வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நெய் பந்தம்..

     
        முஸ்லீம், கிருஸ்துவ  உள்ளிட்ட ஏனைய மதங்களில் திருமணம் ஆனாலும்..இறப்பு, சாவு நிகழ்ச்சிகள் ஆனாலும்,  இவை தொடர்பான சம்பிரதாய...சடங்குகளுக்கு..   வரையறுக்கப் பட்ட முறைகளில் அதனை வழி நடத்த இதற்கென உள்ள குருமார்கள் இருக்கிறார்கள்... !

       ஆனால் இந்து சமயத்தில்.. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களின் திருமண நிகழ்வுக்கு வரும்.. பிராமண புரோகிதர்கள்..அவர்களின் இறப்பு நிகழ்ச்சிக்கு வருகிறார்களா..என்றால் இல்லை...!?!இது ஏன்..?!

      இவ்வாறு வரைமுறைக்கு உட்படாத  வகையில் இறுதி சடங்குகள்..மேற்கண்ட வகுப்பினருக்கு..பல பட்டறையாக.. நடந்து முடிவது தான் நான் இங்கு சொல்ல வருவது..! 

       பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட..ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பல பழக்க வழக்கங்கள்..சற்றே.. ஏறக்குறைய .. பலவகைகளில் ஒன்றுபட்டவையே..! நாம் தான் உயர் சாதி..தாழ்ந்த சாதி என்று அடிப்படை புரியாமல்..பீற்றிக்கொள்கிறோம்..! அவ்வகையில் சாவு வீட்டு நிகழ்ச்சிகள் விதிவிலக்கில்லாமல், ஒன்று போலவே சிறப்பானவை..?!?

      சமீபத்தில் உறவினரின் வீட்டு சாவு..துக்கம்  ஒன்றிற்கு..ஒரு சிறிய  கிராமத்திற்கு சென்றிருந்தேன்.. சுற்று புற நிகழ்வுகளை கவனிக்க தொடங்கிய நாள் முதல்.. நான் முன்பு குறிப்பிட்ட சமூக பிரிவினரின்.. அனைத்து சாவு வீட்டு நிகழ்வுகளும்..ஏறத்தாழ ஒன்று போலவே இருப்பதும்...இன்றளவும் மாறாமல் இருப்பது தான்.. இங்கு  நாம் பகிர்ந்து கொள்ளும் சேதி..!

         சுமார் 20-25 வருடங்களுக்கு முன் இழவு செய்தி உறவினர்களுக்கு சென்று சேர்வது என்பது பிரயத்தனமான காரியமாகும்.. இதனை செய்ய கூடியவர்கள்..ஒரு காலத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்றிருந்தாலும்..மற்றவர்களும் செய்வதுண்டு..! வாடகை சைக்கிள்.. இரவல் சைக்கிள்..கிடைக்கும் இரு சக்கர வாகனம் என்று.. ஒவ்வொரு திசைக்கும் ஒரு ஆள் அல்லது இருவர்.. பெரிய ரவுண்டு சென்று.. பிணத்தை எடுப்பதற்குள் உறவினர்கள் அனைவரும் வந்து சேருமாறு செய்ய வேண்டும்..!

       சாவு விழுந்தவுடன்..துக்கம் சொல்ல கூப்பிடுவார்கள் என்று..தாங்கள் ஆசையாக வாங்கி வைத்த வாகனங்களை ஒளித்து வைப்பதும்..தான் மாட்டிக் கொள்ளக்கூடாது எஸ்கேப் ஆகிவிடும் விவரஸ்தர்களும் உண்டு..! இப்போது உள்ளது போல்..போனில் எல்லா தகவல்களும் போய் சேரும் வசதி.. ”இதோ இப்ப உயிர் விட்டுடும்”.... கிளம்பி இருங்க....சொன்னவுடன் புறப்பட்டுவிடலாம்..?!? என்பது போலான குரூரமான கைப்பேசி..அப்டேட்கள் அந்நாளில் இருந்ததில்லையே..!

       செத்த சேதி சொல்ல போனவர்கள்..ஒரு சிலர்..கையில் காசிருக்கும் தைரியத்தில்..வழியில் கிடைக்கும்.. தென்னங்கள்,..பனங்கள் என குடித்து விட்டு..தோப்பு, துறவு என சுகமாக தூங்கி விட்டு.. சொல்ல போன செய்தியை சொல்லாமல்........எல்லாம்  முடிந்து, இரவு வந்து சேருவதும் உண்டு..! புகாருக்கும்,.. வெட்கத்துக்கும் பயந்து..இவர்கள் கொஞ்சம் நாளைக்கு வெளியே தலையை காட்டமாட்டார்கள்..?!?

       பின்னாளில்.. விழப்போகும் பிணத்துக்கும் கூட இந்த அபாக்கியவான்களான, மதுப்பிரியர்களின்  தலை உருட்டப் படும்.. ! "எப்பா..?!..மாரியப்பன் மகன மட்டும் துக்க சேதி சொல்ல அனுப்பாதீங்க.! குடிச்சுட்டு.. படுத்து கிடந்துட்டு மறு நாள் தான் வருவாப்புல”.... ”அப்படித்தான்...இன்னார் வீட்டுக்கு” ஆரம்பித்து..என மானம் கப்பல் ஏறும் அபாயமும் உண்டு..!

        சாவுக்கும்....கருமாதிக்கும்...இடையில் பல முக்கிய உறவுகள், செய்தி சொல்ல போனவர்களால்..தகவல் விடுபட்டு..  கெட்டு பாழாகி இருக்கும்..! பின்னே..செத்தது கூட தெரியாமல் இருப்பவர்களிடம்..கருமாதி பத்திரிக்கை எடுத்து சென்றால்..என்னவாகும்..?!? தாண்டி தோண்டியில் விழுந்து...அழுது ஒப்பாரி வைத்து..செத்த துக்கத்தைவிட..அந்த செய்தி சொல்லாமல் ஒதுக்கி வைத்த துயரமே...மேலோங்கி..உறவுக்குள். சண்டை சச்சரவு என நீண்டு..அது சரியாக நிறைய காலமும் பிடிக்கும்..!

        இறப்பு தினத்தில்  நடைபெறும் சடங்குகள் இன்றளவும் ஒருங்கிணைக்கப் படாமல்..ஒத்த முறையில் இல்லாமல்  ஆளாளுக்கு பேசுவதான் நகைப்புக்குரிய அவலமாக இருக்கும்..அதிலும் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் தொடரும்  முடி திருத்தும் தொழிலாளிகள், சலவைத்தொழிலாளர்கள் மற்றும் ஆதிதிராவிட தொழிலாளர்களின் பாடு சொல்லில் அடங்காது..!

       ஏதோ லட்சகணக்கில் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பது போல அதட்டலும் மிரட்டலும் தூள் பறக்கும்..! சமீபத்தில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றிருந்த போது, இறந்தவரின் உடலை குளிப்பாட்ட ஒரு பெஞ்ச் எடுத்துவரப்பட்டு அது அகலம் குறைவாக இருந்த காரணத்தால், இன்னொரு பெஞ்சும்  கொண்டுவரப்பட்டு.. இரண்டையும்  இணைத்து அதில் குளிப்பாட்ட ஏற்பாடுகள் நடந்து நல்லாத்தான் போயிகிட்டு இருந்தது....!..அப்போது தான் எழுந்தது அந்த களேபாரம்...!?!

     யாரோ ஒரு புண்ணியவான்...எல்லாம் தெரிந்தது மாதிரி..ரெண்டு பெஞ்சில் குளிப்பாட்டலாமா..?? கூடவே கூடாது ..என ஒரு குண்டை போட்டு விட..!!அவ்வளவு தான் ஆளாளுக்கு குளிப்பாட்டலாம்..? குளிபாட்டக்கூடாது..? என விவாதங்கள் எழுந்து, அப்புறம் பைனலாக..ஒரே பெஞ்சில் குளிப்பாட்டி...பாடி.. ஒரு தரம் கைத்தவறி..கீழே விழுந்து...எப்படியோ ஒரு வழியாகவோ..வேறு வேறு வழியாகவோ.. செத்தவர் சிவ லோக சென்று சேர்ந்தார்...!!

       எனக்கு அப்புறம் ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்...பிராமண புரோகிதர்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயங்களுக்கு திருமணம், வீடு குடி போதல் உள்ளிட்ட ஏனைய சுப நிகழ்வுகளுக்கும்...இதர கருமாதி, திவசம் போன்ற தீட்டு கழிக்கு சடங்கு முறைகளுக்கு வருபவர்கள்.. இறப்பு நிகழ்வையும் முன்னின்று நடத்துவதில்லை..?! அரம்ப காலம் முதலே அவர்களை  அழைக்க வில்லையா..? அல்லது இந்த கூட்டத்தில் நாம் போய் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற  அவர்களின் முன்னெச்சரிக்கையா..? இல்லை, குறிப்பிட்ட சமுகங்களின் ..உரிமை சார்ந்ததாக ..அடுத்தவரிடம் கொடுக்க முடியாததாக. பிரிலேன்ஸ்..எனும் முறையில் சுதந்திரமாக இஷ்டப்படி சாவை, சடங்குகளை நடத்தல், அனுசரித்தல் அல்லது கொண்டாட ஏற்பாடா..?? நாம் அறியோம் பராபரமே தான்..?! 

      ஆனாலும், நான் கண்டவரையில், கிராமங்களில், சாவுக்கான இறுதி சடங்கை.. நிகழ்வுகளை... இதனை நடத்துவபர்கள் சலவை, முடிதிருத்தும், தொழிலாள ஏனைய உள்ளூர் பூசாரிகள், லோக்கல் குருமார்கள்..!, வயதான பெரியவர்கள், என ஆளாளுக்கு, பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பாவம்.. சங்கடமாக பதிலை  சொல்லி சமாளிப்பவர்களாக, அல்லது.. ”வா .. நீ வந்து செய்”.. என கோபப்படுவர்களாகவே, இருக்கிறார்கள்..! 

        உதாரணத்திற்கு ”முதல்ல  நீ இதை செய்திருக்க கூடாது..? அல்லது..இது மாதிரி செய்து பழக்கமில்லையே..?!? என திடிர் திடிரென எனும் கேள்வி கணைகள் அதை தொடர்ந்து சமாளிபிகேசன்ஸ் என பார்க்க பார்க்க வேடிக்கையாக இருக்கும்..?! 

       வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு மகனின், வயதான  தந்தை.. ஒரு மாலையில் இறந்து விட...மகனும் இரவு வந்து  சேர்ந்து,  நாங்களும் முன்னின்று இறுதி ஏற்பாடுகளை,  நடத்த... மிக மிக ஒல்லியான தேகத்தை உடைய  அந்த வயதான, இறந்த,பெரியவருக்கு   பீரிசர் பாக்ஸ் எதுவும்  தேவை யில்லை எனமுடிவில், ஏழ்மையை கருதி சிக்கனமாக செலவு செய்து அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது...!

      தூக்க.... ஒரு மணி நேரத்திற்கு முன், இறந்தவரின் மகனின், நீண்ட நாளைய நெருக்கமான நண்பர் மது பாட்டிலுடன்  வந்து, துக்கம் விசாரித்து, கொல்லை கடைசிக்கு சென்று இருவரும்  நட்பு, துக்கம்  மற்றும் மது ஆகிய மூன்றையும் அருந்தி விட்டு, பின்னர் , திடிரென ஞானதோயம் வந்து, ” என் அப்பாவிற்கு ஏன் பீரிசர் வைக்கவில்லை..?? நாங்கள் என்ன அவ்வளவு கேவலாமாகவா போய் விட்டோம்..??  என பொறுப்புடன், சண்டையிட துவங்க...!?!...அது வரை சும்மா இருந்த மகன், நாம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம்..நம்மை கேட்டு..?!? ...அப்புறம் ஏற்பாடு செய்பவர்கள், ஏற்பாடு செய்யாத ஏதோ ஒன்றுக்கு, இயல்பாக விடுபட்டு ஒன்றுக்கு... குற்றவாளிகள் போலவும்.. அப்படி இப்படி என ஒரு வழியாக கதை முடியும்..!

     இதில் இன்னொறு சிறப்பும் உண்டு...செத்தவுடன் என்னேரமானலும் இரவு 12 மணி என்றும் பாராமல்.... ஊர் அல்லது தெரு நிர்வாகம்..நாட்டாண்மைகளிடம் சோகமாக...பவ்யமாக  சொல்லி..இறப்பு  காரியத்தை நடத்தி விட்டு.. கருமாதிக்கு கறி.. பிரியாணி,மது  விருந்து ,தீட்டு கழிக்க... மாமன், மச்சான், நண்பர்களுடன் சேர்ந்து அட்டகாசமாக கொண்டாடி...போதையில்..”எவண்டா நாட்டாமை..அவனெல்லாம் ஒரு ஆளா..??! என கேவலபடுத்தி போதையில்...பெருமை சேர்ப்பவர்களும் உண்டு..!?! சாவு...பிணத்தை நல்லபடியாக மயானம் சேர்க்க.. அதை நடுத்துவதில்..ஊர் உதவி தேவை..!!.ஆனால்...கறிசோறுக்கும் போதைக்கும்...அவனெல்லாம் அதுக்கு லாயக்கு பட மாட்டாண்டா..!?! என வடிவேலு கதைதான்..!

       இந்த இறுதி சடங்குகள், மயானம் வரை உள்ள ஊர்வலம், அப்புறம் மயானத்தில் நடக்கும் சச்சரவு சல சலப்புகள், அனைத்தையும் பார்க்கும் ஒரு சிலர்,  இந்த அவலத்தை எல்லாம் பொறுப்புடன்  சிலாகித்து.. சமூக நடப்பை தொடர்ந்து  குறை சொல்வார்கள் .. ஆனால் ஒரு நாளில் அது  தனக்கும்  அதேவிதமாக நடப்பதை பார்க்க முடியாதவர்களாக இருப்பது தான்.. இதில் தரமான சம்பவம்...!, எனெனில் அப்போது அவர்கள் பிணமாக இருப்பார்கள்...! ஆனால் நிகழ்வுகள் செவ்வனே  தொடர்ந்து கொண்டுதான்.. இருக்கும்.. பார்வையாளர்கள் மட்டுமே மாறி இருப்பார்கள்..!?!

      இறந்தவருக்கு பேரக்குழந்தைகள் இருப்பின், அவர்கள் அனைவரும் இறுதி சடங்கில் சிறிய மூங்கில் குச்சியில் துணியை சுற்றி,அதில் நெய் விட்டு கொளுத்தி நெய்பந்தமாக பிடித்து நிற்பது வழக்கம்..அதிலும் கூட எண்ணிக்கை விடு பட்டு, பந்தம் பத்தாமல் போய்,  மகள் வயிற்று பேரக்குழந்தைகள், மகன் வயிற்று பேரக்குழந்தைகள் என பாகுபாடு, வேண்டும் என்றே, காட்டப்பட்டதாக,தகராறு மூண்டு சண்டையில் முடிந்த சாவு வீடுகளும் உண்டு..!

      இவை எல்லாம்......தமிழ் அறிஞர்கள்..தமிழ் புத்தகத்தில் குறிப்பிடும் பாணியில்... சொல்வதாக இருந்தால்...   “ எண்ணி எண்ணி இன்புறத்தக்கதே..?!?                  நாக.பன்னீர் செல்வம்  Naga.Panneer selvam