புதன், 20 நவம்பர், 2019

நீதி மற்றும் அநீதி நோய்கள்......!

       
Image result for indian village diabetes heart patients

    சமீபத்தில் அதிகம் கேள்விப்படும் ஹார்ட் அட்டாக்குகள் மற்றும் நீரிழிவு நோய்கள்  கொஞ்சம் நின்று சிந்திக்க வைக்கின்றன..பள்ளி பருவத்து நண்பர்களுக்கும்..கல்லூரி தோழர்களுக்கும்.. அவை ஒரு சிலருக்கு வருவது வாழ்வியலை கவனித்து தற்காலிகமாக  அச்சப்பட்டு பயணிக்க வைக்கிறது..
ஹார் அட்டாக்கை பற்றி இவ்வாறான எண்ணங்கள் இருந்தாலும்.. நீரிழிவு என்னும் டயாபட்டிசை நான் குற்றம் சொல்லுவதில்லை...அது அருமையான.. நீதிபரிபாலனம் செய்யும்.. நீதி நோயாகவே...எனக்கு  நம்ப தோன்றுகிறது..!?!

          ஆமாம்..ஆரம்ப காலத்தில்..அரசியல்.. சாதி என... அடி.. தடி அட்டூழியம்.. அராஜகம் செய்தவர்கள் சக்கரை நோயால்..குறுகி.. கையில், இஞ்செக்சனுடன் வாக்கிங் சென்று கொண்டு..சாப்பாடு குறித்து என்னேரமும் சிந்தித்து கொண்டு அளந்து அளந்து... தேர்ந்தெடுத்து..சாப்பாட்டை கண்டு அச்சம் கொண்டு.. மருந்து மாத்திரையுடன்  அதைவிட.. சதா சர்வ காலம்  நோய் குறித்த கவலையுடன்.. அந்த நோயுடன் மனைவிக்கு நிகராக, அன்னியோன்யமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கண்டால்..ஆகா கடவுள் இருக்காண்டா குமாரு......என்று துள்ளத்தோன்றும்..!! 

          அப்புறம், கடவுளும், நீதியும், ஏழைகள் வசாக்கும் செய்யாததை சர்க்கரை நோய்.. இன்சுலின் வகையாறாக்கள் சூப்பரா செய்வதை கண்டால் ஆனந்தம் வரத்தானே செய்யும்...! அதைவிட இத்தகைய அநீதி மான்களை குறித்து.. கூட இருப்பவர்கள் அல்லக்கைகள், எதிரிகள், பார்வையாளர்கள் யாராக இருந்தாலும்.. பேச்சு வழக்கில்..”பாவம் அண்ணணுக்கு சர்க்கரை” என சம்பந்த பட்டவரை நோய் மன்ப்பான்மையுடன் வைத்திருப்பது..அவருக்கு, ”என் பங்கு இந்தா புடிச்சுக்கோ”.... என,  மருந்து..கைவைத்தியம்..சிறப்பு மருத்துவர்கள்..இவரை ஒத்த மற்றவர்களுக்கும் சர்க்கரை வியாதி வந்ததை குறித்து  எடுத்துரைத்து.. கலங்கடித்து.. நோயாளியை லாக் செய்து எப்போதும் அவரை பரிதாப உணர்ச்சிக்குள் வைத்திருப்பார்கள்....!?
         வேண்டாத, வெல்லமுடியாத, எதிரியை பரிதாபம் கொண்டு பார்ப்பதை விட வேறு என்ன பாக்கியம் இந்த உலகத்தில் இருந்து விடமுடியும்..?!?

           இதை விட..  டீக்கடையில் டீ போடும் மாஸ்டர்கள் எல்லோரும்..சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம் படித்தவர்களாகவே எனக்கு தோன்றும்..! பின்னே, நாலைந்து நண்பர்களாக..கும்பலாக.. டீ குடிக்க சென்றால்..அதில் ஒரு சிலரை மட்டும் குறி வைத்து, வம்படியாக, சார் உங்க இரண்டு பேருக்கும்,,, சர்க்கரை போடுனுமா.. வேண்டாமா..இல்ல கம்மியா..?? என  டாக்டர்கள் ரேஞ்சுக்கு கேட்பதும்...அப்புறம் அதில் ஓரிருவர், டீ மாஸ்டர் கேட்டது போலவே.. ஆமாம்ப்பா.. எனக்கு சர்க்கரை போடாதே.. அல்லது கம்மி.. என சொல்லி விட்டால் போதும்...ஆகா டீ மாஸ்டருக்கு ஒரு ஆனந்தம்.. திருப்தி வரும்..பாருங்கள்..!? அதை வார்த்தையால்  வர்ணிக்க முடியாது..?! 

           அதன் மறைமுக அர்த்தம்.. “டேய்..எனக்கு தெரியாதா.. உன்னை பத்தி.!.உன்னை பார்த்தாலே தெரியும்டா.! .உனக்கு சர்க்கரை இருக்குண்ணு...யாருகிட்ட..??!!” என்பது போல..என்னிடம் அப்படி யாராவது கேட்டால்.. நல்ல வேளை கேட்டீங்க..!? எனக்கு நல்ல தூக்கலாக... ஜீனி போட்டு கொடுங்கள்..  நாட்டு சக்கரை சமாச்சாரமெல்லாம் வேண்டாம்.. என அது ஒத்துக்காது..?!! என சொல்லி விடுவேன்..?? அவர் நம்மை விசேஷ  ஜந்துவை போல் பார்ப்பார்..! அதுவா முக்கியம் நமக்கு சக்கரை நோய் இல்லை என்பதை பூரூப் பண்ணணும்..பாஸு..?!!

           ஆனாலும், ஹார்ட் அட்டாக்கை பற்றி அப்படி நினைக்க முடியவில்லை.. நெருங்கிய.. நண்பருக்கு அது வந்து அதன் தொடர்பான பாதிப்புகள் கண் முன்னால் காண நேரிட்ட போதும்...வெகு சமீபத்தில் கல்லூர் நண்பர்,  ஹெல்த் இன்ஸ்பெக்டராக அரசு பணியில் இருந்து கொண்டு தனியாக மருத்துவமனை கிளினிக் வைத்து கொண்டு, மற்றும் வீட்டிலும் சுற்று வட்டாரத்தில் ஒரு டாக்டராகவே பாவித்து..வைத்தியம் பார்த்து கொண்டு நல்ல சம்ப்பாத்தியத்தில்..தனது ஒரு மகனை டாக்டருக்கு வெளி நாட்டில் படிக்க வைத்து.. மற்றொரு மகனையும் தன்னை போலவே மருத்துவபணிக்கு?!!. தயார் செய்து கொண்டிருந்தவர்,

           திடிரென, வெகு சமீபத்தில், முதுகு வலி என, மகனுடன் காரில் சென்று, பிரபல மருத்துவமனைக்கு தானே, சென்று, மருத்துவருடன் உரையாடி, இயல்பாக, எந்த வித அபாயமும் இல்லாமல், இ சி ஜி எடுத்த போது, திடிரன இறந்து விட்டார்..! ஊருக்கே வைத்தியம் பார்த்தவர், தன்க்கு ஹார்ட் அட்டாக் வந்ததை வருவதை அறியாமல் இருந்தது தான்..வெகு ஆச்சர்யம்..!

            இதை விட, என்னுடன் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படித்தவன், உடல் வாகில் அவனை, இன்று வரை அனைவரும் தேக்கு என்றே புனைப்பெயருடன் அழைப்பார்கள்.. அவன் திடிரென மாரடைப்பால் இறந்தது, ஹார்ட் அட்டாக்கின் பரிமாணத்தை மேலும் சிந்திக்க வைக்கிறது.. ஒரு நடுத்தர குடும்பம் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவு செய்வதோ, அல்லது ஏற்படும் உயிரிழப்போ, அந்த குடும்பத்தை, அதன் முன்னேற்றம் வளர்ச்சியில் இருந்து சட்டென பல ஆண்டுகளுக்கு பின் தள்ளி வைத்துவிடுகிறது..?! தீ விபத்தில் ஒரு குடும்பம் அனைத்தையும் தீயிக்கு இரையாக்கி, மீண்டும் புதிதாக வாழ்வை ஆரம்பிப்பது போல துயரமானது அது....!?!

       மேற்குறிப்பிட்ட, தேக்கு என்பவன் என்னுடன் இரண்டாம், மூன்றாம்  வகுப்பு படித்த காலத்தில், அவன் உடல் வாகினால் பொறாமை கொண்டு, அவனுடன் மதிய இடைவேளையில் கூட்டமாக சண்டையிடுவோம்...அதாவது அவனை போட்டு அனைவரும் அடிப்பார்கள்..?! நான் மட்டும் அவனுக்கு பிரண்ட்..?!, ஒரு வெயில் கால  மதிய உணவு இடைவேளையில்.. நானும் கூட்டத்தோடு கூட்டமாக..அவர் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் அவனை முதுகில்  அடித்து விட்டேன்..?!! நம்ம சுழியும் சும்மாவா என்ன..?!! எல்லாவற்றை விட, இன்று வரை ஆச்சர்யம், பள்ளி விடும் போது, என்னிடம், “ என்னை நீ ஏண்டா அடிச்ச..?! என கேட்டது தான்..?! நான் அவனை அந்த கூட்டத்தில்..அடித்தது எப்படி அவனுக்கு தெரிந்தது..?!! இன்று வரை எனக்கு தெரியாத..புரியாத புதிர்..?!!?

           பரஸ்பரம், 53 வயதாகும் நிலையில் எப்போதாவது பார்க்கையில் புன்னைகை செய்து, நலம் விசாரித்துக்கொள்வோம்..!! கூச்சத்துடன் என்னை பார்த்து சிரிப்பான்..! ஆனாலும் அவன் கேட்ட கேள்வி மட்டும்.. பதிலின்றி தொடரும்.!?!.இன்று அவன் இல்லை..கேள்வி மட்டும் அப்படியே இருக்கிறது..?!!

               பிரபல இருதய மருத்துவர், திரு.சொக்கலிங்கம் ஒரு முறை சொன்னது,  இப்போதும் நினைவில்  இருக்கிறது.. “ இறந்த காலம் என்பது உடைந்த போன பாணை...!? எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை....!?  நிகழ் காலம் மட்டுமே கையில் உள்ள வீணை.?!.” இது இதயம் சம்பந்தபட்ட நோய்களுக்கு முற்றிலும் பொருந்தும்  என்றே தோன்றுகிறது...!?

            .ஆமாம்..ரொம்ப நாளா, ரொம்ப வருசமா... ஒரு சந்தேகம்...இருதய பரிசோதனைக்கு டாக்டரை பார்த்து பரிசோதித்து கொள்ளலாமா..?!? அல்லது தனியாக ”லேபி”ல் செய்து கொள்ளலாமா..??!?..லேப் என்றால் ரிப்போர்டை  டாக்டரிடம் காட்டினால் ஒத்து கொள்வாரா..?!! அல்லது அவரே பரிசோதிக்க வேண்டும் என்பாரா..?!! இத்யாதி..இத்யாதி சந்தேகங்கள்......!?

      இப்ப கொஞ்சம் வேலை இருக்கிறது...!? அப்புறமா விசாரித்து சொல்லுங்கள்..?!  நீங்கள் சொல்லா விட்டாலும் பரவாயில்லை.!!??!!

  நாக.பன்னீர் செல்வம்.....

           

























வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நெய் பந்தம்..

     
        முஸ்லீம், கிருஸ்துவ  உள்ளிட்ட ஏனைய மதங்களில் திருமணம் ஆனாலும்..இறப்பு, சாவு நிகழ்ச்சிகள் ஆனாலும்,  இவை தொடர்பான சம்பிரதாய...சடங்குகளுக்கு..   வரையறுக்கப் பட்ட முறைகளில் அதனை வழி நடத்த இதற்கென உள்ள குருமார்கள் இருக்கிறார்கள்... !

       ஆனால் இந்து சமயத்தில்.. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களின் திருமண நிகழ்வுக்கு வரும்.. பிராமண புரோகிதர்கள்..அவர்களின் இறப்பு நிகழ்ச்சிக்கு வருகிறார்களா..என்றால் இல்லை...!?!இது ஏன்..?!

      இவ்வாறு வரைமுறைக்கு உட்படாத  வகையில் இறுதி சடங்குகள்..மேற்கண்ட வகுப்பினருக்கு..பல பட்டறையாக.. நடந்து முடிவது தான் நான் இங்கு சொல்ல வருவது..! 

       பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட..ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பல பழக்க வழக்கங்கள்..சற்றே.. ஏறக்குறைய .. பலவகைகளில் ஒன்றுபட்டவையே..! நாம் தான் உயர் சாதி..தாழ்ந்த சாதி என்று அடிப்படை புரியாமல்..பீற்றிக்கொள்கிறோம்..! அவ்வகையில் சாவு வீட்டு நிகழ்ச்சிகள் விதிவிலக்கில்லாமல், ஒன்று போலவே சிறப்பானவை..?!?

      சமீபத்தில் உறவினரின் வீட்டு சாவு..துக்கம்  ஒன்றிற்கு..ஒரு சிறிய  கிராமத்திற்கு சென்றிருந்தேன்.. சுற்று புற நிகழ்வுகளை கவனிக்க தொடங்கிய நாள் முதல்.. நான் முன்பு குறிப்பிட்ட சமூக பிரிவினரின்.. அனைத்து சாவு வீட்டு நிகழ்வுகளும்..ஏறத்தாழ ஒன்று போலவே இருப்பதும்...இன்றளவும் மாறாமல் இருப்பது தான்.. இங்கு  நாம் பகிர்ந்து கொள்ளும் சேதி..!

         சுமார் 20-25 வருடங்களுக்கு முன் இழவு செய்தி உறவினர்களுக்கு சென்று சேர்வது என்பது பிரயத்தனமான காரியமாகும்.. இதனை செய்ய கூடியவர்கள்..ஒரு காலத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்றிருந்தாலும்..மற்றவர்களும் செய்வதுண்டு..! வாடகை சைக்கிள்.. இரவல் சைக்கிள்..கிடைக்கும் இரு சக்கர வாகனம் என்று.. ஒவ்வொரு திசைக்கும் ஒரு ஆள் அல்லது இருவர்.. பெரிய ரவுண்டு சென்று.. பிணத்தை எடுப்பதற்குள் உறவினர்கள் அனைவரும் வந்து சேருமாறு செய்ய வேண்டும்..!

       சாவு விழுந்தவுடன்..துக்கம் சொல்ல கூப்பிடுவார்கள் என்று..தாங்கள் ஆசையாக வாங்கி வைத்த வாகனங்களை ஒளித்து வைப்பதும்..தான் மாட்டிக் கொள்ளக்கூடாது எஸ்கேப் ஆகிவிடும் விவரஸ்தர்களும் உண்டு..! இப்போது உள்ளது போல்..போனில் எல்லா தகவல்களும் போய் சேரும் வசதி.. ”இதோ இப்ப உயிர் விட்டுடும்”.... கிளம்பி இருங்க....சொன்னவுடன் புறப்பட்டுவிடலாம்..?!? என்பது போலான குரூரமான கைப்பேசி..அப்டேட்கள் அந்நாளில் இருந்ததில்லையே..!

       செத்த சேதி சொல்ல போனவர்கள்..ஒரு சிலர்..கையில் காசிருக்கும் தைரியத்தில்..வழியில் கிடைக்கும்.. தென்னங்கள்,..பனங்கள் என குடித்து விட்டு..தோப்பு, துறவு என சுகமாக தூங்கி விட்டு.. சொல்ல போன செய்தியை சொல்லாமல்........எல்லாம்  முடிந்து, இரவு வந்து சேருவதும் உண்டு..! புகாருக்கும்,.. வெட்கத்துக்கும் பயந்து..இவர்கள் கொஞ்சம் நாளைக்கு வெளியே தலையை காட்டமாட்டார்கள்..?!?

       பின்னாளில்.. விழப்போகும் பிணத்துக்கும் கூட இந்த அபாக்கியவான்களான, மதுப்பிரியர்களின்  தலை உருட்டப் படும்.. ! "எப்பா..?!..மாரியப்பன் மகன மட்டும் துக்க சேதி சொல்ல அனுப்பாதீங்க.! குடிச்சுட்டு.. படுத்து கிடந்துட்டு மறு நாள் தான் வருவாப்புல”.... ”அப்படித்தான்...இன்னார் வீட்டுக்கு” ஆரம்பித்து..என மானம் கப்பல் ஏறும் அபாயமும் உண்டு..!

        சாவுக்கும்....கருமாதிக்கும்...இடையில் பல முக்கிய உறவுகள், செய்தி சொல்ல போனவர்களால்..தகவல் விடுபட்டு..  கெட்டு பாழாகி இருக்கும்..! பின்னே..செத்தது கூட தெரியாமல் இருப்பவர்களிடம்..கருமாதி பத்திரிக்கை எடுத்து சென்றால்..என்னவாகும்..?!? தாண்டி தோண்டியில் விழுந்து...அழுது ஒப்பாரி வைத்து..செத்த துக்கத்தைவிட..அந்த செய்தி சொல்லாமல் ஒதுக்கி வைத்த துயரமே...மேலோங்கி..உறவுக்குள். சண்டை சச்சரவு என நீண்டு..அது சரியாக நிறைய காலமும் பிடிக்கும்..!

        இறப்பு தினத்தில்  நடைபெறும் சடங்குகள் இன்றளவும் ஒருங்கிணைக்கப் படாமல்..ஒத்த முறையில் இல்லாமல்  ஆளாளுக்கு பேசுவதான் நகைப்புக்குரிய அவலமாக இருக்கும்..அதிலும் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் தொடரும்  முடி திருத்தும் தொழிலாளிகள், சலவைத்தொழிலாளர்கள் மற்றும் ஆதிதிராவிட தொழிலாளர்களின் பாடு சொல்லில் அடங்காது..!

       ஏதோ லட்சகணக்கில் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பது போல அதட்டலும் மிரட்டலும் தூள் பறக்கும்..! சமீபத்தில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றிருந்த போது, இறந்தவரின் உடலை குளிப்பாட்ட ஒரு பெஞ்ச் எடுத்துவரப்பட்டு அது அகலம் குறைவாக இருந்த காரணத்தால், இன்னொரு பெஞ்சும்  கொண்டுவரப்பட்டு.. இரண்டையும்  இணைத்து அதில் குளிப்பாட்ட ஏற்பாடுகள் நடந்து நல்லாத்தான் போயிகிட்டு இருந்தது....!..அப்போது தான் எழுந்தது அந்த களேபாரம்...!?!

     யாரோ ஒரு புண்ணியவான்...எல்லாம் தெரிந்தது மாதிரி..ரெண்டு பெஞ்சில் குளிப்பாட்டலாமா..?? கூடவே கூடாது ..என ஒரு குண்டை போட்டு விட..!!அவ்வளவு தான் ஆளாளுக்கு குளிப்பாட்டலாம்..? குளிபாட்டக்கூடாது..? என விவாதங்கள் எழுந்து, அப்புறம் பைனலாக..ஒரே பெஞ்சில் குளிப்பாட்டி...பாடி.. ஒரு தரம் கைத்தவறி..கீழே விழுந்து...எப்படியோ ஒரு வழியாகவோ..வேறு வேறு வழியாகவோ.. செத்தவர் சிவ லோக சென்று சேர்ந்தார்...!!

       எனக்கு அப்புறம் ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்...பிராமண புரோகிதர்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயங்களுக்கு திருமணம், வீடு குடி போதல் உள்ளிட்ட ஏனைய சுப நிகழ்வுகளுக்கும்...இதர கருமாதி, திவசம் போன்ற தீட்டு கழிக்கு சடங்கு முறைகளுக்கு வருபவர்கள்.. இறப்பு நிகழ்வையும் முன்னின்று நடத்துவதில்லை..?! அரம்ப காலம் முதலே அவர்களை  அழைக்க வில்லையா..? அல்லது இந்த கூட்டத்தில் நாம் போய் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற  அவர்களின் முன்னெச்சரிக்கையா..? இல்லை, குறிப்பிட்ட சமுகங்களின் ..உரிமை சார்ந்ததாக ..அடுத்தவரிடம் கொடுக்க முடியாததாக. பிரிலேன்ஸ்..எனும் முறையில் சுதந்திரமாக இஷ்டப்படி சாவை, சடங்குகளை நடத்தல், அனுசரித்தல் அல்லது கொண்டாட ஏற்பாடா..?? நாம் அறியோம் பராபரமே தான்..?! 

      ஆனாலும், நான் கண்டவரையில், கிராமங்களில், சாவுக்கான இறுதி சடங்கை.. நிகழ்வுகளை... இதனை நடத்துவபர்கள் சலவை, முடிதிருத்தும், தொழிலாள ஏனைய உள்ளூர் பூசாரிகள், லோக்கல் குருமார்கள்..!, வயதான பெரியவர்கள், என ஆளாளுக்கு, பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பாவம்.. சங்கடமாக பதிலை  சொல்லி சமாளிப்பவர்களாக, அல்லது.. ”வா .. நீ வந்து செய்”.. என கோபப்படுவர்களாகவே, இருக்கிறார்கள்..! 

        உதாரணத்திற்கு ”முதல்ல  நீ இதை செய்திருக்க கூடாது..? அல்லது..இது மாதிரி செய்து பழக்கமில்லையே..?!? என திடிர் திடிரென எனும் கேள்வி கணைகள் அதை தொடர்ந்து சமாளிபிகேசன்ஸ் என பார்க்க பார்க்க வேடிக்கையாக இருக்கும்..?! 

       வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு மகனின், வயதான  தந்தை.. ஒரு மாலையில் இறந்து விட...மகனும் இரவு வந்து  சேர்ந்து,  நாங்களும் முன்னின்று இறுதி ஏற்பாடுகளை,  நடத்த... மிக மிக ஒல்லியான தேகத்தை உடைய  அந்த வயதான, இறந்த,பெரியவருக்கு   பீரிசர் பாக்ஸ் எதுவும்  தேவை யில்லை எனமுடிவில், ஏழ்மையை கருதி சிக்கனமாக செலவு செய்து அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது...!

      தூக்க.... ஒரு மணி நேரத்திற்கு முன், இறந்தவரின் மகனின், நீண்ட நாளைய நெருக்கமான நண்பர் மது பாட்டிலுடன்  வந்து, துக்கம் விசாரித்து, கொல்லை கடைசிக்கு சென்று இருவரும்  நட்பு, துக்கம்  மற்றும் மது ஆகிய மூன்றையும் அருந்தி விட்டு, பின்னர் , திடிரென ஞானதோயம் வந்து, ” என் அப்பாவிற்கு ஏன் பீரிசர் வைக்கவில்லை..?? நாங்கள் என்ன அவ்வளவு கேவலாமாகவா போய் விட்டோம்..??  என பொறுப்புடன், சண்டையிட துவங்க...!?!...அது வரை சும்மா இருந்த மகன், நாம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம்..நம்மை கேட்டு..?!? ...அப்புறம் ஏற்பாடு செய்பவர்கள், ஏற்பாடு செய்யாத ஏதோ ஒன்றுக்கு, இயல்பாக விடுபட்டு ஒன்றுக்கு... குற்றவாளிகள் போலவும்.. அப்படி இப்படி என ஒரு வழியாக கதை முடியும்..!

     இதில் இன்னொறு சிறப்பும் உண்டு...செத்தவுடன் என்னேரமானலும் இரவு 12 மணி என்றும் பாராமல்.... ஊர் அல்லது தெரு நிர்வாகம்..நாட்டாண்மைகளிடம் சோகமாக...பவ்யமாக  சொல்லி..இறப்பு  காரியத்தை நடத்தி விட்டு.. கருமாதிக்கு கறி.. பிரியாணி,மது  விருந்து ,தீட்டு கழிக்க... மாமன், மச்சான், நண்பர்களுடன் சேர்ந்து அட்டகாசமாக கொண்டாடி...போதையில்..”எவண்டா நாட்டாமை..அவனெல்லாம் ஒரு ஆளா..??! என கேவலபடுத்தி போதையில்...பெருமை சேர்ப்பவர்களும் உண்டு..!?! சாவு...பிணத்தை நல்லபடியாக மயானம் சேர்க்க.. அதை நடுத்துவதில்..ஊர் உதவி தேவை..!!.ஆனால்...கறிசோறுக்கும் போதைக்கும்...அவனெல்லாம் அதுக்கு லாயக்கு பட மாட்டாண்டா..!?! என வடிவேலு கதைதான்..!

       இந்த இறுதி சடங்குகள், மயானம் வரை உள்ள ஊர்வலம், அப்புறம் மயானத்தில் நடக்கும் சச்சரவு சல சலப்புகள், அனைத்தையும் பார்க்கும் ஒரு சிலர்,  இந்த அவலத்தை எல்லாம் பொறுப்புடன்  சிலாகித்து.. சமூக நடப்பை தொடர்ந்து  குறை சொல்வார்கள் .. ஆனால் ஒரு நாளில் அது  தனக்கும்  அதேவிதமாக நடப்பதை பார்க்க முடியாதவர்களாக இருப்பது தான்.. இதில் தரமான சம்பவம்...!, எனெனில் அப்போது அவர்கள் பிணமாக இருப்பார்கள்...! ஆனால் நிகழ்வுகள் செவ்வனே  தொடர்ந்து கொண்டுதான்.. இருக்கும்.. பார்வையாளர்கள் மட்டுமே மாறி இருப்பார்கள்..!?!

      இறந்தவருக்கு பேரக்குழந்தைகள் இருப்பின், அவர்கள் அனைவரும் இறுதி சடங்கில் சிறிய மூங்கில் குச்சியில் துணியை சுற்றி,அதில் நெய் விட்டு கொளுத்தி நெய்பந்தமாக பிடித்து நிற்பது வழக்கம்..அதிலும் கூட எண்ணிக்கை விடு பட்டு, பந்தம் பத்தாமல் போய்,  மகள் வயிற்று பேரக்குழந்தைகள், மகன் வயிற்று பேரக்குழந்தைகள் என பாகுபாடு, வேண்டும் என்றே, காட்டப்பட்டதாக,தகராறு மூண்டு சண்டையில் முடிந்த சாவு வீடுகளும் உண்டு..!

      இவை எல்லாம்......தமிழ் அறிஞர்கள்..தமிழ் புத்தகத்தில் குறிப்பிடும் பாணியில்... சொல்வதாக இருந்தால்...   “ எண்ணி எண்ணி இன்புறத்தக்கதே..?!?                  நாக.பன்னீர் செல்வம்  Naga.Panneer selvam


      

செவ்வாய், 5 ஜூன், 2018

எனக்கு ஏன் கடவுளர்களை பிடிக்காது..?!?



எனக்கு ஏன் கடவுளர்களை பிடிக்காது..?!?

முருகேசன் எனக்கு உறவினன்..அதாவது அத்தை மகன் முறை வேண்டும்…  நெருங்கிய உறவுகள் எல்லாம்.. அவர் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன்..இடையில் வந்த மாமன் மச்சான்..அவர்களின் நெருக்கம்…. இறுக்கம் இவைகளுக்கு,  முன்..பழைய உறவுகள் நெருக்கமற்று போய்விடுவது இயல்பு தானே..?!

அதிலும் எனது  தந்தை வழி தாத்தா அவரின் சகோதர்கள் நான்கு பேர்..அதாவது எனக்கு நான்கு தாத்தாக்கள்…அவர்களின் மகன்கள்..எனக்கு பெரியப்பா சித்தப்பாக்கள்….ஆனால் எனது மகன்களும்… பெரியப்பா சித்தப்பா.... மகன்களின் மகன்கள்….பேரன்களாக.....அவர்களுக்குள் உறவு என வரும் போது..”அதாவது டா…என் தாத்தா.. உன் தாத்தா.. அங்களோட.. அப்பாக்கள் எல்லாம் அண்ணன் தம்பிகளாம்டா”..….என உறவு சங்கிலி..பலகீனமாகி.. நெகிழந்து… கண்ணி அறுந்து….சாதாரண சொந்தம்…அவ்வளவு தான்  என ஆகிவிடுகிறது..!??!

அது போகட்டும்…முருகேசனும்..அவன் உறவும்  எனக்கு அப்படித்தான் ஆகி போனது…விவசாயம்....வீட்டு வேலை..கல்யாண..கருமாதி வேலைகள் எல்லாம் உறவினர்களாலேயே செய்யப் பட வேண்டும் என்ற நிலை மாறிய போது..குறிப்பாக கல்யாண மண்டபங்களும்..சாமீயானாக்கள், வாடகை பாத்திரக்கடைகளும்  வந்த விட்ட போது உறவின் தேவை இயல்பாகவே..குறைந்து விட்டது…!?!

சொந்த மாமன், மச்சானுக்கே... கல்யாண வீட்டு சார்பாக யாரோ ஒரு புண்ணியவான் வாங்கிய காண்ட்ராக்ட்… காசுக்கு.. அரை தூக்கத்தில் சோறு போடுகிறான்..”தின்னா தின்னு திங்காட்டி போ”…என்பது போல..! இதில் உறவு என்ன..சொந்தம் என்ன..?!? எந்த அல்லல் சொல்லலுமில்லாமல்…காசு போனால் பரவாயில்லை…..காரியம் முடிந்தால் சரி….என்றாகி விட்டது…!?!

இதில்..விசேஷ முடிவில்..கடைசியில்.. குப்பையாய் தூக்கி எறியப் பட்டது நமது சொந்தங்களும்..அவர்கள் தாங்கி வந்த உறவு முறைகளும் தான்..!!!

ஆகா..முருகேசன் மேட்டரை ஆரம்பித்தால்..வேறு எங்கு எங்கோ இழுத்து கொண்டு போகிறதே…!?! இதோ வந்து விட்டேன்…..! விசயம் ஒன்றும் பெரிதில்லை….முருகேசன் வாழை வியாபாரம் செய்து வந்தான்….இலை..வாழை போன்றவற்றை தோப்பில்.. மொத்தமாக பேசி..வாங்கி அதனை…தனியாகவும் மார்க்கெட்டுக்கும்..சந்தைக்கும் என கொண்டு சென்று விற்கும் இலை, வாழை, வாழைப்பழ சீப்பு...தார், வியாபாரம்..!

      ஒரு நாள் அவனும்.. அவனது மனைவியும் லையன் கரையில் அவர்களது டிவிஎஸ் ஐம்பது..!?! வண்டியை நிறுத்தி விட்டு…வாழைக்கொல்லையின் உள்ளே இலை அறுத்துக் கொண்டிருந்த போது….அவசரம் எதுவுமின்றி.. நிதானமாக, பொறுமையாக யாரோ அவனது வண்டியை திருடி சென்று விட்டார்கள்…..!?!!

     பின்னர் அவன்…காணாமல் போன அவனது வண்டியை தேடி அலைந்தபோது…..யாரோ ஒரு புருஷனும் அவன் பொண்டாட்டியும் அவனது வண்டியை களவாண்டு சென்று விட்டார்கள் என்பதாகவும்..அதை பார்த்தவர்கள் முருகேசனும் அவனது மனைவியும் தான் எப்போதும் போல செல்வதாக எண்ணி விட்டதாக..கூறி பாவப்பட்டிருக்கிறார்கள்..!?!

      யாராவது மனிதர்களோ…அல்லது பொருளோ….வண்டி வாகன..கால் நடைகளோ காணாமல் போய்….அதனை கண்டு பிடிக்க..விசாரிக்கும் போது தான்..தெரியும் நம்மவர்களின் கருணா கற்பனை.??..!!?? ஆகா..அற்புதம்..!?!

     தெரியாது..பார்க்கவில்லை என்ற இரு வார்த்தைகளுக்கு பதில்..அப்படியா அதை அங்கே பார்த்த ஞாபகம்….இங்கே இவன் பார்த்தான் என கற்பனை குதிரையை தட்டிவிட்டு..ஆளாளுக்கு கதை கதையாய் சொல்லுவதில் உள்ள சுகம்…..??!! அதிலும் காணாமல் போனது மனிதன் என்றால் கேட்கவே வேண்டாம்…..!?!

     திருப்பதியில் பார்த்தேன்…திருவண்ணாமலையில் பார்த்தேன்..சபரிமலையில் பார்த்தேன் என்று தான் சென்ற இடங்களை எல்லாம் சொல்லி பெருமை பீற்றிக்கொள்ள..காணாமல் போனவனின் குடும்பத்திடம்…அவன் சாயல் மாதிரிதான் இருந்தது…இல்லை இல்லை அவனேதான் என எதையாவது சந்தேகமாக சொல்லி வைத்து….எழவு கொட்டி கொள்வார்கள்..!?!

      அப்படித்தான்..மெயின் ரோட்டு..மாரியம்மன் கோவில் சைக்கிள் ஸ்டாண்டில்..எனது வண்டியை விட்டு விட்டு பஸ் பிடிக்க நின்றபோது.. முருகேசனை எதேச்சையாக பார்த்தேன்..! வாழைக்கறை படிந்த கைலியும்..பனியனுமாய், வாயில் வெற்றிலை சீவல் கறையுடன்.. கையில் சீப்பு அருவாளுடன்….நடந்து சென்றவன் என்னை பார்த்தவுடன் அருகில் வந்தான்..!

ஏண்டா..வாழைக்கொல்லைக்கு போகலையா..?? என நான் கேட்டதோடு நின்றிருக்கலாம்… நாக்கில் சனியன்…!.என்னடா வண்டி எங்கடா..? என்று கேட்டு விட்டேன்…!?!

அவ்வளவு தான்…கண்ணில் ஜலம் லேசாக தளும்பி.. ”வண்டி காணாமல் பேச்சுடா…! யாரோ புருசணும் பொண்டாட்டியுமா வண்டி கிளப்பிக் கிட்டு போயிட்டாங்கடா.” .பத்து நாள் ஆச்சு..கை முறிஞ்சாப்போல இருக்கு…எங்கேயும் போக முடியல…வர முடியல வியாபாரம் சந்தை என எங்கேயும் போகலடா….வண்டி ஒண்ணு வாங்கணும்… நீயும் எதாவது இருந்தா சொல்லு….! எனக்கு இந்த மகமாயி தான் வழி காட்டணும்”…… என்று சொல்லி சோகமாக மூஞ்சியை காட்டினான்…!

”அய்யயோ……….சரிடா பாத்துகலாம்…..கவலை படாதே”…என்றேன்….மீண்டும் மகமாயியை தான் நம்பி இருக்கேன்!?..என்றவன்.. நான் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்றான்… எனக்குள் ஒரு மின்னல்….வெட்டியது…!?!

வீட்டில் நல்ல கண்டிசனில் ஒரு டிவிஸ் ஐம்பது!?! இருந்தது…!ஏற்கெனவே ஒரு பெரிய வண்டி, புது ஆக்டிவா என மாட்டுக்கொட்டகையில்….மாடுகளுடன்.. நிப்பாட்ட சிரமமாக இருந்தது…..

அதனை இவனிடம் கொடுத்துவிடலாம்..எதாவது பணமும் கிடைக்கும்…உதவியும் செய்தால் போல இருக்கும் என்று எண்ணி….கொஞ்சம் தூரம் சென்ற முருகேசனை கூப்பிட்டு..”யேய் நாளைக்கு உன் வீட்டுக்கு காலையில எட்டு மணிக்கு  வருகிறேன் வீட்டிலேயே இரு”… என்றேன்..சஸ்பென்ஸாக…..!?!! அவன் வீடு..சரியாக  எங்கு இருக்கிறது என்பது கூட அதுவரை எனக்கு தெரியாது..?!?

அப்புறம் இரவு வீட்டிற்கு சென்று..பாவப்பட்ட முருகேசன் வண்டி தொலைந்த கதையை கூறி.. நமது வண்டியை அவனுக்கு கொடுத்து ரூபாய் நான்காயிரம் மட்டும்….அவனிடம் சில பல தவணைகளில் வாங்கி கொள்ளலாம்…பாவம்…!?!..என வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி…..எடுத்த எழவெல்லாம் பத்தாது்ன்னு….அவனுக்கெல்லாம் வாங்கி கொடுத்த கடனையெல்லாம் நாம கட்டியது போதாதுண்ணு…இப்ப இத்தனை வருசம் கழிச்சி வண்டி நொண்டின்னு..அவன் சகவாசத்தை இழுத்துக்கிட்டு வந்திருக்கான்”!…என புலம்பிய அம்மாவையும் சம்மதிக்க வைத்து….,

மறு நாள் காலை அவனது வீட்டிற்கு சென்று..என் வண்டியை..மிகவும் பெருமிதமாக கொடுத்து விட்டு …தணிந்த குரலில்..யேய்…வண்டிக்கு நான்காயிரம் மட்டும் போதும்…….அதை கொஞ்சம் கொஞ்சமாக மாதா மாதம் ஆயிரம் போல..வீட்டில் உன் மாமாவிடம் கொடுத்துவிடு..(அதாவது என் அப்பாவிடம்..!?) என்றேன்..!.

யேய்.. நீ கொடுக்கும் பணத்தை கொண்டுதான் மாமாவுக்கு வேறு புது வண்டி இன்ஸ்டால்மெண்ட்டில்  வாங்க வேண்டும்….!எனக் கூறிய என்னை கொஞ்சமும் சட்டை செய்யாமல்…..அந்த மகமாயி தான் வண்டியை திரும்ப சேர்த்திருக்கா..!!சாமிக்கு நன்றி கூறி….என அரைக்கண் மூடி தியான நிலையில் நெகிழ்ந்து...வண்டிக்கான பூஜை ஏற்பாடுகளை தொடங்கினான்..!?!

 நானும்..இது ஒண்ணும் சரியில்லையே..! என்பது போல் கிளம்பி வந்து விட்டேன்..!?!!

சரிதாங்க..!.நீங்க யூகிப்பது சரிதான்…!?! ஒன்றரை வருடங்கள் ஆகப்போகிறது…! கொடுத்த வண்டிக்கு….ஒரு ரூபாய் கூட பெயரவில்லை முருகேசனிடமிருந்து…?!? என்னை எப்போதாவது வழியில் பார்க்கும் போதெல்லாம்……..சரி சரி போய்ட்டு வா…..பாத்து போ…”...என அன்பு ஆணையிட்டு… திருப்பதி ஜர்கண்டி ஜர்கண்டி போல்..!என்..! அதாவது அவனுடைய..!..டிவிஎஸ் ஐம்பதில்!?!.. வேகமாய் போய் கொண்டிருந்தான்..?!?

அவனை..பொறுத்தவரை விஷயம் ரொம்ப சிம்ப்பிள்…?!காணாமல் போன வண்டியை மகமாயியே..திரும்ப கொடுத்துவிட்டாள்….! எவனுக்கும் எதற்கும்…அவன்…. பணம் தரவேண்டியதில்லை….! தெய்வபக்திக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்…அவ்வளவு தான்..! தட்ஸ்……ஆல்…!

மனுசனுக்கு கிடைக்க வேண்டிய நன்றியையும்..கூடவே ரூபாய் நாலாயிரத்தையும் தட்டி பறிக்கும் தெய்வம் எல்லாம் ஒரு தெய்வமா..?!

அப்புறம்……..போன மாசம் 10 ந்தேதி… முருகேசன் வண்டி…..அதாவது என் வண்டி மீண்டும்……..அவனிடமிருந்து… காணாமல் போய் விட்டது..! அதை அவன் இம்முறை என்னை… பார்த்த போதும் சொல்ல வில்லை…! சொல்லவும் மாட்டான்..! 

அவன் வண்டி திருட்டு போய்.. அதனை மகமாயி திரும்ப என் மூலம் கொடுத்து.. மீண்டும்….அது காணாமல் போய்…….மகமாயியின் கணக்கு முருகேசனுக்கு…பாவம் புரியவில்லை…?!? 

முருகேசன் வண்டியை டாட்டா ஏஸ் வைத்து… அதாவது நான் எனது வண்டியை… அவனுக்கு தெரியாமல் தூக்கியதும்…அதனை ரகசியமாக ஒரு இடத்தில் வைத்திருப்பதும்.....விற்க ஆள் பார்ப்பதும்…….எனக்கும் ஒருவேளை……மகமாயிக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்க கூடும்…..!

நீங்களும் தெரிந்தது போல காட்டிக்கொள்ள வேண்டாம்..!!?!!  நிச்சயம் நீங்கள் என்னை போட்டு கொடுக்க மாட்டீர்கள்…..!! ஆனால்.. இந்த கடவுளர்கள் அதாவது முருகேசனின் மகமாயிகள்..அதனை ஒருவேளை செய்தாலும் செய்யும்…! 

இதனால் தான் கடவுளர்களை எனக்கு பிடிப்பதில்லை……??!!

நாக.பன்னீர்செல்வம்  

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சோறும்..சொல்லும்..!

        இரு சக்கர வாகனத்தை பயன் படுத்தாத.. ஒரு மழை நாளின் முன்னிரவில்...சுமார் ஆறு மணியிலிருந்து.. ஏழு மணி வரை..  முக்கால் மணி நேரத்திற்கும்..மேலாக.. ஒரு சிறிய பேருந்து நிறுத்தத்தின்,வெளியே, வராத அந்த பேருந்திற்கு.காக்க நேரிட்டது... !

        உள்ளே.. ஒரு முதிய பெண்மணி அழுக்கான உடையுடன் படுத்திருந்தார்.. பெருநகரம் என்றால் அவரை ஒரு பிச்சைகாரி என்று எளிதாக எழுதிவிடலாம்..! ஆனால்..இங்கு அப்படி  கூறிவிட முடியாது..எப்படியும் அருகாமை கிராமத்தையும்.. அதில் ஒரு குடும்பத்தையும், புறக்கணிக்கப் பட்ட சமூக காரணங்களை சார்ந்தவராக இருப்பார்..!

      என்னை கண்டதும் எழுந்து..அமர்ந்து..உன் ஊரு எங்கப்பா..? என்றார்..! சற்று முந்தியிருந்தால்.. அந்த கேள்வி.. என்னால் அவரிடம் கேட்கப் பட்டிருக்கும்..!?!
நானும் சொன்னேன்.. இல்லப்பா..சாப்பிட்டு இரண்டு நாளாச்சு..கொஞ்சம் சோறு எடுத்துகிட்டு வரச்சொல்லத்தான்..என்று ஏக்கமாக..!

      நான் ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்து..”ஆத்தா..இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.. அவர் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஏனோ தானோ என்று வாங்கி.. கீழே போட்டுக் கொண்டார்..! அப்போது அந்த பக்கமாக வந்த ஒரு இளம் வயது திருமணமான  பெண்மணி.. அந்த முதிய பெண்மணியையும் அவரது குடும்ப பிண்ணனியை முன்னரே   நன்கு அறிந்தவராக..அவரிடம் பேச்சு  கொடுத்து விசாரித்தார்..!

       ”சார்..இதுக்கு பிள்ளை குட்டி எதுவும் கிடையாது சார்..எல்லாத்தையும் தனது தங்கச்சிக்கும் அவங்க.. பிள்ளைகளுக்கும் கொடுத்துடுச்சு...இப்போ எல்லாரும் கைவிட்டு...இந்த பஸ் ஸ்டாண்டில் வந்து கிடக்குது சார்..!! என்றார்.!

       தன்னை அடையாளம் கண்டு கொண்ட பெண்ணிடமும்..கெஞ்சும் குரலில் ..கொஞ்சம் சோறும் குழம்பும் சமைச்சி எடுத்துகிட்டு வாயேன்..!! இந்தா பணம் என்று நான் கொடுத்த பத்து ரூபாய் உட்பட இன்னும் சில காசுகளையும்..அள்ளி தனது இடது கையால்..  அந்த பெண்ணிடம் கொடுக்க முற்பட்டார் அந்த முதிய பெண்மணி..!

      ”அய்யோ..ஆத்தா.. என் பொண்ணு தனியா இருக்கு..!  நான் போகவே ஒரு மணி நேரம் ஆயிடும்.. நான்  போயிதான்  சமைக்கணும்...எங்கேயிருந்து சமைச்சு.. உனக்கு..எங்க..எப்ப  கொண்டார...!?!..தனது இயலாமையை நினைத்து புலம்பினார்..அந்த இளம் பெண்..!

       ”நல்லா வயல் வேலை செய்யும் சார்... !!..நல்லா.. ஆம்பிள கணக்கா இரண்டு ஆள் சாப்பாட்டை சாப்பிடும்..இப்ப பாருங்க சோறு..சோறுன்னு இங்க வந்து கிடக்குது..! வீட்டில்.. சோறு கொடுத்தா..திண்ணுட்டு.. அசிங்கம் பண்ணுதுன்னு....கழுவ..குளிக்க வைக்க..  பாக்க..எடுக்க. நாதியத்து..மக்க மனுசா இல்லாம போயி .. பஸ் ஸ்டாண்டுல..கெடக்குது,..என்று..கவலையுடன்..சொல்லி விட்டு,.. அவருக்கான உள்ளூர் பேருந்து  வந்ததும்..ஏறி கிளம்பி சென்று விட்டார்..?!!?

      அப்படியே சென்று விட எனக்கு மனசில்லை..!அப்போது அங்கு..சைக்கிளில்  வந்து.. நடந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த.. அருகாமை சுமார் 11 அல்லது 12வது படிக்கும் வயதுள்ள.. சிறுவனிடம்.. கொஞ்சம் பணம் கொடுத்து..பக்கத்தில் எங்காவது சாப்பாடு கிடைத்தால் வாங்கி வந்து இந்த ஆத்தாவிடம் கொடுக்கச் சொன்னேன்..! அவனும்..சார்..! பக்கத்தில் இரவில் சாப்பாடு கிடைக்காது வேண்டுமானால்.. இட்லி.. தோசை தான் கிடைக்கும் என்று உண்மை நிலையை எடுத்துச் சொன்னான்..

      அதை கேட்ட அந்த பேருந்து நிலைய மூதாட்டி..”ஐயே..இட்லி..தோசை வேண்டாம்..சோறு தான் வேண்டும்”.... என பிடிவாதமாக மறுத்தார்..! எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..?!?.. இனம் புரியா கவலையுடன் அங்கிருந்து எனக்கான பேருந்து வந்தவுடன் கிளம்பி விட்டேன்..!

      கிராமத்து பழைய மனிதர்களுக்கு சோறு.. என்பது எவ்வளவு முக்கியமானது என்பது வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை..!..”சோற்றுக்களை” என்ற சொலவடை கிராமத்தில் உண்டு..அதாவது ஏதாவது உடற் குறைபாட்டினால்.. சரிவர சாப்பிட முடியாமல்..மருந்து..வைத்தியம் என இருந்தவர்கள்..மீண்டும்..இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி..இயல்பான அளவில்.. சோறு அல்லது கஞ்சியை.. சாப்பிடும் போது.. அதன் ஆசையும் ஆவலும்.ஏக்கமும்  பூர்த்தியாகி வேர்த்து..களை பட்டு போகும்..அது தான் ”சோற்று களை.”..?!?

      ”சோற்றால் அடித்த பிண்டம்” என்ற சொற்றொடரும் கிராமத்தில் சாதாரணமாக உண்டு..! அதாவது இந்த உடலே சோற்றால் தான் ஆனது என்று பொருளில்..! கிராமத்தில் வழக்கமாக உழைக்கும் பெண்களும் ஆண்களும்..சாப்பிடும் சோற்றின் அளவு அதிகமாக இருந்ததும்..அதுவே அனைத்து பலத்திற்கும் காரணம் என்று நம்பப் பட்ட காலமும் இருந்தது..!
“செத்தவன் வாயில் மண்ணு..இருக்கிறவன் வாயில் சோறு” என்ற வெகு யதார்த்த கிராமத்து சொல்லும் உண்டு..!

     குழந்தைகளை நிறைய சோறு உண்ணச்சொல்லி சொல்லி கட்டாய படுத்திய கிராமத்து பெற்றோர்களும் உண்டு..!! ஆனாலும்..பிள்ளைகளுக்கு சோற்றினை ஊட்டும் போது..அறிவுரையும் கூட ஊட்டி வழங்க வேண்டும் எனும்   பொருள் பட.....”சோறும் சொல்லுமா பிள்ளைகளை வளர்க்க வேண்டும்”.. என்பதும் மூத்தோர் வாக்காக இருந்தது..!

       சமூக படி நிலையில் எந்த சாதி, எந்த வகுப்பு..ஏழை, பணக்காரன் என்றாலும்...எங்காவது வெளியூர் பயணம்..திருமணம், விருந்து, விசேசம் என வெளியே..நல்ல சாப்பாடு.. கிடைத்தாலும்.. கிடைக்காவிட்டாலும்..  ஏன்.. வெளி நாடு சென்றாலும்..வருடம், பல ஆனாலும்..திரும்ப வந்து..  வீட்டில் சமைத்த இயல்பான சாப்பாட்டை சாப்பிடும் போது உள்ள ஆத்ம திருப்தி..எவ்வித மனித,வேறு பாடும் இன்றி அனைவருக்கும் ஒன்று தானே!

       பொதுவாகவே..உழைக்கும்..வெள்ளந்தியான..கிராம மக்களுக்கு.. சோறு முக்கியமானதாகவும்..அதன் அளவும்..அதனை உற்பத்தி செய்பவர்கள் என்ற முன்னுரிமையிலும்  பிரதானமாகவே இருக்கிறது..சுருக்கமாக சொன்னால்.. சணல் சாக்கு பை நிற்பது.. அதனுள் இருக்கும் பொருளை பொருத்தே என்பது போல்..கிராமத்து மனிதர்கள் நிற்பது.. அவர்கள் உண்ணும் சோற்றினால் தான்..என்றால் அது பொய்யில்லை..!

        காலையில் பழைய சோறும் தயிரும்.. நல்ல கூடுதலான அளவில் உண்ட பின்.. எப்பேர்பட்ட மனிதனையும்..முதலில் உட்கார செய்து..பின் தூணில்,சுவற்றில்  சிறிது சாய செய்து..அப்புறம் சரிந்து..அவ்வளவு தான்..!! அது எப்பேர்பட்ட முக்கிய வேலை ஆனாலும்..அப்புறம் தான்..!?!..ஆம்..ஆல் புரோகிராம் கேன்சல்..!?!

       கிராமத்து மனிதர்கள் சாப்பிடும் போது..பாதியில்..அக்கம் பக்கம்.. ஏதாவது ஆபத்து..அபாயம் என்று ஓடி வரும் நிலையில்..தங்கள் பேச்சின் ஊடே.. ”அப்பத்தான் சோத்தில் கைவைச்சேன்..இரண்டு வாய்தான் சாப்பிட்டேன்..சத்தம் கேட்டு ஓடியாந்தேன்”..என்று, நடந்த களேபரத்தின் நடுவிலும்.. தாங்கள், சோற்றை...பாதியில் கைவிட்டு வந்ததை..முக்கியமாக  தவறாமல்..குறிப்பிட்டு..சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்..!?! அதாவது நடந்த சம்பவத்தின் முக்கியத்துவத்திற்கு.. சற்றும் குறைவில்லாதது..தான் சோற்றையே.. பாதியில் விட்டு விட்டு வந்தது..??!!?

          பேருந்து நிலைய பாட்டிக்கு அன்றைக்கு சோறு கிடைத்ததா..? என்று தெரியாது..அன்று இரவு முழுவதும்..ஒரு வாய் சோற்றுக்கு ஏங்கிய அந்த முதிய பெண்ணின்.. நினைவிலும் சோறு  அதன் உணர்வு பூர்வமான மனித தொடர்பும்  வந்து போயின..!?!

        நான் ஒரு சமயம் சிறு வயதில்..”அம்மா இன்று நிறைய அரிசி போட்டு.. சோறாக்கு.. நான் எவ்வளவு அதிகம் சாப்பிட முடியும் என்று பார்க்க போகிறேன்..!?! என்று உளறி வைக்க..அதை கேட்ட அம்மா..அப்படி என்றால் இவ்வளவு நாளும்  நன்றாக சாப்பிட வில்லையா..?!? என்று கண் கலங்கியது நினைவில் வந்து போயின..?!?

         1970 -80களில்..சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நம்மவர்கள்..அங்கு சீனர் உள்ளிட்ட அனைவருமே குறைவாக சோற்றினை சாப்பிடும் பழக்கத்தால்..கடைகளில் கட்டச் சொல்லும்  சாப்பாடு நம்மவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் நிலையில்..அந்த குறைவான சோற்று அளவை கண்டு,.. தாங்கமுடியாமல்...பொருமுவார்கள்..!!

       பின்னர் சோறு அதிகம் வைக்கச் சொல்ல..அதனை  குறிக்கும் வார்த்தையான...” நாசி தாம்பா” என்ற அதாவது சோறு அதிகமாக எனும் மலாய் வார்த்தையை பிரயோகித்து.. அதுவே பழக்கமாகி..!.. உழைக்கும் நம்மவர்களை கண்டால் ”நாசி தாம்பா” என்று கூடுதலாக.. சற்றே நகைப்புடன். சோறு கட்டிக்கொடுக்கும் பழக்கம் உண்டாயிற்று..!!

      பிற்காலத்தில் ஏற்றுமதி.. இறக்குமதி  தாராள செயல்பாடுகளால்..இங்கு கிடைக்கும் ..அரிசி உட்பட..அனைத்தும்  அங்கு தடையின்றி கிடைத்து.. பிரத்தியோக ஹோட்டல்கள், ஏற்பாடுகள்..சொந்த சமையல் என சோற்றின்  அளவு குறித்தான  பஞ்சம் தீர்ந்தது..!

      பேருந்து நிலைய கைவிடப்பட்ட பாட்டியை சந்தித்த..மறு நாள்.. மதியம்..சாப்பாடு தட்டு..பொட்டலம் என எதுவும் ஏற்பாடு செய்ய முடியா நிலையில்.. ஒரு பாலித்தீன் பையில் வடித்த சோறு.. அதில் குழம்பு..தொட்டுக் கொள்ள.. காய்கறி  முதலானவற்றை சிரமப் பட்டு ஏற்பாடு செய்து..பாட்டியை  தேடி சென்று..அதே சிறிய பேருந்து நிலையத்தில்..மதியம் மூன்று மணியளவில் கொடுத்தேன்..! அதனை அந்த முதிய பெண்மணி திறந்து..அள்ளி அள்ளி உண்டது..சோற்றுக்கும்..அதன் மீதான..கிடைக்காத நிலையில் ஏற்படும்  ஏக்கமும்.. மீண்டும் ஒரு முறை நிரூபணமானது..!

       நேற்று..சுமார் இரண்டு மாதம் கழித்து..மீண்டும் அந்த சிறிய பேருந்து நிலையத்திற்கு, சாப்பாட்டு பொட்டலத்துடன்  தேடிச் சென்ற போது..மூத்த பெண்மணி இருந்த அடையாளம் எதுவுமின்றி..காலியாக,.. சுத்தமாகவும் வெறுமையாகவும்..இருந்தது..!! பக்கத்தில் இருந்த சிறிய சைக்கிள்.. காற்று பிடிக்கும்  கடையில் விசாரித்தபோது..” அதுவா..அந்த ஆத்தா.. செத்து போயிடுச்சு சார்..!!” என பதில் வந்தது..!!

      சற்றே..வருத்தத்துடன்..மனம் துணுக்குற்று..எப்படி..எப்போது  இறந்தார்..?விவரங்களை சேகரிக்கும் ஆவலோடு..தகவல் சொன்னவரை..அந்த சிறிய இடத்தினுள்.. எட்டி பார்த்தேன்..?!

       அவர் உள்ளே தரையில் அமர்ந்து தட்டில் சோறும்.. அதில் சாம்பாரும்.ஊற்றி கையால் பிசைந்து அள்ளி..வாய் கொள்ள சாப்பிட்டு கொண்டிருந்தார்.!!..அருகே சிறிய தட்டில்..தொட்டுக்கொள்ள..முன்பு பேருந்து நிலைய பெண்மணிக்கு நான் கொடுத்த அதே  வகையான..முட்டைகோஸ்..கேரட் பொறியல்..அதே கலவையான வண்ணத்தில்..!!

       அப்புறம்.. என் கையில் இருக்கும் சாப்பாட்டு பொட்டலத்தை என்ன செய்வது என்றும் எனக்கு தெரியவில்லை..!?!.இதை..வேறு யாருக்காவது..கொடுத்தாலும்..அது  நான் தேடிவந்த..பேருந்து நிலைய, சோற்றுக்கு ஏங்கிய மூத்த பெண்மணி..தனக்கான சோற்றினை.தான்,.. உண்ணாமல்..அடுத்தவருக்கு..தானம் கொடுத்தது.. போல..இருக்குமோ..??!? அதுவும் தெரியவில்லை..?..

       ஏனோ..நான் வைத்திருந்த சாப்பாடு பை..முன்பைவிட.. அதிக கனமாக...எனக்கு..தெரிந்தது...!

நாக.பன்னீர்செல்வம்..Naga.Panneerselvam










வியாழன், 26 அக்டோபர், 2017

பிரீத்தி.....என் பார்வைக்கு என்ன பதில்..??

   
      தாழ்த்தப்பட்டவர்களை தலித் என்று அழைக்கலாமா..?? கூடாதா..?? என்ற நட்சத்திர  பட்டி மன்றம் நடக்கும் இந்த வேளையில்.. இந்த படத்தில் இருக்கும் பிரித்தி எனும் 6 வயது தலித் சிறுமி பார்க்கும் பார்வைக்கு யார்..என்ன.. பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை..?

       சென்ற அக்டோபர் 15 ந்தேதி ஞாயிறு கிழமை நம்மில் பலர்... தீபாவளிக்கு முன்னதான விடுமுறை நாள் என்பதால்..பண்டிகை கால பர்ச்சேஸுக்காக.. மெனக்கெட்டு கொண்டிருந்திருப்போம்..

    அதே நாளில்... உத்திரபிரதேச மாநில..கேத்தல்பூர் பன்சாலி என்ற இடத்தில்..சாவித்திரி எனும் கர்ப்பிணி தலித் பெண்..காலை 9 மணியளவில் வழக்கமான தனது பகுதியில் குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டிருந்தார்.. தான் வைத்திருந்த குப்பை அள்ளும் வாளியை..அங்கு சென்ற ஒரு ரிக்‌ஷா..லேசாக தட்டி..இடித்து விட அது தவறி...

       அவ்வழியே சென்று கொண்டிருந்த அஞ்சு என்னும்..தாக்கூர் மேல் சாதி பெண்மணியை தொட்டுவிட..ஆச்சாரம் அனாச்சாரம் ஆகி விட்ட வெறுப்பில்..ரோகித் என்ற தனது மகனுடன் சேர்ந்து கொண்டு...இருவரும் சாவித்திரியை..கடுமையாக  தாக்க ஆரம்பித்திருக்கி|றார்கள்..?!?

     சம்பவத்தை அறிந்த அவரது கணவர்..மனைவி இருந்த இடத்திற்கு விரைந்த போது..9 வயதான அவரின் மூத்த மகள் மணிசாவும் மனைவியின் தோழி கவுசமும்..சாவித்திரி அடிபடுவதை தடுக்க முடியாமல் பார்த்து கொண்டிருக்க..ஒரு வழியாக..அடித்தவர்கள் கை சோர்ந்து விலகியவுடன்..அடிபட்டவரை...காப்பாற்றி அழைத்து சென்றிருக்கிறார்கள்..

      பாதிக்கப் பட்ட சாவித்திரிக்கு..தலையிலும், வயிற்றிலும் கடுமையாக அடிபட்ட நிலையில்..அவரது கணவரான தீலிப் குமார் அருகாமை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.. இரத்த போக்கு தலைகாயம் எதுவும் வெளிப்படையாக ..காணப்படாததால்.. அங்கும் அனுமதி மறுக்கப் பட்டு..மருத்துவர்களின் அலட்சியத்தால் வெளியேற்றப் பட்டு.. வீட்டிற்கு சென்றிருக்கிறார்..

        தொடர்ந்து தலை மற்றும் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த சாவித்திரி... தனது வயிற்றில் இருந்த ஆண்மகவுடன்  தானும் ..சேர்ந்து.. இருவரும்..இந்த தாழ்த்தப் பட்ட தேசத்தில் இருக்க வேண்டாம் என்ற நினைப்பிலோ என்னவோ..மரித்து போயினர்...!?!

       இறந்த சாவித்திரி..அவரது கணவர் திலீப்புக்கு இரண்டாவது மனைவி..மூத்த மனைவி மலேரியா காய்ச்சலில் இறந்த நிலையில்..இறந்த முதல் மனைவியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும்..பாசம் மிகுந்த தாயாக சாவித்திரி  இருந்துள்ளார்.. பிறக்க இருந்த ஆண் மகவும்.. மனைவியும் இறந்த நிலையில் செய்வதறியாது....இரண்டு பெண் குழந்தைகளுடன்.. திகைத்து நிற்கிறார்..?!?..தினம் ரூ 200 மட்டுமே சம்பாதிக்கும்...கட்டிட தினக்கூலி தொழிலாளியான தீலீப்....?

     பின்னர் காவல் நிலைய புகார்..விசாரணை என்ற நிலையில் குற்றம் இழைத்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்..! மூன்று மாடி கட்டிட வீட்டில் குற்றம் இழைத்த உயர் சாதி குடும்பத்தில் இருக்கும்.. ஒரே  நபர்..வாழாமல் புகுந்த இடத்தில் இருந்து வந்திருக்கும்..சாவித்திரியின் இறப்புக்கு காரணமான அஞ்சுவின் பெண்.. !

       அவர் விசாரணையின் போது கூறிய காரணம்.. காணாமல் போன தனது வீட்டு வாளியை..சாவித்திரி திருடி வைத்திருந்தார் என்றும்.. அதனாலேயே தனது தாய் அடித்ததாகவும்..தலித்..தாக்கூர் சாதி பிரச்சினை இங்கு சாதாரணம்..என்றும்..இதனை தேவையில்லாமல் பெரிது படுத்தி விட்டார்கள் என்பதாக இருக்கிறது..!?! அதாவது ஹிந்தியில்..அவரது மொழியில் கூறினால்.. ”தோடா பகுத் ஹல்லா..ஹோத்தா..ரகத்தாகே”.....?!? தட்ஸ் ஆல்..?!

      அது சரி....ஒரு பெண்..அதுவும் தலித்தாக.. பிறந்து..பூமியை பார்க்காமலே.. வயிற்றிலேயே இருக்கும் ஆண்மகவுடன்....மற்றும்...தன்னை நம்பி இருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் கணவரை விட்டு விட்டு  இறந்து போவது..கேவலமான...இந்திய சாதி பாரம்பரிய.. பெருமைக்கு முன் பெரிய விஷயமா..?..என்ன??!?

      மேலே இந்த படத்தில் இருக்கும் பிரித்தீ எனும் 6 வயது பெண் குழந்தை.. நடந்த எதையும் நம்ப விருப்பம் இல்லாமல்..சற்று மனம் பிறழ்ந்த நிலையில்.. தனது வீட்டில்..இருக்கும் தட்டு முட்டு சாமான்களோடும்..தனக்கு தானே பேசி கொண்டும்.. விளையாடி வருகிறது..! ‘ அம்மா..வேலைக்கு தான்.. போயிருக்கு சீக்கிரம் வந்துடுவாங்க..” என்ற படி..???

        பீரித்தி என்ற வார்த்தைக்கு.. வடமொழியில் சந்தோஷம் என்றும் பொருள் படும்....பீரித்தி ஹோமம் என்று கூட ஒன்று உண்டு...என்று கேள்வி..?!? பாவம் இது அந்த..பெயரை தாங்கிய.. தலித் குழந்தைக்கும்...அந்த பெயரை குழந்தைக்கு வைத்தவருக்கும்.. தெரியுமா என்று தான்.. தெரியவில்லை..?

நாக.பன்னீர் செல்வம்...Naga.Panneer Selvam

     

   



சனி, 29 ஜூலை, 2017

பிக் பாஸ்: ஒவியாக்களில்,.. அவர்களும்..ஜூலிக்களில்,. நாமும்..!?!

     

        நீங்கள் ..”பிளாக்கிஷ் பீப்பிள்”..உங்களை நம்ப முடியாது..!எனக்கு உங்களை எல்லாம் பிடிக்காது..! இதனை என்னிடம் முகத்தில் அடித்தாற் போல சொன்ன..கேரளாவை சேர்ந்த  உன்னி மாதவனுக்கு,..முப்பது வயதுக்கும் மேலிருக்கும்..!

       எனக்கு, அப்போது வயது இருப்பத்திரண்டு..! இடம் டெல்லி.. வருடம் 1989..ஒரு சிபிஎஸ்சி பள்ளி பணியில்.. நான், புதிதாய் சேர்ந்திருந்த  சமயம் அது..! இத்தனைக்கும் நான் ஒன்றும் அவ்வளவு கறுப்பில்லை..!! அது பொதுவான தமிழர் குணத்தின் மீதான..ஒரு..மலையாளியின்  தாக்குதல்..!

       உன்னி மாதவன், மலையாளி.., அமித் தத்தா,இன்னொரு.. ஏதொவொரு தத்தா..இருவரும் வங்காளிகள்..மேலும் இரவி என்று திருச்சிக்காரர்.. பிராமின் இவர்களெல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன் பணியில் சேர்ந்திருந்த சீனியர்(காரர்)கள்..!

     தமிழர்களை எல்லாம் நம்ப முடியாது.. என்று என்னிடம் சொன்ன உன்னி மாதவனோடு... இரவியும் சேர்ந்து கொண்டார்...!!..” ஆமாம்..இவர்களெல்லாம் எங்களை..பிராமின்ஸை.. மிகவும் கொடுமை படுத்தியவர்கள்..பெரியார் பேச்சை கேட்டுக்கொண்டு... சாமி சிலையை எல்லாம் உடைத்து..எங்களை கேவலப் படுத்தி விரட்டி விட்டவர்கள்”..என்று கண்ணில் ஜலம் வைத்துக் கொண்டு..அவர் பங்குக்கு.. அழாத குறையாக புகார் பத்திரம் வாசித்தார்..!

     எனக்கு ஒன்றும் புரியவில்லை..! ஏதோ ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் நான் ஒருவனே பிரதி நிதி..என்பது போலவும்..வைக்கப் படும் குற்றச்சாட்டுக்கு பொறுத்தமில்லாத குற்ற உணர்வுக்கும் ஆளானேன்..! இருந்தாலும் ..அவர்களை சமாளிக்க..” நான் அப்படியில்லை..என்று எதோ முனகி சொல்லி வைத்தேன்..!

      மிகுந்த மனத்தயாரிப்பு, தமது குற்றச்சாட்டுகளின் மீது நம்பிக்கையுடன் இருக்கும் அவர்களை சமாளிக்க, எனக்கு அப்போது அனுபவம், அறிவு, மொழித்திறமை எதுவும் வாய்த்திருக்கவில்லை என்பதே உண்மை..! மேலும் பிழைப்புக்காக.. தூர தேசத்தில்..வேலைத் தேடி சென்ற.. ஒரு  கிராமத்து சிறுவயது காரனிடம்..புதிய இடத்தில்.. எல்லோரிடமும் ஒத்துழைப்பை நாடும் நிலையில்..அங்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமான..விவாதம் போன்ற..எதையும்  நான் உள்ளிட்ட எவரிடமும்..எதிர்பார்க்கவும் முடியாது..!

    போகட்டும்... மலையாளிகளுக்கு.. தமிழைரை பற்றிய குறைவான மதிப்பீடு எப்போதும்.. இருப்பதை..எனது இருபத்திரெண்டு வயதுக்கு பிந்திய பலவருடங்களிலும் கண்டிருக்கிறேன்..! அதன் நிரூபணமாக.கிராமத்து டீக் கடைகளில் கூட.. எம்.ஏ,.. எம்.பில் படித்த மலையாளிகள்..மிக எளிமையாக.. பணிவுடன்.. கடை நடத்துவதையும்..அங்கு நமது ஆட்கள்..சவடால் செய்வதையும்..முட்டாள் தனமாக பேசுவதும்... உதார் விடுவதும்...சாதாரணமாக நடைமுறையில் காணகூடியதாகும்..இது சென்னை.. உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் கூட பொருந்தும்..!

     சொல்வது ஒன்று..செய்வது மற்றொன்று..எனும் ஹிப்போகிராடிக்ஸ் மனப்பான்மை எப்போதும் நமக்கு உண்டு..என்பது கசப்பான உண்மையே..! நாம் செய்வதை சரியாக செய்யாமல்...கடைபிடிக்காமல்...,  மற்றவர் எதையும் சிறப்பாக..தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நாம்..!

      ”பந்திக்கு முந்து..படைக்கு பிந்து”.....” பாம்பு தின்னும் ஊரில்.. நடுக்கண்டம் நமது”எனும் பழமொழிகள்..அதன் உள்ளார்ந்த.. தவறை நியாய படுத்தும்..நழுவும்.. மன சிலாகிப்பு.. நமது தொடர் மன நிலையை உறுதி படுத்துகிறது..!..மனு கொடுக்கும் சாமானியர்கள்.. அதனை பெறும் அரசியல்வாதிகள்.. மந்திரிகள் என.. பரஸ்பரம்..இதை எங்கே கவனிக்க போகிறார்கள்..?!? என்ற அவ நம்பிக்கையும்..அதனை நியாய படுத்தலும்..அரசியல் உண்ணாவிரத கூத்துகளும்..மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போராளிகளில் ஒரு சிலர் மட்டும் கைதாவதும்...இதரர்..”வீட்டில கொஞ்சம் வேலை”....?!!? என எஸ்ஸாவதும்... நமது இரட்டை குண நலன்களையே எப்போதும் பறை சாற்றுகிறது..?!?

     ஒரு கட்சி உறுப்பினர்..தேர்தல் சமயத்தில்..மற்றொரு கட்சிக்கு..தினப்படி..குவார்ட்டர்..பிரியாணிக்காக கொள்கை பிடிப்புகளை தற்காலிமாக மறந்து..! எதிர் முகாமில்..பணி செய்து விட்டு திரும்பும் போது..சக கட்சி காரர் பார்த்து விட்டால்..அவரிடம்..” நான்..ஏதோ அங்க போய்ட்டு வந்ததா.. நீ நினைச்சிக்கிட்டு இருக்கிற..?ஆனா உனக்கு தெரியாது.. என் மனசு என்னனு..??! நான் எல்லாம்..?!? போ..போ.. உனக்கு தெரிந்தது அவ்வளவு தான்..?!?.....என சமாளித்து..தவறை கண்டு பிடித்தவரையே குற்றவாளியாக்கும் வல்லமை குணம் இயல்பாகவே நமக்கு உண்டு..!

     அரசு வழங்கு மாதாந்திர ஓய்வு தொகையை..பெற.. என்னிடம் உதவி பெற அனுகும் ஒரு சில வயதானவர்கள்..” தம்பி..உனக்கு ஒரு 500 ரூபாய் கொடுத்து விடுகிறேன்..என்னை எதிர்பார்க்காமல்..நீயே எல்லாத்தையும் முடித்து விடு..?!?..எனக்கு உத்தரவிட்டு..தாங்களுக்கு ஏதோ முக்கிய வேலை இருப்பதை போலவும்..அறியாமையால்..சேவை உணர்வையும்.. கொச்சை படுத்தி ஊழலாக்க...நினைப்பதையும்..பொதுவாக..அடிப்படையாக.. தாம் செய்ய வேண்டிய கடமைகளை கூட ஆள் வைத்து செய்ய நினைக்கும் மன்ப்பான்மையை எப்படி எடுத்துக் கொள்வது,,?!?

       ஒரு வயதான பெண்..மாதாந்திர உதவித் தொகையை என் மூலம் பெற்றவர்..என்னை ஒரு முன்னிரவில்  சந்தித்து..” தம்பி..மாசப்பணம் வர ஆரம்பித்து விட்டது..! இதை நீதான் வாங்கி கொடுத்தன்னு.. நான் யாரிடம் சொல்ல மாட்டேன்.. நீயும் சொல்லி விடாதே..?!? அப்புறம் உனக்கு தேவையில்லாத ஜோலியாகி எல்லோரும் கேட்பார்கள்..!?!” என்று நன்றிக்கு  பதிலாக...இரகசியமாக..எனக்கு   அறிவுரை சொன்ன அனுபவமும் உண்டு..?!?

       பேருந்து பயணத்தில்.. நடத்துனரிடம் இருந்து..சில்லரையாக திரும்ப..பெற வேண்டிய ஒரு ரூபாய்..ஐம்பது காசுகளுக்கு..கூட..ஒரு சில சாமானியர்கள்..” ஆமாம் இதை வைத்து..மாடி வீடு கட்ட போறேனாக்கும்..!?!”..என சலித்து கொள்வார்கள்..ஆனால்..அந்த சில்லறை இருந்தால்..அதைக்கொண்டு..ஒரு ஊறுகாய் பொட்டலைத்தை, வாங்கி பழைய சோற்றினை சாப்பிடும் நிலையில் தான் இருப்பார்கள்..!! யதார்த்த நிலையை..வசதியாக மறக்கும் பாசாங்கு குணம்...!..மன்னிக்க..இது தான் நாம்..! இதைத்தான் மலையாளிகள்.. நம்மிடம் கண்டுபிடித்து வைத்து இருப்பதாக நம்புகிறேன்..?!?

      சமீபத்திய..மது ஒழிப்பு போராட்டங்கள்..சரியாக.. பனிரெண்டு மணி வரை நடப்பதும்..!?!...அதன் பின் கலைந்து.. கூட்டம்..அதே..கடைக்கு சென்று விடுவதும்..!.....மது ஒழிப்பு மாநாடுகளுக்கு செல்ல..தொண்டர்களுக்கு...வாகன குறிப்பாக  குடிக்கான செலவு...தவிர்க்கவே முடியாமல்..அரசியல் கட்சிகளால் செய்யப் படுவதும்..அல்லது..  மாநாட்டினை  வெற்றிகரமக முடித்து விட்டு திரும்பும் போது மது அருந்தி கொண்டாடுவதும்..! இங்கு சாதாரணமாகி விட்ட..மறைக்க முடியா நிகழ்வுகளே..?!?

       ”தம்பி....எங்க கடைக்கா.. போற..? இந்தா.. மாமனுக்கு ஒன்னு வாங்கிட்டு வா..! என்று முகத்தை திருப்பி வைத்து கொண்டு..பக்க வாட்டில்.. பணத்தை கொடுத்து..தூரத்து கடைக்கு செல்லும் இளைஞனிடம்,....தனது கணவனுக்கு மது வாங்கி வரச்சொல்லும்..வயதான..தன் கணவன் மேல் அன்பான..?!??... கிராமத்து ஏழைப் பெண்..அன்று காலை மதுக் கடை ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ரகளை செய்தவர் என்பதை..என்னாலும் முதலில்..உங்களை போலவே... நம்ப முடியவில்லை..!

     கேரளாவில்.. சாலை ஓரத்தில்..திறந்த வெளியில்..யாரும் சிறு நீர் கழிப்பதில்லை எனும் கூற்றை பொய்யாக முயன்ற.. ஒரு தமிழ் எழுத்தாளர்.. கேரளாவின் கார் பயணத்தில்..அவ்வாறு தான் ஒருவரை கண்டதும்..அதனை சுட்டிக் காட்ட..அவரின் மலையாள வாகன ஓட்டுனரோ..” நீங்கள் வேண்டுமானால் போய் விசாரித்து பாருங்கள்..அது தமிழ் நாட்டை சேர்ந்த கூலி வேலைக்கு..இங்கு ஆளாகவே இருக்கும்”..எனக்கூற உண்மை அவ்வாறே இருந்து,.எழுத்தாளருக்கு தலைகுனிவை தந்தது,..என படிக்க கேட்டிருக்கிறேன்..!

      ஆனால்..இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால்...மலையாளிகளால் குறை கண்டு..சுட்டிக்காட்டப் படும் நமது தமிழ்க் குணம்..வட இந்திய அளவில் தமிழக, கன்னட, ஆந்திர,கேரளாவின் தென்னிந்திய குணமாகவும்...அதே இந்தியாவிற்கு வெளியில்... ஒட்டு மொத்த இந்திய குணமாகவும்..ஐரோப்பிய கண்டங்களில்.. அது ஆசிய குணமாகவும் காணப் படுகிறது..எனவே இது பற்றியெல்லாம் நாம் கவலைப் பட்டு அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்றே தோன்றுகிறது...!?! ஐரோப்பிய ஒன்றியத்தில்..என்னை பார்த்த ஒரு தமிழ் பெரியவர்.. ”என்ன ஊர்க்காரனெல்லாம் இப்பவாவது திருந்திட்டான்களா”..?? என்று கேட்டது குறிப்பிடத்தக்கது..?!?

        இங்கு மட்டுமல்லாது....லண்டனில் குடியுரிமை பெற நம்மவர்கள் நடத்திய நாடகங்களும் ஏராளம்..! கந்த சஷ்டி கவசத்தில்..போட்டோவை ஒட்டி அது..யாழ்ப்பாணத்தின் ஓட்டுனர் உரிமம் என்று கதைத்து,.. காரியத்தை நிகழ்த்தி கொண்டது போன்ற.. ஏராளமான வரலாறுகளும் உண்டு..!?!..மு.வரதராசனார் எழுதுவது போல.இதுவெல்லாம்...”எண்ணி எண்னி இன்புறத்தக்கதாகும்..”!!

       போகட்டும்......!..தலைப்புக்கு வருவோம்..!?!..பிக் பாஸ் ஷோக்களில் நாம்  நேரடியாக பங்கு கொள்ள முடியாத பார்வையாளர்களாக இருக்கலாம்.. ஆனால்.. அதில் பங்கு பெறும் ஓவியாக்களில் மலையாளிகளும்..ஜூலிக்களில் நாமும் .. நமது உன்னத குணங்களும் இருப்பதை,.. மறைக்கவும் ..மறக்கவும் முடியாது..?!? எனவே,... பாவம் ஜூலிக்களை திட்டாதீர்கள்..!!
 நாக.பன்னீர் செல்வம் Naga.panneer selvam










சனி, 8 ஜூலை, 2017

மறந்தும்..இருந்தும்..இறந்தும் போனவர்கள்.....!?!

         


 சேஷனுக்கு, முந்தைய தேர்தல் காலக்கட்டத்தில்... 1980..களில், கிராம, பிரச்சாரங்களில் ஒலி பெருக்கியில் ஒரு வாசகம் அடிக்கடி, கர கர குரலில்  நம்மால் கேட்க பட்டதாயிருக்கும்....! அது “ உங்களது பொன்னான வாக்குகளை, ”இன்னாருக்கு”.... அளிக்க..”மறந்தும் இருந்து விடாதீர்கள்...இருந்தும் மறந்து விடாதீர்கள்” என்பதானது அது...!

      அதை நினைவூட்டும் விதமாகவே..ஜூன் மாத முதல் வாரத்தில் நடைபெற்ற ஒரு நண்பரின் திருமணத்திற்கு அது நடைபெறும், ஒன்பதிலிருந்து பத்தரை மணி முகூர்த்த நேரத்திற்கு, முன்பதாகவே... வழக்கத்திற்கு மாறாக... மிகுந்த ஆர்வம் காரணமாக .சென்று விட்டேன்....!

     திருமணம் செய்து கொள்ளும் அந்த   நண்பர் உள்ளாட்சி துறையில், ஒரு சிற்றுராட்சியில் ”கிளர்க்”காக பணியாற்றுகிறார்..தாய் உண்டு, தந்தை இல்லை..அவரின் ஒரே, மூத்த சகோதரருக்கு, ஏற்கெனவே, திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.. போட்டோ கலைத்துறை, கம்பியூட்டரில் மிகுந்த திறமைசாலியான அவர், நிரந்தர வேலை இல்லாமல், சுழி சும்மா இருக்க விடாமல், கடனாளியாகி குடும்பத்திற்கு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறார்..!

       சுமார் ஒரு லட்சத்திற்கு மேலாக, மூத்த சகோதரருக்கு ஏற்பட்ட கடன் தொகை குடும்பத்தினரால் குறிப்பாக எனது நண்பரால் தீர்க்கப் பட்டிருக்கிறது..! இதை போலவே முன்பும், பல முறை,தொகை சற்று கூடக் குறையவோ, பொறுப்பற்ற, அவரின் ஊதாரித்தனத்தால் அழிக்கப் பட்டது வேறு விஷயம்..!

      அப்போது தான், எனது நண்பரின் குடும்பத்தினர் எதிர்பாரா வண்ணம் அந்த நிகழ்வு நடந்து விட்டது.. பிரச்சினைக்குரிய மூத்த சகோதரர், அம்மா, தம்பி, மனைவி, பெண் குழந்தை இவர்களை விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, எவ்வித முதன்மையான  காரணங்களும் இன்றி தலைமறைவாகி,...காணாமல் போய் விட்டார்...!

         நண்பர், தனது சகோதரரை தேடாத இடம் இல்லை.. உயர் நீதி மன்றத்தில் ஆட் கொணர்வு மனு வரையிலும் போயாகி விட்டது..! காவல் நிலையங்களிலும்....தனிப்பட்ட தேடல் என..தொடர்ந்து பாலோ அப் செய்தும், அவர் கிடைக்க வில்லை..! யாரோ ஒரு வியாபாரி..அவரை கோயம்புத்தூரில் கண்டதாக.. கிடைத்த அரை குறை..சிறு தகவல் மட்டுமே.. அவர் இருப்பை தெரிவிக்கும் நம்பிக்கையாக மாறியது..!

       எதாவது போன் வந்து, எதிர்முனையில் சற்று பேச தாமதமானால், காணாமல் போனவரின் தாய்..”தம்பி வந்து விடப்பா...உன்னை எதுவும் கேட்கமாட்டோம்.. நீ வந்தால் போதும்..”என்று புலம்பும் மன நிலைக்கு வந்து விட்டார்..! இந்த நிலையில் தான், தனது பெரிய அண்ணன் காணாமல் போன நிலையில், பல முறை தனது திருமணம் தள்ளிப் போட்ட நண்பர்.. வருடங்கள் உருண்டோடிய நிலையில், வேறு வழியின்றி, மாமா பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்..! இந்த திருமணத்தை கேள்விப் பட்டு.. அதற்காவது காணாமல் போன சகோதரன் திரும்பி விடுவான்..என்ற நப்பாசை, நம்பிக்கையையும் மேலோங்க...!

     திருமணம் முடிந்தது... !..யார் இந்த திருமணத்திற்கு வருவார் என்று நாங்கள் காத்திருந்தோமோ....யார் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டதோ....!?!..அவர் கடைசி வரை வரவில்லை...! காணாமல் போனவரின் மனைவி,குழந்தை அவர்கள் தரப்பு உறவினர்கள் முகத்தில் ஒரு வித சோக களை..குடியிருந்தது..! ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக் கொண்டு..கண்களால் சோக இரகசிய செய்தியை..பரிமாறிக்கொண்டு பிரிந்தனர்...!

     காணாமல் போனவரின், எனது நண்பரின் தாய்...சமையல் நடைபெறும் பகுதிக்கு சென்று... யாரும் பாராவண்ணம் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்..!

     இந்த சம்பவத்தை போலவே.....ஒரு சமயத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்த நண்பர்..அருண் என்று ஒருவர் இருந்தார்..! அவரின் தொடர்பு..அனுபவம் இவற்றை அவர் பயன் படுத்திக் கொண்டதை விட..அதனை நான் பயன் படுத்திக் கொண்டதே அதிகம்..!

     அருண்...தலைமையாசிரியரின் ஒரே மகன்..உயர் வகுப்பினை சார்ந்த அவருக்கு..மிகுந்த செல்வாக்குள்ள உறவினர்கள்.. நண்பர்கள்..தந்தையிடம் படித்த .. நல்ல பணியில் உள்ள....எதையும் செய்யக்கூடிய ..உதவக் கூடிய மாணவர்கள்  நிறைய பேர் இருந்தும் எதையும் அவர் பயன் படுத்தி வாழ்வில் நிலையாக எதையும் செய்ய வில்லை..! காலதாமதமான திருமணத்தின் வழி மனைவியும் ஒரு பெண்குழந்தையும் உண்டு..!!

       அருண், பேச ஆரம்பித்தால்..எல்லாம் நெகட்டிவான செய்திகளாகவே இருக்கும்...! அதாவது தொழிலில் அனைத்தையும் இழந்து நடு ரோட்டுக்கு வந்தவர்கள், திடிரென குடும்பத்தை விட்டு காணாமல் போனவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என சுவாரசியமான கதைகள்..மணிக்கணக்கில் நீளும்...! பலமுறை .பலரிடம் திரும்ப.. திரும்ப...மறு ஒலிபரப்பாக.. ஆர்வமுடன் கால்களை ஆட்டிக் கொண்டு..அதே விதமாக.. அலுப்பு தட்டாமல்..அதாவது அவருக்கு..!?!  சொல்லிக் கொண்டுருப்பார்..!

     பின்னாளில்..அவரின் பேச்சு குறைந்து..அதுவும் சுத்தமாக  நின்று..ஒரு வித மூளை செயலழிப்பு ..என்னவென்று புரியாத நோய்க்கு ஆளாகி...சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு..ஒரு நாளில் அங்கிருந்து..யாரும் அறியா வண்ணம்.. அவரின் வார்த்தையிலேயே கூறுவதனால்..” ஒன் ஃபைன் டே மார்னிங்”வெளியேறி.. காணாமலும் போய் விட்டார்.?! ..இன்று வரை எங்கிருக்கிறார்..? என்ன ஆனார்..?? உயிருடன் உள்ளாரா..?!? எதுவுமே தெரியாது..?

      ஒரு சில வருடங்களில் அவரின் தாயும் இறந்து விட்டார்..! மனைவி, குழந்தை, காணாமல் போனவரின் வயதான தந்தை..ஆகிய மூவரும்..மிகுந்த மனப் பாரத்துடன்.. வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்..! அதிலும் அந்த சுட்டியான பெண் குழந்தை..?..மிகுந்த ஆளுமையும், அறிவும், எத்தனையோ வாய்ப்புகள், நண்பர்களின் உதவிகள் என பன்முகத்தன்மையோடு, செல்லமாகவும், செல்வாக்காகவும்  இருந்த..காணாமல் போன.. நண்பரின்.. குடும்பத்தை காண அஞ்சி.தைரியமற்றுபலரும் அங்கு செல்வதை தவிர்த்து விட்டோம்..?!!?

       அவர் இரசிக்க... இரசிக்க...கூறிய எதிர்மறை கதைகள் போலவே..அவரின் வாழ்க்கை கதையும்...எதிலும் பிடிப்பு இல்லாமல்..காற்றில் பறக்கும் காகிதம் போல அங்கும்... இங்கும் அலைந்து.. கடைசியில் கானாமல் போனதாக அமைந்தது தான்...விசித்திரம்..!!

       காணாமல் போனவர்கள்..தற்கொலை செய்து கொண்டு அடுத்தவரின்..தன்னை சார்ந்தவரின்..குடும்பத்தை பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு.. ஒரு வித சாடிச மனப்பான்மையோடு...யார் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என....அவர்கள் இல்லாமல் போய் விட்டால் அதோடு மொத்த உலகமும் இல்லாமல் போய் விடுகிறது...அதாவது அவர்களுக்கு..!!

       ஆனால்  நமக்கு அப்படி அல்லவே..!?! “ செத்து தொலைப்பதை விட..வாழ்ந்து தொலைக்கலாம்..!!??! என்பதே...வாழ்பவர்களின்...வாழ நினைப்பவர்களின்...வாழ வைப்பவர்களின்  மன நிலையாக இருக்கிறது..!! இருக்க வேண்டும்..!!

      வாழ்வில் ஒன்று.... ஒன்றாய் சேர்ப்பது அறிவு...!!.அதுவே ஒன்று..... ஒன்றாய் விட்டு ஒழிப்பது ஞானம்..!! நாம் ஞானியாக இருக்க தேவையில்லை.. குறைந்த பட்ச..அறிவாளியாக மட்டும் இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன்...!?!!

      அதுவும்.....அந்த..விட்டு ஒழித்த ஞானிகளை  நினைக்கவும்....அவர்களை தேடவும்....கண்டு பிடிக்கவும்...ஒரு வேளை அவர்கள்  நள்ளிரவில் திரும்பி வந்தால்..வாசல் கதவைத் திறக்கவும்..! பசியுடன் இருந்தால் சோறு போடவும்,அது எதுவுமே...முடியாத நிலையில்.. அவர்களால் உண்டாக்கப் பட்ட...இழப்பை..அவர்களின் இருப்பில்லா நிலையை..சரி செய்யவும்....வாழ்கைக் கண்ணி, சங்கிலி தொடர் அறுபடாமல் காப்பாற்றப் படவும்.......!?!..என்ன நான் சொல்வது சரிதானே..??
 நாக.பன்னீர் செல்வம் ..Naga.Panneer Selvam