சனி, 8 ஏப்ரல், 2017

மகளிர் தினம்..மற்றும் என்ன தான் வேண்டும் அவர்களுக்கு..?!?

     ஒரு  மகளிர் தின நிகழ்வில் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட போது காமாட்சி என்பவருக்கு சான்றிதழ் ஒன்றை அளித்தேன்...காமாட்சி என்ற பெயரை கேட்டது நினைவு சுருள் மெல்ல விரிந்தது...!

     ஒரு நாள்..அதிகாலை நான்குமணியளவில் கும்பகோணத்தில் வண்டி ஏறினோம்..காமாட்சி என்ற கர்ப்ப பை புற்று நோயாளி அவரை..வயது அதிக வித்தியாசத்தில் மணந்த.. குடிகார..கணவர், மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகளுடன்... சென்னை வருவதற்குள் சுமார் 15 முறையாவது கழிப்பறை சென்று வந்திருப்பார்.. நோய் மிகவும் முற்றிய நிலை..!

       சென்னை சேர்ந்து.. இராயபுரம் புற்று நோய் மருத்துவமனைக்கு சென்றதில் அவர்கள், எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் புற்று நோய் பிரிவுக்கு சிபாரிசு செய்து அனுப்பி வைத்தனர்..அன்று ஞாயிற்று கிழமை.. அட்மிசன் கிடையாது..! வெளியே தங்க வசதியும் காமாட்சியின்  உடல் நிலை அதற்கு இடம் கொடுக்காது என்ற   காரணத்தாலும்.. அப்படி... இப்படி என்று நிர்வாகத்தையும் தலைமை மருத்துவரையும் கெஞ்சி..கொஞ்சம் அரசு அதிகாரத்தையும் பயன் படுத்தி...கர்ப்பிணி பெண் என்பதாக சேர்த்து..பின்னர் புற்று நோய் பிரிவுக்கு மாற்றப் பட ஏற்பாடு செய்து..ஊர் திரும்பினேன்..!

     காமாட்சி.. தன்னை விட அதிக வயது மூத்த குடிகார.. தரகு தொழில் செய்யும் கணவரை கொண்டவர்..! அவரது கணவருக்கெல்லாம் திருமணம் ஆனது உலக அதிசயத்தில் ஒன்றாகவே அப்போது கிராமத்தில் பேசிக் கொள்ளப் பட்டது..!! திருமணத்தை தொடர்ந்து இரண்டு ஆண்கள்..மற்றும்  நான்கு பெண் குழந்தைகள்...!?!

     தினக்கூலிக்காக..கடுமையான உழைப்பு...கணவன் தத்தியாக இருந்த நிலையிலும் அத்தனை குழந்தைகளைக் கொண்ட்  குடும்பம் யாரும் வியக்கும் வண்ணம் முழுமையாக..உருவானது..!அதிகப் படியான மகப்பேறு...மதியம் சாப்பிடுவதில்லை...வேலை இடத்தின்..டீ...வடை . தினசரி வலி நிவாரணி..தடை செய்யப் பட்ட  புருபின் மாத்திரைகள் அதுவும் .. மளிகை கடையில்...எக்ஸ்பைரி ஆனதா..? தெரியாது..விளைவு கர்ப்பபை புற்று நோய்..!!

      சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்து .. காமாட்சிக்கு எத்தனை குழந்தைகள் என்று டாக்டர்கள் விசாரித்த போது... இரண்டு என்று பொய் கூறி.. என்னை பார்த்து கண்ணைசைத்து உண்மையை சொல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்..!! எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..!! பின்னர்  ஆடைகள் மாற்றப் பட்டு..ஸ்டெரச்சரில் படுக்க வைத்து  தள்ளி செல்ல முற்பட்ட போது எனது கைகளை பிடித்து பரிவுடன் கண்ணீர் மல்க பார்த்தார்...!! அது தான்,.. நான் அவரை நேருக்கு நேர் பார்க்கும் கடைசி பார்வை.. என்று எனக்கு அப்போது தெரிந்திருக்க வில்லை..!?!

       சென்னையில் புற்று நோய் மருத்துவமனையில் காமாட்சிக்கு சிகிச்சை..கூடவே..அதோடு கணவரின் தொல்லை..!! உன்னால் தான் இங்கு வந்து கிடக்கிறேன் என்று தினமும் குடித்து விட்டு மருத்துவமனையில் இரகளை..!! கூட இருந்த சக நோயாளிகளின் போனை வாங்கி.. காமாட்சி, தன் கணவரின் தொல்லையையும்.. தொடர் சிகிச்சை பெறுவதன் பிரச்சினையையும் கூறி அழுதார்..!!

     சமயங்களில் இதர  நோயாளிகளும் என்னிடம்   நேரடியாக தொலைபேசியில் காமாட்சியின் குடிகார கணவர் காமாட்சியை திட்டுவதையும்.. அடாவடித் தனத்தையும்... பற்றி குறை கூறினர்..!! நான் செய்தது உதவியா..? அல்லது உபத்திரவமா.? என்று எனக்கு புரியவில்லை..??!!

       பின்னர்...சென்னையில்  தாக்கு பிடிக்க முடியாமல்  ஒரு நாள் தாமாக மருத்துமனையில் இருந்து கணவருடன் வெளியேறி..கிராமத்திற்கு வந்து வைத்தியம் பார்த்தும்... பார்க்காமலும் மிகவும் சிரமப் பட்டு..இனி தேறாது என்று குடும்பத்தினர் சான்றிதழ் வழங்கி... இறக்க தயாராகி... வெற்றிகரமாக இறந்தும் விட்டார்..! திருமணம் செய்து கொண்ட புற்று நோய்....இடையில் வந்த புற்று நோய் இந்த இரண்டுமிடமிருந்து விடுதலை..! கடைசி...வலி நிவாரணியாக  மரணம் அவருக்கு உதவியிருக்க கூடும்..??!?

     இடையில் ஒரு சில சமயங்களில் நான் காமாட்சியை பார்க்க சென்ற போது..கொல்லை கடைசிக்கு போய் தான் இல்லை என்று சொல்ல சொல்லி என்னை பார்ப்பதையே..கூச்சப் பட்டு.. முழுவதுமாக தவிர்த்து விட்டார்..!! ஆமாம்.. கடைசியாக நான் அவரை பார்த்தது எழும்பூர் மருத்தவமனையில் தான்..! ஆதங்கமான நன்றியுணர்வுடன் கூடிய அந்த பார்வை இன்றும் கூட நினைவில் இருக்கிறது..!

      காமாட்சி ஒரு வேளை நல்ல  வசதியான தகுதியான கணவருக்கு வாழ்க்கை பட்டிருந்தால்...அவரின் உழைப்பும்...உத்வேகமும்...அவரை வாழ்க்கையில் எங்கோ கொண்டு போயிருக்கும்..!! அவ்வளவு ஏன் காமாட்சி மளிகை...காமாட்சி துணிக்கடை.. காமாட்சி  நகை மாளிகை என்று கூட பெயர் பலகைகளில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்க பட்டும் இருந்திருக்கலாம்...!!

      மகளிர் தினம் கொண்டாடும்...இந்த ஒட்டு மொத்த உலகத்தின்.. மொத்த சொத்து விகிதத்தில்..அதில்   சுமார் 2 சதவீதம்  கூட பெண்கள் பெயரில் இல்லை ;என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது..!!பெண்களை அறியாமையில் வைத்திருப்பதையும் ..கூடவே அவர்களுக்கான தினத்தை அனுஷ்டிப்பதையுமே உலகம் விரும்புகிறது..!! மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்று பழமொழிகளும் கூட பெண்களை தங்களுக்கு சண்டை பிடித்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது..!!

     தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை....!! பிள்ளை அது ஆணோ பெண்ணோ சரியில்லை என்றால் போடு பழியை அதனை பெற்றவள் மீது...!!பொம்பளை சிரித்தால் போச்சு புகையிலை விரித்தால் போச்சு ..!! ஒண்ணும் தெரியாத பாப்பா..போட்டு கிட்டாலாம் தாப்பா.!! என்று..எல்லா உயிரனத்திற்கும் பொதுவான பாலியல் உணர்வினை...பெண்களுக்கு மட்டுமே என்றாக்கி..  ஒட்டு மொத்தமாக பெண்களை கொச்சை படுத்தவதில் தொடங்கி... அவர்களின் ஒட்டு மொத்த உழைப்பையும் குடும்பம் என்ற பெயரில் சுரண்டுவதை இந்த உலகம் சிறப்பாக இன்று வரை செய்து கொண்டிருக்கிறது..!!??!!

     தந்தை பெரியார், மகாகவி பாரதி, அம்பேத்கார்,இராஜா இராம் மோகன் ராய் போன்றவர்கள் ஆண்களாக இருந்தும்..பெண்களை வைத்து குளிர் காயாமல் அவர்களுக்கு  உண்மையாக குரல் கொடுத்து உழைத்த  வகையில் ஆண்களாக நாம் இருப்பதற்கு பெருமை கொள்ளலாம்..!! மற்றபடி பெண்களுக்கு நாம்..கணவராகவோ..தந்தையாகவோ..சகோதரராகவோ  இருப்பதில் நிச்சயம் உண்மையான பெருமை இருப்பதாக...எனக்குத் தெரியவில்லை..!!

     பெண்களுக்கு...அதாவது ”அவர்களுக்கு என்ன தான் வேண்டும்”...?? என்று பிரபலமான ஒரு சொலவடையும் உலக அளவில் உண்டு..!! பெண்களை புரிந்து கொள்ளமுடியாத  ஆண் உலகத்தின் பொன் மொழி அது..!!

      ஒரு அரசு அலுவலத்தில்..தொழில் முறையாகவும் அது  இல்லாமலும் கூட தனிப்பட்ட மரியாதையுடன்...அடிக்கடி.. நான்  சந்திக்கிற இளம் பெண் ஒருவர்..திருமணம் ஆகாதவர்... நன்கு படித்தவர்..! ஒரு நாள் என்னிடம்...ஒரு கைப்பேசி இணைப்பின்... அதனை பயன் படுத்துபவர் பற்றிய  விபரங்களை தனக்கு  பெற்றுத் தரமுடியுமா..?? என்று தயங்கி ...தயங்கி பர்சனல் உதவியாக என்னிடம் கேட்டார்..! நானும் அதனை எனது செல்வாக்கை பயன் படுத்தி முழு விபரங்களை.. வாட்சப்பில் அவருக்கு விரைவாக அளித்தேன்..!!

     தகவலை பெற்று சில நாட்கள் வரை அதை பற்றி அவர் பேசவேயில்லை..! மரியாதை நிமித்தமாக ஒரு நன்றி.. எனது உதவி பயன் பட்டதா..?? அல்லது பயன் படவே இல்லையா..?? என்பது பற்றி..அவர் எனக்கு சொல்லாதது  உறுத்தலாகவே இருந்தது..!!  இந்த குறைந்த பட்ச நன்றி கூறும் பழக்கம் கூட அந்த பெண்ணிடம் இல்லாதது குறித்து வருத்தமாகவும் இருந்தது..!? ஆனாலும் இதை பற்றி அவரிடம் நான் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை..!!

      சென்ற வாரம்..வேலை விஷயமாக நான் அவரை சந்தித்த போது..அந்த பெண் சிறிது கோபத்துடன்.. ”சார் நான் உங்கள் மேல் கோபமாயிருக்கேன்” என்றார்..?? ஏன் மேடம்..என்ன ஆச்சு..?? ஏன் கோபம்..? என்று..வழக்கமான இராக பாணியில் கேட்டேன்..?? அதற்கு அவர் சொன்ன பதில்..

     “சார் நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டேன்.. நீங்களும் செய்து கொடுத்தீர்கள்..பின்னர் அதைப் பற்றி ஒரு வார்த்தை அது என்னவாயிற்று..?? பயன் பட்டதா..? இல்லையா..? என்று கேட்டீர்களா”...?? அதை அப்படியே விட்டு விட்டீர்களே..??!! போங்க சார்...என்றார்..!!... எனக்கு லேசாக தலை சுற்றியது..அது மத்தியானம் நான் சாப்பிடாததால் தான் இருக்கும்..?!??

     ஆமாம்..பெண்களுக்கு.. அதாவது.. அவர்களுக்கு என்னதான் வேண்டும்..?!!?

                                                                            நாக.பன்னீர் செல்வம்  Naga.Panneer selvam