என ஆத்திரம் அவசரத்திற்கு கிடைக்க மாட்டார்கள்.. !! பெரிய டவுனுக்கு.. காலம் தாழ்த்தி இவர்கள் போவதற்குள் எல்லாம் முடிந்து விடும்..!!?!..இந்த மாதிரி துர்மரணங்கள்..எல்லாம் ஞாயிற்று கிழமைகளில் அதிகம் நடந்திருக்கும்..! கவனித்து பார்த்தீர்கள் என்றால் புரியும்..!?!

இவ்வாறான மருத்துவர்கள் தங்களுக்குள், தங்களின் மருத்துவமனைக்குள் எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி, அதாவது, பொது மக்களின் அவசர தேவைக்காக.. எல்லா ஞாயிற்று கிழமைகளிலும்.. ஏதாவது ஒரு மருத்துவமனையேனும், மாறி மாறியாவது..  திறந்திருக்க செய்யும் ஏற்பாட்டினை செய்யவே.. மாட்டார்கள்..!

     சாதாரண் நோய்களுக்கு, தனியார் மருத்துவமனையில் மணிக் கணக்கில் உரிய மருத்துவர்களுக்காக நாம்..காத்திருக்கிறோம்..! அதுவும் பத்து அல்லது பதினைந்து பேர் சேர்ந்தால் தான்..வைத்தியம் பார்க்க இறங்கி வரும்.. மருத்துவர்களும் உள்ளனர்..!!

     அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தாதிகளோ...கடுமையான விபத்து உள்ளிட்ட அவசர கேஸ்களுக்கு,  பாதிக்கப் பட்டவர்களுக்காக, நள்ளிரவிலும் எதிர் நோக்கி..அவர்களாகவே,  காத்திருக்கிறார்கள்..!!

      வாழ்வில் சலிப்பும், இயலாமையும் கொண்டவர்கள், ஏன் வாழ்கிறோம்..?? என்று தோல்வி மனப்பான்மையில் இருக்கும் எவரும்..ஒரு முறையேனும் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்க்கலாம்..! வயது முதிர்ந்த முதியோர்கள் வரிசையில் நின்று.. மூட்டு வலி, இடுப்பு வலி, பசியில்லை...! என்று சொல்லிக் கொண்டு, டாக்டர்களிடம் கெஞ்சாத குறையாக.. மருத்துவம் பார்த்துக் கொண்டு.. தெம்புக்கு மாத்திரை.. ஊசி போடச் சொல்ல வரிசையில் நின்றுக் கொண்டிருப்பார்கள்..!! வாழ்வின் முக்கியத்துவம் அப்படி..?!!?..

      ”இருந்து தொலைப்பதை விட.. செத்துத் தொலைக்கலாம்....!!...என்போருக்கு மத்தியில்... ”செத்து தொலைப்பதை விட இருந்து தொலைக்கலாம்”..!! என்பதை.. உணர்த்தும் வாழ்வியலின் ஜீவ மரண போராட்டத்தை உணர்த்தும்...பாடம் போலவே.. இருக்கும்..அந்த முதியோர்களின்...அரசு மருத்துவமனை... சிகிச்சை, தேடல்கள்..!!

     முடிந்தால்.. உங்கள் குழந்தைகளுடன்..ஒரு முறை ஞாயிற்று கிழமைகளில்.. அரசு மருத்துவமனைக்கு சென்று வாருங்கள்.. நோய் சிகிச்சைக்காக இல்லாவிடினும்.....குறைந்த பட்சம்.... அனுபவ சிகிச்சைக்காகவாவது........!!

நாக.பன்னீர் செல்வம்

   

     

1 கருத்து: