சனி, 7 ஜனவரி, 2017

கறுப்பு.. வெள்ளை தேவதைகள்..!

 

  ஓரளவிற்கு பழக்கமான, நண்பரின் அண்ணன் மகள்..உடல் முழுவதும் வெண்மை நிறமாக..மாறிய லூக்கோடெர்மா எனும்  நோயால் பாதிக்கப் பட்டவர்.. அவருக்கு,உள்ளூரில் அவரை..விரும்பி ஏற்ற ஒருவருடன் திருமணம் ஆனதை கேள்விப் பட்டு.. நண்பர்களாக.. நாங்கள் மகிழ்ந்து, சுமார் பத்து  வருடங்களுக்கு முன்னம் பேசிக் கொண்டிருந்தோம்..!

     ஆனாலும் 2016ம் ஆண்டின் இறுதியில் அவரின் மணவாழ்க்கை, இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்,கணவருடன் ஏற்பட்ட பிணக்கில் தாய் வீட்டில் தங்கியிருந்து,,அவருக்கு குடும்ப நல மையத்தின் வழி கவுன்சிலிங் செய்து வைப்போம் கனவிலும் நினைக்க வில்லை..!! 

       ஓரளவிற்கு நல்ல வருமானம் உள்ள, கணவனுக்கு, தான், வெண்மையாக நிறம் மாறிய நோயால் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு பெரிய வாழ்க்கை கொடுத்துவிட்டோம் என்ற நினைப்பு...அதன் தொடர்பில் பெரிய அளவிலான அடிமைத்தனத்துடன் மனைவி இருக்க வேண்டும்  என்ற நித்திய..எதிர்பார்ப்பு..சந்தேகம்..அடிதடி..மண்டை உடைப்பு...பிரச்சினை..தொடர் பஞ்சாயத்துகள்..காவல் நிலைய விசாரிப்புகள்..புகார்கள்.. என வாழ்க்கை நரகமாகி..இனி தொடர்ந்து வாழவே முடியாது எனும் அளவில் முடுவெடுத்த பெண்..!

     கணவன் மனைவி..குடும்ப பிரச்சினையில், ஆளாளுக்கு, உறவினர்களாகவும், பெற்றோர்களாகவும்.. அன்பு அக்கறை என்ற பெயரில் தனக்கு தெரிந்த நியாய அநியாயங்களை சொல்லி, ஒரு வித சாடிச மனப்பான்மையுடன் குளிர் காய்வது..பிரச்சினையை தீரவே முடியாத அளவிற்கு சிக்கலாக்குவது.. நமது சமூகத்தின் கசடுகளில் ஒன்று..!

     எப்படி திருமணம் என்பது, இந்திய தன்மையில், அது ஆண், பெண் இருவருக்கானது மட்டுமே என்ற  தனிப்பட்ட  முக்கியத்துவத்தை விட, இரு குடும்பம், இரு சமூகம், அதன் பழக்க வழக்கங்கள், நெருங்கிய உறவுகள்  என ஆர்ப்பரித்து நிற்கிறதோ அதே அளவு.. பிரச்சினை என்றாலும், உதவிக்கு பதில் உபத்திரவமாகவே பொங்கி எழும்..!!

       முதலில் நண்பரின் அண்ணன் மகளிடம் பேசி..விபரங்களை அறிந்து..பிரச்சினையை புரிந்துக் கொள்ளசெய்து..தன்னம்பிக்கை ஊட்டி..பின்னர் அவரது கணவரை தனியே அமரவைத்து..பேசி குடும்பம் குழந்தைகளின் பார்வையில் விளக்கி..அவரது தியாகம் குறித்து புகழ்ந்து..இனிவரும் கால்ங்களிலும் அது தொட்ர வேண்டும் என்பதாக ஆலோசனைகளை வழங்கினோம்..

      ஊனமுற்ற ஆண் பெண் எவராக இருப்பினும், முழு உடல் தகுதியுள்ள ஒருவரை மணப்பதை விட, வேறு வகையில் ஊனமுற்றோரை மற்றொருவரை மணப்பதே எதிர்கால வாழ்வுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்..!!
அர்ப்பணிப்பு.. தியாகம்.. காதல்..திருமணவாழ்வில்.. நாளடைவில்..தன் பயனை இழந்து செல்லாகாசாகி...பிரச்சினைக்கு வழி வகுக்க கூடும்..!

      பின்னர் இருவரையும் ஒரே அறையில் சந்திக்க செய்து..மனம் விட்டு பேசவும்..ஒருவரின் தவறுகளை மற்றொருவர் பேசவும்..எதிர்காலத்தில்..அதனை தவிர்க்கவும்.,எதிர்ப்பார்ப்புகளை புரிந்து கொள்ளவும் வாய்ப்பளித்தோம்..!

       கணவன் மனைவி இருவரையும் சந்திக்க செய்து...அவர்களை தனிமையில் விட்டு விட்டு...வந்தபோது..வெளியே எதற்கோ.கணவருடன் காத்திருந்த கிருஷ்ணவேணி என்பவரை எனக்கு பெண் கவுன்சிலர் அறிமுகம் செய்தார்..!

    கிருஷ்ணவேணி..கருத்த.. நல்ல தாட்டியான உருவம்..கையில் ஒரு குழந்தை.. நடக்கும் நிலையில் ஒரு சிறுவன்...அருகில் கணவர்..மனைவிக்கு பொறுத்தமில்லாத சிறிய உருவம்..சிவந்த நிறம்...சாதாரணமாக இரு கையால் கணவரை, மனைவி தூக்கி விடமுடியும்...!

     விஷயம் இது தான், தொடர்ந்து கிராமத்து மதகடியில் நண்பர்களுடன் குடிப்பதையே தொழிலாக வைத்திருந்தவர் செல்வம்..வரும் வருமானம் குடிக்கு போனது...அல்லது குடிக்காக மட்டுமே வருமானம் வந்தது.! தொடர்ந்து கணவன் மனைவி பிரச்சினை..அடி தடி...! கிருஷ்ணவேணி ஒரு முறை மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தும்,


      மறு முறை  மண்ணெணையை உடலில் ஊற்றிக் கொண்டு, தான் தீ வைத்து சாகும் முயற்சியில் ஓரளவு தீக்காயங்களுடன் காப்பாற்றப் பட்டிருக்கிறார்..!
மீண்டும் சாக முயற்சி செய்து, உரக்கடையில், பூச்சி மருந்தை வாங்கியைதை பார்த்த கிருஷ்வேணியின் சகோதரர்,கடைத்தெரு என்றும் பாராமல் அவரை கடுமையாக அடித்து, தடுத்து.. அவமானப் படுத்தியும் இருக்கிறார்.. ! மொத்தத்தில் சிக்கல் நிறைந்த வாழ்க்கை..!


     முரட்டு சுபாவம் அதிகமாகி, குடும்பத்தை கவனிக்காமல், குடிபழக்கம் அதன் தொடர்பில் நண்பர்கள் வட்டாரத்துடன் கணவன், எப்போதும் பிரச்சினை, சிறிய விசயத்திற்கெல்லாம் சண்டை.மருமகன் தனது தாய் வீட்டிற்கு வந்தால், எப்போது சண்டை வரும் என்றே தெரியாது..முணுக்கென்றால் கோபம்..சண்டை..வெளியேறுதல் அக்கம் பக்கத்தினர் கிராமத்தினர் எல்லோரும் சிரிக்கும் அளவிற்கு...!

     ஒரு நாள் கிருஷ்ணவேணி, தனது கணவரை, கோயிலுக்கு செல்ல வேண்டும் எனக் கட்டாயபடுத்தி பொய் சொல்லி,அழைத்து வந்து, மது நோயாளிகளுக்கான எங்களது சிகிச்சை மையத்தில் சேர்த்து விட்டு விட்டார்..! ஆரம்பத்தில் ஒத்துழைக்காமல், முரண்டு பிடித்து முண்டிய செல்வம்..பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் மனதை புரிந்து செயல் பட்டு.. ஒத்துழைத்து...சிகிச்சை நாட்களில் மனைவியுடன் தங்கி முழுமையாக குணமும் அடைந்து விட்டார்..!

இந்த நிலையில் தான், மாத்திரை வாங்க தனது கணவருடம் மையத்திற்கு வந்திருந்த போது, நான் சந்திக்க வாய்ப்பாகி முழு கதையையும் கூறினார்..!
 கிருஷ்ணவேணி ஒரு சாகச பெண்ணாக, விடாமுயற்சியுடன் வாழ்வை எதிர்கொண்ட ஒரு சக்தி வாய்ந்த பெண்ணாகவே..பிரமிப்பு ஊட்டும் வகையில் என் கண்களுக்கு தெரிந்தார்..!!

      செல்வத்தை கேட்டேன்..மதகடியும் நண்பர்களும் என்ன ஆனார்கள்.?!? என்று...போங்கடா   ன்னு சொல்லிட்டேன் சார்.. !இனி குடிக்க மாட்டேன்..!!என் உடம்பு நல்லா..தெளிவா இருக்குன்னு பாக்குறவங்க சொல்றாங்க சார்..! கோயிலுக்குன்னு பொய் சொல்லி தான் சார் என்னை கிருஷ்ணவேணி.. அழைத்து வந்தது சார்..வந்து பார்த்த சாமியும் இல்ல ஒண்ணும் இல்ல நான் கிடந்து..முழிக்கிறேன்..அப்புறம் தான் டீரீட்மெண்டுக்குன்னு தெரியும்.. !!பரவாயில்ல சார்.. நல்லாயிட்டேன்.. இனி குடியை தொட மாட்டேன் சார்..! மத்தவங்களுக்கும் சொல்லிகிட்டு இருக்கேன் சார்..!

     அப்போது கிருஷ்ணவேணியின் முகத்தை பார்க்க வேண்டுமே..! வெட்கமா..? பெருமிதமா..? சாதித்த பெருமையா..! தெரியவில்லை..! எந்த ஒரு பெரிய சாதனைக்கும் குறைவில்லாத மகிழ்ச்சி..! மூன்று முறை சாகத்துணிந்த ஒரு பெண்,விடாமுயற்சியுடன்..கணவரை சாகாமல் காப்பாற்றியது மலைக்க வைத்தது..!

     கிருஷ்ணவேணிகள் நினைத்தால், குடிகார செல்வங்களை தூக்கி எறிந்து விட்டு உடல்,மனச்சுதந்திரத்துடன் இங்கு தாராளமாக வாழமுடியும்..!!

       இம்மென்றால் டைவர்ஸ்.. ஏன் என்றால் டைவர்ஸ்.. என்ற மெத்த படித்த பெண்களின் உலகத்தில் கிருஷ்ணவேணிகள்..ஆசிர்வதிக்கப் பட்ட அறியாமைகளுடன், இன்றும்..கோயிலுக்கு  வா..?!..என பொய் சொல்லி..கணவனை அழைத்து வரும் தெய்வங்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்..!

            ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட, நண்பரின் அண்ணன் மகளை, கவுன்சிலிங் முடிந்து வந்த ஒரு ஞாயிற்று கிழமை, நானே அவரது வீட்டிற்கு சென்று அழைத்து, கணவன் வீட்டில் குழந்தைகளுடன் விட்டு விட்டேன்..சாதரணமாக சகஜ நிலையை கணவன் மனைவியிடத்தில் உருவாக்கி.. பேச்சு கொடுத்து....திரும்பி விட்டேன்..!

     ப்த்து அல்லது பதினைந்து நாள் கழித்து..புத்தாண்டு தினத்தன்று  அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன்..!! வீடு பூட்டியிருந்தது..குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று விட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்..!!

        கிருஷ்ணவேணி கூட.. கணவருடன்...உண்மையிலேயே..உண்மையான..  புத்தாண்டு தினத்தில் உண்மையான கோயிலுக்கு..உண்மையிலேயே  போயிருக்ககூடும்...!!

 நாக.பன்னீர் செல்வம்   Naga.panneer selvam