செவ்வாய், 20 டிசம்பர், 2016

பச்சை மற்றும் பழுத்த மட்டைகள்....!?!!


   முதியோர் இல்லங்களே தவறா...??

       ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் இருந்து வந்த,சுமார் 75 வயது மதிக்கக் தக்க பெரியவர் அலுவலக வாசலில் காத்திருந்தார்... எங்களின் சகோதர நிறுவனம் நடத்தும் முதியோர் இல்லத்தை பற்றிக் கேள்விப் பட்டு, அதில் சேர தேவையான விபரங்களைப் பெற ஆர்வமாக இருந்தார்.!

       பிராமண சமூகத்தை சார்ந்தவருக்கு, பணம் கொடுத்து, தங்கி இறுதிக் காலத்தை கழிக்க தகுந்த இடம் தேவையாக இருப்பதாக கூறினார்.. நானும் கனிவுடன் தேவையை கேட்டறிந்து, எங்களுடைய இல்லம், அரசு சார்ந்ததாக அதில் பலவித சமூகத்தினரும், பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதால்,அவரின் தேவை இங்கு பூர்த்தியாகாது எனத் தெரிவித்து.. தனியார் நடத்தும் சில முதியோர் இல்லங்களை விசாரித்து அவர்களின் தொடர்பு எண், முகவரி போன்றவற்றை கொடுத்து உதவினேன்..!

       அவரும்.. நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிப் புறப்படும் போதுதான் தெரிந்தது.. முதியோர் இல்லம் அவருக்கு தேவைப் படவில்லை...! அவரின் உறவினர்.. இவரை விட வயது மூத்த, சகோதர உறவு முறையில்..இருப்பவருக்கு.. அவரின்..பிள்ளைகள் பணம் மட்டும்  தரத் தயாராக இருந்து, தங்களுடன் வைத்துக் கொள்ளமுடியாதவர்களாக இருக்கிறார்கள்..! என்னை சந்திக்க வந்தவர் இது நாள் வரை..அவரை வைத்து பராமரித்து வருகிறார்..! தன்னால் இனி முடியாது என்ற நிலையில் பொருத்தமான முதியோர் இல்லத்தை.. அவருக்காக தேடிக்கொண்டிருக்கிறார்..!

     குடும்பம் இன்றி.. தனியே வாழும்..சந்திக்க வந்தவருக்கே.. முதியோர் இல்லம் தேவைப் படும் நிலையில் அவர் வேறு ஒருவருக்காக.. சென்னையில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர்கள் பயணித்து , வயதான காலத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்.!

      மனித வாழ்வு முரண்பட்ட..விருப்பு வெறுப்புகளில் சுவாரசியம் நிறைந்தது..! குழந்தையாக  பிறந்ததிலிருந்து..வளர்ச்சியை நோக்கிய பயணம்..குப்புறபடுத்தல், மண்டியிடுதல், நடத்தல் எனவும், பின் தன் முனைப்பாக வயதை கூட்டி காட்டவும் முயலுகிறோம்.. ஆண்கள் எனில் மீசை முளைப்பதையும்..வேட்டி அணியவும்..இளைஞர்களாக விரைவில் மாறவிரும்புவது..!

      அதே பெண்கள் எனில் சிறு குழந்தையாக இருக்கும் போதே தாவணி புடவை அணிய ஆசைப் படுவதில் தொடங்கி.. நீண்ட சடை வேண்டுமான விருப்பத்தில்..பொய் முடியை கொண்டு சிகையலங்கராம் செய்து கொள்வது..சமையல் கற்பது என பெரிய மனுஷியாக மாறவும்.. முதிர்ந்த பெண்களைப் போல பாவனை செய்யவும் முயலுகிறோம்..!

      ஆனால் எல்லாம் 30 வயதுக்கு மேல் தலைகீழாக மாறுகிறது.. !!வயதாகும் கவலை.. முதுமை ஆவது தெரிய தொடங்க தெரியும் போது..வயதை குறைத்து காட்டவும்.. மறைக்கவும்..தள்ளிப்போடவும்..தலை நரையை மறைத்து.. டை அடித்து... எனக்கு என்ன வயது இருக்கும்..?!?.. சொல் பார்க்கலாம்..எனக் கேட்டு.. வயதை,குறைத்து எதிராளி, ஒரு வேளை,சொல்லி விட்டால்...பெருமையுடன் கெக்கெ பிக்கே என சிரித்து மகிழ்கிறோம்..??!!

     எதை பற்றியும் கவலை படாமல்..தனது குழந்தைகள் படித்து ஆளாகி முன்னேற வேண்டும் சகல சவுரியங்களுடன் வாழவேண்டும் என ஆசைப் பட்டு கடுமையாக உழைக்கும் பெற்றோர் தங்களது முதுமை காலத்தில் என்ன ஆவோம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை..!

      மிகவும் கஷ்டப் பட்டு உழைத்து பிள்ளைகளை பெரிய ஆளாக்குவதையே குறிக்கோளாக கொண்ட,பெற்றோர்,.. சமூக கடப்பாடு, தியாக உணர்வு, சகிப்புதன்மை எதையும் பிள்ளைகளுக்கு  கற்றுக் கொடுக்காமல், காலம் விரைந்து, தங்கள் முதுமை காலத்தில் நிற்கும் போது..ஏணியின் முதல் படியில்  தங்களின் பிள்ளைகளும்..கடைசிப் படியில் தாங்களும் நிற்பதை உணர்கிறார்கள்..!!

      தங்களின் படிப்புக்கு ஏற்றவாறு, கிடைத்த  வேலை, பெற்றோரிடமிருந்து விலகி..வசிக்கும்  நெடுந்தொலைவு தூரம், திருமணம்,தனக்கான  குடும்பம், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, வாடகை  வீடுகளின் சிக்கல்கள், குழந்தைகளின் படிப்பு,வேலைப் பளு, மாத இ எம் ஐ., கைச்சங்கிலிகள், வேலைக்கு செல்லும் மனைவி, பெற்றோர் உடன் இருக்க நேரிட்டால் கொடுக்க வேண்டிய பாதுகாப்பு, தினசரி  கடமைகள்..உதவி..மருத்துவம், பேச்சு துணை, இவற்றால் ஏற்படும் சிக்கல்களில் , வேறு வழியின்றி..பெற்றோரை தவிர்ப்பதை ஒரு குற்ற உணர்வாக கூட.. கருதாத யதார்த்த நிலைக்கு..பிள்ளைகள்.. தள்ளப் படுகிறார்கள்..!!

      கிராமங்களில் முதியோர் நிலைமை இன்னும் கெட்டு விடவில்லை..! பிறர் ஏதாவது சொல்லி விடுவார்களோ..என்ற கெட்ட பெயருக்கும் அவதூறுக்கும் ஆளாக விரும்பாமல்.. கடைசிக் காலம் வரை பெற்றோரை காப்பாற்றும் எளிய மனிதர்கள், அவர்களின் மனைவிமார்கள்..இப்போதும்.. இருந்து கொண்டிருக்கிறார்கள்..!

     பென்சன் வாங்கும்..தங்களது, முதிய பெற்றோர்களை..மாதத்தின் முதல் தேதியில்...கரிசனமாக வங்கிக்கு அழைத்து சென்று, பணத்தை பெற்று,தான் எடுத்துக் கொண்டு... அவர்களை வெறுங்கையுடன் வீட்டுக்கு அழைத்து வருபவர்களும் உண்டு..!..சாப்பாடு.. இருக்க இடம் நான் தருகிறேன்.. இதைவிட இவர்களுக்கு என்ன தேவை இருந்து விடப் போகிறது..?? என்ற அலட்சியமும் இதற்கு காரணம்..!?!

      வயது முதிர்ந்த நிலையில்..மூத்த குடிமக்கள், தாங்கள் கவனிக்கப் படவேண்டும் என உளவியாலான தாக்கத்தால்.. மன நோய்மையில்..பாதுகாப்பு..இறப்பு குறித்தான அச்சம்..என  பல் வேறு குறைபாடு உடையவர்களாக மாறுகிறார்கள்..! பொய் சொல்லுவது..அதீத அக்கறை அல்லது விட்டேத்தியான மன நிலை..ஒரு பக்க அன்பு..தனக்கு பிடிக்காதவர்கள்..துன்புற ஆசைப் படுவது..வெறுப்பு... பாரபட்சமான அன்பு..என இத்தியாதி..இத்யாதிகள்..!!

      வெளியார் வரும் போது அவர்களின் கவனத்தை ஈர்க்க..புறணி பேசுதல், தன்னை கவனித்துக் கொள்வபர்களையே குறை சொல்லுதல்.. சாப்பாடு...இன்றி இருப்பதாக தவறான பார்வையை கொடுக்க முனைதல் இன்ன பிற..அதீதமான வாழ்த்து..அதைப்போலவே அதீதமாக சபித்தல்..போன்றவையும் அடங்கும்..!

     முதியோர் இல்லங்களும் இதற்கு விதி விலக்கல்ல..!! இவ்வாறான இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களிடம் சண்டையை மூட்டுவது.. உளவு, ஒற்றர் பணி,.அணி சேர்ப்பதில் தொடங்கி இன்ன பிற அட்டகாசங்களும், சாதி பார்ப்பது, சண்டை மூட்டுவது, வெறுப்பை உமிழ்வது போன்ற விரும்பத்தகாத அம்சங்களும் உண்டு..!

     நான் கேள்விப் பட்ட, பென்சன் தாரரான ஒரு முதியவர் தனது மனைவியை பழி வாங்க, தினசரி வீட்டின் உள்ளேயே, சிறு நீர் கழிப்பது, சளியை துப்புவது போன்ற காரியங்களை..தொடர்ந்து செய்து திருப்தி அடைந்திருக்கிறார்..!

       தனது, தாய்.. தந்தை, பல்லாண்டுகளாக.. பிரிந்து வாழ்வதிலான பிரச்சினையில்.. நன்கு படித்து..ஒரு என்ஜினியராக.. நல்ல சம்பளத்தில்..கிடைத்த வெளி நாட்டு வேளையை தள்ளி வைத்து.. தந்தையின் அப்பாவை, அதாவது தனது தாத்தாவை இறக்கும் வரையில்..பராமரித்து..அதுவும் ஒரு குக்கிராமத்தில்.!.அவர் இறந்த பின்னரே..வெளி நாடு சென்ற..உன்னத பேரன்களும்.. இளைய தலைமுறையில் உண்டு..!!

      முதியோர்களானால், தங்களை கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே..? என்று ஆசிரியராக வேலை பார்த்த,குழந்தை பேறின்மை இல்லாத ஒரு கிருஸ்தவ தம்பதியினர்.. தாங்கள் பணிபுரிந்த கிராமத்தில், தங்கள் பள்ளியிலேயே.. ஆசிரியராக பணிபுரிந்த, தாழ்த்தப் பட்ட வகுப்பை சார்ந்த ஒரு பெண்ணை.. தத்தெடுத்து, இரு குடும்பத்தினரும்..தங்களுக்குள்..டாகுமெண்ட் எல்லாம் செய்து, பின்..

      வளர்ப்பு மகளுக்கு...திருமணம் என்று வந்த போது, ஒரிஜினல் தாய் தந்தை அதிக உரிமை எடுத்து கொண்டார்கள்..!!, சேர்த்த பணத்தை சீர் செனத்தி என்று வளர்த்தவர்களால்  பெற்று..பின்னர்,இன்று பிறந்தக...புகுந்தக... உ|றவின் அடர்த்தியில்..தத்தெடுத்தவர்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக..கரைந்து..ஓரம் கட்டப் பட்டு.. தத்தெடுப்பின் தாத்பரியமும்,அதற்கான எந்த ஒரு  அர்த்தமும் இல்லாமல் போய்..இன்று ரிடையர் ஆன நிலையில்...முடங்கி.. தொடங்கிய இடத்திலேயே.. இருக்கும்.. அந்த முதியோர்களை.. யார்..?  எப்படி..? எது..?.. ஆற்றுப் படுத்தமுடியும்..??

       அத்தகையவர்களின்..இறுதி காலத்தை....ஒரு  முதியோர் இல்லத்தை தவிர  வேறு எது இட்டு நிரப்ப முடியும்..??

      வயதானவர்களின் சுதந்திரம் மிகவும் முக்கியம்..எதை செய்ய விரும்பினாலும் அதனை அவர்கள் செய்ய தடை..குறுக்கீடு.. இருக்க கூடாது..முக்கிய ஆலோசனை கருத்து அறிதலில் அவர்களை பெயருக்கேனும் கேட்டு செய்தல்..தினசரி குறைந்த பட்சம் சிறிய நேரத்திற்கேனும் உரையாடல்...! அவசியம்..!சும்மா தானே இருக்கே..இதை செய்தால் என்ன என்று ஏதாவது வேலை ஏவுதல்..குறிப்பாக பேரக்குழந்தைகளை தலையில் கட்டுதல்..கூடவே கூடாது.!! கருத்துகளை திணிக்காமல் இருத்தல்..குறிப்பாக..ஆன்மீக விவகாரங்கள். தனிப்பட்ட நட்புகள்..பயணங்கள்...உள்ளிட்டவை..!!

       முதியோர்களும், தங்களின் வாழ்க்கையை பிறர் வாழவேண்டும் என எதிர்பார்க்க கூடாது..! வயதும்..முதுமையுமே.. அனைத்துக்கும் சலுகையாக இருக்கும் என்று நினைப்பது தவறு..உடல், உணர்வு, உணவு அனைத்திலும் கூடுதல் கவனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்..! தத்துவ விசாரங்கள்..உலகத்தின் இயல்பு.. இயற்கை இவற்றை உணர்ந்தவர்கள் இறுதிகாலத்திலும்..பதட்ட மில்லாமல் இருப்பர்..! வீடானாலும்..முதியோர் இல்லமானாலும்..மனதளவில் அவர்களுக்கு ஒன்றே...!!

        சிறு பிராயத்தில், பள்ளி, கல்லூரி பணியிடத்தில்.. என,எவருக்கும் அதிக நண்பர்கள் இருப்பது இயல்பு..!  ஆனால்..முதுமை காலத்தில் அதிக நண்பர்களுடன் இருப்பவர்கள், தான்.. உலகில் அதிகம் கொடுத்து வைத்தவர்கள்..! அவ்வாறான வாய்ப்பை முதியோர் இல்லங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதே உண்மை..! பரஸ்பரம் மனம் விட்டு பேச.. முதியோருக்கு..எத்தனை  குடும்பங்களில் வாய்ப்புள்ளது என்பதே  கேள்வி..??

       சுமார் 72 வயதானவர்,  தனது பென்சன் பணம் எவ்வளவு..?அதனை என்ன செய்கிறார்..? என ஒரு நாளும்..யாருக்கும்.. சொல்ல தேவையில்லாதவராக, யாரும் கேள்வி கேட்காத சுதந்திரத்துடன்..தனது மகனால்..இரு கால்களிலும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டு.. அவனால் வாங்கி கொடுக்கப் பட்ட..புத்தம் புதிய சிகப்பு நிற...ஹோண்டா ஆக்டிவாவில்..தனது மனைவியுடன்..இரு குச்சி பைகளை மாட்டிக் கொண்டு.. எங்கோ...வேகமாக..விரைந்து கொண்டிருக்கிறார்..!!

      அவர்களை பார்த்து.. சிறிய தலையசைப்போடு...சரி...!! அன்பு.. அக்கறை என்ற பெயரில்..எங்கு..?  ஏன்..?  எதற்கு.?..செல்கிறார்கள்.. என்ற கேள்விகள் எதுவுமில்லை..!! கம்பியூட்டர், முக நூல், பிளாக் என எவ்வித பரிச்சயமும் இல்லாத அவருக்கும், அவரின் மனைவிக்கும்.. தங்களை பற்றியும்..அவர்களது மகன், இந்த கட்டுரையில் எழுதிக் கொண்டிருப்பான்.. என தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை...!!?!

       நாக.பன்னீர் செல்வம் naga.panneer selvam
     
   
     













1 கருத்து: