
சமீபத்திய, நெல் விவசாயம், விவசாயிகள் தொடர்பான சந்திப்புகளில், அறுவடை இயந்திரத்தின் மூலம், கண்ணுக்கு தெரியாமல், நேரடியாகவும்..வைக்கோலுடன் ஒட்டிக் கொண்டும் மறைமுகமாகவும்..வயலில், வீணாக விழும்,
நெல்,சற்றேறக் குறைய, ஏக்கருக்கு 2 அல்லது 3 மூட்டை அளவுக்கு சமமானதாக, மழையினாலோ அல்லது தண்ணீர் விட்ட பின்....முளைத்து.. வெளி வரும் போது மட்டுமே..தெரியவருகிறது எனவும்.....மேலும் அந்த நெல் யாருக்கும் பயன்படாமல் விரயமாகவே வெறும் தரை முளைப்பாக..போவது பற்றியும் பேச்சு வந்தது..!
80 சதவீதம் மட்டுமே.. வெற்றிகரமான உபயோகமும்,சாத்தியமும், வாய்ப்பும் உள்ள, மெஷின்களின் இயக்க பயன்பாடுகளில் இந்த விதமான இழப்பு தவிர்க்க முடியாததே..!
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட, 70களின் அறுவடைக் காலங்களில் கொடுக்கும் கூலி நெல்லை மரக்கால் கொண்டு அளந்து போடுவதாக இருக்கும்..!! எனக்கு நினைவு தெரிந்து 4 மரக்காலில் இருந்து ஆரம்பித்து பின்னர் கொஞ்ச கொஞ்சமாக கூடிக் கொண்டே போனது..!
மேல் தஞ்சாவூர் மாவட்டங்களான தற்போதைய திருவாரூர், நாகை பகுதிகளில் விழுந்த கூலி எனப்படும் முறை.. அதாவது கிடைக்கும் மொத்த விளைவில் இத்தனை மூட்டைக்கு கூலியாக இத்தனை மூட்டை என தொழிலாளர்களே நிர்ணயத்து , எடுத்துக் கொண்டது போக.. மீதத்தை..முதலாளிகளுக்கு கொடுப்பது..!
கீழ் தஞ்சை பகுதிகளில்..இந்த அறுவடை கூலிக்கு.. நெல் அளக்கும் போது ஒரு சில சச்சரவுகள், களத்தில் தோன்றும்.. !களம் கண்ட தமிழ்ர்கள் ஆயிற்றே.. அது நெல் அறுவடை களமாக இருந்தாலும் போர்க் களமாக இருந்தாலும்..!! கூலி நெல்லை தங்களுக்கு அதிகமாக அளந்து கொள்வதில், தொழிலாளர்கள்.. ஒரு சிலர் கைதேர்ந்த வராக...சாரி..! விரல் தேர்ந்தவராக இருப்பர்..!!
ஒரு விரல் மற்றும் இரு விரல்களை.. தாங்கி,தொழிலாளர்கள் தங்களுக்குண்டான கூலியை அளந்து கொள்வதால்...நெல் கூடுதலாக, தொழிலாளர்களுக்கு போய் விடும் என்ற பதட்டம்..நிலவுடமையாளருக்கு எப்போதும் உண்டு..! இத்தனைக்கும் விரல் விட்டு எண்ணக் கூடியவராக குறைந்த எண்ணிக்கையில் இந்த முதலாளிகள் இருப்பர்..!
மற்றவர்கள்.. சிறிய அளவிலான நிலத்தை கொண்டு, அறுவடை சமயத்தில்...முதலாளியாகவும் பின்னர்..தானே..கூலி அறுவடைக்கு வெளியில் செல்லும்.. தொழிலாளர்களாகவும்..இருந்து கொண்டிருப்பர்..?!?
இது..வேறு எந்த தொழிலிலும், முதலாளிகளுக்கு இல்லாத சிறப்பு .!
