
இதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது என்கிறீர்களா..? உங்களுக்கு எப்படியோ தெரியாது...எனக்கு இது பெரிய விசயம் தான்..!எனென்றால் மேற்படி சொர்க்கப்பூர்வ அனுபவத்திற்கு.... முக்கியமாக ஒன்று வேண்டும்...அது நல்ல, கிடா ஆட்டு இறைச்சி..!! இதனை பெறுவதற்கான அலைச்சல், முயற்சி, முடிவெடுக்கும் திறமை,நுண்ணறிவு, மொத்தத்தில் அந்த...சூதானம் தான்.. நான் சொல்ல வந்தது..!!
சிறு வயது முதலே, வீட்டு ஆண்களை, ஆட்டுக் கறி எடுத்து வந்த நாட்களில், ஒரு சில சமயங்களில் மட்டும் ..பெண்கள், கறித்துக் கொட்டி, பொறுமி, கறியை கழுவுவதில் தொடங்கி, குழம்பு வைத்து, மேலும் அது, தீரும் வரை, திட்டித்தீர்ப்பதை.. ஆத்தா, அம்மா, அத்தை வாயிலாக கண்டிருக்கிறேன்..!
நல்ல கிடா ஆட்டு இறைச்சிக்கு பதிலாக பொட்டை ஆட்டு கறி, அதுவும் கிழமாக இருந்து, முதல் நாளில் வெட்டு பட்டு.. ஐஸ்ஸில் வைத்தது, அல்லது..கறியில் முழுக்க தண்ணீர் ஏற்றி.. அதனால் எடை குறைந்து, குழம்பு மோசமாக....வாசனை இல்லாமல், இருந்து, அதாவது.. சவுக் சவுக் என்று கடிக்க முடியாமல்.. இவற்றில் ஏதேனும் ஒரு காரணம்....குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இல்லை என்றால்...அவ்வளவுதான்..போச்சு..!!
வைத்த குழம்பு தீரும் வரை...ஒரே வைப்பாட்டு தான்...!! குத்திக் காட்டல்...!அதுவும் மறைமுக ஆண்களின் கையாலாகத் தனம்.. நல்ல கறி எடுக்க துப்பில்லாத்தனம்.. என தொடரும் வீட்டுப் பெண்களின் தீவீரவாதம்..!!
அப்போது தான் சிறு வயதில்அந்த முடிவை எடுத்தேன்..!ஆட்டுக் கறி என்பது சாதாரண விஷமல்ல... நல்ல கறியை கண்டு வாங்குவதற்கு..கூடுதல் கெட்டிக்காரத்தனம் தேவை என்று..! இது குறித்து அனுபவ சாலியான,தாத்தாக்கள், உறவுக்கார பெரியவர்களிடம் பேச்சுக் கொடுத்து.. அந்த கலையை கற்றேன்..!!ஆனாலும் இன்றும் சில சம்யங்களில்..கோட்டை விட்டு விடுவதும் உண்டு..!
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் பாய் மார்களே... ஆட்டுக் கறி கடை போடுபவர்களாக இருப்பார்கள்..! இதை தவிர, ””நம்மாளு கடை” என்று சொல்லப் படும் இந்துக்களும் கடை போடுவதும் உண்டு..! ஆனால் அது சில சமயங்களில் மட்டும் இருக்க கூடியதாகவும் , சொந்த ஆட்டு வளர்ப்பு கிடாய் கிடைக்கும் சமயத்தில் திறக்க கூடியதாகவும் இருக்கும்..!! விதி விலக்காக நிரந்தர கடைகளும்.. நீண்ட நாட்களாய் இருந்து வருவதும் உண்டு..!
கூறு கறி என்று சொல்லப் படும், ஆட்டை அறுத்து , வெட்டி சிறு சிறு துண்டுகளாக்கி, ஏகத்துக்கும், அதனை, தென்னை கீற்றுகளில், சிறு சிறு கூறுகளாக நிரந்து, அனைத்து கூறுகளிலும் ஈரல்,கல்லீரல் நுரையீரல், மாங்காய் எனப்படும் கிட்னி, கொழுப்பு என அனைத்து பாகங்களும் சமமாக, கொஞ்சம் கொஞ்சமாகவேனும் வைக்கப்பட்டு, பாகுபாடு எதுவுமில்லாமல், எடை எதுவும் வைக்கப் படாமல், ஒரு கூறு இவ்வளவு தொகை என்று, ஆட்டின் உத்தேச விலை, ஆள் ,...அரிவாள், வெட்டுக் கத்தி இவை கிடைக்க மெனக்கெட்டது போன்ற காரணங்களை காட்டி...பெரிய அளவு இலாபம் பார்க்காமல்,விற்பது..!
பெரும்பாலும் கூறு போட்டு கறி கொடுப்பது, உறவினர்கள், நெருங்கிய சொந்த முடைய குடும்பங்களுக்கு உள்ளாகவே... நடைபெறும்..! பொங்கல் தீபாவளி நாட்களில் வியாபார ரீதியாகவும், ஒரு சிலர், சேர்ந்து இதனை செய்வதும் உண்டு.. எப்படி இருந்தாலும் தாராசு, எடை கற்கள் சமாச்சாரங்கள் கிடையாது...! இதனை முன்னின்று நடத்துபவருக்கு, வெட்டி சுத்தம் செய்து தருபவர்களுக்கு ஆட்டின் இரத்தம், தலை, குடல், என்று தனியாக ஸ்பெசல் கவனிப்பு கிடைக்கும்... இதற்கு விலை கிடையாது...! ஒடி ஆடி இதனை நல்ல முறையாக செய்து முடித்தால்..தோல் மூலம் கிடைக்கும் வருமானம் தனி..!
ஆனாலும்,கூறு போடுதல் நிகழ்வு...பெரும்பாலும் சண்டை சச்சரவு, வராக்கடன் என அதிருப்தியிலேயே...முடிந்து,இனி இந்த வேலயே உதவாது..!! சீச்சீ..!! கடையில் வாங்கி தின்னுக்கலாம்..போ..!..என்று சலித்துக் கொள்ளும் படியாகவே, இதனை ஏற்பாடு செய்தவர்களால் முடியும்..!
போகட்டும்.. இனி நமது கறிக்கடைக்கு வருவோம்..கிடா ஆட்டு கறி இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்..விதை இரண்டு அடையாளம்..! ஆனால் பெரும் பாலோர் ஏமாறுவது...இரண்டு சிறு நீரகத்தை பார்த்து..! கிடா ஆடு..தலை வெட்டப் பட்டு தனியாக இருக்கும் போது.. நல்ல முக்கோண வடிவத்திலும், கொம்புகளின் கீழ் புடைப்பாக நல்ல வாளிப்பாக.. இருக்கும்..!
மாறாக, பெட்டை ஆட்டு கறி, நல்ல சிவப்பு வண்ணத்தில் கூடுதலாக கலருடன் இருக்கும்..தலை தனியாக இருந்தால் முக்கோணமாக இல்லாமல்..சற்று நீள வாக்கில் இருக்கும்..!இதை விட ஒற்றை நல்ல கிடா ஆட்டை, போட்டு கறி விற்கும் பாய்மார்கள்.. அன்று கூடுதலாக மிதப்புடன், கால் மேல கால் போட்டுக் கொண்டு..வாயில் பீடியுடன்.. வாங்க.. அப்புறம் என்ன வேணும்..?? என்று ஒரு பக்கமாக பார்த்துக் கொண்டு..தெனாவெட்டாக, அலட்சியமாக...வாடா.. நான் தான் இன்னிக்கு ராஜா என்பது போல் இருப்பார்கள்..!?!
அதுவே பெட்டை ஆடாக இருந்தால்... சற்றே.. பம்முவார்கள்..! வாங்க எவ்வளவு வேண்டும்..!?! எனக் கேட்டுக் கொண்டே, ஆட்டின் கறியை வெட்டி தராசில் போடுவதிலேயே, அவசரம் காட்டி, நம்மை சிந்திக்க விடாமல்.. நமது தலையில் கட்டி விட குறியாக இருப்பார்கள்..!!
வழக்கத்துக்கு.. மாறாக அதிகம் பேசி.. என்ன..?அப்படி பாக்குறீங்க...சந்தேகம் வேண்டாம்...ஒண்ணும் பிரச்சினையில்லை..ஏதாவது சரியில்லை அப்படியே திரும்ப எடுத்து வாங்க..என்றும், தம் கட்டுவார்கள்..!! ஒருவேளை யாரும், திரும்ப வைத்த குழம்பை, புகார் சொல்லி, எடுத்து வர போவதில்லை என்ற தைரியமும்.. அல்லது.. குக்கரில் வேகவைத்து தின்றால் யாருக்கு என்ன தெரிய போகிறது..!! என்ற எண்ணமுமாக இருக்கலாம்..!
ஒரு சில கடையில், வேறு கடையில் வாங்கிய கிடா ஆட்டின் விதையில் ஒன்றை வாங்கி, பெட்டை ஆட்டின் வயிற்று பகுதியில் மாட்டி, கிடா ஆட்டு கறியை போன்று மாயத்தை உண்டு பண்ணி, ஏமாற்றுவார்கள்..! அவர்களும் என்ன செய்வார்கள்..? பாவம்..!யாரும் பெட்டை ஆடு இறந்தபின், அதற்கு சமாதி எதுவும் கட்டுவதில்லையே..! அதுவும் இறைச்சிக் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும்..!?!
இதைத் தவிர ஆட்டு கறியில், தண்ணீர் ஏற்றும் வைபவம் என்று, டெல்டா மாவட்டங்களில் உண்டு..! ஆட்டை அறுத்து, பின்னர் கட்டி தொங்கவிட்டு.. குரல் வளை அருகில் இருக்கும் நரம்பு வழியாக தண்ணீரை ஊற்றி, அழுத்தி அழுத்தி.. இறக்கப் பட்டு, அது உடல் முழுவதும் பரவி..ஜவ்வுகளில் இறங்கி, இறைச்சியின் எடை கூடுதலாக இருக்கும்..! தண்ணீர் ஏற்றும் கலையை காண அனுமதி கிடையாது...!! எட்டி பார்த்தால்.. போங்க..போங்க போய் உட்காருங்க என கடுப்படிப்பார்கள்..!!??.. இதற்கு காவலாக சோனியாக ஒரு ஆள், எல்லா இறைச்சி கடைகளிலும் வேலைக்கும் இருப்பார்கள்..!!
பாவம்.. இதற்கு கிடா, பெட்டை ஆட்டு வித்தியாசம் எதுவும் கிடையாது..! இறைச்சி, வரும் வழியிலேயே பாதி தண்ணீர் சொட்டி..சொட்டி. இரு சக்கர வாகனத்தின் சைலன்சரில் கறையாக இருக்கும்.! வீட்டிற்கு வந்து இறைச்சி வைத்த பாத்திரத்தில் தண்ணீரும் கறியும் தனியாக பிரிந்து இருக்கும்..!!
எப்போதும் வழக்கமாக செல்லும் கறிக்கடையில், ஒரு நாள் பெட்டை ஆட்டுக் கறி இது எனத் தெரிந்தாலும், கூட்டமாக மற்றவர்கள் இருக்கும் போது.....வியாபாரத்தை கெடுக்கும் விதமாக..தவறாக எண்ணிக் கொள்ளும் மனப்பான்மையை தவிர்க்க, வாங்காமல் செல்ல முடியாது..!இது தான் பிரச்சினை..! மேலும் எந்த இறைச்சி கடைக் காரரும், ஒரு நாளும்,.. இன்று பெட்டை ஆட்டுக் கறி.. வாங்க வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்..?!? அப்படி சொன்னால், அன்று அந்த உண்மையை கேட்டு உலகம் அழிந்து விடும்..! நாம் தான் நைசாக எஸ்.. ஆக வேண்டும்.. !!
எனது உறவினர் ஒருவர் சொல்லிக் கொடுத்தது போல.. கூட இருப்பவரிடம் அக்காவுக்கு பெண்பிள்ளை பிறந்துள்ளது..! என, பெட்டை ஆட்டு கறி என்பதை சூசமாக உணர்த்தி நகர்ந்து விடவேண்டும்..! நான்.. கைப்பேசியுள்ள இந்த நாட்களில், புதிய டெக்னிக்கை வைத்துள்ளேன்...அதாவது..வீட்டிற்கு போன் செய்வது போல நடித்து...என்னது.? மீன் தான் வேணுமா,,?!? என்று கேட்டு பாய்.. அப்புறமா வாரேன்..என்று..இடத்தை காலி செய்து விடுவது..!
ஒரு சில இடங்களில்.. பள்ளிவாசல் அருகில் உள்ள கடைகளில், ஊர் கட்டுபாடு வைத்திருப்பாகள்..அதாவது.. பெட்டை ஆட்டுக் கறி அந்த கடைகளில் வெட்டக் கூடாது..!! ஆனால் அது பெரும் பாலும் வெள்ளிக்கிழமைக்கு தான்..! நாம் போவது ஞாயிற்று கிழமை ஆயிற்றே.. ! கட்டுபாடுகள் கொஞ்சம் தளர்ந்திருக்கும்...!! கிடா ஆட்டை அறுத்து பெயருக்கு வெளியே தொங்கவிட்டு.. உள்ளே வாளியில் பெட்டை ஆட்டுக் கறி இருக்கும்..!!
பெட்டை ஆட்டுக் கறியுடன் கிடா ஆட்டுக் கறி கலந்து சாப்பிடும் போது.. ஒன்று நன்றாக வெந்தும் .. ஒன்று வேகாமலும் இருக்கும்..!ஒரே குடும்பத்தில் ஒரு சிலர் அதிர்ஷ்டசாலியாகவும் மற்றொருவர் துரதிருஷ்ட சாலியாகவும்.. பாய்மார்கள் புண்ணியத்தில் மாறி விடுவார்கள்...!!
என்னுடைய நண்பர் ஒருவர் விபரம் நன்கு அறிந்தவராக..அது வரை நான் எண்ணிக் கொண்டிருந்தவர்..எனது ஆட்டு இறைச்சி பயணத்தை பார்த்து..பாவப் பட்டு.. நீங்க என்னங்க...வாங்க என்னுடன்.. நல்ல ஆட்டுக்கறி கிடைக்கும் இடத்தை காண்பிக்கிறேன்..! இனி.. நிரந்தரமாக அங்கேயே வாங்கி கொள்ளுங்கள்...என்று சொல்லி தூரமாக உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்..!
பார்த்தவுடன் தெரிந்தது அது நம்மாளு கடைதான் என்று..! ஆனால்.. அன்று...தொங்கியது என்னவோ.. பெட்டை ஆட்டு கறி..!அதுவும் கலர் மங்கி ஐசில் வைத்து... வாடா.. வந்து ஏமாறு. என்று என்னை அழைத்தது...!?!.. நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே..யாருக்கும் தெரியாமல்..கறியின் மீது சாய்ந்து.. தொட்டுப் பார்த்தேன்..! ஜில்லென்று.....ஆகா..கன்பார்ம்...தான்..!!..சந்தேகமேயில்லை...ஐஸ்...மற்றும் பெட்டை ஆடு..!! அழைத்து சென்ற நண்பர் வேறு என் முகத்தை பார்த்து.. விஷயம் புரியாமல்.. என்ன நல்லாருக்கா..? வாங்கலாமா..? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்..??
அப்போது தான்.. நான், கடைக் காரரை பார்த்து.. அந்த கேள்வியை கேட்டேன்...!முதல் நாளே வெட்டி..ஐசில் வைத்த. பெட்டை ஆட்டு கறி கிடைக்குமா..? என்று...அவரும் என்னை முறைத்து பார்த்து விட்டு.. இல்லையே..? ஏன் இப்படி கேட்கறீங்க...? என்றார்..!! இல்லை.. டாக்டர், என்னை அந்தமாறி தான் சாப்பிட சொல்லியிருக்கிறார்..!, இருந்தால் கொடுங்கள்..! என்றேன்..?!?..
அவர் பதில் சொல்லாமல்..போய்யா லூசு...என்பது போல்..வேறு பக்கம் திரும்பி...கொண்டார்..! பின்னே உள்ளதை அவரால் சொல்லவா முடியும்..! ?!நானும் நண்பருடன்..போய்யா நீயும் உன் கடை ரெக்கமெண்டேசனும்..என்று திரும்பி விட்டேன்..!(வழியிலேயே நல்ல கறி கிடைத்தது..வேறு விசயம்..)
நல்ல கறியை தேடி...கடந்த பதினைந்து வருடங்களாக.. சுமார் இருபது கிலோ மீட்டர் வரை.. ஞாயிற்று கிழமை காலைகளில்.. நெடு நாள் நண்பருடன்.. சுற்றுவதை..வழக்கமாக கொண்டிருந்தேன்..!! கறிக்கடையை பார்த்து.. தூரத்தில் நின்று.. ஒளிந்து...உளவு பார்த்து.. யோசித்து.. ஏமாறலாமா....? வேண்டாமா..??.. என முடிவு செய்து.. நல்ல ஆட்டிறைச்சி என்றால் மட்டும் வாங்கி.. மதியம் சாப்பிட்டு விட்டு.. கூட வாங்கிய நண்பருக்கு போன் செய்து...விசாரித்து.. விமர்சனம் கேட்டு...ஆகா மறக்க முடியா நாட்கள்..!!
இப்போது.. கிடா ஆட்டிறைச்சியை தேடி.. வாங்கி சாப்பிடுவதில்லையா..?? நிறுத்தி விட்டானா..?? டாக்டர்கள் எதுவும் சொல்லி விட்டார்களா..??என்று தானே கேட்க நினைத்தீர்கள்..!.. சேச்சே...அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..!!
நல்ல கறியை, ஞாயிற்று கிழமைகளில் தேடி அலைவதில்லை.....!!
பதிலாக.. எந்த நாளாக இருந்தாலும்..நல்ல கிடா ஆட்டுக் கறி.. வழியில் நூறு சதவீதம் கன்பார்மாக கிடைக்கிறது என்றால்...கண்கள் பிரகாசமாகி, ஞானம், அருமருந்து கிடைத்த நிலையில்.. உடனே வாங்கி..திரும்ப வீட்டிற்கு சென்று... கொடுத்து விட்டு.. அப்புறமாக...ஆபிசுக்கு போவது...!! அவ்வளவுதான்.......!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக