வெள்ளி, 1 டிசம்பர், 2017

சோறும்..சொல்லும்..!

        இரு சக்கர வாகனத்தை பயன் படுத்தாத.. ஒரு மழை நாளின் முன்னிரவில்...சுமார் ஆறு மணியிலிருந்து.. ஏழு மணி வரை..  முக்கால் மணி நேரத்திற்கும்..மேலாக.. ஒரு சிறிய பேருந்து நிறுத்தத்தின்,வெளியே, வராத அந்த பேருந்திற்கு.காக்க நேரிட்டது... !

        உள்ளே.. ஒரு முதிய பெண்மணி அழுக்கான உடையுடன் படுத்திருந்தார்.. பெருநகரம் என்றால் அவரை ஒரு பிச்சைகாரி என்று எளிதாக எழுதிவிடலாம்..! ஆனால்..இங்கு அப்படி  கூறிவிட முடியாது..எப்படியும் அருகாமை கிராமத்தையும்.. அதில் ஒரு குடும்பத்தையும், புறக்கணிக்கப் பட்ட சமூக காரணங்களை சார்ந்தவராக இருப்பார்..!

      என்னை கண்டதும் எழுந்து..அமர்ந்து..உன் ஊரு எங்கப்பா..? என்றார்..! சற்று முந்தியிருந்தால்.. அந்த கேள்வி.. என்னால் அவரிடம் கேட்கப் பட்டிருக்கும்..!?!
நானும் சொன்னேன்.. இல்லப்பா..சாப்பிட்டு இரண்டு நாளாச்சு..கொஞ்சம் சோறு எடுத்துகிட்டு வரச்சொல்லத்தான்..என்று ஏக்கமாக..!

      நான் ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்து..”ஆத்தா..இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.. அவர் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஏனோ தானோ என்று வாங்கி.. கீழே போட்டுக் கொண்டார்..! அப்போது அந்த பக்கமாக வந்த ஒரு இளம் வயது திருமணமான  பெண்மணி.. அந்த முதிய பெண்மணியையும் அவரது குடும்ப பிண்ணனியை முன்னரே   நன்கு அறிந்தவராக..அவரிடம் பேச்சு  கொடுத்து விசாரித்தார்..!

       ”சார்..இதுக்கு பிள்ளை குட்டி எதுவும் கிடையாது சார்..எல்லாத்தையும் தனது தங்கச்சிக்கும் அவங்க.. பிள்ளைகளுக்கும் கொடுத்துடுச்சு...இப்போ எல்லாரும் கைவிட்டு...இந்த பஸ் ஸ்டாண்டில் வந்து கிடக்குது சார்..!! என்றார்.!

       தன்னை அடையாளம் கண்டு கொண்ட பெண்ணிடமும்..கெஞ்சும் குரலில் ..கொஞ்சம் சோறும் குழம்பும் சமைச்சி எடுத்துகிட்டு வாயேன்..!! இந்தா பணம் என்று நான் கொடுத்த பத்து ரூபாய் உட்பட இன்னும் சில காசுகளையும்..அள்ளி தனது இடது கையால்..  அந்த பெண்ணிடம் கொடுக்க முற்பட்டார் அந்த முதிய பெண்மணி..!

      ”அய்யோ..ஆத்தா.. என் பொண்ணு தனியா இருக்கு..!  நான் போகவே ஒரு மணி நேரம் ஆயிடும்.. நான்  போயிதான்  சமைக்கணும்...எங்கேயிருந்து சமைச்சு.. உனக்கு..எங்க..எப்ப  கொண்டார...!?!..தனது இயலாமையை நினைத்து புலம்பினார்..அந்த இளம் பெண்..!

       ”நல்லா வயல் வேலை செய்யும் சார்... !!..நல்லா.. ஆம்பிள கணக்கா இரண்டு ஆள் சாப்பாட்டை சாப்பிடும்..இப்ப பாருங்க சோறு..சோறுன்னு இங்க வந்து கிடக்குது..! வீட்டில்.. சோறு கொடுத்தா..திண்ணுட்டு.. அசிங்கம் பண்ணுதுன்னு....கழுவ..குளிக்க வைக்க..  பாக்க..எடுக்க. நாதியத்து..மக்க மனுசா இல்லாம போயி .. பஸ் ஸ்டாண்டுல..கெடக்குது,..என்று..கவலையுடன்..சொல்லி விட்டு,.. அவருக்கான உள்ளூர் பேருந்து  வந்ததும்..ஏறி கிளம்பி சென்று விட்டார்..?!!?

      அப்படியே சென்று விட எனக்கு மனசில்லை..!அப்போது அங்கு..சைக்கிளில்  வந்து.. நடந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த.. அருகாமை சுமார் 11 அல்லது 12வது படிக்கும் வயதுள்ள.. சிறுவனிடம்.. கொஞ்சம் பணம் கொடுத்து..பக்கத்தில் எங்காவது சாப்பாடு கிடைத்தால் வாங்கி வந்து இந்த ஆத்தாவிடம் கொடுக்கச் சொன்னேன்..! அவனும்..சார்..! பக்கத்தில் இரவில் சாப்பாடு கிடைக்காது வேண்டுமானால்.. இட்லி.. தோசை தான் கிடைக்கும் என்று உண்மை நிலையை எடுத்துச் சொன்னான்..

      அதை கேட்ட அந்த பேருந்து நிலைய மூதாட்டி..”ஐயே..இட்லி..தோசை வேண்டாம்..சோறு தான் வேண்டும்”.... என பிடிவாதமாக மறுத்தார்..! எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..?!?.. இனம் புரியா கவலையுடன் அங்கிருந்து எனக்கான பேருந்து வந்தவுடன் கிளம்பி விட்டேன்..!

      கிராமத்து பழைய மனிதர்களுக்கு சோறு.. என்பது எவ்வளவு முக்கியமானது என்பது வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை..!..”சோற்றுக்களை” என்ற சொலவடை கிராமத்தில் உண்டு..அதாவது ஏதாவது உடற் குறைபாட்டினால்.. சரிவர சாப்பிட முடியாமல்..மருந்து..வைத்தியம் என இருந்தவர்கள்..மீண்டும்..இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி..இயல்பான அளவில்.. சோறு அல்லது கஞ்சியை.. சாப்பிடும் போது.. அதன் ஆசையும் ஆவலும்.ஏக்கமும்  பூர்த்தியாகி வேர்த்து..களை பட்டு போகும்..அது தான் ”சோற்று களை.”..?!?

      ”சோற்றால் அடித்த பிண்டம்” என்ற சொற்றொடரும் கிராமத்தில் சாதாரணமாக உண்டு..! அதாவது இந்த உடலே சோற்றால் தான் ஆனது என்று பொருளில்..! கிராமத்தில் வழக்கமாக உழைக்கும் பெண்களும் ஆண்களும்..சாப்பிடும் சோற்றின் அளவு அதிகமாக இருந்ததும்..அதுவே அனைத்து பலத்திற்கும் காரணம் என்று நம்பப் பட்ட காலமும் இருந்தது..!
“செத்தவன் வாயில் மண்ணு..இருக்கிறவன் வாயில் சோறு” என்ற வெகு யதார்த்த கிராமத்து சொல்லும் உண்டு..!

     குழந்தைகளை நிறைய சோறு உண்ணச்சொல்லி சொல்லி கட்டாய படுத்திய கிராமத்து பெற்றோர்களும் உண்டு..!! ஆனாலும்..பிள்ளைகளுக்கு சோற்றினை ஊட்டும் போது..அறிவுரையும் கூட ஊட்டி வழங்க வேண்டும் எனும்   பொருள் பட.....”சோறும் சொல்லுமா பிள்ளைகளை வளர்க்க வேண்டும்”.. என்பதும் மூத்தோர் வாக்காக இருந்தது..!

       சமூக படி நிலையில் எந்த சாதி, எந்த வகுப்பு..ஏழை, பணக்காரன் என்றாலும்...எங்காவது வெளியூர் பயணம்..திருமணம், விருந்து, விசேசம் என வெளியே..நல்ல சாப்பாடு.. கிடைத்தாலும்.. கிடைக்காவிட்டாலும்..  ஏன்.. வெளி நாடு சென்றாலும்..வருடம், பல ஆனாலும்..திரும்ப வந்து..  வீட்டில் சமைத்த இயல்பான சாப்பாட்டை சாப்பிடும் போது உள்ள ஆத்ம திருப்தி..எவ்வித மனித,வேறு பாடும் இன்றி அனைவருக்கும் ஒன்று தானே!

       பொதுவாகவே..உழைக்கும்..வெள்ளந்தியான..கிராம மக்களுக்கு.. சோறு முக்கியமானதாகவும்..அதன் அளவும்..அதனை உற்பத்தி செய்பவர்கள் என்ற முன்னுரிமையிலும்  பிரதானமாகவே இருக்கிறது..சுருக்கமாக சொன்னால்.. சணல் சாக்கு பை நிற்பது.. அதனுள் இருக்கும் பொருளை பொருத்தே என்பது போல்..கிராமத்து மனிதர்கள் நிற்பது.. அவர்கள் உண்ணும் சோற்றினால் தான்..என்றால் அது பொய்யில்லை..!

        காலையில் பழைய சோறும் தயிரும்.. நல்ல கூடுதலான அளவில் உண்ட பின்.. எப்பேர்பட்ட மனிதனையும்..முதலில் உட்கார செய்து..பின் தூணில்,சுவற்றில்  சிறிது சாய செய்து..அப்புறம் சரிந்து..அவ்வளவு தான்..!! அது எப்பேர்பட்ட முக்கிய வேலை ஆனாலும்..அப்புறம் தான்..!?!..ஆம்..ஆல் புரோகிராம் கேன்சல்..!?!

       கிராமத்து மனிதர்கள் சாப்பிடும் போது..பாதியில்..அக்கம் பக்கம்.. ஏதாவது ஆபத்து..அபாயம் என்று ஓடி வரும் நிலையில்..தங்கள் பேச்சின் ஊடே.. ”அப்பத்தான் சோத்தில் கைவைச்சேன்..இரண்டு வாய்தான் சாப்பிட்டேன்..சத்தம் கேட்டு ஓடியாந்தேன்”..என்று, நடந்த களேபரத்தின் நடுவிலும்.. தாங்கள், சோற்றை...பாதியில் கைவிட்டு வந்ததை..முக்கியமாக  தவறாமல்..குறிப்பிட்டு..சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்..!?! அதாவது நடந்த சம்பவத்தின் முக்கியத்துவத்திற்கு.. சற்றும் குறைவில்லாதது..தான் சோற்றையே.. பாதியில் விட்டு விட்டு வந்தது..??!!?

          பேருந்து நிலைய பாட்டிக்கு அன்றைக்கு சோறு கிடைத்ததா..? என்று தெரியாது..அன்று இரவு முழுவதும்..ஒரு வாய் சோற்றுக்கு ஏங்கிய அந்த முதிய பெண்ணின்.. நினைவிலும் சோறு  அதன் உணர்வு பூர்வமான மனித தொடர்பும்  வந்து போயின..!?!

        நான் ஒரு சமயம் சிறு வயதில்..”அம்மா இன்று நிறைய அரிசி போட்டு.. சோறாக்கு.. நான் எவ்வளவு அதிகம் சாப்பிட முடியும் என்று பார்க்க போகிறேன்..!?! என்று உளறி வைக்க..அதை கேட்ட அம்மா..அப்படி என்றால் இவ்வளவு நாளும்  நன்றாக சாப்பிட வில்லையா..?!? என்று கண் கலங்கியது நினைவில் வந்து போயின..?!?

         1970 -80களில்..சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நம்மவர்கள்..அங்கு சீனர் உள்ளிட்ட அனைவருமே குறைவாக சோற்றினை சாப்பிடும் பழக்கத்தால்..கடைகளில் கட்டச் சொல்லும்  சாப்பாடு நம்மவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் நிலையில்..அந்த குறைவான சோற்று அளவை கண்டு,.. தாங்கமுடியாமல்...பொருமுவார்கள்..!!

       பின்னர் சோறு அதிகம் வைக்கச் சொல்ல..அதனை  குறிக்கும் வார்த்தையான...” நாசி தாம்பா” என்ற அதாவது சோறு அதிகமாக எனும் மலாய் வார்த்தையை பிரயோகித்து.. அதுவே பழக்கமாகி..!.. உழைக்கும் நம்மவர்களை கண்டால் ”நாசி தாம்பா” என்று கூடுதலாக.. சற்றே நகைப்புடன். சோறு கட்டிக்கொடுக்கும் பழக்கம் உண்டாயிற்று..!!

      பிற்காலத்தில் ஏற்றுமதி.. இறக்குமதி  தாராள செயல்பாடுகளால்..இங்கு கிடைக்கும் ..அரிசி உட்பட..அனைத்தும்  அங்கு தடையின்றி கிடைத்து.. பிரத்தியோக ஹோட்டல்கள், ஏற்பாடுகள்..சொந்த சமையல் என சோற்றின்  அளவு குறித்தான  பஞ்சம் தீர்ந்தது..!

      பேருந்து நிலைய கைவிடப்பட்ட பாட்டியை சந்தித்த..மறு நாள்.. மதியம்..சாப்பாடு தட்டு..பொட்டலம் என எதுவும் ஏற்பாடு செய்ய முடியா நிலையில்.. ஒரு பாலித்தீன் பையில் வடித்த சோறு.. அதில் குழம்பு..தொட்டுக் கொள்ள.. காய்கறி  முதலானவற்றை சிரமப் பட்டு ஏற்பாடு செய்து..பாட்டியை  தேடி சென்று..அதே சிறிய பேருந்து நிலையத்தில்..மதியம் மூன்று மணியளவில் கொடுத்தேன்..! அதனை அந்த முதிய பெண்மணி திறந்து..அள்ளி அள்ளி உண்டது..சோற்றுக்கும்..அதன் மீதான..கிடைக்காத நிலையில் ஏற்படும்  ஏக்கமும்.. மீண்டும் ஒரு முறை நிரூபணமானது..!

       நேற்று..சுமார் இரண்டு மாதம் கழித்து..மீண்டும் அந்த சிறிய பேருந்து நிலையத்திற்கு, சாப்பாட்டு பொட்டலத்துடன்  தேடிச் சென்ற போது..மூத்த பெண்மணி இருந்த அடையாளம் எதுவுமின்றி..காலியாக,.. சுத்தமாகவும் வெறுமையாகவும்..இருந்தது..!! பக்கத்தில் இருந்த சிறிய சைக்கிள்.. காற்று பிடிக்கும்  கடையில் விசாரித்தபோது..” அதுவா..அந்த ஆத்தா.. செத்து போயிடுச்சு சார்..!!” என பதில் வந்தது..!!

      சற்றே..வருத்தத்துடன்..மனம் துணுக்குற்று..எப்படி..எப்போது  இறந்தார்..?விவரங்களை சேகரிக்கும் ஆவலோடு..தகவல் சொன்னவரை..அந்த சிறிய இடத்தினுள்.. எட்டி பார்த்தேன்..?!

       அவர் உள்ளே தரையில் அமர்ந்து தட்டில் சோறும்.. அதில் சாம்பாரும்.ஊற்றி கையால் பிசைந்து அள்ளி..வாய் கொள்ள சாப்பிட்டு கொண்டிருந்தார்.!!..அருகே சிறிய தட்டில்..தொட்டுக்கொள்ள..முன்பு பேருந்து நிலைய பெண்மணிக்கு நான் கொடுத்த அதே  வகையான..முட்டைகோஸ்..கேரட் பொறியல்..அதே கலவையான வண்ணத்தில்..!!

       அப்புறம்.. என் கையில் இருக்கும் சாப்பாட்டு பொட்டலத்தை என்ன செய்வது என்றும் எனக்கு தெரியவில்லை..!?!.இதை..வேறு யாருக்காவது..கொடுத்தாலும்..அது  நான் தேடிவந்த..பேருந்து நிலைய, சோற்றுக்கு ஏங்கிய மூத்த பெண்மணி..தனக்கான சோற்றினை.தான்,.. உண்ணாமல்..அடுத்தவருக்கு..தானம் கொடுத்தது.. போல..இருக்குமோ..??!? அதுவும் தெரியவில்லை..?..

       ஏனோ..நான் வைத்திருந்த சாப்பாடு பை..முன்பைவிட.. அதிக கனமாக...எனக்கு..தெரிந்தது...!

நாக.பன்னீர்செல்வம்..Naga.Panneerselvam










வியாழன், 26 அக்டோபர், 2017

பிரீத்தி.....என் பார்வைக்கு என்ன பதில்..??

   
      தாழ்த்தப்பட்டவர்களை தலித் என்று அழைக்கலாமா..?? கூடாதா..?? என்ற நட்சத்திர  பட்டி மன்றம் நடக்கும் இந்த வேளையில்.. இந்த படத்தில் இருக்கும் பிரித்தி எனும் 6 வயது தலித் சிறுமி பார்க்கும் பார்வைக்கு யார்..என்ன.. பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை..?

       சென்ற அக்டோபர் 15 ந்தேதி ஞாயிறு கிழமை நம்மில் பலர்... தீபாவளிக்கு முன்னதான விடுமுறை நாள் என்பதால்..பண்டிகை கால பர்ச்சேஸுக்காக.. மெனக்கெட்டு கொண்டிருந்திருப்போம்..

    அதே நாளில்... உத்திரபிரதேச மாநில..கேத்தல்பூர் பன்சாலி என்ற இடத்தில்..சாவித்திரி எனும் கர்ப்பிணி தலித் பெண்..காலை 9 மணியளவில் வழக்கமான தனது பகுதியில் குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டிருந்தார்.. தான் வைத்திருந்த குப்பை அள்ளும் வாளியை..அங்கு சென்ற ஒரு ரிக்‌ஷா..லேசாக தட்டி..இடித்து விட அது தவறி...

       அவ்வழியே சென்று கொண்டிருந்த அஞ்சு என்னும்..தாக்கூர் மேல் சாதி பெண்மணியை தொட்டுவிட..ஆச்சாரம் அனாச்சாரம் ஆகி விட்ட வெறுப்பில்..ரோகித் என்ற தனது மகனுடன் சேர்ந்து கொண்டு...இருவரும் சாவித்திரியை..கடுமையாக  தாக்க ஆரம்பித்திருக்கி|றார்கள்..?!?

     சம்பவத்தை அறிந்த அவரது கணவர்..மனைவி இருந்த இடத்திற்கு விரைந்த போது..9 வயதான அவரின் மூத்த மகள் மணிசாவும் மனைவியின் தோழி கவுசமும்..சாவித்திரி அடிபடுவதை தடுக்க முடியாமல் பார்த்து கொண்டிருக்க..ஒரு வழியாக..அடித்தவர்கள் கை சோர்ந்து விலகியவுடன்..அடிபட்டவரை...காப்பாற்றி அழைத்து சென்றிருக்கிறார்கள்..

      பாதிக்கப் பட்ட சாவித்திரிக்கு..தலையிலும், வயிற்றிலும் கடுமையாக அடிபட்ட நிலையில்..அவரது கணவரான தீலிப் குமார் அருகாமை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.. இரத்த போக்கு தலைகாயம் எதுவும் வெளிப்படையாக ..காணப்படாததால்.. அங்கும் அனுமதி மறுக்கப் பட்டு..மருத்துவர்களின் அலட்சியத்தால் வெளியேற்றப் பட்டு.. வீட்டிற்கு சென்றிருக்கிறார்..

        தொடர்ந்து தலை மற்றும் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த சாவித்திரி... தனது வயிற்றில் இருந்த ஆண்மகவுடன்  தானும் ..சேர்ந்து.. இருவரும்..இந்த தாழ்த்தப் பட்ட தேசத்தில் இருக்க வேண்டாம் என்ற நினைப்பிலோ என்னவோ..மரித்து போயினர்...!?!

       இறந்த சாவித்திரி..அவரது கணவர் திலீப்புக்கு இரண்டாவது மனைவி..மூத்த மனைவி மலேரியா காய்ச்சலில் இறந்த நிலையில்..இறந்த முதல் மனைவியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும்..பாசம் மிகுந்த தாயாக சாவித்திரி  இருந்துள்ளார்.. பிறக்க இருந்த ஆண் மகவும்.. மனைவியும் இறந்த நிலையில் செய்வதறியாது....இரண்டு பெண் குழந்தைகளுடன்.. திகைத்து நிற்கிறார்..?!?..தினம் ரூ 200 மட்டுமே சம்பாதிக்கும்...கட்டிட தினக்கூலி தொழிலாளியான தீலீப்....?

     பின்னர் காவல் நிலைய புகார்..விசாரணை என்ற நிலையில் குற்றம் இழைத்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்..! மூன்று மாடி கட்டிட வீட்டில் குற்றம் இழைத்த உயர் சாதி குடும்பத்தில் இருக்கும்.. ஒரே  நபர்..வாழாமல் புகுந்த இடத்தில் இருந்து வந்திருக்கும்..சாவித்திரியின் இறப்புக்கு காரணமான அஞ்சுவின் பெண்.. !

       அவர் விசாரணையின் போது கூறிய காரணம்.. காணாமல் போன தனது வீட்டு வாளியை..சாவித்திரி திருடி வைத்திருந்தார் என்றும்.. அதனாலேயே தனது தாய் அடித்ததாகவும்..தலித்..தாக்கூர் சாதி பிரச்சினை இங்கு சாதாரணம்..என்றும்..இதனை தேவையில்லாமல் பெரிது படுத்தி விட்டார்கள் என்பதாக இருக்கிறது..!?! அதாவது ஹிந்தியில்..அவரது மொழியில் கூறினால்.. ”தோடா பகுத் ஹல்லா..ஹோத்தா..ரகத்தாகே”.....?!? தட்ஸ் ஆல்..?!

      அது சரி....ஒரு பெண்..அதுவும் தலித்தாக.. பிறந்து..பூமியை பார்க்காமலே.. வயிற்றிலேயே இருக்கும் ஆண்மகவுடன்....மற்றும்...தன்னை நம்பி இருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் கணவரை விட்டு விட்டு  இறந்து போவது..கேவலமான...இந்திய சாதி பாரம்பரிய.. பெருமைக்கு முன் பெரிய விஷயமா..?..என்ன??!?

      மேலே இந்த படத்தில் இருக்கும் பிரித்தீ எனும் 6 வயது பெண் குழந்தை.. நடந்த எதையும் நம்ப விருப்பம் இல்லாமல்..சற்று மனம் பிறழ்ந்த நிலையில்.. தனது வீட்டில்..இருக்கும் தட்டு முட்டு சாமான்களோடும்..தனக்கு தானே பேசி கொண்டும்.. விளையாடி வருகிறது..! ‘ அம்மா..வேலைக்கு தான்.. போயிருக்கு சீக்கிரம் வந்துடுவாங்க..” என்ற படி..???

        பீரித்தி என்ற வார்த்தைக்கு.. வடமொழியில் சந்தோஷம் என்றும் பொருள் படும்....பீரித்தி ஹோமம் என்று கூட ஒன்று உண்டு...என்று கேள்வி..?!? பாவம் இது அந்த..பெயரை தாங்கிய.. தலித் குழந்தைக்கும்...அந்த பெயரை குழந்தைக்கு வைத்தவருக்கும்.. தெரியுமா என்று தான்.. தெரியவில்லை..?

நாக.பன்னீர் செல்வம்...Naga.Panneer Selvam

     

   



சனி, 29 ஜூலை, 2017

பிக் பாஸ்: ஒவியாக்களில்,.. அவர்களும்..ஜூலிக்களில்,. நாமும்..!?!

     

        நீங்கள் ..”பிளாக்கிஷ் பீப்பிள்”..உங்களை நம்ப முடியாது..!எனக்கு உங்களை எல்லாம் பிடிக்காது..! இதனை என்னிடம் முகத்தில் அடித்தாற் போல சொன்ன..கேரளாவை சேர்ந்த  உன்னி மாதவனுக்கு,..முப்பது வயதுக்கும் மேலிருக்கும்..!

       எனக்கு, அப்போது வயது இருப்பத்திரண்டு..! இடம் டெல்லி.. வருடம் 1989..ஒரு சிபிஎஸ்சி பள்ளி பணியில்.. நான், புதிதாய் சேர்ந்திருந்த  சமயம் அது..! இத்தனைக்கும் நான் ஒன்றும் அவ்வளவு கறுப்பில்லை..!! அது பொதுவான தமிழர் குணத்தின் மீதான..ஒரு..மலையாளியின்  தாக்குதல்..!

       உன்னி மாதவன், மலையாளி.., அமித் தத்தா,இன்னொரு.. ஏதொவொரு தத்தா..இருவரும் வங்காளிகள்..மேலும் இரவி என்று திருச்சிக்காரர்.. பிராமின் இவர்களெல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன் பணியில் சேர்ந்திருந்த சீனியர்(காரர்)கள்..!

     தமிழர்களை எல்லாம் நம்ப முடியாது.. என்று என்னிடம் சொன்ன உன்னி மாதவனோடு... இரவியும் சேர்ந்து கொண்டார்...!!..” ஆமாம்..இவர்களெல்லாம் எங்களை..பிராமின்ஸை.. மிகவும் கொடுமை படுத்தியவர்கள்..பெரியார் பேச்சை கேட்டுக்கொண்டு... சாமி சிலையை எல்லாம் உடைத்து..எங்களை கேவலப் படுத்தி விரட்டி விட்டவர்கள்”..என்று கண்ணில் ஜலம் வைத்துக் கொண்டு..அவர் பங்குக்கு.. அழாத குறையாக புகார் பத்திரம் வாசித்தார்..!

     எனக்கு ஒன்றும் புரியவில்லை..! ஏதோ ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் நான் ஒருவனே பிரதி நிதி..என்பது போலவும்..வைக்கப் படும் குற்றச்சாட்டுக்கு பொறுத்தமில்லாத குற்ற உணர்வுக்கும் ஆளானேன்..! இருந்தாலும் ..அவர்களை சமாளிக்க..” நான் அப்படியில்லை..என்று எதோ முனகி சொல்லி வைத்தேன்..!

      மிகுந்த மனத்தயாரிப்பு, தமது குற்றச்சாட்டுகளின் மீது நம்பிக்கையுடன் இருக்கும் அவர்களை சமாளிக்க, எனக்கு அப்போது அனுபவம், அறிவு, மொழித்திறமை எதுவும் வாய்த்திருக்கவில்லை என்பதே உண்மை..! மேலும் பிழைப்புக்காக.. தூர தேசத்தில்..வேலைத் தேடி சென்ற.. ஒரு  கிராமத்து சிறுவயது காரனிடம்..புதிய இடத்தில்.. எல்லோரிடமும் ஒத்துழைப்பை நாடும் நிலையில்..அங்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமான..விவாதம் போன்ற..எதையும்  நான் உள்ளிட்ட எவரிடமும்..எதிர்பார்க்கவும் முடியாது..!

    போகட்டும்... மலையாளிகளுக்கு.. தமிழைரை பற்றிய குறைவான மதிப்பீடு எப்போதும்.. இருப்பதை..எனது இருபத்திரெண்டு வயதுக்கு பிந்திய பலவருடங்களிலும் கண்டிருக்கிறேன்..! அதன் நிரூபணமாக.கிராமத்து டீக் கடைகளில் கூட.. எம்.ஏ,.. எம்.பில் படித்த மலையாளிகள்..மிக எளிமையாக.. பணிவுடன்.. கடை நடத்துவதையும்..அங்கு நமது ஆட்கள்..சவடால் செய்வதையும்..முட்டாள் தனமாக பேசுவதும்... உதார் விடுவதும்...சாதாரணமாக நடைமுறையில் காணகூடியதாகும்..இது சென்னை.. உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் கூட பொருந்தும்..!

     சொல்வது ஒன்று..செய்வது மற்றொன்று..எனும் ஹிப்போகிராடிக்ஸ் மனப்பான்மை எப்போதும் நமக்கு உண்டு..என்பது கசப்பான உண்மையே..! நாம் செய்வதை சரியாக செய்யாமல்...கடைபிடிக்காமல்...,  மற்றவர் எதையும் சிறப்பாக..தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நாம்..!

      ”பந்திக்கு முந்து..படைக்கு பிந்து”.....” பாம்பு தின்னும் ஊரில்.. நடுக்கண்டம் நமது”எனும் பழமொழிகள்..அதன் உள்ளார்ந்த.. தவறை நியாய படுத்தும்..நழுவும்.. மன சிலாகிப்பு.. நமது தொடர் மன நிலையை உறுதி படுத்துகிறது..!..மனு கொடுக்கும் சாமானியர்கள்.. அதனை பெறும் அரசியல்வாதிகள்.. மந்திரிகள் என.. பரஸ்பரம்..இதை எங்கே கவனிக்க போகிறார்கள்..?!? என்ற அவ நம்பிக்கையும்..அதனை நியாய படுத்தலும்..அரசியல் உண்ணாவிரத கூத்துகளும்..மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போராளிகளில் ஒரு சிலர் மட்டும் கைதாவதும்...இதரர்..”வீட்டில கொஞ்சம் வேலை”....?!!? என எஸ்ஸாவதும்... நமது இரட்டை குண நலன்களையே எப்போதும் பறை சாற்றுகிறது..?!?

     ஒரு கட்சி உறுப்பினர்..தேர்தல் சமயத்தில்..மற்றொரு கட்சிக்கு..தினப்படி..குவார்ட்டர்..பிரியாணிக்காக கொள்கை பிடிப்புகளை தற்காலிமாக மறந்து..! எதிர் முகாமில்..பணி செய்து விட்டு திரும்பும் போது..சக கட்சி காரர் பார்த்து விட்டால்..அவரிடம்..” நான்..ஏதோ அங்க போய்ட்டு வந்ததா.. நீ நினைச்சிக்கிட்டு இருக்கிற..?ஆனா உனக்கு தெரியாது.. என் மனசு என்னனு..??! நான் எல்லாம்..?!? போ..போ.. உனக்கு தெரிந்தது அவ்வளவு தான்..?!?.....என சமாளித்து..தவறை கண்டு பிடித்தவரையே குற்றவாளியாக்கும் வல்லமை குணம் இயல்பாகவே நமக்கு உண்டு..!

     அரசு வழங்கு மாதாந்திர ஓய்வு தொகையை..பெற.. என்னிடம் உதவி பெற அனுகும் ஒரு சில வயதானவர்கள்..” தம்பி..உனக்கு ஒரு 500 ரூபாய் கொடுத்து விடுகிறேன்..என்னை எதிர்பார்க்காமல்..நீயே எல்லாத்தையும் முடித்து விடு..?!?..எனக்கு உத்தரவிட்டு..தாங்களுக்கு ஏதோ முக்கிய வேலை இருப்பதை போலவும்..அறியாமையால்..சேவை உணர்வையும்.. கொச்சை படுத்தி ஊழலாக்க...நினைப்பதையும்..பொதுவாக..அடிப்படையாக.. தாம் செய்ய வேண்டிய கடமைகளை கூட ஆள் வைத்து செய்ய நினைக்கும் மன்ப்பான்மையை எப்படி எடுத்துக் கொள்வது,,?!?

       ஒரு வயதான பெண்..மாதாந்திர உதவித் தொகையை என் மூலம் பெற்றவர்..என்னை ஒரு முன்னிரவில்  சந்தித்து..” தம்பி..மாசப்பணம் வர ஆரம்பித்து விட்டது..! இதை நீதான் வாங்கி கொடுத்தன்னு.. நான் யாரிடம் சொல்ல மாட்டேன்.. நீயும் சொல்லி விடாதே..?!? அப்புறம் உனக்கு தேவையில்லாத ஜோலியாகி எல்லோரும் கேட்பார்கள்..!?!” என்று நன்றிக்கு  பதிலாக...இரகசியமாக..எனக்கு   அறிவுரை சொன்ன அனுபவமும் உண்டு..?!?

       பேருந்து பயணத்தில்.. நடத்துனரிடம் இருந்து..சில்லரையாக திரும்ப..பெற வேண்டிய ஒரு ரூபாய்..ஐம்பது காசுகளுக்கு..கூட..ஒரு சில சாமானியர்கள்..” ஆமாம் இதை வைத்து..மாடி வீடு கட்ட போறேனாக்கும்..!?!”..என சலித்து கொள்வார்கள்..ஆனால்..அந்த சில்லறை இருந்தால்..அதைக்கொண்டு..ஒரு ஊறுகாய் பொட்டலைத்தை, வாங்கி பழைய சோற்றினை சாப்பிடும் நிலையில் தான் இருப்பார்கள்..!! யதார்த்த நிலையை..வசதியாக மறக்கும் பாசாங்கு குணம்...!..மன்னிக்க..இது தான் நாம்..! இதைத்தான் மலையாளிகள்.. நம்மிடம் கண்டுபிடித்து வைத்து இருப்பதாக நம்புகிறேன்..?!?

      சமீபத்திய..மது ஒழிப்பு போராட்டங்கள்..சரியாக.. பனிரெண்டு மணி வரை நடப்பதும்..!?!...அதன் பின் கலைந்து.. கூட்டம்..அதே..கடைக்கு சென்று விடுவதும்..!.....மது ஒழிப்பு மாநாடுகளுக்கு செல்ல..தொண்டர்களுக்கு...வாகன குறிப்பாக  குடிக்கான செலவு...தவிர்க்கவே முடியாமல்..அரசியல் கட்சிகளால் செய்யப் படுவதும்..அல்லது..  மாநாட்டினை  வெற்றிகரமக முடித்து விட்டு திரும்பும் போது மது அருந்தி கொண்டாடுவதும்..! இங்கு சாதாரணமாகி விட்ட..மறைக்க முடியா நிகழ்வுகளே..?!?

       ”தம்பி....எங்க கடைக்கா.. போற..? இந்தா.. மாமனுக்கு ஒன்னு வாங்கிட்டு வா..! என்று முகத்தை திருப்பி வைத்து கொண்டு..பக்க வாட்டில்.. பணத்தை கொடுத்து..தூரத்து கடைக்கு செல்லும் இளைஞனிடம்,....தனது கணவனுக்கு மது வாங்கி வரச்சொல்லும்..வயதான..தன் கணவன் மேல் அன்பான..?!??... கிராமத்து ஏழைப் பெண்..அன்று காலை மதுக் கடை ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ரகளை செய்தவர் என்பதை..என்னாலும் முதலில்..உங்களை போலவே... நம்ப முடியவில்லை..!

     கேரளாவில்.. சாலை ஓரத்தில்..திறந்த வெளியில்..யாரும் சிறு நீர் கழிப்பதில்லை எனும் கூற்றை பொய்யாக முயன்ற.. ஒரு தமிழ் எழுத்தாளர்.. கேரளாவின் கார் பயணத்தில்..அவ்வாறு தான் ஒருவரை கண்டதும்..அதனை சுட்டிக் காட்ட..அவரின் மலையாள வாகன ஓட்டுனரோ..” நீங்கள் வேண்டுமானால் போய் விசாரித்து பாருங்கள்..அது தமிழ் நாட்டை சேர்ந்த கூலி வேலைக்கு..இங்கு ஆளாகவே இருக்கும்”..எனக்கூற உண்மை அவ்வாறே இருந்து,.எழுத்தாளருக்கு தலைகுனிவை தந்தது,..என படிக்க கேட்டிருக்கிறேன்..!

      ஆனால்..இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால்...மலையாளிகளால் குறை கண்டு..சுட்டிக்காட்டப் படும் நமது தமிழ்க் குணம்..வட இந்திய அளவில் தமிழக, கன்னட, ஆந்திர,கேரளாவின் தென்னிந்திய குணமாகவும்...அதே இந்தியாவிற்கு வெளியில்... ஒட்டு மொத்த இந்திய குணமாகவும்..ஐரோப்பிய கண்டங்களில்.. அது ஆசிய குணமாகவும் காணப் படுகிறது..எனவே இது பற்றியெல்லாம் நாம் கவலைப் பட்டு அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்றே தோன்றுகிறது...!?! ஐரோப்பிய ஒன்றியத்தில்..என்னை பார்த்த ஒரு தமிழ் பெரியவர்.. ”என்ன ஊர்க்காரனெல்லாம் இப்பவாவது திருந்திட்டான்களா”..?? என்று கேட்டது குறிப்பிடத்தக்கது..?!?

        இங்கு மட்டுமல்லாது....லண்டனில் குடியுரிமை பெற நம்மவர்கள் நடத்திய நாடகங்களும் ஏராளம்..! கந்த சஷ்டி கவசத்தில்..போட்டோவை ஒட்டி அது..யாழ்ப்பாணத்தின் ஓட்டுனர் உரிமம் என்று கதைத்து,.. காரியத்தை நிகழ்த்தி கொண்டது போன்ற.. ஏராளமான வரலாறுகளும் உண்டு..!?!..மு.வரதராசனார் எழுதுவது போல.இதுவெல்லாம்...”எண்ணி எண்னி இன்புறத்தக்கதாகும்..”!!

       போகட்டும்......!..தலைப்புக்கு வருவோம்..!?!..பிக் பாஸ் ஷோக்களில் நாம்  நேரடியாக பங்கு கொள்ள முடியாத பார்வையாளர்களாக இருக்கலாம்.. ஆனால்.. அதில் பங்கு பெறும் ஓவியாக்களில் மலையாளிகளும்..ஜூலிக்களில் நாமும் .. நமது உன்னத குணங்களும் இருப்பதை,.. மறைக்கவும் ..மறக்கவும் முடியாது..?!? எனவே,... பாவம் ஜூலிக்களை திட்டாதீர்கள்..!!
 நாக.பன்னீர் செல்வம் Naga.panneer selvam










சனி, 8 ஜூலை, 2017

மறந்தும்..இருந்தும்..இறந்தும் போனவர்கள்.....!?!

         


 சேஷனுக்கு, முந்தைய தேர்தல் காலக்கட்டத்தில்... 1980..களில், கிராம, பிரச்சாரங்களில் ஒலி பெருக்கியில் ஒரு வாசகம் அடிக்கடி, கர கர குரலில்  நம்மால் கேட்க பட்டதாயிருக்கும்....! அது “ உங்களது பொன்னான வாக்குகளை, ”இன்னாருக்கு”.... அளிக்க..”மறந்தும் இருந்து விடாதீர்கள்...இருந்தும் மறந்து விடாதீர்கள்” என்பதானது அது...!

      அதை நினைவூட்டும் விதமாகவே..ஜூன் மாத முதல் வாரத்தில் நடைபெற்ற ஒரு நண்பரின் திருமணத்திற்கு அது நடைபெறும், ஒன்பதிலிருந்து பத்தரை மணி முகூர்த்த நேரத்திற்கு, முன்பதாகவே... வழக்கத்திற்கு மாறாக... மிகுந்த ஆர்வம் காரணமாக .சென்று விட்டேன்....!

     திருமணம் செய்து கொள்ளும் அந்த   நண்பர் உள்ளாட்சி துறையில், ஒரு சிற்றுராட்சியில் ”கிளர்க்”காக பணியாற்றுகிறார்..தாய் உண்டு, தந்தை இல்லை..அவரின் ஒரே, மூத்த சகோதரருக்கு, ஏற்கெனவே, திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.. போட்டோ கலைத்துறை, கம்பியூட்டரில் மிகுந்த திறமைசாலியான அவர், நிரந்தர வேலை இல்லாமல், சுழி சும்மா இருக்க விடாமல், கடனாளியாகி குடும்பத்திற்கு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறார்..!

       சுமார் ஒரு லட்சத்திற்கு மேலாக, மூத்த சகோதரருக்கு ஏற்பட்ட கடன் தொகை குடும்பத்தினரால் குறிப்பாக எனது நண்பரால் தீர்க்கப் பட்டிருக்கிறது..! இதை போலவே முன்பும், பல முறை,தொகை சற்று கூடக் குறையவோ, பொறுப்பற்ற, அவரின் ஊதாரித்தனத்தால் அழிக்கப் பட்டது வேறு விஷயம்..!

      அப்போது தான், எனது நண்பரின் குடும்பத்தினர் எதிர்பாரா வண்ணம் அந்த நிகழ்வு நடந்து விட்டது.. பிரச்சினைக்குரிய மூத்த சகோதரர், அம்மா, தம்பி, மனைவி, பெண் குழந்தை இவர்களை விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, எவ்வித முதன்மையான  காரணங்களும் இன்றி தலைமறைவாகி,...காணாமல் போய் விட்டார்...!

         நண்பர், தனது சகோதரரை தேடாத இடம் இல்லை.. உயர் நீதி மன்றத்தில் ஆட் கொணர்வு மனு வரையிலும் போயாகி விட்டது..! காவல் நிலையங்களிலும்....தனிப்பட்ட தேடல் என..தொடர்ந்து பாலோ அப் செய்தும், அவர் கிடைக்க வில்லை..! யாரோ ஒரு வியாபாரி..அவரை கோயம்புத்தூரில் கண்டதாக.. கிடைத்த அரை குறை..சிறு தகவல் மட்டுமே.. அவர் இருப்பை தெரிவிக்கும் நம்பிக்கையாக மாறியது..!

       எதாவது போன் வந்து, எதிர்முனையில் சற்று பேச தாமதமானால், காணாமல் போனவரின் தாய்..”தம்பி வந்து விடப்பா...உன்னை எதுவும் கேட்கமாட்டோம்.. நீ வந்தால் போதும்..”என்று புலம்பும் மன நிலைக்கு வந்து விட்டார்..! இந்த நிலையில் தான், தனது பெரிய அண்ணன் காணாமல் போன நிலையில், பல முறை தனது திருமணம் தள்ளிப் போட்ட நண்பர்.. வருடங்கள் உருண்டோடிய நிலையில், வேறு வழியின்றி, மாமா பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்..! இந்த திருமணத்தை கேள்விப் பட்டு.. அதற்காவது காணாமல் போன சகோதரன் திரும்பி விடுவான்..என்ற நப்பாசை, நம்பிக்கையையும் மேலோங்க...!

     திருமணம் முடிந்தது... !..யார் இந்த திருமணத்திற்கு வருவார் என்று நாங்கள் காத்திருந்தோமோ....யார் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டதோ....!?!..அவர் கடைசி வரை வரவில்லை...! காணாமல் போனவரின் மனைவி,குழந்தை அவர்கள் தரப்பு உறவினர்கள் முகத்தில் ஒரு வித சோக களை..குடியிருந்தது..! ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக் கொண்டு..கண்களால் சோக இரகசிய செய்தியை..பரிமாறிக்கொண்டு பிரிந்தனர்...!

     காணாமல் போனவரின், எனது நண்பரின் தாய்...சமையல் நடைபெறும் பகுதிக்கு சென்று... யாரும் பாராவண்ணம் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்..!

     இந்த சம்பவத்தை போலவே.....ஒரு சமயத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்த நண்பர்..அருண் என்று ஒருவர் இருந்தார்..! அவரின் தொடர்பு..அனுபவம் இவற்றை அவர் பயன் படுத்திக் கொண்டதை விட..அதனை நான் பயன் படுத்திக் கொண்டதே அதிகம்..!

     அருண்...தலைமையாசிரியரின் ஒரே மகன்..உயர் வகுப்பினை சார்ந்த அவருக்கு..மிகுந்த செல்வாக்குள்ள உறவினர்கள்.. நண்பர்கள்..தந்தையிடம் படித்த .. நல்ல பணியில் உள்ள....எதையும் செய்யக்கூடிய ..உதவக் கூடிய மாணவர்கள்  நிறைய பேர் இருந்தும் எதையும் அவர் பயன் படுத்தி வாழ்வில் நிலையாக எதையும் செய்ய வில்லை..! காலதாமதமான திருமணத்தின் வழி மனைவியும் ஒரு பெண்குழந்தையும் உண்டு..!!

       அருண், பேச ஆரம்பித்தால்..எல்லாம் நெகட்டிவான செய்திகளாகவே இருக்கும்...! அதாவது தொழிலில் அனைத்தையும் இழந்து நடு ரோட்டுக்கு வந்தவர்கள், திடிரென குடும்பத்தை விட்டு காணாமல் போனவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என சுவாரசியமான கதைகள்..மணிக்கணக்கில் நீளும்...! பலமுறை .பலரிடம் திரும்ப.. திரும்ப...மறு ஒலிபரப்பாக.. ஆர்வமுடன் கால்களை ஆட்டிக் கொண்டு..அதே விதமாக.. அலுப்பு தட்டாமல்..அதாவது அவருக்கு..!?!  சொல்லிக் கொண்டுருப்பார்..!

     பின்னாளில்..அவரின் பேச்சு குறைந்து..அதுவும் சுத்தமாக  நின்று..ஒரு வித மூளை செயலழிப்பு ..என்னவென்று புரியாத நோய்க்கு ஆளாகி...சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு..ஒரு நாளில் அங்கிருந்து..யாரும் அறியா வண்ணம்.. அவரின் வார்த்தையிலேயே கூறுவதனால்..” ஒன் ஃபைன் டே மார்னிங்”வெளியேறி.. காணாமலும் போய் விட்டார்.?! ..இன்று வரை எங்கிருக்கிறார்..? என்ன ஆனார்..?? உயிருடன் உள்ளாரா..?!? எதுவுமே தெரியாது..?

      ஒரு சில வருடங்களில் அவரின் தாயும் இறந்து விட்டார்..! மனைவி, குழந்தை, காணாமல் போனவரின் வயதான தந்தை..ஆகிய மூவரும்..மிகுந்த மனப் பாரத்துடன்.. வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்..! அதிலும் அந்த சுட்டியான பெண் குழந்தை..?..மிகுந்த ஆளுமையும், அறிவும், எத்தனையோ வாய்ப்புகள், நண்பர்களின் உதவிகள் என பன்முகத்தன்மையோடு, செல்லமாகவும், செல்வாக்காகவும்  இருந்த..காணாமல் போன.. நண்பரின்.. குடும்பத்தை காண அஞ்சி.தைரியமற்றுபலரும் அங்கு செல்வதை தவிர்த்து விட்டோம்..?!!?

       அவர் இரசிக்க... இரசிக்க...கூறிய எதிர்மறை கதைகள் போலவே..அவரின் வாழ்க்கை கதையும்...எதிலும் பிடிப்பு இல்லாமல்..காற்றில் பறக்கும் காகிதம் போல அங்கும்... இங்கும் அலைந்து.. கடைசியில் கானாமல் போனதாக அமைந்தது தான்...விசித்திரம்..!!

       காணாமல் போனவர்கள்..தற்கொலை செய்து கொண்டு அடுத்தவரின்..தன்னை சார்ந்தவரின்..குடும்பத்தை பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு.. ஒரு வித சாடிச மனப்பான்மையோடு...யார் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என....அவர்கள் இல்லாமல் போய் விட்டால் அதோடு மொத்த உலகமும் இல்லாமல் போய் விடுகிறது...அதாவது அவர்களுக்கு..!!

       ஆனால்  நமக்கு அப்படி அல்லவே..!?! “ செத்து தொலைப்பதை விட..வாழ்ந்து தொலைக்கலாம்..!!??! என்பதே...வாழ்பவர்களின்...வாழ நினைப்பவர்களின்...வாழ வைப்பவர்களின்  மன நிலையாக இருக்கிறது..!! இருக்க வேண்டும்..!!

      வாழ்வில் ஒன்று.... ஒன்றாய் சேர்ப்பது அறிவு...!!.அதுவே ஒன்று..... ஒன்றாய் விட்டு ஒழிப்பது ஞானம்..!! நாம் ஞானியாக இருக்க தேவையில்லை.. குறைந்த பட்ச..அறிவாளியாக மட்டும் இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன்...!?!!

      அதுவும்.....அந்த..விட்டு ஒழித்த ஞானிகளை  நினைக்கவும்....அவர்களை தேடவும்....கண்டு பிடிக்கவும்...ஒரு வேளை அவர்கள்  நள்ளிரவில் திரும்பி வந்தால்..வாசல் கதவைத் திறக்கவும்..! பசியுடன் இருந்தால் சோறு போடவும்,அது எதுவுமே...முடியாத நிலையில்.. அவர்களால் உண்டாக்கப் பட்ட...இழப்பை..அவர்களின் இருப்பில்லா நிலையை..சரி செய்யவும்....வாழ்கைக் கண்ணி, சங்கிலி தொடர் அறுபடாமல் காப்பாற்றப் படவும்.......!?!..என்ன நான் சொல்வது சரிதானே..??
 நாக.பன்னீர் செல்வம் ..Naga.Panneer Selvam


புதன், 24 மே, 2017

சார்..உங்களை பார்க்கணுமே..??!!??

சார்..சென்னையிலிருந்து வந்து விட்டேன்...! பஸ் பாசுக்கு மாவட்ட அலுவலகம் செல்கிறேன்..கொஞ்சம் போன் செய்து சொல்லி விடுங்கள்..!! என்னிடம்.....போனில்..  மகேஷ்.. என்ற சுமார் 22 வயது இளைஞர்......சரி..!??தனியாவா போறீங்க..?!? போய்ட்டு வேலையை முடிச்சுட்டு.. சென்னைக்கு போகும் போது சொல்லி விட்டு செல்லுங்கள்..இது நான்..!

       மறு நாள்..மதியம் சுமார் 3 மணிக்கு..சார்.. நான் உங்களை அவசியம் பாக்கணுமே..!! மீண்டும் மகேஷ் போனில்...என்னிடம்..!?!..பரவாயில்லை..”மகேஷ்.. நீங்கள் கிளம்புங்கள்”....என்றேன் நான்...! இல்லை சார்... நான் அவசியம் உங்களை பார்த்தே ஆக வேண்டும்...!!  நாளைக்கு காலையில் தான் சென்னை செல்கிறேன்....! கொஞ்சம் பிடிவாதமும்..குரலில் தழு தழுப்பும்  மகேஷின் குரலில் இருந்தது. ...!!

       அதற்கு மேல்  நான்..மறுக்க வில்லை, அந்த பேரூராட்சியின் பஸ் ஸ்டாண்டுக்கு சுமார் 5 மணிக்கு வந்து விடுங்கள் என்றேன்..!! சரியாக.. 5 மணிக்கு.. எனக்கு மீண்டும் மகேஷின்..போன்... ”சார் நான் வந்து விட்டேன்”....! சென்று..மகேஷை அழைத்து ஒரு தேனிர் கடையில். நிதானமாக அமர்ந்து..திண்பண்டமும் டீயும் குடித்த போது..மகேஷின் கண்களில் கண்ணீர் வழிந்தது..! என்னை .."பார்க்க"..மிகுந்த பிரயாசை பட்ட மகேஷுக்கு இரண்டு கண்ணிலும் பார்வை சுத்தமாக தெரியாது..!!

      கருவிழி பார்வை இழப்பு என்னும்..தீர்க்க இயலா குறைப்பாட்டினால்...மகேஷ்.. சிறுவனாக இருக்கும் போதே பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுமார் 16 வயதில் முழுவதுமாக பார்வை போய்விட்டது..! பார்வை மட்டுமல்ல அவரின் தாயாரும் நோய் வாய் பட்டு இறந்து விட்டார்..! இதற்கு இடையில் அவரின் மூத்த  இரு சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி சென்று விட்ட நிலையில்.. இருண்ட உலகில்..மகேஷ்.. தந்தையுடன் தனிமை படுத்தப் பட்டார்..!!

     தனியார் போக்குவரத்து பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றிய..மகேஷின் தந்தை.. அதில் ஓய்வு பெற்று குடி நோயாளியாகி..வருமானம் எதுவுமின்றி...கண் தெரியாத மகனால் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலையில்..சுய இரக்கம் மேலோங்கி..மன தடுமாற்றம்..சம நிலை இழந்து..எப்போதும் மகேஷை திட்டி.. கொடுமைப் படுத்தும்..குருட்டு நிலைக்கு ஆளாகி..கையில் சிகரெட்டால் சூடு வைக்கும் அளவிற்கும்.. சென்று விட்டார்..!!??!!..இத்தனைக்கும் மகேஷ் தனக்கு கண் பார்வை முழுமையாக போகும் வரை பூக்கடையில் பூக்கட்டி ஓரளவு...தந்தைக்கு  சம்பாத்தித்து கொடுத்தவர் தான்..!!

      என்ன செய்ய...மகனுக்கு பார்வையிழப்பு...தந்தைக்குக்கு..குடிக்கான வருமானம் இழப்பு..??!!? அப்போது தான் மகேஷ் எனக்கு அவரின் உறவினர்களால் எனக்கு  அறிமுகப்படுத்தப் பட்டு, உதவிசெய்யப் பட கேட்டுக் கொள்ளப் பட்டார்.

     அதன் பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து சென்று ஊனமுற்றோர் அடையாள அட்டை, ஊன்று கோல், கண்ணாடி என பெற்று, சென்னைக்கு பயணமாகி, ஊன முற்றோருக்கான ஒரு விடுதியில் தங்கி, பின்னர் அவர்களுக்கான மத்திய நிறுவனத்தில் பிரம்பு பின்னும் பயிற்சி பெற்று..கிடு கிடு வென அவரின் கிராபிக் முன்னேற்றத்தை நோக்கி ஏறியது..!!

      இடையில் தான் படித்து இடை நிறுத்தம் செய்யப்பட்ட ஒன்பதாம் வகுப்பிற்கு பிறகு, அதன் தொடர்ச்சியில் பத்தாம் வகுப்பு படித்து, துணை ஒருவருடன் எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று விட்டார்.! இடையில் எனது முயற்சியில் அவருக்கான வங்கி கணக்கு திறக்கப் பட்டு, மாதாந்திர ஊனமுற்றோருக்கான உதவித் தொகையும் பெறத் தொடங்கினார்..!!..தந்தை..குடிகார  தத்தியாக இருக்கும் வருத்தம் மகேசுக்கு.. இல்லாவிட்டால் அவரையும் தன்னுடன் அழைத்து சென்று சென்னையில் வைத்து கொள்ள ஆசை..!

      சென்னைக்கு பஸ் ஏறுமுன்... நான் மகேஷிக்கு  ஆறுதலாக கூறினேன்...”மகேஷ் கொஞ்சம் நாள் கழித்து நமது மாவட்டத்திலேயே உனக்கு வேலை வாங்கி தந்து திருமணமும் செய்து வைக்கிறேன் கவலைப் படாதே”..சரி சார் என்றவர்...சிறிது வெட்கத்துடன் புறப்பட்டு சென்றார்..!

      பிறக்கும் போதே கண் பார்வையற்றவர்களின் நிலை வேறு..! அவர்கள் எதையும் எதனுடனும் ஒப்பிட இயலாதவர்கள்...அது தனி இருட்டு உலகம் அதற்கு அவர்கள் பழக்கப் பட்டு போயிருப்பார்கள்..! ஆனால் சிறுவனாக துள்ளித்திரிந்து..அனைத்தையும் பார்த்து...அந்த உலகம் .. கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக மங்கி.. போவது ம்கா வேதனை..அந்த தன்னிரக்கத்தை எதைக் கொண்டும் ஒப்பிட முடியாது..!!

கடவுள் குருடன் முன் தோன்றி உனக்கு..வேண்டியது பார்வையா..?? அல்லது உலகின் மொத்த செல்வமுமா..?? எனக் கேட்டால் அவன் பார்வையைத்தானே பரிசாக கேட்பான்..!! குருடனிடம் என்ன வேண்டும் எனக்கேட்கும் கடவுளும்..கடவுளிடம் தனக்கு பார்வை வேண்டாம்.. என சொல்பவனும்.. பரஸ்பரம் இருவருமே...குருடர்களாகத்தானே இருக்க முடியும்..??!!?? அது போகட்டும்..!

           சென்னைக்கு புறப்பட..இரவு பத்து மணி புகைவண்டிக்கு காத்திருக்க.......இரயில் நிலையத்தில்..ஆளரவமற்ற..பெஞ்சில் இருட்டில் படுத்துக் கிடந்தேன்.. என் நினைவெல்லாம்..தூரத்து உறவினர் ஒருவர்..எனது உதவியால் வெளி நாடு சென்று..தானாகவே..தனக்கு கற்பித்துக் கொண்ட வருத்தத்தினால்.. நன்றி மறந்து.. சுமார் 2 வருடங்களாக பேசாது இருப்பதை யோசித்துக் கொண்டு..அவர் திரும்பி வந்தால் என்ன மாதிரி நான்  நடந்து கொள்ள வேண்டும் என்ற பழி வாங்கும்...”குருட்டு” எண்ணத்திலும்......அது தொடர்பிலும் சிந்தனையை செலுத்திக் கொண்டிருந்தேன்..!!?!

        இடுப்பு வலியினால் ஒருமாதிரி..இயல்பு நிலையில் இல்லாமல் வளைந்து அசாதாரணமாக..யாரும் இல்லை என்ற தைரியத்தில்..கண்களை மூடி படுத்து கிடந்தது..எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை... !!திடிரென்று..ஒரு குரல் வெகு அருகாமையில்... ”அய்யா உடம்புக்கு எதுவுமில்லையே..?? நெஞ்சு வலியா..?? ஒருமாதிரி படுத்திருக்கீங்களே..??!! தண்ணீர் பாட்டில் இருக்கிறது வேண்டுமா”..?? என்று...பதறியது....!?! கண் விழித்து பார்த்தால்.. 35 வயது மதிக்கத் தக்க ஒருவர் தனது பத்து வயது மகனுடன்...கையில் ஒரு பையுடன்  நின்று கொண்டிருந்தார்...!!

       நான் படுத்திருந்த கோலத்தை கண்டு..என்னவோ ஏதோ..எனப்  பதறி அவ்வாறு கேட்டிருக்கிறார்..?? நான் சுதாரித்து..எழுந்து.. ஒன்றுமில்லை சாதாரணமாகத்தான் படுத்திருக்கிறேன்.. நன்றி..என்றேன்...!!..அவரும் தயங்கி.... தயங்கி.. உங்களுக்க் ஒன்றுமில்லையே.. !!...நான் போகலாமா..?? என்று  தூரத்தில் பதிவு செய்யப் படாத கம்பார்ட்மெண்ட் பெட்டி    நிற்கும் இடம் நோக்கி....இரயில் நிலையத்தின் எல்லைக்கு....என்னை  திரும்பி... திரும்பி பார்த்து  கொண்டே சென்றார்..!

      ஒரு சில நொடியில் நான் சிறுமையாக உணர்ந்து..ஏதோ நோய் வாய் பட்டும்....பார்வை இழந்தும்.. அதில் இருந்து  மீண்டது போல உணர்ந்தேன்...!

      குருடானவர்களுக்கு உதவுவது மனித இயல்பு...அதில் ஒன்று மிகப்பெரிய ஆச்சரியம் இருக்க போவதில்லை.....எண்ணம் குருடாவதற்கு முன்னமே..அவ்வாறு ஆகா வண்ணம் தடுத்தாட் கொள்வது....அதுவும் இரக்க குணம் உள்ள எளிய மனிதர்கள்... அதனை செய்து முடிப்பது..!?..இன்னும் சிறப்பானது தானே...!

       என்னை அவ்வாறே....என் குருட்டு சிந்தனையில் இருந்து....அதன் தொடர்ச்சியில் இருந்து ..மன குருட்டு.. எதிர் மறை எண்ண... நோய்மையிலிருந்து  மீட்டு..காப்பாற்றிய ......அந்த ஆளரவமற்ற இரவில்  பதறி நின்றவரும்..அவரின் மகனும்.. ஒரு மருத்துவர்களாகவே என் நினைவில் பதிந்துவிட்டிருக்கிறார்கள்..!! மீண்டும் மகேஷை சந்திக்கும் போது.... அவர்களும் சேர்ந்தே எனக்கு தெரிவார்கள்..!!?!

நாக.பன்னீர் செல்வம்...    Naga.Panneerselvam













சனி, 8 ஏப்ரல், 2017

மகளிர் தினம்..மற்றும் என்ன தான் வேண்டும் அவர்களுக்கு..?!?

     ஒரு  மகளிர் தின நிகழ்வில் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட போது காமாட்சி என்பவருக்கு சான்றிதழ் ஒன்றை அளித்தேன்...காமாட்சி என்ற பெயரை கேட்டது நினைவு சுருள் மெல்ல விரிந்தது...!

     ஒரு நாள்..அதிகாலை நான்குமணியளவில் கும்பகோணத்தில் வண்டி ஏறினோம்..காமாட்சி என்ற கர்ப்ப பை புற்று நோயாளி அவரை..வயது அதிக வித்தியாசத்தில் மணந்த.. குடிகார..கணவர், மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகளுடன்... சென்னை வருவதற்குள் சுமார் 15 முறையாவது கழிப்பறை சென்று வந்திருப்பார்.. நோய் மிகவும் முற்றிய நிலை..!

       சென்னை சேர்ந்து.. இராயபுரம் புற்று நோய் மருத்துவமனைக்கு சென்றதில் அவர்கள், எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் புற்று நோய் பிரிவுக்கு சிபாரிசு செய்து அனுப்பி வைத்தனர்..அன்று ஞாயிற்று கிழமை.. அட்மிசன் கிடையாது..! வெளியே தங்க வசதியும் காமாட்சியின்  உடல் நிலை அதற்கு இடம் கொடுக்காது என்ற   காரணத்தாலும்.. அப்படி... இப்படி என்று நிர்வாகத்தையும் தலைமை மருத்துவரையும் கெஞ்சி..கொஞ்சம் அரசு அதிகாரத்தையும் பயன் படுத்தி...கர்ப்பிணி பெண் என்பதாக சேர்த்து..பின்னர் புற்று நோய் பிரிவுக்கு மாற்றப் பட ஏற்பாடு செய்து..ஊர் திரும்பினேன்..!

     காமாட்சி.. தன்னை விட அதிக வயது மூத்த குடிகார.. தரகு தொழில் செய்யும் கணவரை கொண்டவர்..! அவரது கணவருக்கெல்லாம் திருமணம் ஆனது உலக அதிசயத்தில் ஒன்றாகவே அப்போது கிராமத்தில் பேசிக் கொள்ளப் பட்டது..!! திருமணத்தை தொடர்ந்து இரண்டு ஆண்கள்..மற்றும்  நான்கு பெண் குழந்தைகள்...!?!

     தினக்கூலிக்காக..கடுமையான உழைப்பு...கணவன் தத்தியாக இருந்த நிலையிலும் அத்தனை குழந்தைகளைக் கொண்ட்  குடும்பம் யாரும் வியக்கும் வண்ணம் முழுமையாக..உருவானது..!அதிகப் படியான மகப்பேறு...மதியம் சாப்பிடுவதில்லை...வேலை இடத்தின்..டீ...வடை . தினசரி வலி நிவாரணி..தடை செய்யப் பட்ட  புருபின் மாத்திரைகள் அதுவும் .. மளிகை கடையில்...எக்ஸ்பைரி ஆனதா..? தெரியாது..விளைவு கர்ப்பபை புற்று நோய்..!!

      சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்து .. காமாட்சிக்கு எத்தனை குழந்தைகள் என்று டாக்டர்கள் விசாரித்த போது... இரண்டு என்று பொய் கூறி.. என்னை பார்த்து கண்ணைசைத்து உண்மையை சொல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்..!! எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..!! பின்னர்  ஆடைகள் மாற்றப் பட்டு..ஸ்டெரச்சரில் படுக்க வைத்து  தள்ளி செல்ல முற்பட்ட போது எனது கைகளை பிடித்து பரிவுடன் கண்ணீர் மல்க பார்த்தார்...!! அது தான்,.. நான் அவரை நேருக்கு நேர் பார்க்கும் கடைசி பார்வை.. என்று எனக்கு அப்போது தெரிந்திருக்க வில்லை..!?!

       சென்னையில் புற்று நோய் மருத்துவமனையில் காமாட்சிக்கு சிகிச்சை..கூடவே..அதோடு கணவரின் தொல்லை..!! உன்னால் தான் இங்கு வந்து கிடக்கிறேன் என்று தினமும் குடித்து விட்டு மருத்துவமனையில் இரகளை..!! கூட இருந்த சக நோயாளிகளின் போனை வாங்கி.. காமாட்சி, தன் கணவரின் தொல்லையையும்.. தொடர் சிகிச்சை பெறுவதன் பிரச்சினையையும் கூறி அழுதார்..!!

     சமயங்களில் இதர  நோயாளிகளும் என்னிடம்   நேரடியாக தொலைபேசியில் காமாட்சியின் குடிகார கணவர் காமாட்சியை திட்டுவதையும்.. அடாவடித் தனத்தையும்... பற்றி குறை கூறினர்..!! நான் செய்தது உதவியா..? அல்லது உபத்திரவமா.? என்று எனக்கு புரியவில்லை..??!!

       பின்னர்...சென்னையில்  தாக்கு பிடிக்க முடியாமல்  ஒரு நாள் தாமாக மருத்துமனையில் இருந்து கணவருடன் வெளியேறி..கிராமத்திற்கு வந்து வைத்தியம் பார்த்தும்... பார்க்காமலும் மிகவும் சிரமப் பட்டு..இனி தேறாது என்று குடும்பத்தினர் சான்றிதழ் வழங்கி... இறக்க தயாராகி... வெற்றிகரமாக இறந்தும் விட்டார்..! திருமணம் செய்து கொண்ட புற்று நோய்....இடையில் வந்த புற்று நோய் இந்த இரண்டுமிடமிருந்து விடுதலை..! கடைசி...வலி நிவாரணியாக  மரணம் அவருக்கு உதவியிருக்க கூடும்..??!?

     இடையில் ஒரு சில சமயங்களில் நான் காமாட்சியை பார்க்க சென்ற போது..கொல்லை கடைசிக்கு போய் தான் இல்லை என்று சொல்ல சொல்லி என்னை பார்ப்பதையே..கூச்சப் பட்டு.. முழுவதுமாக தவிர்த்து விட்டார்..!! ஆமாம்.. கடைசியாக நான் அவரை பார்த்தது எழும்பூர் மருத்தவமனையில் தான்..! ஆதங்கமான நன்றியுணர்வுடன் கூடிய அந்த பார்வை இன்றும் கூட நினைவில் இருக்கிறது..!

      காமாட்சி ஒரு வேளை நல்ல  வசதியான தகுதியான கணவருக்கு வாழ்க்கை பட்டிருந்தால்...அவரின் உழைப்பும்...உத்வேகமும்...அவரை வாழ்க்கையில் எங்கோ கொண்டு போயிருக்கும்..!! அவ்வளவு ஏன் காமாட்சி மளிகை...காமாட்சி துணிக்கடை.. காமாட்சி  நகை மாளிகை என்று கூட பெயர் பலகைகளில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்க பட்டும் இருந்திருக்கலாம்...!!

      மகளிர் தினம் கொண்டாடும்...இந்த ஒட்டு மொத்த உலகத்தின்.. மொத்த சொத்து விகிதத்தில்..அதில்   சுமார் 2 சதவீதம்  கூட பெண்கள் பெயரில் இல்லை ;என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது..!!பெண்களை அறியாமையில் வைத்திருப்பதையும் ..கூடவே அவர்களுக்கான தினத்தை அனுஷ்டிப்பதையுமே உலகம் விரும்புகிறது..!! மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்று பழமொழிகளும் கூட பெண்களை தங்களுக்கு சண்டை பிடித்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது..!!

     தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை....!! பிள்ளை அது ஆணோ பெண்ணோ சரியில்லை என்றால் போடு பழியை அதனை பெற்றவள் மீது...!!பொம்பளை சிரித்தால் போச்சு புகையிலை விரித்தால் போச்சு ..!! ஒண்ணும் தெரியாத பாப்பா..போட்டு கிட்டாலாம் தாப்பா.!! என்று..எல்லா உயிரனத்திற்கும் பொதுவான பாலியல் உணர்வினை...பெண்களுக்கு மட்டுமே என்றாக்கி..  ஒட்டு மொத்தமாக பெண்களை கொச்சை படுத்தவதில் தொடங்கி... அவர்களின் ஒட்டு மொத்த உழைப்பையும் குடும்பம் என்ற பெயரில் சுரண்டுவதை இந்த உலகம் சிறப்பாக இன்று வரை செய்து கொண்டிருக்கிறது..!!??!!

     தந்தை பெரியார், மகாகவி பாரதி, அம்பேத்கார்,இராஜா இராம் மோகன் ராய் போன்றவர்கள் ஆண்களாக இருந்தும்..பெண்களை வைத்து குளிர் காயாமல் அவர்களுக்கு  உண்மையாக குரல் கொடுத்து உழைத்த  வகையில் ஆண்களாக நாம் இருப்பதற்கு பெருமை கொள்ளலாம்..!! மற்றபடி பெண்களுக்கு நாம்..கணவராகவோ..தந்தையாகவோ..சகோதரராகவோ  இருப்பதில் நிச்சயம் உண்மையான பெருமை இருப்பதாக...எனக்குத் தெரியவில்லை..!!

     பெண்களுக்கு...அதாவது ”அவர்களுக்கு என்ன தான் வேண்டும்”...?? என்று பிரபலமான ஒரு சொலவடையும் உலக அளவில் உண்டு..!! பெண்களை புரிந்து கொள்ளமுடியாத  ஆண் உலகத்தின் பொன் மொழி அது..!!

      ஒரு அரசு அலுவலத்தில்..தொழில் முறையாகவும் அது  இல்லாமலும் கூட தனிப்பட்ட மரியாதையுடன்...அடிக்கடி.. நான்  சந்திக்கிற இளம் பெண் ஒருவர்..திருமணம் ஆகாதவர்... நன்கு படித்தவர்..! ஒரு நாள் என்னிடம்...ஒரு கைப்பேசி இணைப்பின்... அதனை பயன் படுத்துபவர் பற்றிய  விபரங்களை தனக்கு  பெற்றுத் தரமுடியுமா..?? என்று தயங்கி ...தயங்கி பர்சனல் உதவியாக என்னிடம் கேட்டார்..! நானும் அதனை எனது செல்வாக்கை பயன் படுத்தி முழு விபரங்களை.. வாட்சப்பில் அவருக்கு விரைவாக அளித்தேன்..!!

     தகவலை பெற்று சில நாட்கள் வரை அதை பற்றி அவர் பேசவேயில்லை..! மரியாதை நிமித்தமாக ஒரு நன்றி.. எனது உதவி பயன் பட்டதா..?? அல்லது பயன் படவே இல்லையா..?? என்பது பற்றி..அவர் எனக்கு சொல்லாதது  உறுத்தலாகவே இருந்தது..!!  இந்த குறைந்த பட்ச நன்றி கூறும் பழக்கம் கூட அந்த பெண்ணிடம் இல்லாதது குறித்து வருத்தமாகவும் இருந்தது..!? ஆனாலும் இதை பற்றி அவரிடம் நான் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை..!!

      சென்ற வாரம்..வேலை விஷயமாக நான் அவரை சந்தித்த போது..அந்த பெண் சிறிது கோபத்துடன்.. ”சார் நான் உங்கள் மேல் கோபமாயிருக்கேன்” என்றார்..?? ஏன் மேடம்..என்ன ஆச்சு..?? ஏன் கோபம்..? என்று..வழக்கமான இராக பாணியில் கேட்டேன்..?? அதற்கு அவர் சொன்ன பதில்..

     “சார் நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டேன்.. நீங்களும் செய்து கொடுத்தீர்கள்..பின்னர் அதைப் பற்றி ஒரு வார்த்தை அது என்னவாயிற்று..?? பயன் பட்டதா..? இல்லையா..? என்று கேட்டீர்களா”...?? அதை அப்படியே விட்டு விட்டீர்களே..??!! போங்க சார்...என்றார்..!!... எனக்கு லேசாக தலை சுற்றியது..அது மத்தியானம் நான் சாப்பிடாததால் தான் இருக்கும்..?!??

     ஆமாம்..பெண்களுக்கு.. அதாவது.. அவர்களுக்கு என்னதான் வேண்டும்..?!!?

                                                                            நாக.பன்னீர் செல்வம்  Naga.Panneer selvam





செவ்வாய், 7 மார்ச், 2017

மக்கள் நீதி மன்றங்களின் விபத்துகள்.......!!

 

    சமீபத்தில் மக்கள் நீதிமன்றத்தின்...லோக் அதாலத் எனப்படும் சமரச நீதிமன்ற செயல் பாட்டு நிகழ்வுகளை ஒரு ஒருங்கிணைந்த  நீதிமன்றத்தில் இருந்து..அதனை காணும்..பங்கேற்கும்.. வாய்ப்பு கிடைத்தது..! விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி..வழக்கினை சுமுகமாக முடித்து வைக்க .. அரசின், நீதித்துறை,ஒரு சில குறிப்பிட்ட நாட்களில்.. இந்தியா முழுமைக்கும் செய்திருக்கும்  நீதிமன்ற ஏற்பாடு  அது..!

  ஒரு பேருந்து விபத்து..அதன்  கோரத்தை இரு வேறு கதாபாத்திரங்களின் மூலம் காதலை அடிப்படையாக கொண்டு..”எங்கேயும் எப்போதும்” என  ஒரு தமிழ் திரைப்படம் வந்திருந்ததை  நாம் அறிந்திருப்போம்..! திரைப்படம் முடிந்து விடுகிறது..!..ஆனால்..விபத்தும் அதன் தாக்கமும், அதன் பிண்ணணியில் உள்ள குடும்ப நிகழ்வுகளும் அப்படி  முடிந்து விடுகிறதா..? என்றால் ஒரு நாளும் இல்லை..!

      விபத்து..அது ஏற்படுத்திய பாதிப்பு..ஊனம்..பிரியமானவர்களின், முக்கியமானவர்களின் இறப்பு.. உறவு இழப்பு...நினைவு. அச்சம்.. வாழ்க்கை முறை மாற்றம், அனுதாபம் போன்றவை ஈரவைக்கோல் புகையாக சம்பந்தப் பட்டவர் மனதில் எழும்பி துயரத்தையும்.. நினைவு சுமையையும்.. பாரத்தையும் ஏற்படுத்தி..விபத்திற்கு முந்தைய..அதற்கு பிந்தைய  வாழ்க்கை என இரு கூறுகளாக வகைப் படுத்தி,கண்ணீர் மல்க வைக்கிறது என்பதே கசப்பான உண்மை..!?!

      ஒல்லியான..சராசரி உயரத்துடன் சவலைப் பிள்ளையின் தேகம்..ஒரு காலை விந்தி விந்தி நடை...அந்த பெண்ணுடன் அவரின் ஒரு மகனும், மகளும் தோள் அளவுக்கு வளந்தவர்கள்..இவர்களுடன் ஒரு வயதான பெண்மணி..குழந்தைகளின் பாட்டி..அந்த பெண்ணின் மாமியார்..

      அனுதாபமும்..சுய பச்சாதாபத்துடன்..கவலையுடனும்.. எதிர்பார்ப்புடன் அந்த நீதிமன்ற லோக் அதாலத் நிகழ்வில் இருந்த இந்த நால்வரின் வாழ்க்கை ஒரு வருட காலத்திற்கு முன்பு வேறு மாதிரி இருந்திக்கும்..

உள்ளூர் ஊராட்சியின் மன்றத்தலைவியாக பணியாற்றிய பெண்..அவருக்கு பிண்ணனியில் அரசியில் ஈடுபாடு கொண்ட கணவர்..இரு குழந்தைகள் வயதான தாயார் என....மகிழ்வுடன் இருந்த குடும்பமாகத்தான் அதுவும் இருந்திருக்கும்..அந்த விபத்து நடக்கும் வரையில்..!!

கும்பகோணம் காரைக்கால் சாலையில்..ஒரு பெரிய சாலை வளைவில்.. காவல் துறையின் ஜீப் ஒன்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மேற் குறிப்பிட்ட குடும்ப்த்தின்... தம்பதியை கடுமையாக மோதி சாய்த்தது..! கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட.. மனைவிக்கு காலில் ஊனமாகும் அளவிற்கு காயம்.. இதில் சிறப்பு என்னவென்றால் மோதியது காவல் துறை ஜீப்..அதனை குடித்து விட்டு ஓட்டியவர் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள அரசு அதிகாரி..வண்டி ஓட்ட தெரியாதவரும் அதற்கு லைசென்ஸ் எதுவும் பெற்றிருக்காதவரும் ஆவார்..!

       இதன் தொடர்ச்சி...மருத்துவ சிகிச்சை..காவல் நிலைய  புகார்..பதிவு..இட மாற்றம்..வழக்கு.. நீதிமன்றம், இன்சுயுரன்ஸ் கம்பெனி இத்யாதி இத்யாதி என நீண்டு.. லோக் அதாலத்தில் சமரசம் கண்டு இழப்பீடு பெற அந்த பாதிக்கப் பட்ட குடுமபம்..பெறும் தொகைக்காக காத்திருக்கிறது..அதுவும் அதிகாரிகள் நீதிமன்ற பொறுப்பாளர்கள் மனது வைத்து..ஏலம் போட்டு.. பரிதாபத்துடன் கொடுக்கும் தொகை..இழப்பீட்டுக்காக...?!??

      ஒரு விபத்து ஏற்ப்பட்டு..வழக்கு பதிவாகி, சிகிச்சை பெறும் நிலையிலேயே.. பல்வேறு தனித் தனி மருத்துவ அறிக்கை..உண்மையான செலவினங்களை சம்பந்தபட்ட இன்சுயுரண்ஸ்  நிறுவனங்கள் கொடுத்து வழக்கை முடித்தால் என்ன..?? இதை விடுத்து நீண்ட காலம்.. நீதிமன்ற செயல் பாடுகளின் வழியே நடைமுறையில் இருக்கும் இந்த முறை..மிகுந்த மனச்சோர்வை தருகிறது..!

       வக்கீல்களின் பீஸ் குறிப்பிட்ட தொகையாக இல்லாமல்.. அது பெறும் நிவாரணத்தில் கணிசமான  பங்கு என்ற அளவில் முடிந்து..இடையில் பல் வேறு குடும்ப உறவுகளும் இந்த பணத்தை..பங்கை எதிர்பார்த்து..சிக்கலில் முடிந்து பாதிக்கப் பட்டவருக்கு  உண்மையான தீர்வும் நிவாரணமும் கிடைக்காமலேயே போய்விடுகின்றன..!!?!!

     ஒரு சில  வருடங்களுக்கு முன் கல்லூரி வாசலில்   விபத்தில் சிக்கிய தனது மகனின் சிகிச்சை, தலை ஆபரேசன், முக ,பல் சீரமைப்பு என பல கட்டங்களாக நிலுவையில் இருக்க,அதனை பற்றிய கவலையும் புரிதலும் இன்றி.. அவனின் தந்தையோ கிடைக்கும் தொகை தனது குடும்ப கடனுக்கு போதுமானதாக இருக்குமா..?? என்று தனியே சென்று மனைவியிடம் போன் செய்து சம்மதம்  கேட்டு...சார்...கிடைக்கும் இந்த தொகை எனது குடும்ப கடனுக்கே போதாது சார்..என..புலம்பி..மகனின் சிகிச்சையை புறந்தள்ளிக் கொண்டிருந்தார்..!!

       கிடைக்கும் இந்த தொகையில் தனது கணிசமான கமிசன் எவ்வளவு..? அதனை எவ்வாறு பெறுவது..? என கவலையில் ஆழ்ந்து....திக்கி திணறி பேசும் வக்கீல் என..!!?!!, ஒரு விபத்து முடிந்த நீண்டகால நிகழ்வில் அதன் முக்கியத்துவம்.. பாதிப்பை இழந்து பல் வேறு பரிணாமங்களுடம் கிடைக்கும் தொகையே பிரதானமாக..கமிசன்..கடன்.பங்கு பாகம்...வேறு இதர..குடும்ப செலவீனங்கள்  என நீண்டு பாதிப்படைந்தவர் இரண்டாம்...மூன்றாம் ஏன் நான்காம்  பட்சமாக தள்ளப் படும் நிலைக்கு ஆளாகும் பரிதாப நிலை இயல்பாய் தோன்றிவிடுகிறது..??!!

      விபத்தில் பாதிப்பட்ட அந்த இளைஞன்.. தனது செயற்கை பல் செட்டை..கழட்டி..மிகுந்த கூச்சத்துடன் நீதிபதிகளிடம் காட்டி..மற்ற தலைகாயம் மெடிக்கல் ரிப்போர்ட்களையும் அளித்து..பெறக்கூடிய இழப்பீடு பற்றிய எந்த வித பிரக்கினையும் இல்லாமல்.சட்டென .வெளியெ சென்று கண்ணீர் மல்க தான் எடுத்த பல் செட்டை ..யாரும் அறியா வண்னம் அவசரம் அவசரமாக பொருத்திக் கொண்டிருந்தது..இதயத்தை என்னவோ செய்தது..??

     கணவனையும், காலையும் கூடவே வாழ்க்கையும் இழந்த அந்த சவலையான பெண்ணும்..தனது குழந்தைகளை உச்சு கொட்டி.. சத்தம் போடாமல் இருக்க செய்து.. எவ்வளவு தான் சார் தருவாங்க..?? என்ற குசு குசுவென்று இரகசியத்தை அறிய முயலும் ஒரு பள்ளி சிறுமியின் குரலில் கேட்டதும்..,

      மகனை இழந்து.. மருமகள், அவரின் இரு குழந்தைகள் என பெரும் பாரத்துடன் .வயதான காலத்தில் நிலை தடுமாறி..கண்ணீர் மல்க..எங்கோ தூரத்தில்..விரக்தியுடன்  வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்ணும்.... இந்த மக்கள் நீதி மன்றத்தில் மட்டுமல்லாது..இந்தியாவின் அனைத்து  நீதி மன்றங்களின்..அவல  நிகழ்வுகளுக்கு  சாட்சிகளாகவே இருப்பர் என்றே நினைக்கிறேன்..!

       விபத்து என்றால் சும்மாவா ?? அது சாலையில் அவசர கதியிலும்.. நீதிமன்றங்களில் மிகுந்த நிதானமாகவும் குரூரமாகவும் நடக்கும்.!! அதனை பார்க்க நமக்குத் தான் தைரியம் இல்லை...!!??!!

நாக.பன்னீர் செல்வம்..Naga.panneer selvam

     

புதன், 1 பிப்ரவரி, 2017

நாட்டு மனிதர்களும்... நாட்டு மாடுகளும்..!!

   
நாட்டு மனிதர்களும்.. நாட்டு மாடுகளும்.!!


       நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போது, ஒரு நாள் காலை சுமார் பதினொரு மணியளவில் வகுப்பில் இருந்து   சாலையை யதேச்சையாக  பார்த்தபோது எனது பெரியம்மாவும், அத்தையும் சென்று கொண்டிருந்தனர்..! அவர்களும் என்னை பார்த்து விட்டனர்..பின் இருவரும் எனது வகுப்புக்கு வந்து முத்து சாரிடம் பர்மிஷன் வாங்கி என்னை வெளியே அழைத்து என்னிடம் கொஞ்ச நேரம் கவலையுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு..பின்னர் சென்று விட்டனர்..

      பழைய புடவையுடன், களைப்பாக காணப்பட்ட இருவரும் இரண்டு மூன்று நாட்களாக வீட்டிற்கு செல்லாமல்.. தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி.. காணாமல் போன மாட்டை தேடிக் கொண்டிருப்பதை  என்னிடம் கவலையாக தெரிவித்து சென்றதை..பின்னர் நான் எனது ஆசிரியரிடம் விவரித்தேன்..!

    கிராமங்களில் வளர்ப்பு மாடுகள் காணாமல் போவது என்பது கோடைக் காலங்களில் மிக சாதாராணமாக ஒன்று..! ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பசு மாடுகள், எருமை மாடுகள், உழவு மாடுகள் என்ற வகைக்கு ஒன்றிரண்டு என தவறாமல் இருக்கும்..! 

       எருமை மாடுகள் நல்ல வெயில் காலத்தில்.. மேய்ப்பவர்..கவனிப்பாரின்றி இருக்கும் வேளையில்.. தலையை தூக்கி.. நாசிகளை கொண்டு தண்ணீர் இருக்கும் திசையை நோக்கி  சர சர வென்று போய்க் கொண்டேயிருக்கும்.. !! சமயங்களில் நாம் அவதானிக்க முடியாத கிராமத்தில், தோப்பில் என தொலைவு தூரத்தில் செட்டிலாகியிருக்கும்..!!

     காணாமல் போய்..தவறி வந்த... மாட்டை ஒரு சிலர் கட்டி வைத்து, வேண்டா வெறுப்பாக வைக்கோல் தண்ணீர் என்று வைத்து கொண்டிருப்பார்கள்.. நாள்  ஆக ஆக அதன் உரிமையாளராக மாறி விடுவர்..! ஆனாலும் இதனை கிராமத்தின் மற்ற நபர்கள் குசு குசு வென்று பொறாமையுடன் பேசி கொண்டுருப்பர்.. ! அதிர்ஷ்டசாலியை பொறாமையால் தானே எதிர் கொள்ள வேண்டும்..! மாட்டுக்கு உரியவர் தேடி வந்து மாட்டு அடையாளம் சொல்லி விட்டால் அவ்வளவுதான்....அவரை மாடு இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று காண்பித்தால் தான் அவர்களுக்கும் நிம்மதி..!!

        காணாமல் போன மாடு..ஒரு சில நாட்களிலும்.. வாரக்கணக்கிலும்..மாத கணக்கிலும் கூட கண்டுபிடிக்க முடியாமல் போய் பின்னர் திரும்ப கிடைக்கும்..!! காணாமல் போன மாட்டை எங்காவது கட்டுத் தளையில் கண்டால் வரும் மகிழ்ச்சி சொல்லி அளவிட முடியாதது..! பின்னர் மாட்டு உரிமையாளரும்..இடைக்கால உரிமையாளரும் பேசி..தீவன செலவுக்கு ஏதாவது பணத்தை கொடுத்து விட்டு.. மாட்டை திரும்ப ஓட்டி வருவர்..! ஒரு சிலர் பாவம் பார்த்து காசு கூட வாங்க மாட்டார்கள்..!

      இதற்கிடையில் அதிர்ஷ்டமாக கிடைத்த மாடு... அந்த வீட்டு குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்  மிகவும் பிரியமானதாகி, உரிமையாளருக்கு கொடுக்க..பிரிய.. மனமில்லாமல்,  ஆனாலும் ஒப்படைத்து, பின்வரும் நாட்களில் இரு குடும்பங்களும் மிகுந்த சினேகமாக, உறவாகவே மாறியும் விடும்..!! 

      காணாமல் போன மாடு கிடைக்கும் வரை அதனை இழந்த குடும்பம் மிகுந்த சோகமாகவே இருக்கும்.. குடும்பத்தினர் நல்ல சோறு தண்ணீர் இன்றி மாட்டின் நினைவாகவே இருந்து அதனை பல்வேறு கிராமங்களிலும் உறவினர்களிடம் அடையாளங்களை சொல்லி.. நாலா திசையிலும் தேடிக் கொண்டே இருப்பர்..!!

      ஒரு சில மாடுகள் காணாமல் போய் சென்ற இடத்தில் சினையாகி.. கன்று ஈந்து பின்.. மாட்டின் உரிமையாளுக்கு திரும்ப  கிடைக்கப் பெற்ற கதைகளும் உண்டு..! அறுவடை பணிகள் ஆட்களை கொண்டு நடந்த நிலையில்.. அறுவடைக்கு பின்னர் வைக்கோலில் உள்ள நெல்லை பிரித்தெடுக்க..”போரட”.. என்னும் என்னும் முக்கிய செயல் பாட்டுக்கு..அதாவது மாடுகளை பிணைத்து சுற்றி சுற்றி வர..மிதிக்க செய்து..பின் நெல்லையும் வைக்கோலையும் பிரித்து.. உதறி.. எடுக்கும் முறை அது..!

       இந்த வகையான  நெல் அறுவடைக்கு பிந்தய “போரடி”..... எனும் அத்தியாவசிய வேலைக்கு மாடுகளின் தேவை இன்றியாமையாததாக இருந்தது..!! ஆள் மற்றும் அவருடன் வந்த சோடி மாடுகளுக்கும்  சேர்த்து கூலி கொடுக்கும்  முறை இருந்தது.. !!மாடுகளை  அதன் கழுத்தில் பிணைத்து..வட்டமாக..செக்கு.. போல சுற்றி வர செய்யும் பணிகளில்..பள்ளியில் படிக்கும் வீட்டு  சிறுவர்கள் விரும்பி   ஈடுபடுவதும் உண்டு..!

      அவ்வாறு மாடுகள்  சுற்றி வரும்போது...தரையில்..களத்தில் உள்ள வைக்கோலில் சாணம் இட்டு..குளம்புகளில்.. அது மிதி படாமல் இருக்க.. வாலை தூக்கியவுடன்..வைக்கோல் சுருணை தயார் செய்து.. சாணியை கையில் ஏந்தி கேட்ச் பிடிப்பதும் கூடுதலான..விளையாட்டும் வேடிக்கையுமாக அறுவடைகளத்தில் இருந்து கொண்டிருக்கும்.!

        நாட்டு மாடுகளின்  பால் வளம் மிகவும் குறைவானதே..!!லிட்டர் கணக்கு இல்லாத நிலையில்.. சேர் எனப்படும் உள்ளூர்..குவளை அளவுகளில் தான் வினியோகம் ஆனது..அது எல்லோருக்கும் போதுமானதாகவும் இருந்ததில்லை..!  பாலில் சரி சம்மாக தண்ணீர் கலக்கும் வழக்கமும் உண்டு..!

      மேலும் வறுமை காரணமாக பாலை மேட்டுக் குடியினருக்கு விற்கும் நிலையும்..பின்னர் டீ கடைக்களுக்கும் விற்க முற்படும் போது..பணத்திற்கு எல்லாப் பாலையும்  விற்கவும் ஆசை இருந்தது..!! உதாரணமாக முக்கால் லிட்டர் கறந்தால் அதனை ஒரு லிட்டராக்கி விற்று காசாக்குவதே..ஏழைகளின்.. மாடு வளர்ப்போர்களின் நிலைமை..!

      மேலும் நாட்டு மாடுகளில் பால் கறப்பதும் கடினம்..! காம்பு அழுத்தமாக இருக்கும்..! ஆழாக்கு பால் பெற மாடுகளின் உதைகளையும் வாங்க வேண்டியிருக்கும்..! மேலும் ஒருவர் மட்டுமே கறந்து பழக்கப் பட்ட மாடுகள் எனில் மற்றவரை..அன்னியரை கறக்க அனுமதிக்காது..!!  மீறினால்..கடைக் கண் பார்வையால் பார்த்து.... உதை தான்..! பல்லு போய்விடும்..!! பாலை தொடர்ந்து பெண்கள் கறந்த வீட்டில்.. அவர்கள் இல்லாத போது..ஆண்கள்.. பெண்களின் புடவையை அணிந்து திருட்டுத் தனமாக.. சொந்த மாட்டில்.. அது கவனிக்காவண்ணம்..பயந்து பயந்து  கறந்த கதைகளையும் கேட்டிருக்கிறேன்..!!

        பின்னர் தான் வெளி நாட்டு இரகங்கள் கால் நடைத்துறை மூலம் பரவியது..!! சினை ஊசி மூலம்..ஜெர்சி, பிரிஸ்டன் எனும் இரகங்கள் எல்லா கிராமங்களுக்கும் பரவி பால் உற்பத்தி அதிகமானது..!! காளை மாடுகள் மூலம் இனவிருத்தி செய்யும் முறை வெகுவாக குறைந்தது..!! காரணம் வெட்டை எனும் நோய் வந்தால் பசு மாடுகள் அவ்வளவு தான்..! தேறுவதற்கு பிரம்ம பிரயத்தனம்... வைத்தியம் பார்த்தாக வேண்டும்..!!சினையும் பிடிக்காது..!

       வெண்மை புரட்சிக்கும்.. பால் பற்றாகுறை  நீங்கவும்..கலப்பின இரகங்கள் முக்கிய பங்கு வகித்தன..!! அதிகமாக டீ.. காப்பி குடிக்கும் பழக்கமும் உண்டானது..! எனது தாத்தா. இரவு நெடு நேரம் வரை தூக்கம் இல்லாமல் தவிக்கும் போது..தான் மதியம் சுமார் 4 மணியளவில் குடித்த டீயையோ.. காப்பியையோ காரணமாக கூறியது இன்றளவும் ஆச்சரியமான விசயமாகவே இருக்கிறது..!! மனிதர்கள் அவ்வளவு சென்சிட்டிவாக..உடலும்.. மனமும் தூய்மையாக  இருந்தது..இன்று  நிச்சயம் சாத்தியமில்லை..!!

      பின்னர் தான் மாடுகளை ஒரு சிலர் சினை பிடிக்காத நிலையிலும் கரிசனமாக..ஏன்.காளை கன்றுகளையும் கூட தேடித் தேடி வாங்கினர்..!! இவ்வளவு நல்லவர்களாக அவர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கும்..!! பின்னர்..அது பல வருடங்களுக்கு பிறகே.. அவ்வாறான மாடுகள்..மாட்டிறைச்சிக்காக வாங்கப் பட்டது என்பது எங்களுக்கு தெரியவந்தது..!! அதற்குள் கிராமத்தில் பாதி மாடுகள் காலியானது..!!

       பின்னர், காணாமல் போன மாடுகளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் தேடும் நம்பிக்கை இழந்து..அதுபோனதில் சேத்தி..!என கைவிடும் நிலை ஏற்பட்டது....!!அவ்வாறான மாடுகள் அடி மாட்டிற்கு சென்றிருக்கும் என்ற நிலையில்..அதனை தொடர்ந்து தேடும் நிலையில் அவ நம்பிக்கை உண்டாகி..காணாமல் போன மாடுகள் எங்கோ ஒரு சம்சாரியிடம் இருக்கும் என்ற அது திரும்ப கிடைக்கும் என்ற நிலை..ஆழமான நம்பிக்கை இற்று போய்...அது இன்னேரம் எந்த அடிமாட்டிற்கு போனதோ..! என்று மருகும் நிலையும் விவசாயிகளுக்கு உண்டானது..!!

       ஒரு..முறைக்கு..இரு முறை..மாடுகளை  சினை படுத்த முயற்சி செய்து..அது பலனளிக்காதபோது.. மீண்டும் அதற்கான முயற்சிகள்.. கால் நடை மருத்துவம், நாட்டு வைத்தியம் என கைகொள்ளாமல்.பாரம்பரிய முயற்சிகளை  மறந்தும்..மனமில்லாமலும்..தேவையும் இன்றி.. கைவிட்டு...சோம்பேறிகளாக விவசாயிகள் மாறி.. மிக சுலபமாக அடிமாட்டிற்கு..மாடுகளை  விற்கும் பழக்கத்தை  தொடங்கினர்..!

      எங்கள் கிராமத் தலையாரி, நான் சிறுவனாக இருந்த போது சிரித்துக் கொண்டே கூறுவார்..” தெரு..கோவிலில் விளக்கு எரிந்தால் யார் வீட்டு மாடோ நோய் வாய் பட்டிருக்கிறது” என்று. அர்த்தம் என...!! அதே போல் மாடு இறந்து விட்டால்.. சாமிக்கு வேண்டிக் கொண்ட பெண்கள்.. ஆத்தாமார்கள்..அது நிறைவேறாத நிலையில்  நேரே..கோயிலுக்கு வந்து.. சாமியை திட்டித் தீர்த்ததையும்...உனக்கு கண் இல்லையா..!! விளக்கு ஒரு கேடு..!! என ஏதோ ஆள் நேரில் நிற்பது போல் மண் வாரி தூற்றி சபித்தும் செல்வார்கள்..!!

       இதற்கிடையில் நாட்டு மாட்டிற்கும்.. வெளி நாட்டு இனங்களுக்கும் இடையில் பிறந்த கிராஸ் எனும் புதிய இரகம் பசுவில் உருவானது.. !திமில் என எதுவும் இல்லாமல் கழுத்து முதல் உடல் வரை மட்டமாக இருக்கும் வகை சாதுவான..சூழலுக்கு ஏற்ற..புதிய வகை....! எருமை மாடுகளில் முரா எனும் சுருட்டை இரகம்.. வேற்று மாநிலத்தின்  மாடு வகை..1970களில் தமிழ் நாட்டில்  பிரபலமான காலமும்  அது..தான்..!

         நாட்டு எருமை எனில் கொம்பு மிக நீளமாக இருக்கும்..கொம்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பெயர் உண்டு..!! வீணை..முன் கொம்பு.. பின்மட்டை என தனித்தனி பெயர்கள் உண்டு..! ஓவ்வொரு மாட்டின் தாய்.. பாட்டி. பேத்தி என தனித்தனியாக..அதன் குடும்ப வழிகளை நினைவு வைத்து குடும்ப உறுப்பினர்களை போலவே மாடுகளையும்..தொடர்பு அறுந்து போகாமல் வளர்த்து.. உறவாகவே எண்ணி.. பாரட்டி..சீராட்டி வந்த காலமும் ஒன்று உண்டு...!?!

      சாதாரண் நாட்டு எருமைகளை..சிறிய கன்று குட்டிகளாக இருக்கும் போது அவற்றை குளத்தில் குளிபாட்டும் போது.. விளக்கெண்ணெய் கொண்டு கொம்பில் தடவி ..தேய்த்து..தொடர்ந்து அதனை நீவி..சுருட்டி விட்டால்..கொம்பு சுருண்டு..   பின்..அவை சுருட்டை மாடாகி விடும் என்ற க|ற்பனை  அளவில் தான்..சிறுவர்களான..நாங்கள் வில்லேஜ் விஞ்ஞான அறிவுடையவர்களாக இருந்தோம்..!!

        மாடுகளை குறிப்பிட்டால்..கிராமத்து தரகர்களை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது..! மாடுகளில் விலையை சூசகமாக மாற்று பெயர்களில் குறிப்பிடுவது.. ”லிங்கம்.மான்”..என மாட்டின் விலையை வளர்த்தவருக்கு தெரியாமல்...மறைமுகமாக..இரகசியமாக..விலையை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வது..”அகா சுகா..பொய்..பித்தாலட்டம்”.. என தனித் தனி திறமைகளோடு.. இராஜா மகாரஜாக்களாக கிராமங்களில்  வலம் வந்தனர்...!!

      எனது தாத்தா...அந்த நாளைய  ஒரு தரகரை பற்றிக் குறிப்பிடும்போது.. தரகர் தன்  மனைவியை..தானே  மாடு வாங்க..அழைத்து சென்று.. அவரின் தாலியை கழட்டி மறைத்து வைத்து..மனைவியை..யாரோ ஒரு அப்பவி பெண்ணாக சித்தரித்து..ஒரு அய்யர் வீட்டு பசு மாட்டை குறைவான விலையில் வாங்க..””அய்யா.. ”இவ பொம்மனாட்டியிலு கம்மனாட்டி..!! பாவம்...கணவனை இழந்தவள்”....! விலையை குறைத்து..புண்ணியத்தை தேடி கொள்ளுங்கள்..!” என்று பரிதாபமாக..கெஞ்சி..கட்டிய மனைவியையே கைம்பெண்ணாக்கி..! மாடு வாங்கி.தரகு தொழிலை சிறப்பாக  மேற்கொண்டதை கூறுவார்..!!

       அப்புறம்.. !அப்புறம்.........!!!.தயங்கித் தான் எழுத வேண்டியிருக்கிறது.......!!ஜல்லிக் கட்டு எனபது அனைத்து பகுதிகளுக்கு சொந்தமானதோ பழக்கமானதோ அல்ல..!!  ஒட்டு மொத்த தமிழனத்தின் அடையாளமாக இதனை கைக் கொள்ளமுடியாது..!!ஊடகங்கள்..செய்தி தாள்களின்  வருகையின் பின்னரே.. ஜல்லிக் கட்டை பலரும்  எங்கள் பகுதியில் அறிந்திருந்தோம்..!! இன்றளவிலும்.. அதனை  நேரில் கண்டிராத வெகு ஜன  தமிழக கிராம மக்களும் உண்டு..! ஒவ்வொரு கிராமமும் மாட்டுப் பொங்கலை கொண்டாடும் முறையில்..குறிப்பிட்ட பகுதியினர் கொண்டாடும் முறை..ஜல்லிக் கட்டு அவ்வளவே..!!

       ஜல்லிக் கட்டின் பின்புலத்தில் உள்ள சாதி, சூதாட்டம், தனி மனித ஆளுமை, வர்க்க பேதம், மரணம், மாடு பிடி வீரர்களின் இறுதி நிலை, நிரந்தர ஊனம், மாடு பிடி வீரர்களின்குடும்பத்தினர்..மனைவிமார்கள்..குழந்தைகள், மாட்டின் நிலை...இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, சங்க காலம் கலித்தொகை என பழம் பெருமை பேசிக் கொண்டு அதனை தொடர்வதில் எனக்கு நம்பிக்கையில்லை..!!இன்று குறிப்பிட்ட சாதியினர் ஜல்லிக் கட்டு மாடுகளை வளர்க்க கூடாது..என்ற சாதீய தடைகளும் உண்டு..என்பதே கேவலமான உண்மை..!!

       கலித்தொகையில் கூறப் பட்டிருப்பதை போல மாட்டின் கொம்பில்.... சுற்றிய மாடு பிடி வீரனின் குடலை..பருந்து வானில் இருந்து வந்து..கவ்வி செல்லும்..!! என்பது  போன்ற.. பயங்கர.. எண்ணிப் பார்க்க பதறும் நிகழ்வுகளை..இதனை எழுதிய புலவர்கள்.. மாட்டை ஒரு நாளும் பிடிக்காத நிலையில்..ஒரு சில பொற்காசுகளுக்காக ;புகழ்ந்தும்..எழுதி இருக்க கூடும்..!!

       தாழ்த்தப் பட்ட..பின் தங்கிய.. நிலமற்ற ஏழை கூலி விவசாயிகள் ஒரு நாளும் ஜல்லி கட்டு மாடு வளர்ப்பில் ஈடுபட வாய்ப்பு...இருக்காது..!! எனவே இது சமூக நல்லிணக்கத்தையும் ஒரு நாளும் பறை சாற்றாது..! மாடு பிடிக்கப் படாமல் இருக்க பணம் கொடுத்து..ஜல்லிக் கட்டு முதலாளிகள்..மாட்டின் மதிப்பை அதிகப் படுத்தும் வழக்கும் உண்டென்பதையும்...அதாவது மூன்று முறை பிடி படாத மாட்டின் விலை ஒரு லட்சம் வரை எகிறும்..!! கூறக் கேட்டிருக்கிறேன்..! இதுவெல்லாம் மாண்பு பாரம்பரியம் எனில்..சாரி..?!!??மன்னிக்க..!!

       விஞ்ஞானத்தின் துணைக் கொண்டு, நமது பாரம்பரிய.. நாட்டு மாடுகளை மீண்டும் புது வாழ்வு கொள்ள செய்யலாம்.. !! நாட்டு கோழிகள் இன்று புத்துருவாக்கம் செய்ய பட்டிருப்பதை போலவே..!!மேலும் ஜல்லிக் கட்டு காளைகள் பெண் பசுக்களுடன் சேர விடாமல்.. கடுமையான பாது காப்புடன் தனித்து பராமரிப்பதாக.. அதனை வளர்த்தவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்..!!

         மரபு...பாரம்பரியம்..கலாச்சாரம்..பண்பாடு.. நாகரீகம்..பழக்க வழக்கம்..உரிமை..பெருமை.. எல்லாம் ஒன்றா.. வேறு வேறா..?? ஒற்றை அர்த்தம் உடையதா..?? அல்லது..தனித் தனி அர்த்தம் உடையதா..? என்று எனக்கு தெரியவில்லை..!! தெரிந்தவர்கள் சற்று விளக்குங்குகளேன்...தயவு செய்து தனித் தனியாக........கூட்டமாக அல்லாமல்...!!!!

       நாக.பன்னீர் செல்வம்...  Naga.Panneer Selvam 09840576353


   
   
   
   


     

     

      

     

சனி, 7 ஜனவரி, 2017

கறுப்பு.. வெள்ளை தேவதைகள்..!

 

  ஓரளவிற்கு பழக்கமான, நண்பரின் அண்ணன் மகள்..உடல் முழுவதும் வெண்மை நிறமாக..மாறிய லூக்கோடெர்மா எனும்  நோயால் பாதிக்கப் பட்டவர்.. அவருக்கு,உள்ளூரில் அவரை..விரும்பி ஏற்ற ஒருவருடன் திருமணம் ஆனதை கேள்விப் பட்டு.. நண்பர்களாக.. நாங்கள் மகிழ்ந்து, சுமார் பத்து  வருடங்களுக்கு முன்னம் பேசிக் கொண்டிருந்தோம்..!

     ஆனாலும் 2016ம் ஆண்டின் இறுதியில் அவரின் மணவாழ்க்கை, இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்,கணவருடன் ஏற்பட்ட பிணக்கில் தாய் வீட்டில் தங்கியிருந்து,,அவருக்கு குடும்ப நல மையத்தின் வழி கவுன்சிலிங் செய்து வைப்போம் கனவிலும் நினைக்க வில்லை..!! 

       ஓரளவிற்கு நல்ல வருமானம் உள்ள, கணவனுக்கு, தான், வெண்மையாக நிறம் மாறிய நோயால் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு பெரிய வாழ்க்கை கொடுத்துவிட்டோம் என்ற நினைப்பு...அதன் தொடர்பில் பெரிய அளவிலான அடிமைத்தனத்துடன் மனைவி இருக்க வேண்டும்  என்ற நித்திய..எதிர்பார்ப்பு..சந்தேகம்..அடிதடி..மண்டை உடைப்பு...பிரச்சினை..தொடர் பஞ்சாயத்துகள்..காவல் நிலைய விசாரிப்புகள்..புகார்கள்.. என வாழ்க்கை நரகமாகி..இனி தொடர்ந்து வாழவே முடியாது எனும் அளவில் முடுவெடுத்த பெண்..!

     கணவன் மனைவி..குடும்ப பிரச்சினையில், ஆளாளுக்கு, உறவினர்களாகவும், பெற்றோர்களாகவும்.. அன்பு அக்கறை என்ற பெயரில் தனக்கு தெரிந்த நியாய அநியாயங்களை சொல்லி, ஒரு வித சாடிச மனப்பான்மையுடன் குளிர் காய்வது..பிரச்சினையை தீரவே முடியாத அளவிற்கு சிக்கலாக்குவது.. நமது சமூகத்தின் கசடுகளில் ஒன்று..!

     எப்படி திருமணம் என்பது, இந்திய தன்மையில், அது ஆண், பெண் இருவருக்கானது மட்டுமே என்ற  தனிப்பட்ட  முக்கியத்துவத்தை விட, இரு குடும்பம், இரு சமூகம், அதன் பழக்க வழக்கங்கள், நெருங்கிய உறவுகள்  என ஆர்ப்பரித்து நிற்கிறதோ அதே அளவு.. பிரச்சினை என்றாலும், உதவிக்கு பதில் உபத்திரவமாகவே பொங்கி எழும்..!!

       முதலில் நண்பரின் அண்ணன் மகளிடம் பேசி..விபரங்களை அறிந்து..பிரச்சினையை புரிந்துக் கொள்ளசெய்து..தன்னம்பிக்கை ஊட்டி..பின்னர் அவரது கணவரை தனியே அமரவைத்து..பேசி குடும்பம் குழந்தைகளின் பார்வையில் விளக்கி..அவரது தியாகம் குறித்து புகழ்ந்து..இனிவரும் கால்ங்களிலும் அது தொட்ர வேண்டும் என்பதாக ஆலோசனைகளை வழங்கினோம்..

      ஊனமுற்ற ஆண் பெண் எவராக இருப்பினும், முழு உடல் தகுதியுள்ள ஒருவரை மணப்பதை விட, வேறு வகையில் ஊனமுற்றோரை மற்றொருவரை மணப்பதே எதிர்கால வாழ்வுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்..!!
அர்ப்பணிப்பு.. தியாகம்.. காதல்..திருமணவாழ்வில்.. நாளடைவில்..தன் பயனை இழந்து செல்லாகாசாகி...பிரச்சினைக்கு வழி வகுக்க கூடும்..!

      பின்னர் இருவரையும் ஒரே அறையில் சந்திக்க செய்து..மனம் விட்டு பேசவும்..ஒருவரின் தவறுகளை மற்றொருவர் பேசவும்..எதிர்காலத்தில்..அதனை தவிர்க்கவும்.,எதிர்ப்பார்ப்புகளை புரிந்து கொள்ளவும் வாய்ப்பளித்தோம்..!

       கணவன் மனைவி இருவரையும் சந்திக்க செய்து...அவர்களை தனிமையில் விட்டு விட்டு...வந்தபோது..வெளியே எதற்கோ.கணவருடன் காத்திருந்த கிருஷ்ணவேணி என்பவரை எனக்கு பெண் கவுன்சிலர் அறிமுகம் செய்தார்..!

    கிருஷ்ணவேணி..கருத்த.. நல்ல தாட்டியான உருவம்..கையில் ஒரு குழந்தை.. நடக்கும் நிலையில் ஒரு சிறுவன்...அருகில் கணவர்..மனைவிக்கு பொறுத்தமில்லாத சிறிய உருவம்..சிவந்த நிறம்...சாதாரணமாக இரு கையால் கணவரை, மனைவி தூக்கி விடமுடியும்...!

     விஷயம் இது தான், தொடர்ந்து கிராமத்து மதகடியில் நண்பர்களுடன் குடிப்பதையே தொழிலாக வைத்திருந்தவர் செல்வம்..வரும் வருமானம் குடிக்கு போனது...அல்லது குடிக்காக மட்டுமே வருமானம் வந்தது.! தொடர்ந்து கணவன் மனைவி பிரச்சினை..அடி தடி...! கிருஷ்ணவேணி ஒரு முறை மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தும்,


      மறு முறை  மண்ணெணையை உடலில் ஊற்றிக் கொண்டு, தான் தீ வைத்து சாகும் முயற்சியில் ஓரளவு தீக்காயங்களுடன் காப்பாற்றப் பட்டிருக்கிறார்..!
மீண்டும் சாக முயற்சி செய்து, உரக்கடையில், பூச்சி மருந்தை வாங்கியைதை பார்த்த கிருஷ்வேணியின் சகோதரர்,கடைத்தெரு என்றும் பாராமல் அவரை கடுமையாக அடித்து, தடுத்து.. அவமானப் படுத்தியும் இருக்கிறார்.. ! மொத்தத்தில் சிக்கல் நிறைந்த வாழ்க்கை..!


     முரட்டு சுபாவம் அதிகமாகி, குடும்பத்தை கவனிக்காமல், குடிபழக்கம் அதன் தொடர்பில் நண்பர்கள் வட்டாரத்துடன் கணவன், எப்போதும் பிரச்சினை, சிறிய விசயத்திற்கெல்லாம் சண்டை.மருமகன் தனது தாய் வீட்டிற்கு வந்தால், எப்போது சண்டை வரும் என்றே தெரியாது..முணுக்கென்றால் கோபம்..சண்டை..வெளியேறுதல் அக்கம் பக்கத்தினர் கிராமத்தினர் எல்லோரும் சிரிக்கும் அளவிற்கு...!

     ஒரு நாள் கிருஷ்ணவேணி, தனது கணவரை, கோயிலுக்கு செல்ல வேண்டும் எனக் கட்டாயபடுத்தி பொய் சொல்லி,அழைத்து வந்து, மது நோயாளிகளுக்கான எங்களது சிகிச்சை மையத்தில் சேர்த்து விட்டு விட்டார்..! ஆரம்பத்தில் ஒத்துழைக்காமல், முரண்டு பிடித்து முண்டிய செல்வம்..பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் மனதை புரிந்து செயல் பட்டு.. ஒத்துழைத்து...சிகிச்சை நாட்களில் மனைவியுடன் தங்கி முழுமையாக குணமும் அடைந்து விட்டார்..!

இந்த நிலையில் தான், மாத்திரை வாங்க தனது கணவருடம் மையத்திற்கு வந்திருந்த போது, நான் சந்திக்க வாய்ப்பாகி முழு கதையையும் கூறினார்..!
 கிருஷ்ணவேணி ஒரு சாகச பெண்ணாக, விடாமுயற்சியுடன் வாழ்வை எதிர்கொண்ட ஒரு சக்தி வாய்ந்த பெண்ணாகவே..பிரமிப்பு ஊட்டும் வகையில் என் கண்களுக்கு தெரிந்தார்..!!

      செல்வத்தை கேட்டேன்..மதகடியும் நண்பர்களும் என்ன ஆனார்கள்.?!? என்று...போங்கடா   ன்னு சொல்லிட்டேன் சார்.. !இனி குடிக்க மாட்டேன்..!!என் உடம்பு நல்லா..தெளிவா இருக்குன்னு பாக்குறவங்க சொல்றாங்க சார்..! கோயிலுக்குன்னு பொய் சொல்லி தான் சார் என்னை கிருஷ்ணவேணி.. அழைத்து வந்தது சார்..வந்து பார்த்த சாமியும் இல்ல ஒண்ணும் இல்ல நான் கிடந்து..முழிக்கிறேன்..அப்புறம் தான் டீரீட்மெண்டுக்குன்னு தெரியும்.. !!பரவாயில்ல சார்.. நல்லாயிட்டேன்.. இனி குடியை தொட மாட்டேன் சார்..! மத்தவங்களுக்கும் சொல்லிகிட்டு இருக்கேன் சார்..!

     அப்போது கிருஷ்ணவேணியின் முகத்தை பார்க்க வேண்டுமே..! வெட்கமா..? பெருமிதமா..? சாதித்த பெருமையா..! தெரியவில்லை..! எந்த ஒரு பெரிய சாதனைக்கும் குறைவில்லாத மகிழ்ச்சி..! மூன்று முறை சாகத்துணிந்த ஒரு பெண்,விடாமுயற்சியுடன்..கணவரை சாகாமல் காப்பாற்றியது மலைக்க வைத்தது..!

     கிருஷ்ணவேணிகள் நினைத்தால், குடிகார செல்வங்களை தூக்கி எறிந்து விட்டு உடல்,மனச்சுதந்திரத்துடன் இங்கு தாராளமாக வாழமுடியும்..!!

       இம்மென்றால் டைவர்ஸ்.. ஏன் என்றால் டைவர்ஸ்.. என்ற மெத்த படித்த பெண்களின் உலகத்தில் கிருஷ்ணவேணிகள்..ஆசிர்வதிக்கப் பட்ட அறியாமைகளுடன், இன்றும்..கோயிலுக்கு  வா..?!..என பொய் சொல்லி..கணவனை அழைத்து வரும் தெய்வங்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்..!

            ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட, நண்பரின் அண்ணன் மகளை, கவுன்சிலிங் முடிந்து வந்த ஒரு ஞாயிற்று கிழமை, நானே அவரது வீட்டிற்கு சென்று அழைத்து, கணவன் வீட்டில் குழந்தைகளுடன் விட்டு விட்டேன்..சாதரணமாக சகஜ நிலையை கணவன் மனைவியிடத்தில் உருவாக்கி.. பேச்சு கொடுத்து....திரும்பி விட்டேன்..!

     ப்த்து அல்லது பதினைந்து நாள் கழித்து..புத்தாண்டு தினத்தன்று  அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன்..!! வீடு பூட்டியிருந்தது..குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று விட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்..!!

        கிருஷ்ணவேணி கூட.. கணவருடன்...உண்மையிலேயே..உண்மையான..  புத்தாண்டு தினத்தில் உண்மையான கோயிலுக்கு..உண்மையிலேயே  போயிருக்ககூடும்...!!

 நாக.பன்னீர் செல்வம்   Naga.panneer selvam