இதைத் தவிர வெற்றிலை பாக்கு நெல், என தொழிலாளர்களுக்கு, தனியே கூலி தவிர்த்து, கூடுதலாக வழங்கப் படும்..! இது,அறுவடை நாளின், கூலி ஆட்களின் எண்ணிக்கை.. மழைக்கால அறுவடையில் ஏற்படும் சிரமங்கள்..வைக்கோல் கூடுதல் தேவைக்கு, விளைந்த பயிரை ஒட்ட அறுத்தல் அல்லது மேலாக..கொசுவி அறுத்தல்..களத்திற்கு, வயலில் இருந்து நெல் கட்டுகளை தூக்கும் தூரம், அதிக விளைச்சல்,..கூட குறைச்சாலாக செய்த வேலை.. நெல்லை தூற்றுவதற்க்காக.. காற்றிற்கு காத்திருந்த கால விரயம்...என அந்தந்த சமயத்திற்கு ஏற்ப மாறுபடும்..!
அதாவது இந்த நெல்..ஓவர் டைம் அல்லது போனசுக்கானது...!! இது மொத்தமாக கூலியை தவிர்த்த நெல்லாக, இரண்டு மரக்காலிருந்து ஆரம்பித்து... வாங்கப் பட்டு. கடையில் விற்று அதன் பணத்தை தொழிலாளர்கள் பிரித்துக் கொள்வார்கள்..!! பெரும்பாலும் இது கள், சாராய குடிக்கும்.. குறிப்பாக வெற்றிலை பாக்கு செலவு தேவைகளுக்கு என பயன் படுத்திக் கொள்ளப்படும்..!
அப்போதைய தொழிலாளர்களுக்கு வெற்றிலை பாக்கு போடுவது என்பது அத்தியாவசிய பழக்கமாக இருந்தது.. ஒருவருக்கு ஒருவர் வேலைக்கு இடையில் ஆற்றுப் படுத்திக் கொள்ள, உரையாட, சிறு ஓய்வுக்காக என்பதற்கான காரணங்களில் வெற்றிலை பாக்கு போட்டு கொள்ளும் பழக்கம்..தவிர்க்க முடியாததாக..இருந்தது.. இது பெண்களுக்கும் பொருந்தும்..!
அதற்கு தகுந்தாற்போல். வெற்றிலை பயிரிடும் கொடிக்கால்கள், லெட்சுமி சீவல், மைதீன் புகையிலை, ஏ ஆர் ஆர் பாக்கு எனப் பிரபலமான உள்ளூர் கம்பெனிகள் இருந்தன..! ஒரு தரத்திக்கு வெற்றிலை கொடு.. என்பதும்..புகையிலை கொஞ்சம் கொடு.. சுண்ணாம்பு இருக்கா, என்கிற வார்த்தைகள்...அடிக்கடி கேட்க கூடியதாகவும், வேற்று ஆட்களிடம் கூட பேச்சினை தொடங்க ஏதுவானதாகவும் இருந்தன..!
வெற்றிலையை கவுளி கணக்கில், குஞ்சி வெத்தலை. அதாவது சிறிய வெத்திலையாக..நாட்டு வெத்திலை என தரம் பார்த்து வாங்குவதும் நடைமுறையில் இருந்தது..! கடைத்தெருவுக்கு செல்வது வெற்றிலை பாக்கு வாங்க சென்றதாகவே அடையாளம் காணப்படும்...!ஓவ்வொரு வீட்டிலும் சுண்ணாம்பு கலயம் ஒன்று நிச்சயமாக இருக்கும்..!
சுண்ணாம்பு இரவல் வாங்க சிறுவர் சிறுமியர் ஈடுபடுத்த படுவார்கள்..!!?! அவர்களிடம்.. அப்படியே.. இரவல் வாங்க சென்ற வீட்டின் நிகழ்வுகளை கேட்டு துப்பறிந்து ஊர் வம்பு..ஊர் கதை.. என,வயதான தாத்தா, ஆத்தா மார்களுக்கு..அளவில்லாத ஆனந்தத்தை தந்தது..! சமயத்தில் சுண்ணாம்பு வெற்றிலையில் வாங்கி வரும் போது கூடுதலாக ஒரு வெற்றிலையும் ஒசியில் கிடைத்தமாதிரியும் இருக்கும்..!!
வெற்றிலை பாக்கு போட்டு கொண்டால், சிறுவர்களை மாடு முட்டும் என்பதும்.. படிக்கிற புள்ளை வெற்றிலை பாக்கு போடக்கூடாது என்பதும் கிராமத்தின் எழுதாத சட்டமாகவே இருந்தது..!! வயதான நிலையில்..பல்லை இழந்தவர்கள்..வெற்றிலை பாக்கை உரலில் இட்டு இடித்து போட்டுக்கொண்ட்தும்..தாத்தாக்கள்.. உள்ளங்கையில்..விரலால் கசக்கி..பின்னர் அதனை வாயில் போட்டுமெல்லுவதும் நடைமுறையாக இருந்தது..! அவ்வாறான பழக்கம் உடையவர்களின் உள்ளங்கை சிவந்து மருதாணி வைத்தது போல் எப்போதும் இருக்கும்..!!
வட மாநிலங்களில், மிகவும் வயதான நிலையில், சாகும் தருவாயில், தன்னால், சுயமாக சாப்பிட முடியாத, படுக்கையில் உள்ள பெரியவர்களுக்கு, சப்பாத்தியின் மென்மையான பகுதியை , உள்ளங்கையில் வைத்து கசக்கி, நம்ம ஊர் தாத்தாக்கள் வெற்றிலை பாக்கு போட, செய்தது போலவே.. அவர்களின் உறவினர்கள்.. கொடுப்பதையும் கண்டிருக்கிறேன்..!!
வயலில் நாத்து பறி, நிரவுதல், கொத்துதல், உழுதல் போன்ற பணிகளை செய்து வரும் ஆண்களுக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு பெண்கள் வயலுக்கு செல்வது வழக்கமாக இருந்தது..! எங்கு வேலை செய்கிறார்கள் என்று தெரியாத நிலையில், தங்களின் கணவன் மார்களை, வழியில் வேலை செய்யும் இதர ஆண்களிடம் விசாரித்து,
தனது கணவரை மற்றவர்கள் எப்படி செல்லமாக..அழைப்பார்களோ, அப்படியே, தேடும் மனைவிமார்களும், அடையாளம் சொல்லி, வேலை செய்யும் இடத்தை கண்டு பிடிப்பதும்.. .உதாரணமாக சின்னவரை, நடுப்புள்ளையை, உங்க அத்தானை, உன் மச்சானை.. பெரிய தம்பியை, சின்ன தம்பியை...பாத்தீங்களா.. எனக் கேட்டுச் செல்வதும், அதன் தொடர்பிலான, கேலியும்.. கிண்டலும் குறைவில்லாததாக இருக்கும்..! எடுத்து செல்லும் சாப்பாட்டுடன் நிச்சயம் வெற்றிலை, பாக்கு, புகையிலையும் இருக்கும்..!
மைதீன் புகையிலை கம்பெனியார், தங்களின் புகையிலை பாக்கெட்டில் உள்ள சிறிய உள் தாளில்,உழவன் ஒருவன் உழுவதையும், அவனுக்காக,அவனின் மனைவி சாப்பாட்டு கூடையுடன் செல்வதும், மரம், புதர்கள்,பின்னனியில் தெரியும் மலை, இரு காளை மாடுகள், கலப்பை, வயல் என அனைத்தும் இடம் பெற்றிருக்கும் படத்தை சின்னதாக, சிக்கனமாக வைத்திருப்பார்கள்..!
அந்த ஒரு சிறிய, தெளிவில்லாத, கலங்களான படம்..ஒட்டு மொத்த,உழவனின் வாழ்க்கை சித்திரம் போல்..காளைமாடுகள், கலப்பை அனைத்தும், இடம் பெற்ற..அடையாளமாகவும்.. ஒரு நினைவு சின்னம் போல்.. இழந்த விட்ட வாழ்க்கை முறையை நினைவு படுத்தி..இன்றும்.. காணும் போது இனம் தெரியாத சோகத்தை கொடுக்கும்..!?!
ஒவ்வொரு முறை மைதீன் புகையிலை பாக்கெட்டை, பிரிக்கும் போது, வெற்றிலை பாக்கு போடுபவர்கள், அந்த காகிதத்தை உற்று நோக்கி, படத்தை பார்த்து சிலாகிப்பதையும், வயதான பெண்கள், புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், அந்த தாளை தூக்கி எறிய மனமின்றி தங்களின் கூறை, குடிசை வீட்டு மூங்கில் தட்டி, சாக்கு படுதா கதவுகளில் வரிசையாக ஒட்டியும் வைத்திருப்பார்கள்..!!
அந்த தாளை..ஒட்டுவதற்காகவே புகையிலை வாங்கி போடும் பழக்கத்தை கொண்டிருப்பதை போல இருக்கும் அந்த உன்னத அறியாமை..! சிறுவர்களான எங்களுக்கு அந்த புகையிலை காகிதத்தை முகர்ந்து பார்த்தாலே.. அந்த நெடியில்.. மயக்கம் வருவது போல பிரமையாகஇருக்கும்..!?!
அறுவடைக் காலத்தில் களத்து மேட்டில்,அறுவடைக் கூலி, வெத்தலை பாக்கு நெல் வினியோகம்..இதை தவிர, முடி திருத்தும், துணி வெளுக்கும், வெட்டியான்கள் எனப்படும் தொழிலாளர்களும், கூடவே கோவில் பூசாரியும்.. நெல் வாங்க வருவார்கள்.. !.கோயில் நிலைத்தையும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கான,பஞ்சமி நிலமும் யாரிடம் இருக்கிறது.. என்பதும், ஏன் தங்களுக்கு அது தரப்படவில்லை.. என்ற கேள்விகள்..அதற்க்கான பதில்கள்.. என்ற எவ்வித தேவையும் இன்றி, இந்த களத்து நெல்லை வாங்க, அறுவடை சமயத்தில் ஓவ்வொரு முறையும் வருவார்கள்..! இதில் தலையாரி காவல் நெல் தனி..!
அந்த தொழிலாளர்களுக்கு, படி, மரக்கால் அளவுகளின்றி, கையால் மூன்று முறை அள்ளிப் போட்டு கொடுக்கப் படும்..! இதனை அவர்கள் பெறுவதற்குள்..அனைத்துவிதமான.. குத்தல் பேச்சுகளுக்கும் இழி நிலைக்கும்..ஆளாக வேண்டியிருக்கும்..!!அதில் கோயில் பூசாரியின் நிலை கொஞ்சம் மேம்பாடாக இருக்கும்..எனெனில் அவரின் கையில்.. ஒரு சிறிய பித்தளை செம்படத்தில் விபூதி இருக்கும்.. அதனை அவர், அனைவருக்கும் கொடுத்தும், பூசி விட்டும்..சாமியின் ஏஜெண்டாக கண்ணுக்கு தெரிவார்...!!
மற்றவர்களுக்கோ.. ”வந்துட்டான்கள்...வரிசையாக கூடையை தூக்கிகிட்டு” என்பதாகவும், கொடுக்கும் மூன்று கை நெல் என்பது சுமார் ஒரு கிலோ கூட தேறாத நிலையில்..”போதும்..போதும் போ..” விரட்டுவதும்...”எவ்வளவு கொடுத்தாலும் இவனுங்களுக்கு பத்தவே பத்தாது” என்ற வசவுகள்...!!என..அவர்கள் படும் அவமானம் சொல்லி மாளாது..!
ஒரு சில பண்ணையார்கள், களத்தில் இருக்கும் தங்களின் சிறிய மகன் அல்லது மகளை விட்டு, தொழிலாளர்களுக்கு நெல்லை மூன்று கை அளந்து போடச் சொல்லுவதும் உண்டு..! அவர்களின் கையின் அளவு சிறியதாக இருக்குமே.. அந்த ஈகை..நல்லெண்ணம் தான்..!!
எவ்வளவு நெல் களத்தில் இருந்த போதும்.. இந்த சிறிய அளவு நெல்லை,கூடையிலும், துணியிலும் பெற்று கொண்டு..முணுமுணுப்புடன்.. அந்த தொழிலாளர்கள்.. களத்தை விட்டு..வாட்டமுடன்.. செல்வது.. சிறிய வயதில் எனக்கெல்லாம் பாவமாக இருக்கும்..! இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..!! ஏன் இன்னும் கொஞ்சம் கொடுத்தால் குறைந்தா போய் விடும் என பெரியவர்களின் மீது..கோபமாக வரும்..!தன்னிச்சையாக கொடுக்கும் அளவுக்கு..அந்த சூழல்..சரியா தவறா என்ற குழப்பம்.. தைரியம் வராது..?!?
இப்போதெல்லாம், அந்த தொழிலாளர்களை அறுவடை சமயத்தில் காணமுடிவதில்லை...! அவர்களின் வாரிசுகள் என சொல்லிக் கொண்டும்..எவரும் வருவதில்லை..! அறுவடை என்ற மக்கள் திருவிழாவும், நெல் களத்து மேடுகளும், முறம், மரக்கால், படி, கூடை, விளக்குமாரு, சாக்கு, அன்னக்கூடை , கோணி ஊசி, சணல் என தேவைப் பட்ட பொருட்களும்..
அறுவடைக்கே உரித்தான எந்த வித முந்தைய நிகழ்வுகளும் இல்லாது, மறைந்து போனதில்..முழுக்க அறுவடை இயந்திரமும், அதன் ஓட்டுனருடன் அனைத்து வேலைகளும் முடியும் நிலையில்.. அந்த தொழிலாளர்களை எதிர்பார்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை..!! அவர்களுக்கும் இந்த நெல் தேவையுமில்லை...!
ஆனாலும், அன்று ஏகடியம் பேசிக் கொடுத்த..அந்த மூன்று கை நெல்லுக்கும்,இப்போது அறுவடை இயந்திரத்தினால்.. விரும்பியோ விரும்பாமலோ...தவிர்க்க இயலாமல் வீணாகும் மூன்று மூட்டை நெல்லுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே எனக்கு,தோன்றுகிறது..!
”இப்ப என்னா செய்வீங்க”..?? என்று.. சிறுவயது..நினைவின் மூலையில் மங்கலாக தெரியும் அந்த தொழிலாளர்கள்.. வாயில் வெற்றிலை பாக்கு..மைதீன் புகையிலை வாசத்துடன்.. காறைப் பல் தெரிய.. இயந்திரத்தால் வீணாக வீசப் பட்ட..வெற்றுத் தரை, நெல் முளைப்பில் நின்று, நம்மை பார்த்து, ஏளனமாக.. சிரிப்பதாகவே, எனக்கு, தோன்றுகிறது..!?!!
நாக.பன்னீர் செல்வம் Naga.panneer selvam
வாவ். இவ்வளவு நேர்த்தியா நம்ம பகுதி விவசாயத்தை, அறுவடைக்கால அலப்பறைகளை யாரும் எழுதியிருக்க முடியாது. மிக அழகு....
பதிலளிநீக்குFantastic recollection. Kudos 👏
பதிலளிநீக்கு