சனி, 29 அக்டோபர், 2016

நெருப்புச் சட்டியில் வளரும்...ரோஜா செடிகள்..?!?...

தமிழ் சினிமாக்களிலும், தொலைக் காட்சி தொடர்களிலும், பெண் குழந்தைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று வரும் வரை..தான்...வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பதாக தாயார்கள் புலம்பும் காட்சியை.. சாதாரணமாக கண்டிருப்போம்... !

ஆனால் கடுமையான குளிரை போக்க.. வயிற்றில் எப்போதும் “காங்கர்” எனும் நெருப்பு சட்டியை கட்டிக் கொண்டு, நடமாடி..பழக்கப் பட்ட,...காஷ்மீரின் தாய் மார்கள், இராணுவம், போலிஸ், குண்டு வெடிப்பு,கடையடைப்பு, ஊரடங்கு, தற்கொலை தாக்குதல், கண்மூடித்தனமான, தீவீரவாதம், மதவாதம் இவற்றிற்கு இடையில் தங்கள் குழந்தைகள் பள்ளி சென்று திரும்பும் வரை, அனுபவிக்கும் வேதனையை எந்த வார்த்தைகளால்..எடுத்துரைக்க முடியும்..??

     ஜம்மு&காஷ்மீரின், போர்ட் ஆப் ஸ்கூல் எஜிக்கேசன், சுமார் 500 க்கும் மேற்பட்ட, அதன் பள்ளிகளில், இந்த நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தனது வழக்கமான வருடாந்திர தேர்வுகளை  10ம் வகுப்பிற்கும், மற்றும் நவம்பர் 15 முதல் டிசம்பர் 3 வரை, பனிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தியாக வேண்டும்..!!

     ஆனால் நிலைமையோ வேறு விதமாக இருக்கிறது..!! ஹிஸ்புல் முஜாகிதீன் பிரிவை சார்ந்த..பிரிவினைவாதி புர்கான்வாணி கொல்லப் பட்ட பிறகு, கடந்த ஜூலை மாதம் 9 தேதிக்கு பிறகு... அனைத்து பள்ளிகளும், இந்த அழகிய பள்ளத்தாக்கில் மூடப் பட்டிருக்கின்றன..!!


     வேறு கவலைக்குரிய விஷயமும் இருக்கிறது...!! சுமார் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள்,பல் வேறு பகுதிகளில்  தீ வைத்து கொளுத்த பட்டிருக்கிறது..!! பிரிவினை மற்றும் மதவாதிகள்.. கிராமத்து குழந்தைகள், பள்ளிக்கு சென்று படிப்பதை விரும்பாமல், அவர்களை தடுத்து.. மதக்கல்வியை புகட்டவும் ஜமாத் பள்ளி மற்றும் மதரசாக்களில் மட்டுமே.. அவர்களை படிக்க வைக்கப் படுவதில்....ஈடுபடுத்துவதில் குறியாக இருக்கிறார்கள்..!!?!

     மத்திய அரசின், உள்துறை அமைச்சகம் , இவ்வாறு மூடப்பட்ட அனைத்துக் கல்வி நிலையங்களையும் மீண்டும் திறக்க வைக்க ஜம்மு & காஷ்மீரின் காவல் துறையிடம் செயல் திட்டம் ஒன்றை கேட்டிருக்கிறது.. இவ்வளவு நாட்கள் கழித்து திறக்கப் பட்டாலும், விடுபட்ட கல்வி நிலையில் அதனை பெறுவதிலும்.. நார்மலான நிலைக்கு வரவும்...மாணவர்கள்...பாவம்.. மிகவும் சிரமப் படுவர் என்பதே உண்மை...!

       காவல் துறையோ, சட்ட ஒழுங்கை பராமரிப்பதிலும், தீவீரவாதம் சம்பந்தப் பட்ட நிகழ்வுகளை கண்காணிப்பதிலும் பெரும்பான்மையான காவல் துறை சக்தி பயன்படுத்த படுவதால்...ஓவ்வொரு பள்ளியிலும்..காவல் துறை அலுவலர்கள்.. நின்று கண்காணித்து ...பள்ளிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று கைகளை விரிக்கிறது...!!

      வேண்டுமானால் கல்வித் துறை, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கடை நிலை ஊழியரை எந்த நேரமும் பணியில்  இருக்க செய்து...விரும்பதாக சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்துக் கொள்ளட்டும்....என யோசனை தெரிவிக்கிறது...??!!!

       மேற்கண்ட அனைத்து அவலத்திற்கும் இடையில் ஒரு வெளிச்ச கீற்று காஷ்மீர் பள்ளத்தாக்கில்.. கல்வி சம்பந்தபட்ட, இந்த  அவலத்தை போக்கும் வகையில் வந்து...உன்னத நிலையில் பரவியும் கொண்டிருக்கிறது...!! அது தான்...இந்த கட்டுரையில் நோக்கமே..!

     ஆமாம்...! ஹர்த்தால் ஸ்கூல் (ஊரடங்கு பள்ளிகள்) எனும் பொருள் பட, படித்த கல்லூரி மாணவியர், இதர படித்த ஆசிரியர்கள் உதவியுடன், தங்களது வீடுகளில், கட்டணதொகை எதுவுமின்றி, தங்களுக்கு தெரிந்த பாடங்களை அண்டை அயலாரின் குழந்தைகளுக்கு சொல்லி தருகின்றனர்..!!

      பள்ளிக்கூடங்களை போலவே...தனியார் டியூசன் செண்டர்களும் மூடப்பட்ட நிலையில்... இந்த ஹர்த்தால் பள்ளிகள்.. மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது..!!

     நைரா நூர், வயது 24, கணக்கை முதன்மைபாடமாக, ஹஸ்ரத்பாலில் உள்ள செண்டர் யுனிவர்சிட்டியில் படித்தவர், அருகாமையில் வசிக்கும் ஒரு சில பெண் குழந்தைகளுக்கு கணக்கு பாடம் மற்றும் சொல்லி கொடுக்க ஆரம்பித்து..சமூக சேவை உணர்வில்...பின்னர் அனைத்து பாடங்களயும் எடுப்பவராக, பல்வேறு அக்கம் பக்க பகுதிகளில் இருந்து வந்து , பெற்றோர்கள்..தங்கள் குழந்தைகளுக்கும் பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க.. இந்த பள்ளியை...தன் வீட்டிலேயே நடத்தி வருகிறார்..!!

      நெடு நாட்களாய் மூடப் பட்ட பள்ளிகள், அடிப்படை வசதிகள் இல்லாத, மூடப் பட்ட, செல்ல  அனுமதி இல்லாத சாலைகள், தகவல் தொடர்புகள் இல்லாத, தடுப்புகள் வைக்கப் பட்டுள்ள தெருக்கள், ஊரடங்கு உத்தரவு என...ஏறத்தாழ சிறைச் சாலையில் இருப்பது போன்ற உணர்வில் உள்ள, குறிப்பாக பள்ளி செல்லாத குழந்தைகளின், சோர்வுற்ற.. பின் தங்கிய மன நிலையில்,

     இவற்றை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்காமல், என்னால் இயன்ற வகையில், ஆசிரியராக உள்ள தனது தந்தையின் உதவியுடன், தனது படிப்பையும் தொடர்ந்து கொண்டு... இந்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வரும் உன்னத பணியை செய்கிறார்.. நைரா நூர்...! இதற்கென தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கியும் இருக்கிறார்...!!

      இவறை போலவே, மஸ்ரத் கான், வயது 27, தன்னுடன் படித்த பல்வேறு இளம் பெண்களின் உதவியுடன், அருகில் உள்ள பகுதிளில் இருந்து வரும் சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, சமூக கூடத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார்...!! நாங்கள் முறையாக ஆசிரிய பணிக்கு ஏற்புடையவர்களா..? என்பது தெரியாது.. ஆனாலும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதிலும்....பள்ளிக்கு வருவது போலவே அவர்களும்..புத்தகப் பைகளை சுமந்து வருவதிலும்....ஆர்வமுடன் கற்பதும்....கோரசாக பாடல்கள் பாடுவதை கேட்ட மிகவும் ஆனந்தமாகவும் ஆத்ம திருப்தியாகவும் இருக்கிறது..!! என்று சொல்லும் இவர்களும் எவ்வித கட்டணமும் வாங்குவதில்லை....!! கட்டணம் கொடுக்கும் அளவிற்கு சூ்ழ் நிலையும் இல்லை....!!

     ஸ்ரீ நகரில் மட்டுமல்லாது, இது காஷ்மீர் & ஜம்முவின் பல பகுதிகளிலும், பல்வேறு ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் இவர்களை கொண்ட ஹர்த்தால் ஸ்கூல் எனும் தன்னார்வ.. இயக்கமாக பரவி வருகிறது...!!

      வெறும் பெண் குழந்தைகள் மட்டுமே பங்கு கொள்ளும் ஹர்த்தால் பள்ளிகளும் உண்டு..!! இதனால் பொது தேர்வுக்கு தயார் ஆகும் நிலையில், ஓரளவிற்கு அனைத்து பள்ளி பாடங்களை இந்த ஹர்த்தால் ஸ்கூலின் வழியாகவே முடித்து, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், எண்ணற்ற மாணவ மாணவியர் உள்ளனர்..!

     வன்முறையும், தீவீரவாதமும் தலைவிரித்தாடும் இந்த காஷ்மீர பூமியில், புதிய வகையில்.. மாற்றுச் சிந்தனையுடன், துணிச்சலாவும்,பிரகாசமாகவும், இந்த மண்ணின் மாணவ மாணவியர்,  புதிய உத்வேகத்துடன்...கல்வியை பெற்று வருவது..புதிய யுகத்தின் புதிய விடியலாகவே பார்க்கப் படுவதாக, சமூக அறிஞர்களும்,கல்வியாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்..!!

     காஷ்மீர் யூனிவர்சிட்டியின், முன்னாள் பேராசிரியர், அப்துல் அஜீஸ், கூறுகையில், “ கற்றல் எந்த சூழ் நிலையிலும் தடைபடக்கூடாது...பாலஸ்த்தீனத்தில் பல ஆண்டுகளாக போர்களும் கலவரங்களும் இருந்து வந்த போதிலும்..அவர்கள் கற்பதை கைவிடாத சமூகமாக தொடர்ந்து, கற்று... முன்னேறியும் வருகிறார்கள்..!! எவ்வித அக்னி பரிட்சைகள் என்றாலும்.. துயரங்கள் என்றாலும் .அதிலிருந்து சமூகம், கற்று முன்னேறி வரவேண்டும்..” என்கிறார்...!!

       இனி தமிழ் நாட்டின் ஒரு செய்தியை பார்க்கலாம்...! திண்டுக்கல் மாவட்டத்தில், 60 நாட்களில், 20 மாணவியர் மாயமாகி விட்டனர் என்ற இன்றைய செய்தி, வேதனையை தருகிறது..!! காஷ்மீர் நிலையை ஒப்பிடும் போது நம் தமிழ் நாட்டின் கல்வி பெறும் வாய்ப்பு... நிலை..குறிப்பாக பெண்களுக்கு..?? என்ன குறை கண்டோம்..!

       ஆண்களுக்கு கல்வி கொடுத்தால்...குடும்பம் முன்னேறும்...!!பெண்கள் கல்வி பெற்றால் சமூகமே முன்னேறும்....!! கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல..  இதை தவிரவும், சுகாதாரம், சுற்று சூழல், உரிமைக் கல்வி,   நுகர்வோர் உரிமைக் கல்வி, தகுதியான பெற்றோராக இருப்பது, குழந்தை வளர்ப்பு,  இதற்கெல்லாம் மேலாக..சமூகத்திற்கும். உதவுவது...!!

      காஷ்மீரிலிருந்து நாம் தொலைவில் வேண்டுமானால், தூரமாக இருக்கலாம்...ஆனால் அதன் தற்போதைய மோசமான கடுமையான நிலையிலும்....கல்வி தாகத்தில்...குறிப்பாக பெண் கல்வி... துப்பாக்கிகளுக்கும், வன்முறைக்கும், மதவாததிற்கும், குண்டு வெடிப்புகளுக்கும் இடையில் அவர்கள் கற்பதை... கற்கவேண்டும்...!

நாக.பன்னீர் செல்வம்

     

 

     


   

   











வியாழன், 27 அக்டோபர், 2016

மானுடத்தை வெறிக்கும்...பச்சை கண்கள்...?!???


 ஏவிசி மயிலாடுதுறை கல்லூரி காலத்தில்..ரீடர் டைஜெஸ்ட் மற்றும் நேஷனல் ஜியாகிரபி புத்தகங்களை லைப்பரரியில் சென்று புகைப்படங்களை பார்த்து....படிக்கவும் முயற்சி செய்வதுண்டு...!! ஆங்கிலம் அவ்வளவாக புரியாத நிலையில் படங்களை பார்ப்பது அவ்வளவு தத்ரூபமாக....பிரமிக்கும் படியாக இருக்கும்..!!இத்தகைய புத்தகங்களை விலைக்கே, வாங்குவர்கள் கூட, என்ன காரணத்தாலோ, அதனை ஒரு போதும் தூக்கி போடவோ..எடைக்கு விற்கவோ  மாட்டார்கள்..! சேர்த்த வண்ணம் இருப்பர்...!அவற்றின் இனம்புரியாத வசீகரம் அப்படி.!!

அப்படித்தான் இந்த படத்தை நேஷனல் ஜியாகரபியின் புத்தக அட்டை படத்தில் கண்டதாக நினைவு...இதைத் தவிர இது குறித்து.வேறு ஏதும்..என்னால்  அறியப் படாத நிலையில்...பின்னர் இந்த புகைப் படத்தை எடுத்த.. ஸ்டீவ் மெக்ரே..என்பவர்..திரும்பவும் அதே பெண்ணை, 2002ம், ஆண்டு, மீண்டும் படமெடுத்தார் என்ற செய்தி.. மட்டும் காதில் விழுந்தது.

      சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பில், ஆப்கான்  இருந்து வந்த போது, 12 வயது பெண்ணாக, பாகிஸ்த்தான் அகதி முகாமில், ஸ்டீவ் மெக்ரே இந்த பெண்ணைக் கண்டு, இந்த புகழ்மிக்க போட்டோவை எடுத்து, அதுவும் நேஷனல் ஜியாகரபி புத்தகத்தில் அட்டைபடமாக வந்தது..மெக்ரே பலவித போட்டோக்களை ஆப்கான் மண்ணில் இருந்து எடுத்து வெளியிட்ட போதும் இந்த ஒரு புகைப்படம் 80களில் உலகில் புகழ் பெற்ற படமாக இருந்தது..!!

     ஒட்டு மொத்த ஆப்கானின் பெண்களின்,குழந்தைகளின் நிலைமையை, பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்த  அகதிகளை  எடுத்து காட்டும்...வெறித்த இந்த ஒரு ஜோடி கண்கள் உணர்த்திய உணர்ச்சிகள் ஏராளம்...!

      பல வித ஆர்ட் கேலரி, கண்காட்சிகளில் ,மக்களால் காணப் பட்டு,  மீண்டும் மீண்டும் தூரிகைகளால் வரையப் பட்டும் கொண்டிருந்தது..!! ஷர்பத் குலா என்ற பெண்ணை  மீண்டும் கண்டு, அவரை, இப்போதைய நிலையில் போட்டோ எடுக்க, அமெரிக்க புகைப் படக்காரரான, ஸ்டீவ் மெக்ரே, மீண்டும் ஆப்கான் பயணித்தார்..!! 2002 ஆம் ஆண்டு அவரை தேடியலைந்து, ஆப்கானின், தோரா போரா மலைப் பகுதியில் பஷ்தூன் மொழி பேசும் ஒரு பாரம்பரிய கூட்டத்தினர் மத்தியில் கண்டார்..!!

     அவரின் மொழியிலேயே... சொல்வதாக இருந்தால்..”காலமும் வாழ்வின் கடுமையும் அவரை வாட்டியிருந்தது,.. இளமை பொலிவு இழந்து, அவரின் தேகம், காய்ந்த தோலை போலிருந்தது..முகவடிவம் தனது கச்சிதமான அளவுகளை இழந்து.. தளர்ந்திருந்தன..! ஆனாலும்...அந்த பச்சை நிற வெறித்து நோக்கும் கண்கள் மட்டும் ஓளி இழக்காமல், தளராமல் இருந்தது...!!”

       மெக்ரே, இரண்டாம் முறை ஷர்பத் குலாவை சந்தித்தபோது...அவருக்கு திருமணம் ஆகி, மூன்று குழந்தைகளும் இருந்தனர்...அவரின் கணவரின் அனுமதியோடு அவரை வித விதமாக தனியாகவும் குழந்தைகளோடும் ஆசை தீர புகைப்படம் எடுத்தார் ஸ்டீவ் மெக்ரே..!!

      1984, 2002 ஆண்டுகளின் தொடர்ச்சியில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே உலக புகழ் பெற்ற  ஷர்பத் குலா எனும்  பச்சை கண் பெண்....பெசாவ்ர் எனும் பாகிஸ்த்தான் நகரில்,  போலி அடையாள அட்டை, ஆவணங்களுடன், பாகிஸ்தானில் தங்கி இருந்ததற்காக, பெடரல் இன்வெஸ்டிகேஷன் அத்தாரிட்டியினரால் கைது செய்யப் பட்டுள்ளார்..!! இதனை, இவர் போன்ற இதரர்களுக்கு வழங்கிய வகையில் இதற்கு உடந்தையாக இருந்த பாகிஸ்தானின் 18  அதிகாரிகளும் தண்டனையை எதிர் நோக்குகின்றனர்..!

      போலி தேசிய அட்டைகளை கண்டறியும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு மும்முரமாக உள்ளது.. இது வரை 9 கோடிக்கும் அதிக மான அட்டைகளின் விபரங்கள் மறுமுறை சரிபார்க்கப் படுகின்றன...!..60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அட்டைகள்..போலிகள் எனவும் கண்டறியப் பட்டுள்ளன..!

       வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், ஆப்கானின் 14 லட்சம் அகதிகளையும் அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறது..உலகிலேயே அதிக அகதிகளை உடைய 3வது நாடான பாகிஸ்தான்...!!

        ஒரு உலக அளவில் புகழ் பெற்ற பெண்ணாக இருந்தும், ஷர்பத் குலா, இருக்க இடமின்றி, தாயகத்தை துறந்து, தனது குழந்தைகளுடன் கைது செய்ய்பட்டுள்ளது....மனதை பிழிகிறது..!! இவர் செய்த குற்றம் உண்மை என நீருபிக்கப் பட்டால் கடுமையான அபராத தொகையுடன்.. சுமார் 14 வருட சிறைத்தண்டனையும் உண்டு...!!

      சுமார் 42 வயதை தாண்டிய, காலத்தின் கடுமையில், வாட்டி வதையுண்ட, தனது குழந்தை பருவத்தை அகதி முகாம்களில் கழித்த  ஒரு பெண், இப்போது.. தன் குழந்தைகளுடன்  இன்னமும் அதே மண்ணில்.. அமைதியை இழந்து..தனது கூரிய பச்சை கண்களால்.. இந்த மானுடத்தின் மார்பை வாளால் துளைப்பது போன்ற பார்வையில்...தனக்கு மறுக்கப் பட்ட மனித உரிமையை மீட்கமுடியா கையறு நிலையில்....வழக்கம் போலவே வெறித்து நோக்குகிறார்.......தான் கைது செய்யப் பட்ட போது எடுக்கப் பட்ட புகைபடத்திலும்....!!?!!

     அனைத்தயும் படைத்தவனை...பெருமையுடன்... ஐந்து முறை தொழும் மனித கூட்டமும், அவர்களின் சட்டமும் இந்த பச்சை கண்..வெறித்த பார்வைப் பெண்ணை நிம்மதியாக வாழவிடுமா..?? என்று தெரியவில்லை....!!

      கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லாவிட்டாலும்...இந்த பெண்ணுக்கு வாழ்வையும், நிம்மதியையும் அளிக்க.......வேண்டுகிறேன்....!!! எனக்காக இல்லாவிட்டாலும்....!!
      அல்லாவே....உனக்காக...தனது பாகிஸ்தான அடையாள ஆவணங்களுடன் 2014 ம் ஆண்டு மெக்கா சென்று....ஒரு முஸ்லீமாக.. வாழ் நாள் கடமையை நிறைவேற்றிய.......பச்சைகண்ணை மூடி உன்னை வணங்கிய...!

கேமரா மூலம் உலகையும்,....
உலகமும்,..தான், ..முதல் முதலாக.. கேமரா மூலம்...கண்ட....
அந்த 12 வயது.... பச்சைக் கண் சிறுமிக்காக..!!!
இதயத்தை வாள் கொண்டு,..அறுக்கும்..!!...அந்த.. பார்வைக்காக..!!

நாக.பன்னீர் செல்வம்














புதன், 26 அக்டோபர், 2016

நானும்....டெல்லியும்...இண்டர்வியூக்களும்........!! (2)

தென்னிந்தியர்களாகிய நாம், டெல்லியில் இண்டர்வியுக்களில் கலந்து கொள்வதற்கும்..வடஇந்தியர்கள் கலந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு...கால் மேல் கால் போட்டுக் கொண்டு.. சோபாவில் கைகளை நன்கு பரப்பி வைத்து.. மாப்பிள்ளை போல உட்கார்ந்து கொண்டு போனால் போகிறது என்று உன் வேலைக்கு வந்திருக்கிறேன்.. !!

மற்றபடி அது ஒன்றும் எனக்கு தேவையில்லை..!!?!! என் கிற மனப்பானமையில் திமிராக இருப்பார்கள்... நாமோ பதை பதைப்புடன்.. மே ஐ கமின் ....!! என்று சொல்ல வேண்டும்,..?!!! சிட் டவுன் என்று சொன்னால் மட்டுமே... உட்காரவேண்டும்... என டென்சனுடன்...பல் வேறு மனதயாரிப்புகளுடன் இருப்போம்...!! ஆனால் வந்திருக்கும், வட இந்திய இளைஞர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும்..!! ஆனால்.பொறுப்பின்றி இருக்கும் அவர்களுக்கு பெரும்பாலும் வேலை கிடைக்காது..!! தென்னிந்தியர்களை போல அடிமைகள் கிடைக்கும் போது அவர்களுக்கு எப்படி அது கிடைக்கும்...!!?!!

மேலும் ஃபைலில், அனைத்து சர்டிபிகேட்டுகளையும் வைத்து, வகைப் படுத்தி,திருப்பதி பிரசாதம் போல..  நாம்...கேள்வி கேட்பவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் கொடுப்போம்...என்னுடன் இண்டர்வியூக்களுக்கு வந்த பல பேர்...பேண்ட் பின் பாக்கெட்டில்....4 அல்லது 8 ஆக மடித்து வைத்திருந்து, அதனை, அப்படியே எடுத்து கொடுப்பர்...அது வேறு ஒன்றும் இல்லை...படித்த சர்டிபிகேட்டுகள் தான்...!!?!!

அப்புறம் நிருலாஸ் எனும் புகழ் மிக்க ரெஸ்ட் ராண்டில் கேஷியர் வேலைக்கு சேரந்தவுடன்...கன்னோட் பிளேஸ் சென்று, பழையவிலையில் கறுப்பு பேண்ட் வெள்ளை சர்ட் வாங்கி... யூனிபார்ம் தான் வேறென்ன...?? அதற்கு ஏற்றார் போல ஷூவும் வாங்கியாயிற்று...பணி  நேரம்...இரவு 7-00 மணி முதல் நள்ளிரவு 12-00 மணிவரை...அருகாமை , சாந்தி பாத்தின் தூதரகத்திலிருந்து பல வெளி நாட்டவர்கள் வாடிக்கையாக வருவதுண்டு....மேலும் நிருலாஸ் இருந்த பிரான்ச் வசந்த் விகார் எனும் மேல தட்டு மக்கள் வசிக்கும் பகுதி..கூட்டம் சும்மா...அள்ளிக்கொண்டு வரும்...வார இறுதி நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம்....!!!

எழுதிய டிகிரி..என்னவாயிற்று..? பாசா.. பெயிலா..!!? எத்தனை பேப்பர் அரியர் என்று தெரியாத நிலையில், ஆங்கிலம்...மை நேம் ஈஸ்.....என்று மட்டுமே , சொற்ப அளவில் அறிந்த, ஹிந்தி சுத்தமாக தெரியாத..21 வயது கிராமத்து இளைஞனாக அந்த வேலை...குருவி தலையில் பனங்காயை அல்ல..பனை மரத்தையே வைத்தது போல இருந்தது...!!

கூட்டத்தை கண்டால் கைகால் உதறும்...என்ன கேட்கிறார்கள் என்றே தெரியாது....பில்லுக்கு ஒரு மெசின்....அதில் உணவுக்கான கோடுகளை நினைவில் வைத்திருக்க வேண்டும்...அடிக்கடி சிக்கல் செய்யும் மெசினால், கார்பன் மாட்டிக் கொண்டு.. அந்த சமயத்தில் கைகளால் பில் போட வேண்டும்..!! எதிரே பணக்கார திமிருடன் கோட் சூட் அணிந்து...லேட்டானால் உச்சு கொட்டியே.. ஆளை மிரட்டும் கூட்டம்...என தாறு மாறாக...பிரேக் இல்லாத லாரி போல ஒவ்வொரு நாளும் நரகமாக போய்க் கொண்டிருந்தது..!!ஒவ்வொரு நாளும் சுமார் பத்தாயிரம் போல கல்லா கட்டும்..1988களில் அது பெரிய தொகையாக தெரியும்..பணத்தை பார்த்தாலே கடுப்பாக வரும்..!!??

இவ்வளவு பிரச்சினையில் வேலை பார்த்தாலும்...பிரச்சினை வேறு வடிவத்தில் இருந்தது...!!தினசரி கலெக்சன் தொகையை அப்படியே எண்ணி, அதனுடன் பில்லிங் மெசினில் பதிவான பேப்பர் ரோலையும், மேனேஜரிடம் கொடுத்து விட வேண்டும்...!! பின்பு ஒரு வாரம் கழித்து...தலைமையிடத்து கணக்கரிடம் இருந்து தகவல் வரும்.....இந்த நாளில் இந்த கிழமையில் 1000 ரூபாய் குறைந்தது என்று...??!!?? அது எந்த நாள் ஏன் குறைந்தது என்று நமது சிற்றரறிவுக்கு எட்டாது...!!  நினைவிலும் இருக்காது...!!
சிம்பிளாக சொன்னால்......மாதம் ரூ 3000 சம்பளம், ஆனால் தினசரி ரூ 100 பிடித்து கொள்வார்கள் என்பது போன்ற கதைதான்....!!!

ஆகா.....அடுத்த இண்டர்வியூக்கு தயாராகி விட வேண்டியது தான் என முடிவு செய்தாயிற்று...!! இதற்கு இடையில்... நிருலாஸ் என்பது ஐஸ் கீரிம்களுக்கு புகழ் பெற்ற சொந்த தயாரிப்பு பேக்டரியை கொண்ட, பன்னாட்டு தரத்திலான
 ரெஸ்ட்டாரண்ட்..டெல்லியின் புகழ் பெற்ற உணவு விடுதி..!!அப்போதே பல கிளைகளும் அதற்கு உண்டு...!! வகை வகையான குளிர் பானங்களுக்கும் புகழ் பெற்றது....ஆல் அமெரிக்கன் பனானா ஸ்பிலிட் என்பது இப்போதும் நினைவில் உள்ள ஒரு பெயர்..!!!

( பை த பை நான் இவற்றில் எதையும் சுவைத்தது இல்லை....!! ஊழியர்களுக்கு என காய்ந்த ரொட்டியும்.. தாலும் வாரத்தில் ஒரு நால் இறைச்சி குழம்பும்..வேனில் வரும்..அதை போய் சாப்பிட்டு வர வேண்டியதுதான்...) கேசியாரான நான் சாப்பிட போகும் போது... கல்லா பெட்டியில் இருந்து எவன் பணத்தை எடுப்பான் என்று தெரியாது...மேனேஜர் உப மேனேஜர் உட்பட....!!! மேலும் நான் சாப்பிட போகும் போது அனைத்து தீர்ந்திருக்கும்......அங்கிருக்கும் வாட்ச் மேன் மட்டும் எனக்கு ஆதரவாக ..ஆல் கன்னிங்க் பெல்லோஸ்..கேர் ஃபுல் என்று அடிக்கடி கூறுவார்.!!

ஒரு சமயம்..சின்ன ஐஸ் கீரிமுக்கு பதிலாக... கோடு எண்ணை.. மாற்றி போட்டு... என்னுடைய தவறினால்... ஒரு கிலோ ஐஸ் கீரிமாக,  ஜம்மென்று கொண்டு சென்ற  ஒரு பெண்..அதே நினைவுடன், நப்பாசையில்  ஆவலில்...அது போலவே மீண்டும்  ஏமாறுவேன்..!!  என...தினமும் வந்து... வாங்கி...காசுக்கேற்ற சிறிய ஐஸ் கீரிம்... என்றவுடன் என்னை பார்த்து முறைத்துக் கொண்டே சென்ற சம்பவங்களும் உண்டு..!!
மீண்டும் தொடர்வோம்..........பின்...!!
நாக.பன்னீர்செல்வம்





செவ்வாய், 25 அக்டோபர், 2016

நானும்....டெல்லியும்..இண்டர்வியூக்களும்..!?!....

சமீபத்தில், 2016 செப்டம்பர் மாதத்தில்..புது டெல்லிக்கு அலுவலக மீட்டிங்க் விசயமாக சென்றிருந்தேன்.. வேலை முடிந்து, கடைசி தினத்தில் இரவு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் பிடிக்க நேரம் இருந்ததால், எனது நண்பரை காண மால்வியா நகர் சென்றிருந்தேன்...

அவரது அலுவலகம், தரை தளத்துக்கு கீழே பேஸ்மெண்டில் இருந்தது..அது தெரியாமல், மேலே உள்ள முதல் மாடிக்கு சென்றுவிட்டேன்.. அங்கு ஏதோ ஆட்கள் தேர்வுக்கான இண்டர்வியூக்கான முஸ்தீபுகள் நடந்த வண்ணம் இருந்தது.... நான் சென்றவுடன், என்னை பார்த்து  அங்கிருந்த பணியாளர்..."வாருங்கள் உட்காருங்கள், இண்டர்வியூக்கு தானே".??!?? என்றார்..!!

நை.. நை..!!!.என்றபடி.. தலை தெறிக்க கீழே ஒடி வந்து விட்டேன்...!! அதற்கு காரணமும் இருந்தது...சுமார் 50 வயதாகும் எனக்கு..எனது 21 வயதுகளில்..வேலை தேடும் படலத்தில் முதல் வாழ்க்கைப்பட்ட பூமியாக டெல்லியே இருந்தது.....!!நேரு பிலேசின் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள், வாக்கின் இண்டர்வியூ எனப்படும் அவ்வப்போது.. நாளிதழை பார்த்து,,, செல்வது... உள் பட எனக்கு எல்லாம் அத்துபடி...!!

1988களில் டெல்லியின் வேலை வாய்ப்பு அபரிதமானதாக இருந்தது......குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு...அந்த காலக் கட்டத்தில் அரசு தேர்வு எழுதி பாஸ்..செய்து அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களை தவிர்த்து....இதர தனியார் பணிகளை நம்பியும்...என்னை போல..வெறும் டிகிரி டிப்ளோமாவை வைத்துக் கொண்டு வேலை தேடி, இந்தி தெரியாமல் வந்தவர்கள் அனேகம்..!!(அதிலும் நான் டிகிரி எழுதிவிட்டு..ரிசல்ட் வருவதற்குள் டெல்லி சென்றவன்...!!)

முனிர்க்கா, ஆர் கே புரம் பகுதிகளின் இவ்வாறனவர்கள் அதிகம் வாழ்ந்து வந்தோம்......அவ்வப்போது ஆரம்பிக்கும் மெஸ்ஸில் தான் இரவில் அனைவரும் கலந்து..புதிதாக வந்தவர்களுக்குரிய வேலை வாய்ப்புகள் பற்றி தெரிவிப்போம்..இதில் பாலு மெஸ், முத்து மெஸ் போன்றவை பிரபலமானவை..!!

அவ்வாறு  கிடைத்த தகவல்களில், நல்ல நல்ல வேலைகளில் செட்டிலாகியும், வியாபார வாய்ப்பினை பெற்று, பிசினஸ்மேன் களாக இன்றும் பலர் வாழ்ந்து வருகின்றனர்...!! ஒரு சிலர் தமிழ்னாட்டுக்கு டிரான்ஸ்பர் பெற்றும் கூட வந்து விட்டனர்..!!

இண்டர்வியூக்களுக்கு செல்லும் போது, இடத்தை கண்டுபிடித்து, மொழி தெரியாமல், பொது பஸ்களில் பயணித்து, அப்போது கைப்பேசியும் கிடையாது..!! மரண அவஸ்தையாக இருக்கும்..பனி...வெய்யில்.. காலங்களில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும்..!! வழி கேட்டால்.. ஒரு சிலர் அதி மேதாவித்தனத்துடன் எங்கோ இல்லாத இடத்தை..காட்டி அலைவது ஆத்திரமாக வரும்..!!

ஒரு நீண்ட சாலையில், கதவு எண்ணைக் கொண்டு, தேடும் முகவரியை கண்டு பிடிக்க....தலை கீழாக ஆரம்பித்து.... நீண்ட தூரம்  நடந்து... புறப்பட்ட இடத்தின் மறுபக்கத்தில் அருகாமையிலேயே  நாம் தேடிய முகவரி இருக்கும்...!! களைப்புடன் அசட்டு சிரிப்பும் ஆயாசமும் கலந்து வரும்...!! என்ன செய்வது வேலை வேண்டுமே....சம்பாதிக்க வேண்டும்... பணம் ஊருக்கு அனுப்ப வேண்டும்...பிள்ளையார் சுழி போட்டு இன்லான்ட் லெட்டரில் குடும்பத்திற்கு கடிதம் எழுத வேண்டுமே...!?!!

எந்த வேலை...எங்கே பணி என்று கூட தெரியாமல், ஒரு சில இண்டர்வியுக்கள் என்னால் கலந்து கொள்ளப்பட்டிருக்கின்றன..!! அதாவது அசாமில் பள்ளியில் வேலை.... காஷ்மீரில் இந்திய பாகிஸ்த்தான் பார்டர் வேலைகளுக்கும் நான் முயற்சி செய்து, நான் தமிழ் நாட்டிலிருந்து,. குடும்பத்தில் ஒரு பிள்ளையாக வந்தது...ஹிந்தி சுத்தமாக தெரியாதது.. இவற்றை வைத்து என்னை நாசுக்காக பாவப் பட்டு கழட்டி விட்டு விடுவார்கள்..!!

அப்படித்தான்... எனக்கு டெல்லியின் புகழ் மிக்க நிருலாஸ் ரெஸ்ட்ராண்டில் கேஷியாராக வேலை கிடைத்தது..!!ஏற்கெனவே அதில் வேலை பார்த்த ஒருவர், அதிலிருந்து 5  ஸ்டார் ஓட்டலுக்கு அதிக சம்பளத்தில் செல்ல, என்னை தான் பார்த்துவந்த வேலையில் பிடித்து கொடுத்துவிட்டு சென்று விட்டார்....!!

இதில் என்ன என்ன பிரச்சனைகள்...இதிலிருந்து எப்படி தப்பித்தேன்...பின்னர் எப்படி ஒரு நிரந்தர வேலையை...கரணகுட்டிகரணம் போட்டு பெற்றேன்..என்பதை பின்னர் எழுதுகிறேன்.......
நாக.பன்னீர் செல்வம்