புதன், 2 நவம்பர், 2016

ஆவாட்டு..பதம்..!!

   
      சமீபத்தில்..வேறு வழியில்லாமல்..மற்ற எவரையும் போல.. அரிசி வாங்க கடைக்கு சென்று, 43 இருக்கிறதா..? என்றேன்..அவரோ இல்லை...37 தான் இருக்கிறது..! என்றார். எனக்கோ..கொஞ்சம் ஜர்க்காகி விட்டது..!!
     ஆடுதுறை 43 எனும் அரிசி இரகம் சாப்பாட்டிற்கு நன்றாக இருக்கும்.. குறிப்பாக அசைவ உணவிற்கு... மீன் குழம்பு..கறி குழம்பு, கோழி குழம்பு.. இவற்றிற்கு ஏதுவாக..!ரொம்ப சன்னமாக இல்லாமல்..ரொம்ப மோட்டாவாக இல்லாமல்..! சுவை.குழம்புடன்.. பொருந்த கூடியதாக...மறு நாள், பழைய சாதத்திற்கும் ஏற்றதாக..நன்றாக இருக்கும்...!!
      சுருக்கமாக சொன்னால்..வடித்து்..அவ்வப்போதும்..மற்றும் வைத்திருந்து.. மறு நாளும்,.. சாப்பிடும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு...43 இரகம்..!அந்த, அந்த..வேளைக்கு மட்டும்..சூடாக..சமைத்து சாப்பிடும் மேட்டுக் குடிக்கு.. பிபிடி, பொன்னி, வெள்ளை பொன்னி..மற்றும் தற்கால கிச்சன் பிரான்ட் வகைகள்..!!
      ஆடுதுறை 31  நெல் இரக வரிசையில், வந்த 43 க்கு, அடுத்தபடியாக வந்த இரகம் ஆடுதுறை 46. இது கொஞ்சம் தடிமன் அதாவது மோட்டா..!!    
     சாப்பாட்டிற்கு அவ்வளவாக நன்றாக இருக்காது..!  இட்லிக்கு உதவும்..!இது வ்ரை.. வராத ரகமாக 37 என்கிறாரே..?என்று குழம்பிய எனக்கு பின்னர் தான் தெரிந்தது...கடைக்காரர் என்னிடம், கூறியது..அல்லது வழக்கமாக, அனைத்து அரிசி வாங்க வருபவர்களுக்கும்..கூறிக் கொண்டிருப்பது..விலையை... !!..நான் வாங்க நினைத்தது இரகத்தை.....!! நான், சற்று இந்த விஷயத்தில், பின் தங்கி இருப்பது அப்போது தான் தெரிந்தது..!
      அதாவது அரிசியின் இரகம் என்ன என்பது தெரியாமலேயே.. அரிசி விற்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.. வெறும் விலையை மட்டுமே அடையாளமாக கொண்ட அரிசி வணிகம்....இதர  நுகர்வு பொருட்களை போலவே.. அனைத்து இடத்திலும்...!சோறுடைத்த சோழ நாட்டிலும் கூட..!
     சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சற்றும் நினைத்துக் கூட பார்க்க முடியாத.. நிலைமை இது..ஐஆர் 8, ஐஆர் 20, ஆடுதுரை 31, டிகேம் 9, சிஆர் 1009 என வகை வகையான நெல் இரகத்தினையும் அதன் தனித் தனி பண்புகளையும் மக்கள் அறிந்திருந்தினர்.. !
     அதிலும் டிகேஎம் 9 என்னும் சிவப்பு அரிசி அவ்வளவு சுவையாக இருக்கும்...! முதல் நாள் வடித்த சோறு...மறு நாள் காலையில் பழையதாக சாப்பிடும் போது...ஒரு கை சோற்றை எடுத்து...அதில் உள்ள தண்ணீர் போக..பிழிந்து.. உருட்டி பிடித்தால்..திரும்ப அதே வேகத்தில்..தானும் விரிந்து..முண்டும்..! அவ்வளவு மேட்டா..! வயிறு  நிறைந்த திருப்தியும்...உழைக்கும் விவசாய பெருமக்களுக்கு, பின் மதியம் வரை.. இது பசியை தாங்க கூடிய வகையில் ஏற்ற இரகமாக இருந்தது..!
      ரேஷனில் அரிசி வழங்க ஆரம்பித்த  நிலையிலும், மற்றும்  கடைகளில் சிப்பமாக..அரிசி இரகம் பிராண்டுகளாக..செம்பருத்தி, நந்தி, கிச்சன் பிராண்ட் என மாறிய பிறகு.. இந்த இரகம் குறித்தான பார்வை மக்கள் மத்தியில் அழிந்து..விலை குறித்தான அடையாளம்  மட்டும் வந்து விட்டது..!!
     அதிக பட்சமாக சன்ன அரிசி அதன் விலை...அல்லது குண்டு அரிசி அதன் விலை..!! அவ்வளவே..!
     விவசாய பின்புலத்திலும், நெல் ஆராய்ச்சி நிலையத்தின் அருகாமை வாழ்வும் கொண்ட எனக்கு, தெரிந்த அரிசி இரக விபரங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டும் என, நான் கூற வரவில்லை...!..
       மாறாக கடைக்கு சென்று அரிசி வாங்குவதை கவுரவ குறைச்சலாகவும், தரித்திரம் மிக்க செயலாகவும் கண்டு, ஓடி...ஒளிந்து.. மறைந்து...மக்கள், அரிசி வாங்கியதையும், கடையில் வாங்காமல்.. இரவலாக, மரக்கால், படி கணக்கில் அண்டை அயலாரிடம் வாங்கியதையும், அதனை திரும்ப கொடுத்ததை...வீட்டு மனப்பான்மையை.. கண்டு வளர்ந்ததால் வந்த நினைப்பு இது..!!
       நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, நெல்லை முதல் நாளே, ஊறவைத்து, நெல் அளவுக்கு ஏற்ப, குடும்ப உறுப்பினர்களின் எண்னிக்கையை பொறுத்து அண்டா,குண்டாக்கள் வேறு படும்..!! சிறிய குடும்பம் என்றால் இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் நெல் ஊறும்...! இல்லை யென்றால்..இரவல் வாங்கிய பெரிய பாத்திரங்களில்..!!
      நெல்லை ஊறவைக்க தண்ணீர் ஊற்ற உதவும்,   நாங்கள்,  இரவில் தூங்கி எழுந்தவுடன், காலையில் பார்த்தால், வீட்டு ஆத்தாக்கள், கொல்லையில், செங்கற்களை கொண்ட, தற்காலிக அடுப்பில், ஊறிய நெல்லை அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே எழுந்து, வேகவைத்து..எடுத்து கொட்டி..அதன் அருகில் கால்களை நீட்டிக்கொண்டு, நெல் வேகவைத்த  அடுப்பிலேயே, கறந்த பாலை கொண்டு காபி தண்ணீர் வைத்து, குடித்து கொண்டு..கதை பேசி கொண்டிருப்பார்கள்...!
     அதிகாலையிலேயே... நாங்கள் எழும் முன்.இரகசியமாக... இரண்டாம் பேருக்கு தெரியாமல்...நெல்லை,அவித்ததை,..ஏதோ சாதனையை நிகழ்த்தியது போன்று அலட்சியமாக..தெனாவெட்டாக, பெருமை பொங்க, எங்களை பார்ப்பார்கள்..!?!
     பள்ளி செல்லும் முன், வெந்த நெல்லை, அள்ளி, கோயிலின் உட்புறம், அறைவை மில்லின் பெரிய களம், ஈச்சம்பாய் அல்லது வெள்ளை யூரியா சாக்கு பையினால் தைத்த படுதாக்கள் இவற்றில் காயவைக்க வேண்டும்..!!
ஒரு சில சமயங்களில் இந்த நெல் அவிப்பு மற்றும் அறைப்பு படலம்.. பள்ளிக்கு செல்ல கால தாமதம் ஆகி..அதற்கு, மட்டம்  போடவும் வழி செய்யும்..!
      பின்னர் தான், அந்த பிராசஸ்.. மதியம் 12 மணியளவில் தொடங்கும், அதாவது, இந்த கட்டுரையின் தலைப்பான...ஆவாட்டு பதம்..!! வேகவைத்த நெல்லை அரை பதத்தில் காயவைத்து, அள்ளி, கட்டி வைத்திருந்து, பின்னர் 2 அல்லது.. ஒரு சில நாட்கள் கழித்து, வேறு ஒரு நாள், (வீட்டின் அரிசி இருப்பை பொறுத்து..!) அதனை திரும்ப, காய வைத்து, மில்லில் அறைக்க வேண்டும்..!
      இவ்வாறு அறைக்கும் அரிசி இடிந்து விடாமல், அதாவது நொறுங்கி, நொய்யாகிவிடாமல் தடுக்க, அவித்த அன்று, காயவைத்து, அள்ளும் நெல்லை மிகுந்த கவனமுடன்..பதம் பார்த்து அள்ள வேண்டும்..! அதுதான்...அதாவது ஆவாட்டு பதம்..!! அது பெண்களின் உலகில்.. பெரிய இரசவாதத்திற்கு ஈடானது..!!
     கையால் கிண்டுதல், காலினால் கிண்டுதல் போன்ற நெல்லை காயவைக்கும்,கவனமான பணிகள்,ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக முடிந்தவுடன், ஆவாட்டு பதம் கைதேர்ந்தவர்களால், (வேறு யார்  ஆத்தாக்கள் தான்..!) பார்க்கப் படும்.! அவர்களும், வாயில் போட்டு மென்று, கண்ணை மூடி, கடித்து பார்த்து,  திடிரென...அலறுவார்கள்..! “ஓடு..உடனே அள்ளு”..!! அல்லது கொஞ்சம் நேரம் இருக்கட்டும் என அசரீரி அருள்வாக்கு சொல்லி..கட்டளை இடுவார்கள்..!
       இந்த ஆவாட்டு பதத்தின்.. ரிசல்ட்..பின்னர் நெல்லை அறைக்கும் போது,தெரிய வரும்...அதாவது அரிசி உடைந்து  நொய்யாகி விடாமல்..முழு அரிசியாக மொழுப்பாக வரும் போது...இந்த ஆவாட்டு பதம் அதனை பார்த்தவர், இவற்றைக்  கொண்டு, சமயங்களில்  சிலாகிக்கவும்  படும்...!
நெல் அறைத்து, சமயத்தில்..அது நொய்யாகி.. இடிந்து போனால், துக்க நிகழ்வு போல, பெண்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கடு கடுவென இருந்த காலமும் உண்டு..!
     அறைக்கும் பதம் என்றும் ஒன்று உண்டு..அதனை பெரும்பாலும் அறைவை மில்லின், டிரைவரிடம் காட்டப் பட்டு.. நெல் அள்ளப் படும்..!!
சமீபத்தில் அனைத்து கிராம, நகரங்களிலும் இயங்கி வந்த, பத்து நெல் அறவை இயந்திரங்களில் ஒன்று தான் இயங்குகிறது..! அதிகம் மக்கள் வராததும்..கரண்ட் செலவு கட்டுபடி ஆகாததும் இந்த இடத்தை வேறு பணிகளுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதுமான காரணங்கள் தான் அவை..!
      தன் வயலில், தான் தேர்ந்தெடுத்த இரக நெல்லினை பயிரிட்டு, விளைவித்து, அறுவடை செய்து, பின் பத்தாயம், குதிர் போன்றவற்றில் சேமித்து, வேகவைத்து, காயவைத்து ஆவாட்டு அறைவை பதத்துடன், நெல்லை  புழுங்கல் அரிசியாக்கி..வாசனை மற்றும் ஆரோக்கியத்துடன், வாழ்வியலுக்கான உன்னத ஜீவனுடன் சாப்பிட்டு வந்த...அந்த ஆத்மார்த்தமான புனித உணவின் காலம் மலையேறி விட்டது..!!
      கடையில் சிப்பமாக, பிராண்ட் ஆக வாங்கிய அரிசி மனிதனின் உன்னத உணவு என்பதற்கு பதிலாக...அவனின்..தீவனமாக மாறிவிட்டது..!
      கிராமத்து ரைஸ் மில்கள், ஒவ்வொரு கிராமத்தின் தொழில், மின்சாரம், இயந்திரம் சார்ந்த தொழிலுக்கான..விவசாயம் தவிர்த்த, முதல்அறிமுகமாக, பிள்ளையார் சுழியாக ,மக்களுக்கு இருந்தது..!
      அறவை மில்களின் களத்தில் மர நிழலில் நெல்லை காயவைத்து, உரையாடிய பெண்கள், கரண்ட் இல்லாத நிலையில் பல மணி நேரம் காத்திருந்து , கதை பேசி,இந்த காத்திருப்பில் நெல் இடிந்து விடக்கூடாதே, என கவலை பட்ட பெண்களும்,
     நெல் அளவை குறைத்து சொல்லி, அதாவது அறவை, கட்டணத்தை  மிச்ச படுத்த, பொய் சொல்லி, எப்போதும் சண்டையிடும்..வாயாடி பெண்கள், காதலர்கள் மறைமுகமாக சந்திக்க, பேசிக் கொள்ள, அதாவது நெல் அறைக்கும் சாக்கில்..!! தெரு பிரச்சினைகள், கிராம பிரச்சினைகள்...எங்க ஊருக்கு,  நீ மில்லுக்கு நெல் அறைக்க வருவயில்ல..?? அப்ப பாத்துகிறேன்.. !?!...என்ற மிரட்டல்களும், அறைவை மில்லின் இயந்திர அந்த சத்தமும், தவிட்டு வாசனைகளும்...இனி ஒருபோதும் காணக் கிடைக்காதவையே..!!
       காணாமல் போன சினிமா தியேட்டர்களை போன்றே,  எவ்விதத்திலும் குறைவில்லாத, நினைவுகளையும் சோகத்தையும், அதனை காணும் போது..ஓயாமல்,தரவல்லது...இன்று..ஓய்ந்த போன அந்த அறவை மில்கள்....!அத்துடன் மறைந்து போன அந்த நெல் அவிக்கும் வாசனையும்,  ஆவாட்டு பதமும்..அதனை செய்து வந்த ஆத்தாமார்களின்  நினைவும்..!!?!!

நாக.பன்னீர் செல்வம்
   

                                                                                                                                                                       







2 கருத்துகள்: