வெள்ளி, 1 டிசம்பர், 2017

சோறும்..சொல்லும்..!

        இரு சக்கர வாகனத்தை பயன் படுத்தாத.. ஒரு மழை நாளின் முன்னிரவில்...சுமார் ஆறு மணியிலிருந்து.. ஏழு மணி வரை..  முக்கால் மணி நேரத்திற்கும்..மேலாக.. ஒரு சிறிய பேருந்து நிறுத்தத்தின்,வெளியே, வராத அந்த பேருந்திற்கு.காக்க நேரிட்டது... !

        உள்ளே.. ஒரு முதிய பெண்மணி அழுக்கான உடையுடன் படுத்திருந்தார்.. பெருநகரம் என்றால் அவரை ஒரு பிச்சைகாரி என்று எளிதாக எழுதிவிடலாம்..! ஆனால்..இங்கு அப்படி  கூறிவிட முடியாது..எப்படியும் அருகாமை கிராமத்தையும்.. அதில் ஒரு குடும்பத்தையும், புறக்கணிக்கப் பட்ட சமூக காரணங்களை சார்ந்தவராக இருப்பார்..!

      என்னை கண்டதும் எழுந்து..அமர்ந்து..உன் ஊரு எங்கப்பா..? என்றார்..! சற்று முந்தியிருந்தால்.. அந்த கேள்வி.. என்னால் அவரிடம் கேட்கப் பட்டிருக்கும்..!?!
நானும் சொன்னேன்.. இல்லப்பா..சாப்பிட்டு இரண்டு நாளாச்சு..கொஞ்சம் சோறு எடுத்துகிட்டு வரச்சொல்லத்தான்..என்று ஏக்கமாக..!

      நான் ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்து..”ஆத்தா..இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.. அவர் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஏனோ தானோ என்று வாங்கி.. கீழே போட்டுக் கொண்டார்..! அப்போது அந்த பக்கமாக வந்த ஒரு இளம் வயது திருமணமான  பெண்மணி.. அந்த முதிய பெண்மணியையும் அவரது குடும்ப பிண்ணனியை முன்னரே   நன்கு அறிந்தவராக..அவரிடம் பேச்சு  கொடுத்து விசாரித்தார்..!

       ”சார்..இதுக்கு பிள்ளை குட்டி எதுவும் கிடையாது சார்..எல்லாத்தையும் தனது தங்கச்சிக்கும் அவங்க.. பிள்ளைகளுக்கும் கொடுத்துடுச்சு...இப்போ எல்லாரும் கைவிட்டு...இந்த பஸ் ஸ்டாண்டில் வந்து கிடக்குது சார்..!! என்றார்.!

       தன்னை அடையாளம் கண்டு கொண்ட பெண்ணிடமும்..கெஞ்சும் குரலில் ..கொஞ்சம் சோறும் குழம்பும் சமைச்சி எடுத்துகிட்டு வாயேன்..!! இந்தா பணம் என்று நான் கொடுத்த பத்து ரூபாய் உட்பட இன்னும் சில காசுகளையும்..அள்ளி தனது இடது கையால்..  அந்த பெண்ணிடம் கொடுக்க முற்பட்டார் அந்த முதிய பெண்மணி..!

      ”அய்யோ..ஆத்தா.. என் பொண்ணு தனியா இருக்கு..!  நான் போகவே ஒரு மணி நேரம் ஆயிடும்.. நான்  போயிதான்  சமைக்கணும்...எங்கேயிருந்து சமைச்சு.. உனக்கு..எங்க..எப்ப  கொண்டார...!?!..தனது இயலாமையை நினைத்து புலம்பினார்..அந்த இளம் பெண்..!

       ”நல்லா வயல் வேலை செய்யும் சார்... !!..நல்லா.. ஆம்பிள கணக்கா இரண்டு ஆள் சாப்பாட்டை சாப்பிடும்..இப்ப பாருங்க சோறு..சோறுன்னு இங்க வந்து கிடக்குது..! வீட்டில்.. சோறு கொடுத்தா..திண்ணுட்டு.. அசிங்கம் பண்ணுதுன்னு....கழுவ..குளிக்க வைக்க..  பாக்க..எடுக்க. நாதியத்து..மக்க மனுசா இல்லாம போயி .. பஸ் ஸ்டாண்டுல..கெடக்குது,..என்று..கவலையுடன்..சொல்லி விட்டு,.. அவருக்கான உள்ளூர் பேருந்து  வந்ததும்..ஏறி கிளம்பி சென்று விட்டார்..?!!?

      அப்படியே சென்று விட எனக்கு மனசில்லை..!அப்போது அங்கு..சைக்கிளில்  வந்து.. நடந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த.. அருகாமை சுமார் 11 அல்லது 12வது படிக்கும் வயதுள்ள.. சிறுவனிடம்.. கொஞ்சம் பணம் கொடுத்து..பக்கத்தில் எங்காவது சாப்பாடு கிடைத்தால் வாங்கி வந்து இந்த ஆத்தாவிடம் கொடுக்கச் சொன்னேன்..! அவனும்..சார்..! பக்கத்தில் இரவில் சாப்பாடு கிடைக்காது வேண்டுமானால்.. இட்லி.. தோசை தான் கிடைக்கும் என்று உண்மை நிலையை எடுத்துச் சொன்னான்..

      அதை கேட்ட அந்த பேருந்து நிலைய மூதாட்டி..”ஐயே..இட்லி..தோசை வேண்டாம்..சோறு தான் வேண்டும்”.... என பிடிவாதமாக மறுத்தார்..! எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..?!?.. இனம் புரியா கவலையுடன் அங்கிருந்து எனக்கான பேருந்து வந்தவுடன் கிளம்பி விட்டேன்..!

      கிராமத்து பழைய மனிதர்களுக்கு சோறு.. என்பது எவ்வளவு முக்கியமானது என்பது வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை..!..”சோற்றுக்களை” என்ற சொலவடை கிராமத்தில் உண்டு..அதாவது ஏதாவது உடற் குறைபாட்டினால்.. சரிவர சாப்பிட முடியாமல்..மருந்து..வைத்தியம் என இருந்தவர்கள்..மீண்டும்..இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி..இயல்பான அளவில்.. சோறு அல்லது கஞ்சியை.. சாப்பிடும் போது.. அதன் ஆசையும் ஆவலும்.ஏக்கமும்  பூர்த்தியாகி வேர்த்து..களை பட்டு போகும்..அது தான் ”சோற்று களை.”..?!?

      ”சோற்றால் அடித்த பிண்டம்” என்ற சொற்றொடரும் கிராமத்தில் சாதாரணமாக உண்டு..! அதாவது இந்த உடலே சோற்றால் தான் ஆனது என்று பொருளில்..! கிராமத்தில் வழக்கமாக உழைக்கும் பெண்களும் ஆண்களும்..சாப்பிடும் சோற்றின் அளவு அதிகமாக இருந்ததும்..அதுவே அனைத்து பலத்திற்கும் காரணம் என்று நம்பப் பட்ட காலமும் இருந்தது..!
“செத்தவன் வாயில் மண்ணு..இருக்கிறவன் வாயில் சோறு” என்ற வெகு யதார்த்த கிராமத்து சொல்லும் உண்டு..!

     குழந்தைகளை நிறைய சோறு உண்ணச்சொல்லி சொல்லி கட்டாய படுத்திய கிராமத்து பெற்றோர்களும் உண்டு..!! ஆனாலும்..பிள்ளைகளுக்கு சோற்றினை ஊட்டும் போது..அறிவுரையும் கூட ஊட்டி வழங்க வேண்டும் எனும்   பொருள் பட.....”சோறும் சொல்லுமா பிள்ளைகளை வளர்க்க வேண்டும்”.. என்பதும் மூத்தோர் வாக்காக இருந்தது..!

       சமூக படி நிலையில் எந்த சாதி, எந்த வகுப்பு..ஏழை, பணக்காரன் என்றாலும்...எங்காவது வெளியூர் பயணம்..திருமணம், விருந்து, விசேசம் என வெளியே..நல்ல சாப்பாடு.. கிடைத்தாலும்.. கிடைக்காவிட்டாலும்..  ஏன்.. வெளி நாடு சென்றாலும்..வருடம், பல ஆனாலும்..திரும்ப வந்து..  வீட்டில் சமைத்த இயல்பான சாப்பாட்டை சாப்பிடும் போது உள்ள ஆத்ம திருப்தி..எவ்வித மனித,வேறு பாடும் இன்றி அனைவருக்கும் ஒன்று தானே!

       பொதுவாகவே..உழைக்கும்..வெள்ளந்தியான..கிராம மக்களுக்கு.. சோறு முக்கியமானதாகவும்..அதன் அளவும்..அதனை உற்பத்தி செய்பவர்கள் என்ற முன்னுரிமையிலும்  பிரதானமாகவே இருக்கிறது..சுருக்கமாக சொன்னால்.. சணல் சாக்கு பை நிற்பது.. அதனுள் இருக்கும் பொருளை பொருத்தே என்பது போல்..கிராமத்து மனிதர்கள் நிற்பது.. அவர்கள் உண்ணும் சோற்றினால் தான்..என்றால் அது பொய்யில்லை..!

        காலையில் பழைய சோறும் தயிரும்.. நல்ல கூடுதலான அளவில் உண்ட பின்.. எப்பேர்பட்ட மனிதனையும்..முதலில் உட்கார செய்து..பின் தூணில்,சுவற்றில்  சிறிது சாய செய்து..அப்புறம் சரிந்து..அவ்வளவு தான்..!! அது எப்பேர்பட்ட முக்கிய வேலை ஆனாலும்..அப்புறம் தான்..!?!..ஆம்..ஆல் புரோகிராம் கேன்சல்..!?!

       கிராமத்து மனிதர்கள் சாப்பிடும் போது..பாதியில்..அக்கம் பக்கம்.. ஏதாவது ஆபத்து..அபாயம் என்று ஓடி வரும் நிலையில்..தங்கள் பேச்சின் ஊடே.. ”அப்பத்தான் சோத்தில் கைவைச்சேன்..இரண்டு வாய்தான் சாப்பிட்டேன்..சத்தம் கேட்டு ஓடியாந்தேன்”..என்று, நடந்த களேபரத்தின் நடுவிலும்.. தாங்கள், சோற்றை...பாதியில் கைவிட்டு வந்ததை..முக்கியமாக  தவறாமல்..குறிப்பிட்டு..சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்..!?! அதாவது நடந்த சம்பவத்தின் முக்கியத்துவத்திற்கு.. சற்றும் குறைவில்லாதது..தான் சோற்றையே.. பாதியில் விட்டு விட்டு வந்தது..??!!?

          பேருந்து நிலைய பாட்டிக்கு அன்றைக்கு சோறு கிடைத்ததா..? என்று தெரியாது..அன்று இரவு முழுவதும்..ஒரு வாய் சோற்றுக்கு ஏங்கிய அந்த முதிய பெண்ணின்.. நினைவிலும் சோறு  அதன் உணர்வு பூர்வமான மனித தொடர்பும்  வந்து போயின..!?!

        நான் ஒரு சமயம் சிறு வயதில்..”அம்மா இன்று நிறைய அரிசி போட்டு.. சோறாக்கு.. நான் எவ்வளவு அதிகம் சாப்பிட முடியும் என்று பார்க்க போகிறேன்..!?! என்று உளறி வைக்க..அதை கேட்ட அம்மா..அப்படி என்றால் இவ்வளவு நாளும்  நன்றாக சாப்பிட வில்லையா..?!? என்று கண் கலங்கியது நினைவில் வந்து போயின..?!?

         1970 -80களில்..சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நம்மவர்கள்..அங்கு சீனர் உள்ளிட்ட அனைவருமே குறைவாக சோற்றினை சாப்பிடும் பழக்கத்தால்..கடைகளில் கட்டச் சொல்லும்  சாப்பாடு நம்மவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் நிலையில்..அந்த குறைவான சோற்று அளவை கண்டு,.. தாங்கமுடியாமல்...பொருமுவார்கள்..!!

       பின்னர் சோறு அதிகம் வைக்கச் சொல்ல..அதனை  குறிக்கும் வார்த்தையான...” நாசி தாம்பா” என்ற அதாவது சோறு அதிகமாக எனும் மலாய் வார்த்தையை பிரயோகித்து.. அதுவே பழக்கமாகி..!.. உழைக்கும் நம்மவர்களை கண்டால் ”நாசி தாம்பா” என்று கூடுதலாக.. சற்றே நகைப்புடன். சோறு கட்டிக்கொடுக்கும் பழக்கம் உண்டாயிற்று..!!

      பிற்காலத்தில் ஏற்றுமதி.. இறக்குமதி  தாராள செயல்பாடுகளால்..இங்கு கிடைக்கும் ..அரிசி உட்பட..அனைத்தும்  அங்கு தடையின்றி கிடைத்து.. பிரத்தியோக ஹோட்டல்கள், ஏற்பாடுகள்..சொந்த சமையல் என சோற்றின்  அளவு குறித்தான  பஞ்சம் தீர்ந்தது..!

      பேருந்து நிலைய கைவிடப்பட்ட பாட்டியை சந்தித்த..மறு நாள்.. மதியம்..சாப்பாடு தட்டு..பொட்டலம் என எதுவும் ஏற்பாடு செய்ய முடியா நிலையில்.. ஒரு பாலித்தீன் பையில் வடித்த சோறு.. அதில் குழம்பு..தொட்டுக் கொள்ள.. காய்கறி  முதலானவற்றை சிரமப் பட்டு ஏற்பாடு செய்து..பாட்டியை  தேடி சென்று..அதே சிறிய பேருந்து நிலையத்தில்..மதியம் மூன்று மணியளவில் கொடுத்தேன்..! அதனை அந்த முதிய பெண்மணி திறந்து..அள்ளி அள்ளி உண்டது..சோற்றுக்கும்..அதன் மீதான..கிடைக்காத நிலையில் ஏற்படும்  ஏக்கமும்.. மீண்டும் ஒரு முறை நிரூபணமானது..!

       நேற்று..சுமார் இரண்டு மாதம் கழித்து..மீண்டும் அந்த சிறிய பேருந்து நிலையத்திற்கு, சாப்பாட்டு பொட்டலத்துடன்  தேடிச் சென்ற போது..மூத்த பெண்மணி இருந்த அடையாளம் எதுவுமின்றி..காலியாக,.. சுத்தமாகவும் வெறுமையாகவும்..இருந்தது..!! பக்கத்தில் இருந்த சிறிய சைக்கிள்.. காற்று பிடிக்கும்  கடையில் விசாரித்தபோது..” அதுவா..அந்த ஆத்தா.. செத்து போயிடுச்சு சார்..!!” என பதில் வந்தது..!!

      சற்றே..வருத்தத்துடன்..மனம் துணுக்குற்று..எப்படி..எப்போது  இறந்தார்..?விவரங்களை சேகரிக்கும் ஆவலோடு..தகவல் சொன்னவரை..அந்த சிறிய இடத்தினுள்.. எட்டி பார்த்தேன்..?!

       அவர் உள்ளே தரையில் அமர்ந்து தட்டில் சோறும்.. அதில் சாம்பாரும்.ஊற்றி கையால் பிசைந்து அள்ளி..வாய் கொள்ள சாப்பிட்டு கொண்டிருந்தார்.!!..அருகே சிறிய தட்டில்..தொட்டுக்கொள்ள..முன்பு பேருந்து நிலைய பெண்மணிக்கு நான் கொடுத்த அதே  வகையான..முட்டைகோஸ்..கேரட் பொறியல்..அதே கலவையான வண்ணத்தில்..!!

       அப்புறம்.. என் கையில் இருக்கும் சாப்பாட்டு பொட்டலத்தை என்ன செய்வது என்றும் எனக்கு தெரியவில்லை..!?!.இதை..வேறு யாருக்காவது..கொடுத்தாலும்..அது  நான் தேடிவந்த..பேருந்து நிலைய, சோற்றுக்கு ஏங்கிய மூத்த பெண்மணி..தனக்கான சோற்றினை.தான்,.. உண்ணாமல்..அடுத்தவருக்கு..தானம் கொடுத்தது.. போல..இருக்குமோ..??!? அதுவும் தெரியவில்லை..?..

       ஏனோ..நான் வைத்திருந்த சாப்பாடு பை..முன்பைவிட.. அதிக கனமாக...எனக்கு..தெரிந்தது...!

நாக.பன்னீர்செல்வம்..Naga.Panneerselvam










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக