புதன், 24 மே, 2017

சார்..உங்களை பார்க்கணுமே..??!!??

சார்..சென்னையிலிருந்து வந்து விட்டேன்...! பஸ் பாசுக்கு மாவட்ட அலுவலகம் செல்கிறேன்..கொஞ்சம் போன் செய்து சொல்லி விடுங்கள்..!! என்னிடம்.....போனில்..  மகேஷ்.. என்ற சுமார் 22 வயது இளைஞர்......சரி..!??தனியாவா போறீங்க..?!? போய்ட்டு வேலையை முடிச்சுட்டு.. சென்னைக்கு போகும் போது சொல்லி விட்டு செல்லுங்கள்..இது நான்..!

       மறு நாள்..மதியம் சுமார் 3 மணிக்கு..சார்.. நான் உங்களை அவசியம் பாக்கணுமே..!! மீண்டும் மகேஷ் போனில்...என்னிடம்..!?!..பரவாயில்லை..”மகேஷ்.. நீங்கள் கிளம்புங்கள்”....என்றேன் நான்...! இல்லை சார்... நான் அவசியம் உங்களை பார்த்தே ஆக வேண்டும்...!!  நாளைக்கு காலையில் தான் சென்னை செல்கிறேன்....! கொஞ்சம் பிடிவாதமும்..குரலில் தழு தழுப்பும்  மகேஷின் குரலில் இருந்தது. ...!!

       அதற்கு மேல்  நான்..மறுக்க வில்லை, அந்த பேரூராட்சியின் பஸ் ஸ்டாண்டுக்கு சுமார் 5 மணிக்கு வந்து விடுங்கள் என்றேன்..!! சரியாக.. 5 மணிக்கு.. எனக்கு மீண்டும் மகேஷின்..போன்... ”சார் நான் வந்து விட்டேன்”....! சென்று..மகேஷை அழைத்து ஒரு தேனிர் கடையில். நிதானமாக அமர்ந்து..திண்பண்டமும் டீயும் குடித்த போது..மகேஷின் கண்களில் கண்ணீர் வழிந்தது..! என்னை .."பார்க்க"..மிகுந்த பிரயாசை பட்ட மகேஷுக்கு இரண்டு கண்ணிலும் பார்வை சுத்தமாக தெரியாது..!!

      கருவிழி பார்வை இழப்பு என்னும்..தீர்க்க இயலா குறைப்பாட்டினால்...மகேஷ்.. சிறுவனாக இருக்கும் போதே பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுமார் 16 வயதில் முழுவதுமாக பார்வை போய்விட்டது..! பார்வை மட்டுமல்ல அவரின் தாயாரும் நோய் வாய் பட்டு இறந்து விட்டார்..! இதற்கு இடையில் அவரின் மூத்த  இரு சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி சென்று விட்ட நிலையில்.. இருண்ட உலகில்..மகேஷ்.. தந்தையுடன் தனிமை படுத்தப் பட்டார்..!!

     தனியார் போக்குவரத்து பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றிய..மகேஷின் தந்தை.. அதில் ஓய்வு பெற்று குடி நோயாளியாகி..வருமானம் எதுவுமின்றி...கண் தெரியாத மகனால் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலையில்..சுய இரக்கம் மேலோங்கி..மன தடுமாற்றம்..சம நிலை இழந்து..எப்போதும் மகேஷை திட்டி.. கொடுமைப் படுத்தும்..குருட்டு நிலைக்கு ஆளாகி..கையில் சிகரெட்டால் சூடு வைக்கும் அளவிற்கும்.. சென்று விட்டார்..!!??!!..இத்தனைக்கும் மகேஷ் தனக்கு கண் பார்வை முழுமையாக போகும் வரை பூக்கடையில் பூக்கட்டி ஓரளவு...தந்தைக்கு  சம்பாத்தித்து கொடுத்தவர் தான்..!!

      என்ன செய்ய...மகனுக்கு பார்வையிழப்பு...தந்தைக்குக்கு..குடிக்கான வருமானம் இழப்பு..??!!? அப்போது தான் மகேஷ் எனக்கு அவரின் உறவினர்களால் எனக்கு  அறிமுகப்படுத்தப் பட்டு, உதவிசெய்யப் பட கேட்டுக் கொள்ளப் பட்டார்.

     அதன் பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து சென்று ஊனமுற்றோர் அடையாள அட்டை, ஊன்று கோல், கண்ணாடி என பெற்று, சென்னைக்கு பயணமாகி, ஊன முற்றோருக்கான ஒரு விடுதியில் தங்கி, பின்னர் அவர்களுக்கான மத்திய நிறுவனத்தில் பிரம்பு பின்னும் பயிற்சி பெற்று..கிடு கிடு வென அவரின் கிராபிக் முன்னேற்றத்தை நோக்கி ஏறியது..!!

      இடையில் தான் படித்து இடை நிறுத்தம் செய்யப்பட்ட ஒன்பதாம் வகுப்பிற்கு பிறகு, அதன் தொடர்ச்சியில் பத்தாம் வகுப்பு படித்து, துணை ஒருவருடன் எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று விட்டார்.! இடையில் எனது முயற்சியில் அவருக்கான வங்கி கணக்கு திறக்கப் பட்டு, மாதாந்திர ஊனமுற்றோருக்கான உதவித் தொகையும் பெறத் தொடங்கினார்..!!..தந்தை..குடிகார  தத்தியாக இருக்கும் வருத்தம் மகேசுக்கு.. இல்லாவிட்டால் அவரையும் தன்னுடன் அழைத்து சென்று சென்னையில் வைத்து கொள்ள ஆசை..!

      சென்னைக்கு பஸ் ஏறுமுன்... நான் மகேஷிக்கு  ஆறுதலாக கூறினேன்...”மகேஷ் கொஞ்சம் நாள் கழித்து நமது மாவட்டத்திலேயே உனக்கு வேலை வாங்கி தந்து திருமணமும் செய்து வைக்கிறேன் கவலைப் படாதே”..சரி சார் என்றவர்...சிறிது வெட்கத்துடன் புறப்பட்டு சென்றார்..!

      பிறக்கும் போதே கண் பார்வையற்றவர்களின் நிலை வேறு..! அவர்கள் எதையும் எதனுடனும் ஒப்பிட இயலாதவர்கள்...அது தனி இருட்டு உலகம் அதற்கு அவர்கள் பழக்கப் பட்டு போயிருப்பார்கள்..! ஆனால் சிறுவனாக துள்ளித்திரிந்து..அனைத்தையும் பார்த்து...அந்த உலகம் .. கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக மங்கி.. போவது ம்கா வேதனை..அந்த தன்னிரக்கத்தை எதைக் கொண்டும் ஒப்பிட முடியாது..!!

கடவுள் குருடன் முன் தோன்றி உனக்கு..வேண்டியது பார்வையா..?? அல்லது உலகின் மொத்த செல்வமுமா..?? எனக் கேட்டால் அவன் பார்வையைத்தானே பரிசாக கேட்பான்..!! குருடனிடம் என்ன வேண்டும் எனக்கேட்கும் கடவுளும்..கடவுளிடம் தனக்கு பார்வை வேண்டாம்.. என சொல்பவனும்.. பரஸ்பரம் இருவருமே...குருடர்களாகத்தானே இருக்க முடியும்..??!!?? அது போகட்டும்..!

           சென்னைக்கு புறப்பட..இரவு பத்து மணி புகைவண்டிக்கு காத்திருக்க.......இரயில் நிலையத்தில்..ஆளரவமற்ற..பெஞ்சில் இருட்டில் படுத்துக் கிடந்தேன்.. என் நினைவெல்லாம்..தூரத்து உறவினர் ஒருவர்..எனது உதவியால் வெளி நாடு சென்று..தானாகவே..தனக்கு கற்பித்துக் கொண்ட வருத்தத்தினால்.. நன்றி மறந்து.. சுமார் 2 வருடங்களாக பேசாது இருப்பதை யோசித்துக் கொண்டு..அவர் திரும்பி வந்தால் என்ன மாதிரி நான்  நடந்து கொள்ள வேண்டும் என்ற பழி வாங்கும்...”குருட்டு” எண்ணத்திலும்......அது தொடர்பிலும் சிந்தனையை செலுத்திக் கொண்டிருந்தேன்..!!?!

        இடுப்பு வலியினால் ஒருமாதிரி..இயல்பு நிலையில் இல்லாமல் வளைந்து அசாதாரணமாக..யாரும் இல்லை என்ற தைரியத்தில்..கண்களை மூடி படுத்து கிடந்தது..எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை... !!திடிரென்று..ஒரு குரல் வெகு அருகாமையில்... ”அய்யா உடம்புக்கு எதுவுமில்லையே..?? நெஞ்சு வலியா..?? ஒருமாதிரி படுத்திருக்கீங்களே..??!! தண்ணீர் பாட்டில் இருக்கிறது வேண்டுமா”..?? என்று...பதறியது....!?! கண் விழித்து பார்த்தால்.. 35 வயது மதிக்கத் தக்க ஒருவர் தனது பத்து வயது மகனுடன்...கையில் ஒரு பையுடன்  நின்று கொண்டிருந்தார்...!!

       நான் படுத்திருந்த கோலத்தை கண்டு..என்னவோ ஏதோ..எனப்  பதறி அவ்வாறு கேட்டிருக்கிறார்..?? நான் சுதாரித்து..எழுந்து.. ஒன்றுமில்லை சாதாரணமாகத்தான் படுத்திருக்கிறேன்.. நன்றி..என்றேன்...!!..அவரும் தயங்கி.... தயங்கி.. உங்களுக்க் ஒன்றுமில்லையே.. !!...நான் போகலாமா..?? என்று  தூரத்தில் பதிவு செய்யப் படாத கம்பார்ட்மெண்ட் பெட்டி    நிற்கும் இடம் நோக்கி....இரயில் நிலையத்தின் எல்லைக்கு....என்னை  திரும்பி... திரும்பி பார்த்து  கொண்டே சென்றார்..!

      ஒரு சில நொடியில் நான் சிறுமையாக உணர்ந்து..ஏதோ நோய் வாய் பட்டும்....பார்வை இழந்தும்.. அதில் இருந்து  மீண்டது போல உணர்ந்தேன்...!

      குருடானவர்களுக்கு உதவுவது மனித இயல்பு...அதில் ஒன்று மிகப்பெரிய ஆச்சரியம் இருக்க போவதில்லை.....எண்ணம் குருடாவதற்கு முன்னமே..அவ்வாறு ஆகா வண்ணம் தடுத்தாட் கொள்வது....அதுவும் இரக்க குணம் உள்ள எளிய மனிதர்கள்... அதனை செய்து முடிப்பது..!?..இன்னும் சிறப்பானது தானே...!

       என்னை அவ்வாறே....என் குருட்டு சிந்தனையில் இருந்து....அதன் தொடர்ச்சியில் இருந்து ..மன குருட்டு.. எதிர் மறை எண்ண... நோய்மையிலிருந்து  மீட்டு..காப்பாற்றிய ......அந்த ஆளரவமற்ற இரவில்  பதறி நின்றவரும்..அவரின் மகனும்.. ஒரு மருத்துவர்களாகவே என் நினைவில் பதிந்துவிட்டிருக்கிறார்கள்..!! மீண்டும் மகேஷை சந்திக்கும் போது.... அவர்களும் சேர்ந்தே எனக்கு தெரிவார்கள்..!!?!

நாக.பன்னீர் செல்வம்...    Naga.Panneerselvam













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக