எனக்கு ஏன் கடவுளர்களை பிடிக்காது..?!?
முருகேசன் எனக்கு
உறவினன்..அதாவது அத்தை மகன் முறை வேண்டும்…
நெருங்கிய உறவுகள் எல்லாம்.. அவர் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன்..இடையில்
வந்த மாமன் மச்சான்..அவர்களின் நெருக்கம்…. இறுக்கம் இவைகளுக்கு, முன்..பழைய உறவுகள் நெருக்கமற்று போய்விடுவது இயல்பு
தானே..?!
அதிலும் எனது தந்தை வழி தாத்தா அவரின் சகோதர்கள் நான்கு பேர்..அதாவது
எனக்கு நான்கு தாத்தாக்கள்…அவர்களின் மகன்கள்..எனக்கு பெரியப்பா சித்தப்பாக்கள்….ஆனால்
எனது மகன்களும்… பெரியப்பா சித்தப்பா.... மகன்களின் மகன்கள்….பேரன்களாக.....அவர்களுக்குள் உறவு என
வரும் போது..”அதாவது டா…என் தாத்தா.. உன் தாத்தா.. அங்களோட.. அப்பாக்கள் எல்லாம் அண்ணன்
தம்பிகளாம்டா”..….என உறவு சங்கிலி..பலகீனமாகி.. நெகிழந்து… கண்ணி அறுந்து….சாதாரண சொந்தம்…அவ்வளவு
தான் என ஆகிவிடுகிறது..!??!
அது போகட்டும்…முருகேசனும்..அவன்
உறவும் எனக்கு அப்படித்தான் ஆகி போனது…விவசாயம்....வீட்டு
வேலை..கல்யாண..கருமாதி வேலைகள் எல்லாம் உறவினர்களாலேயே செய்யப் பட வேண்டும் என்ற நிலை
மாறிய போது..குறிப்பாக கல்யாண மண்டபங்களும்..சாமீயானாக்கள், வாடகை பாத்திரக்கடைகளும் வந்த விட்ட போது உறவின் தேவை இயல்பாகவே..குறைந்து
விட்டது…!?!
சொந்த மாமன்,
மச்சானுக்கே... கல்யாண வீட்டு சார்பாக யாரோ ஒரு புண்ணியவான் வாங்கிய காண்ட்ராக்ட்… காசுக்கு..
அரை தூக்கத்தில் சோறு போடுகிறான்..”தின்னா தின்னு திங்காட்டி போ”…என்பது போல..! இதில்
உறவு என்ன..சொந்தம் என்ன..?!? எந்த அல்லல் சொல்லலுமில்லாமல்…காசு போனால் பரவாயில்லை…..காரியம்
முடிந்தால் சரி….என்றாகி விட்டது…!?!
இதில்..விசேஷ
முடிவில்..கடைசியில்.. குப்பையாய் தூக்கி எறியப் பட்டது நமது சொந்தங்களும்..அவர்கள்
தாங்கி வந்த உறவு முறைகளும் தான்..!!!
ஆகா..முருகேசன்
மேட்டரை ஆரம்பித்தால்..வேறு எங்கு எங்கோ இழுத்து கொண்டு போகிறதே…!?! இதோ வந்து விட்டேன்…..! விசயம்
ஒன்றும் பெரிதில்லை….முருகேசன் வாழை வியாபாரம் செய்து வந்தான்….இலை..வாழை போன்றவற்றை தோப்பில்.. மொத்தமாக பேசி..வாங்கி அதனை…தனியாகவும் மார்க்கெட்டுக்கும்..சந்தைக்கும்
என கொண்டு சென்று விற்கும் இலை, வாழை, வாழைப்பழ சீப்பு...தார், வியாபாரம்..!
ஒரு நாள் அவனும்..
அவனது மனைவியும் லையன் கரையில் அவர்களது டிவிஎஸ் ஐம்பது..!?! வண்டியை நிறுத்தி விட்டு…வாழைக்கொல்லையின்
உள்ளே இலை அறுத்துக் கொண்டிருந்த போது….அவசரம் எதுவுமின்றி.. நிதானமாக, பொறுமையாக யாரோ
அவனது வண்டியை திருடி சென்று விட்டார்கள்…..!?!!
பின்னர் அவன்…காணாமல் போன அவனது
வண்டியை தேடி அலைந்தபோது…..யாரோ ஒரு புருஷனும் அவன் பொண்டாட்டியும் அவனது வண்டியை களவாண்டு
சென்று விட்டார்கள் என்பதாகவும்..அதை பார்த்தவர்கள் முருகேசனும் அவனது மனைவியும் தான்
எப்போதும் போல செல்வதாக எண்ணி விட்டதாக..கூறி பாவப்பட்டிருக்கிறார்கள்..!?!
யாராவது மனிதர்களோ…அல்லது பொருளோ….வண்டி
வாகன..கால் நடைகளோ காணாமல் போய்….அதனை கண்டு பிடிக்க..விசாரிக்கும் போது தான்..தெரியும்
நம்மவர்களின் கருணா கற்பனை.??..!!?? ஆகா..அற்புதம்..!?!
தெரியாது..பார்க்கவில்லை என்ற
இரு வார்த்தைகளுக்கு பதில்..அப்படியா அதை அங்கே பார்த்த ஞாபகம்….இங்கே இவன் பார்த்தான்
என கற்பனை குதிரையை தட்டிவிட்டு..ஆளாளுக்கு கதை கதையாய் சொல்லுவதில் உள்ள சுகம்…..??!!
அதிலும் காணாமல் போனது மனிதன் என்றால் கேட்கவே வேண்டாம்…..!?!
திருப்பதியில் பார்த்தேன்…திருவண்ணாமலையில்
பார்த்தேன்..சபரிமலையில் பார்த்தேன் என்று தான் சென்ற இடங்களை எல்லாம் சொல்லி பெருமை
பீற்றிக்கொள்ள..காணாமல் போனவனின் குடும்பத்திடம்…அவன் சாயல் மாதிரிதான் இருந்தது…இல்லை
இல்லை அவனேதான் என எதையாவது சந்தேகமாக சொல்லி வைத்து….எழவு கொட்டி கொள்வார்கள்..!?!
அப்படித்தான்..மெயின் ரோட்டு..மாரியம்மன்
கோவில் சைக்கிள் ஸ்டாண்டில்..எனது வண்டியை விட்டு விட்டு பஸ் பிடிக்க நின்றபோது.. முருகேசனை
எதேச்சையாக பார்த்தேன்..! வாழைக்கறை படிந்த கைலியும்..பனியனுமாய், வாயில் வெற்றிலை சீவல்
கறையுடன்.. கையில் சீப்பு அருவாளுடன்….நடந்து சென்றவன் என்னை பார்த்தவுடன் அருகில்
வந்தான்..!
ஏண்டா..வாழைக்கொல்லைக்கு
போகலையா..?? என நான் கேட்டதோடு நின்றிருக்கலாம்… நாக்கில் சனியன்…!.என்னடா வண்டி எங்கடா..?
என்று கேட்டு விட்டேன்…!?!
அவ்வளவு தான்…கண்ணில்
ஜலம் லேசாக தளும்பி.. ”வண்டி காணாமல் பேச்சுடா…! யாரோ புருசணும் பொண்டாட்டியுமா வண்டி
கிளப்பிக் கிட்டு போயிட்டாங்கடா.” .பத்து நாள் ஆச்சு..கை முறிஞ்சாப்போல இருக்கு…எங்கேயும்
போக முடியல…வர முடியல வியாபாரம் சந்தை என எங்கேயும் போகலடா….வண்டி ஒண்ணு வாங்கணும்…
நீயும் எதாவது இருந்தா சொல்லு….! எனக்கு இந்த மகமாயி தான் வழி காட்டணும்”…… என்று சொல்லி
சோகமாக மூஞ்சியை காட்டினான்…!
”அய்யயோ……….சரிடா
பாத்துகலாம்…..கவலை படாதே”…என்றேன்….மீண்டும் மகமாயியை தான் நம்பி இருக்கேன்!?..என்றவன்..
நான் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்றான்… எனக்குள் ஒரு மின்னல்….வெட்டியது…!?!
வீட்டில் நல்ல
கண்டிசனில் ஒரு டிவிஸ் ஐம்பது!?! இருந்தது…!ஏற்கெனவே ஒரு பெரிய வண்டி, புது ஆக்டிவா என
மாட்டுக்கொட்டகையில்….மாடுகளுடன்.. நிப்பாட்ட சிரமமாக இருந்தது…..
அதனை இவனிடம்
கொடுத்துவிடலாம்..எதாவது பணமும் கிடைக்கும்…உதவியும் செய்தால் போல இருக்கும் என்று
எண்ணி….கொஞ்சம் தூரம் சென்ற முருகேசனை கூப்பிட்டு..”யேய் நாளைக்கு உன் வீட்டுக்கு காலையில
எட்டு மணிக்கு வருகிறேன் வீட்டிலேயே இரு”…
என்றேன்..சஸ்பென்ஸாக…..!?!! அவன் வீடு..சரியாக
எங்கு இருக்கிறது என்பது கூட அதுவரை எனக்கு தெரியாது..?!?
அப்புறம் இரவு
வீட்டிற்கு சென்று..பாவப்பட்ட முருகேசன் வண்டி தொலைந்த கதையை கூறி.. நமது வண்டியை அவனுக்கு
கொடுத்து ரூபாய் நான்காயிரம் மட்டும்….அவனிடம் சில பல தவணைகளில் வாங்கி கொள்ளலாம்…பாவம்…!?!..என வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி…..”எடுத்த எழவெல்லாம் பத்தாது்ன்னு….அவனுக்கெல்லாம் வாங்கி கொடுத்த கடனையெல்லாம் நாம கட்டியது
போதாதுண்ணு…இப்ப இத்தனை வருசம் கழிச்சி வண்டி நொண்டின்னு..அவன் சகவாசத்தை இழுத்துக்கிட்டு
வந்திருக்கான்”!…என புலம்பிய
அம்மாவையும் சம்மதிக்க வைத்து….,
மறு நாள் காலை
அவனது வீட்டிற்கு சென்று..என் வண்டியை..மிகவும் பெருமிதமாக கொடுத்து விட்டு …தணிந்த
குரலில்..யேய்…வண்டிக்கு நான்காயிரம் மட்டும் போதும்…….அதை கொஞ்சம் கொஞ்சமாக மாதா மாதம்
ஆயிரம் போல..வீட்டில் உன் மாமாவிடம் கொடுத்துவிடு..(அதாவது என் அப்பாவிடம்..!?) என்றேன்..!.
யேய்.. நீ கொடுக்கும் பணத்தை கொண்டுதான்
மாமாவுக்கு வேறு புது வண்டி இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்க வேண்டும்….!எனக் கூறிய என்னை கொஞ்சமும் சட்டை
செய்யாமல்…..” அந்த மகமாயி தான்
வண்டியை திரும்ப சேர்த்திருக்கா..!!” சாமிக்கு நன்றி
கூறி….என அரைக்கண் மூடி தியான நிலையில் நெகிழ்ந்து...வண்டிக்கான பூஜை ஏற்பாடுகளை தொடங்கினான்..!?!
நானும்..இது ஒண்ணும் சரியில்லையே..! என்பது போல் கிளம்பி
வந்து விட்டேன்..!?!!
சரிதாங்க..!.நீங்க யூகிப்பது சரிதான்…!?! ஒன்றரை வருடங்கள் ஆகப்போகிறது…! கொடுத்த வண்டிக்கு….ஒரு
ரூபாய் கூட பெயரவில்லை முருகேசனிடமிருந்து…?!? என்னை எப்போதாவது வழியில் பார்க்கும்
போதெல்லாம்……..”சரி சரி போய்ட்டு
வா…..பாத்து போ…”...என அன்பு ஆணையிட்டு… திருப்பதி ஜர்கண்டி ஜர்கண்டி போல்..!என்..! அதாவது அவனுடைய..!..டிவிஎஸ்
ஐம்பதில்!?!.. வேகமாய் போய் கொண்டிருந்தான்..?!?
அவனை..பொறுத்தவரை
விஷயம் ரொம்ப சிம்ப்பிள்…?!”
காணாமல் போன வண்டியை மகமாயியே..திரும்ப கொடுத்துவிட்டாள்….!
எவனுக்கும் எதற்கும்…அவன்…. பணம் தரவேண்டியதில்லை….! தெய்வபக்திக்கு எல்லாம் நல்லதாக
நடக்கும்…அவ்வளவு தான்..! தட்ஸ்……ஆல்…!
மனுசனுக்கு கிடைக்க வேண்டிய நன்றியையும்..கூடவே ரூபாய் நாலாயிரத்தையும் தட்டி பறிக்கும் தெய்வம் எல்லாம் ஒரு தெய்வமா..?!
அப்புறம்……..போன
மாசம் 10 ந்தேதி… முருகேசன் வண்டி…..அதாவது என் வண்டி மீண்டும்……..அவனிடமிருந்து… காணாமல்
போய் விட்டது..! அதை அவன் இம்முறை என்னை… பார்த்த போதும் சொல்ல வில்லை…! சொல்லவும் மாட்டான்..!
அவன் வண்டி திருட்டு போய்.. அதனை மகமாயி திரும்ப என் மூலம் கொடுத்து.. மீண்டும்….அது
காணாமல் போய்…….மகமாயியின் கணக்கு முருகேசனுக்கு…பாவம் புரியவில்லை…?!?
முருகேசன் வண்டியை
டாட்டா ஏஸ் வைத்து… அதாவது நான் எனது வண்டியை… அவனுக்கு தெரியாமல் தூக்கியதும்…அதனை
ரகசியமாக ஒரு இடத்தில் வைத்திருப்பதும்.....விற்க ஆள் பார்ப்பதும்…….எனக்கும் ஒருவேளை……மகமாயிக்கும்
மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்க கூடும்…..!
நீங்களும் தெரிந்தது
போல காட்டிக்கொள்ள வேண்டாம்..!!?!! நிச்சயம்
நீங்கள் என்னை போட்டு கொடுக்க மாட்டீர்கள்…..!! ஆனால்.. இந்த கடவுளர்கள் அதாவது முருகேசனின் மகமாயிகள்..அதனை ஒருவேளை செய்தாலும் செய்யும்…!
இதனால் தான் கடவுளர்களை எனக்கு பிடிப்பதில்லை……??!!
"மனுசனுக்கு கிடைக்க வேண்டிய நன்றியையும்..கூடவே ரூபாய் நாலாயிரத்தையும் தட்டி பறிக்கும் தெய்வம் எல்லாம் ஒரு தெய்வமா..?!"
பதிலளிநீக்குஅதானே....
அப்ப....நீங்க நல்ல கெட்டவரா...இல்ல கெட்ட நல்லவரா?
நன்றி......இடம்.. பொருள்.. ஏவலில்.. நான்.. நீங்கள் உள்ளிட்ட அனைவரும்..அதுவாகவோ இல்லை இதுவாகவோ..!
பதிலளிநீக்குஅருமையான பதிவு.ஆனால் நான் மகமாயியாக மாறி முருகேசனிடன் இந்த விசயத்தை உடனே கூறப் போகிறேன்...😬😬😬
பதிலளிநீக்குNalla grama nadapu.
பதிலளிநீக்கு